Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 46-47

தேவன் இஸ்ரவேலுக்கு வாக்குறுதி தருதல்

46 எனவே, இஸ்ரவேல் எகிப்துக்குப் பயணம் தொடங்கினான். அவன் முதலில் பெயெர்செபாவுக்குப் போனான். அவன் அங்கே தன் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனைத் தொழுதுகொண்டு, பலிகளும் செலுத்தினான். இரவில் தேவன் கனவில் இஸ்ரவேலிடம் பேசினார். தேவன், “யாக்கோபே, யாக்கோபே” என்று கூப்பிட்டார்.

“நான் இங்கே இருக்கிறேன்” என்றான் இஸ்ரவேல்.

அப்பொழுது அவர், “நான் தேவன், உன் தந்தைக்கும் தேவன். எகிப்திற்குப் போகப் பயப்படவேண்டாம். அங்கு உன்னைப் பெரிய இனமாக்குவேன். உன்னோடு நானும் எகிப்துக்கு வருவேன். மீண்டும் உன்னை எகிப்திலிருந்து வெளியே வரவழைப்பேன். நீ எகிப்திலேயே மரணமடைவாய். ஆனால் யோசேப்பு உன்னோடு இருப்பான். நீ மரிக்கும்போது அவன் தன் கையாலேயே உன் கண்களை மூடுவான்” என்றார்.

இஸ்ரவேல் எகிப்துக்குப் போகிறான்

பிறகு, யாக்கோபு பெயர்செபாவை விட்டு எகிப்துக்குப் பயணம் செய்தான். அவனது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், அவர்களின் மனைவிமார்களும் எகிப்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் பார்வோன் மன்னன் அனுப்பிய வண்டியில் பயணம் செய்தனர். தங்கள் ஆடு மாடுகளையும் கானான் பகுதியில் சம்பாதித்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு எகிப்துக்குப் போனார்கள். எனவே இஸ்ரவேல் தன் குடும்பத்தோடும் தன் எல்லாப் பிள்ளைகளோடும் எகிப்திற்குச் சென்றான். அவர்களோடு அவனது பிள்ளைகளும் பேரன்களும், பேத்திகளும், இருந்தனர். மொத்த குடும்பமும் அவனோடு எகிப்தை அடைந்தது.

யாக்கோபின் குடும்பம்

எகிப்துக்கு இஸ்ரவேலோடு சென்ற அவனது மகன்களின் பெயர்களும் குடும்பத்தின் பெயர்களும் பின்வருமாறு:

ரூபன் முதல் மகன். ரூபனுக்கு ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ ஆகிய மகன்கள் இருந்தனர்.

10 சிமியோனுக்கு எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய பெண்ணின் மகனான சவுல் ஆகிய பிள்ளைகள் இருந்தனர்.

11 கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் பிள்ளைகள்.

12 ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா ஆகியோர் யூதாவின் பிள்ளைகள். (ஏர் மற்றும் ஓனான் கானானில் இருக்கும்போதே மரணமடைந்தனர்) எஸ்ரோன், ஆமூல் இருவரும் பாரேசுடைய குமாரர்.

13 தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள் இசக்காரின் பிள்ளைகள்.

14 செரேத், ஏலோன், யக்லேல் ஆகியோர் செபுலோனுடைய பிள்ளைகள்.

15 யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த பிள்ளைகள் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் ஆகியோர். அவள் இக்குழந்தைகளை பதான் ஆராமில் பெற்றாள். அவளுக்கு தீனாள் என்ற மகளும் உண்டு. மொத்தம் 33 பேர்கள் இருந்தனர்.

16 காத்துக்கு சிபியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி எனும் பிள்ளைகள் இருந்தனர்.

17 ஆசேருக்கு, இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா எனும் பிள்ளைகள் இருந்தனர். இவர்களுக்கு செராக்கு எனும் சகோதரி இருந்தாள். பெரீயாவுக்கு ஏபேர், மல்கியேல் என்ற பிள்ளைகள் இருந்தனர்.

18 இவர்கள் அனைவரும் யாக்கோபின் மனைவியான லேயாளின் வேலைக்காரப் பெண் சில்பாவுக்குப் பிறந்தவர்கள். அவர்கள் மொத்தம் 16 பேர்.

19 யாக்கோபின் மனைவியான ராகேலுக்கு இரண்டு பிள்ளைகள், யோசேப்பும் பென்ய மீனும். பென்யமீன் யாக்கோபோடு இருந்தான். யோசேப்பு ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.

20 எகிப்தில் யோசேப்புக்கு இரண்டு மகன்கள். அவர்கள் மனாசேயும் எப்பிராயீமும். அவன் மனைவி ஆஸ்நாத், ஓன் நகரத்து ஆசாரியனாகிய போத்திப்பிராவின் மகள்.

21 பென்யமீனுக்கு பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்னும் பிள்ளைகள்.

22 இவர்கள் அனைவரும் யாக்கோபிற்கு ராகேல் மூலம் வந்தவர்கள். மொத்தம் 14 பேர்.

23 தாணின் மகன் உசீம்.

24 நப்தலியின் மகன்களான யாத்சியேல், கூனி, எத்சேர், சில்லேம் என்பவர்கள்.

25 இவர்கள் யாக்கோபிற்கும் பில்காளுக்கும் பிறந்தவர்கள். (பில்காள் ராகேலின் வேலைக்காரி.) மொத்தம் ஏழு பேர்.

26 ஆக மொத்தம் யாக்கோபு குடும்பத்தின் நேர் சந்ததியார் 66 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் எகிப்துக்குச் சென்றார்கள். இதில் யாக்கோபு மருமகள்கள் பெயர் சேர்க்கப்படவில்லை. 27 யோசேப்புக்கும் இரண்டு பிள்ளைகள். அவர்கள் எகிப்திலேயே பிறந்தவர்கள். எனவே ஒட்டுமொத்தமாக 70 பேர் யாக்கோபு குடும்பத்தில் இருந்தனர்.

இஸ்ரவேல் எகிப்து வந்தடைதல்

28 முதலில் யாக்கோபு யூதாவை யோசேப்போடு பேச அனுப்பினான். யூதா யோசேப்பிடம் போய் அவனை கோசேனில் பார்த்தான். பிறகு யாக்கோபும் மற்றவர்களும் அவனோடு போனார்கள். 29 யோசேப்பு தன் தந்தை வருவதை அறிந்து தன் தேரைத் தயார் செய்து அவரை எதிர்கொண்டழைக்கப் போனான். அவன் தன் தந்தையைப் பார்த்ததும் ஓடிப்போய் மார்போடு கட்டிப்பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் அழுதான்.

30 இஸ்ரவேல் யோசேப்பிடம், “இப்போது நான் சமாதானமாக மரிப்பேன். உன் முகத்தைப் பார்த்துவிட்டேன். இன்னும் நீ உயிரோடு இருக்கிறாயே” என்றான்.

31 யோசேப்பு தன் சகோதரர்களிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும், “நான் இப்போது போய் பார்வோன் மன்னரிடம் நீங்கள் இங்கே இருப்பதைப்பற்றிக் கூறுவேன். அவரிடம், ‘என் சகோதரர்களும் அவர்களது குடும்பமும் கானான் நாட்டை விட்டு என்னிடம் வந்திருக்கிறார்கள். 32 அவர்கள் மேய்ப்பர் குடும்பத்தினர். அவர்கள் எப்போதும் ஆடு மாடுகள் வைத்திருப்பார்கள். அவர்கள் ஆடு மாடுகளையும் அவர்களுக்குரிய அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார்கள்’ என்பேன். 33 அவர் உங்களை அழைத்து ‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், 34 அவரிடம் நீங்கள் ‘நாங்கள் மேய்ப்பர்கள், எங்கள் வாழ்க்கை முழுவதும் மேய்ப்பது தான் எங்கள் தொழில். எங்கள் முற்பிதாக்களும் மேய்ப்பர்கள்தான்’ என்று சொல்லுங்கள். பிறகு பார்வோன் மன்னன் உங்களை கோசேன் பகுதியில் வாழ அனுமதிப்பார். எகிப்தியர்கள் மேய்ப்பர்களை விரும்பமாட்டார்கள். எனவே நீங்கள் இங்கே கோசேனில் இருப்பதுதான் நல்லது” என்றான்.

இஸ்ரவேல் கோசேனில் குடியேறுதல்

47 யோசேப்பு பார்வோனிடம் சென்று, “எனது தந்தையும் சகோதரர்களும் அவர்களின் குடும்பமும் வந்துள்ளது. அவர்கள் தங்கள் மிருகங்களையும், பொருட்களையும் கொண்டுவந்துள்ளனர். அவர்கள் இப்போது கோசேன் பகுதியில் உள்ளனர்” என்றான். யோசேப்பு தம் சகோதரர்களில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து அழைத்துச் சென்று பார்வோன் முன் நிறுத்தினான்.

பார்வோன் அவர்களிடம், “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.

அவர்கள், “ஐயா, நாங்கள் மேய்ப்பர்கள். எங்கள் முற்பிதாக்களும் மேய்ப்பர்கள்” என்றனர். மேலும், “கானான் நாட்டில் பஞ்சம் அதிகம். எங்கள் மிருகங்களுக்கு அங்கே புல் மிகுந்த வயல் எதுவுமே இல்லை. எனவே, இங்கே வாழ்வதற்காக வந்துள்ளோம். கோசேனில் வாழ அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.

பார்வோன் யோசேப்பிடம், “உனது தந்தையும் சகோதரர்களும் உன்னிடம் வந்திருக்கிறார்கள். எனவே, நீ எந்த இடத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கு நல்ல நிலத்தைக் கொடு. அவர்கள் வேண்டுமானால் கோசேனிலேயே வாழட்டும். அவர்கள் திறமையுள்ள மேய்ப்பர்கள் என்றால் எனது ஆடுமாடுகளையும் பார்த்துக்கொள்ளலாம்” என்றான்.

யோசேப்பு தன் தந்தையை பார்வோனைப் பார்ப்பதற்காக அழைத்தான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.

பார்வோன் அவனிடம், “உங்களுக்கு எத்தனை வயதாகிறது?” என்று கேட்டான்.

“ஏராளமான துன்பங்களோடு மிகக் குறுகிய காலமே வாழ்ந்திருக்கிறேன். என் வயது 130 ஆண்டுகளே. எனது தந்தையும் அவருடைய முற்பிதாக்களும் என்னைவிட அதிகக் காலம் வாழ்திருக்கிறார்கள்” என்றான்.

10 யாக்கோபு பார்வோனை வாழ்த்தி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

11 பார்வோன் சொன்னதுபோலவே யோசேப்பு தந்தைக்கும் சகோதரர்களுக்கும் நல்ல நிலத்தை கோசேனில் கொடுத்தான். இது எகிப்திலேயே சிறந்த இடம். இது ராமசேஸ் நகரத்துக்கு அருகில் உள்ளது. 12 யோசேப்பு தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் குடும்பத்துக்கும் வேண்டிய உணவுப் பொருட்களையும் கொடுத்தான்.

யோசேப்பு பார்வோனுக்காக நிலம் வாங்குதல்

13 பஞ்சம் மிகவும் மோசமாகியது. பூமியில் எங்கும் உணவு இல்லை. எகிப்தும் கானானும் இக்காலத்தில் மிகவும் மோசமாகியது. 14 ஜனங்கள் நிறைய தானியங்களை விலைக்கு வாங்கினார்கள். யோசேப்பு அச்செல்வத்தைச் சேர்த்து வைத்து பார்வோனின் வீட்டிற்குக் கொண்டு வந்தான். 15 கொஞ்ச காலத்தில் எகிப்திலும் கானானிலும் உள்ள ஜனங்களிடம் தானியம் வாங்கப் பணம் இல்லை. தம்மிடம் இருந்த பணத்தை ஏற்கெனவே தானியம் வாங்குவதில் செலவழித்திருந்தார்கள். எனவே அவர்கள் யோசேப்பிடம் சென்று, “தயவு செய்து தானியம் கொடுங்கள். எங்கள் பணம் தீர்ந்துவிட்டது. நாங்கள் உணவு உண்ணாவிட்டால் உங்கள் முன்னாலேயே மரித்துவிடுவோம்” என்று வேண்டினார்கள்.

16 ஆனால் யோசேப்போ, “உங்கள் ஆடு மாடுகளைக் கொடுங்கள் உணவு தருகிறேன்” என்றான். 17 எனவே ஜனங்கள் தங்கள் ஆடு மாடுகளையும் குதிரைகளையும் மற்ற மிருகங்களையும் உணவுக்காக விற்றனர். யோசேப்பு அவற்றை வாங்கிக்கொண்டு உணவைக் கொடுத்தான்.

18 ஆனால் அடுத்த ஆண்டு அவர்களிடம் விற்க மிருகங்களும் இல்லை. எனவே, யோசேப்பிடம் ஜனங்கள் போய், “எங்களிடம் உணவு வாங்கப் பணம் இல்லை. எங்களது மிருகங்களோ உங்களிடம் உள்ளது. எங்களிடம் எதுவும் இல்லை. எங்கள் சரீரமும், நிலங்களும் மட்டுமே உள்ளது. 19 நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் மரித்துவிடுவோம். ஆனால் நீங்கள் உணவு கொடுத்தால் பார்வோன் மன்னருக்கு எங்கள் நிலங்களைக் கொடுப்போம். நாங்கள் அவரது அடிமைகளாக இருப்போம். விதை கொடுங்கள் விதைக்கிறோம். பிறகு நாங்கள் மரிக்காமல் உயிர் வாழ்வோம். நிலத்தில் மீண்டும் உணவு விளையும்” என்றனர்.

20 எனவே, யோசேப்பு எகிப்தில் உள்ள எல்லா நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிவிட்டான். அனைவரும் தங்கள் நிலங்களை யோசேப்பிடம் விற்றுவிட்டார்கள், அவர்கள் பசியாய் இருந்ததால் இவ்வாறு செய்தார்கள். 21 எகிப்திலே, எல்லோரும் பார்வோன் மன்னனின் அடிமைகள் ஆனார்கள். 22 ஆசாரியர்களுக்கு உரிய நிலத்தை மட்டுமே யோசேப்பு வாங்கவில்லை. அவர்களின் உணவுக்கு ஆசாரியர்கள் தங்கள் நிலத்தை விற்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. ஏனெனில் மன்னன் தேவையானவற்றைச் சம்பளமாகக் கொடுத்து வந்தான். அதையே உணவு வாங்க வைத்துக்கொண்டனர்.

23 யோசேப்பு ஜனங்களிடம், “இப்போது நான் உங்கள் நிலத்தையும் உங்களையும் பார்வோனுக்காக வாங்கிவிட்டேன். எனவே விதை கொடுக்கிறேன். நீங்கள் அந்நிலங்களில் பயிர் செய்யுங்கள். 24 அறுவடைக் காலத்தில், நீங்கள் ஐந்தில் ஒரு பாகம் எங்களுக்குக் கொடுக்க வேண்டும். ஐந்தில் நான்கு பாகம் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். அதில் விதை வைத்திருந்து அடுத்த ஆண்டுக்குப் பயன்படுத்தலாம். இப்போது உங்கள் குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் உணவு கொடுக்கலாம்” என்றான்.

25 ஜனங்களோ, “எங்கள் உயிரைக் காப்பாற்றினீர்கள். நாங்கள் பார்வோனுக்கு அடிமையாக இருப்பதில் மகிழ்கிறோம்” என்றனர்.

26 எனவே, யோசேப்பு அப்போது ஒரு சட்டத்தை இயற்றினான். அது இன்றும் உள்ளது. அதன்படி நில வருவாயில் ஐந்தில் ஒரு பாகமானது பார்வோனுக்குரியது. பார்வோனுக்கு எல்லா நிலமும் சொந்தமாக இருக்கும். ஆசாரியர்களின் நிலம் மட்டுமே, பார்வோனுக்குச் சொந்தமாகவில்லை.

“தன் மரணம் பற்றி யாக்கோபின் அறிவிப்பு”

27 இஸ்ரவேல் (யாக்கோபு) எகிப்தில் கோசேன் பகுதியில் வாழ்ந்தான். அவனது குடும்பம் வளர்ந்து மிகப் பெரியதாகி அப்பகுதியில் நன்றாக வாழ்ந்தனர்.

28 யாக்கோபு எகிப்தில் 17 ஆண்டுகள் வாழ்ந்தான். எனவே அவனுக்கு 147 வயது ஆனது. 29 தான் விரைவில் மரித்துப் போவேன் என்று இஸ்ரவேலுக்குத் (யாக்கோபு) தெரிந்தது. அவன் யோசேப்பை அழைத்து அவனிடம்: “நீ என்னை நேசித்தால், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து ஒரு வாக்குறுதியைச் செய். நான் சொல்வதை நீ செய்யவேண்டும். எனக்கு உண்மையாக இருக்கவேண்டும். நான் மரித்தால் என்னை எகிப்தில் அடக்கம் செய்யவேண்டாம். 30 எனது முற்பிதாக்களை அடக்கம் செய்த இடத்திலேயே என்னையும் அடக்கம் செய்துவிடு. இங்கிருந்து கொண்டுபோய் நமது குடும்பக் கல்லறையில் என்னை அடக்கம் செய்” என்றான்.

யோசேப்பு, “நீர் சொன்னபடியே நான் செய்வேன் என்று வாக்குறுதி செய்கிறேன்” என்றான்.

31 பிறகு யாக்கோபு, “எனக்கு வாக்கு கொடு” என்று கேட்டான். யோசேப்பும் அவ்வாறே வாக்குறுதி அளித்தான். பின் இஸ்ரவேல் (யாக்கோபு) படுக்கையில் தன் தலையைச் சாய்த்தான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center