Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 27-29

வாரிசு சிக்கல்கள்

27 ஈசாக்கு வயோதிபன் ஆனான். அவனது கண்கள் பலவீனமாகி அவனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் தன் மூத்த மகன் ஏசாவை அழைத்து “மகனே” என்றான்.

ஏசா “இங்கே இருக்கிறேன்” என்றான்.

ஈசாக்கு அவனை நோக்கி, “எனக்கு வயதாகிவிட்டது. விரைவில் நான் செத்துப் போகலாம். எனவே, உன் வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வேட்டைக்குப் போ. நான் உண்பதற்காக ஒரு மிருகத்தைக் கொன்று வா. நான் விரும்புகிற அந்த உணவைத் தயாரித்து வா. அதை நான் உண்ண வேண்டும். மரிப்பதற்கு முன் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்றான். எனவே ஏசா வேட்டைக்குப் போனான்.

யாக்கோபு ஈசாக்கை ஏமாற்றியது

ஈசாக்கு ஏசாவிடம் கூறுவதை ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். இதனை அவள் யாக்கோபிடம் கூறினாள். “கவனி! உன் தந்தை உன் சகோதரனிடம் கூறுவதைக் கேட்டேன். அவர் ‘நான் உண்பதற்கு ஒரு மிருகத்தைக் கொன்று, எனக்கு உணவை சமைத்து வா, நான் உண்பேன். பிறகு நான் மரிப்பதற்கு முன் உன்னை ஆசீர்வதிப்பேன்’ என்றார். எனவே மகனே நான் சொல்வதைக் கவனித்து அதன்படி செய். நீ நமது ஆட்டு மந்தைக்குப் போ இரண்டு இளம் ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வா. உன் தந்தை விரும்புவதுபோல நான் சமைத்து தருவேன். 10 பிறகு அதனை உன் தந்தைக்குக் கொடு. அவர் உன்னைத் தான் மரிப்பதற்கு முன்னர் ஆசீர்வதிப்பார்” என்றாள்.

11 ஆனால் அவன் தாயிடம், “என் சகோதரனோ உடல் முழுவதும் முடி உள்ளவன். நான் அவ்வாறில்லை. 12 என் தந்தை என்னைத் தொட்டுப் பார்த்தால் நான் ஏசா இல்லை என்பதைத் தெரிந்துகொள்வார். பின் அவர் என்னை ஆசீர்வதிக்கமாட்டார்; சபித்துவிடுவார். நான் ஏமாற்றியதை அறிந்துகொள்வாரே” என்றான்.

13 அதனால் ரெபெக்காள் அவனிடம், “ஏதாவது தவறு ஏற்பட்டால் அதற்கான சாபம் என்மேல் விழட்டும், நீ போய் எனக்காக இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வா” என்றாள்.

14 அதனால் யாக்கோபு வெளியே போய் இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வந்தான். அவள் அதனை ஈசாக்கு விரும்பும் வகையில் சிறப்பான முறையில் சமைத்தாள். 15 பின்னர் ரெபெக்காள் ஏசா விரும்பி அணியும் ஆடைகளை தேர்ந்தெடுத்து யாக்கோபுக்கு அணிவித்தாள். 16 ஆட்டுத் தோலை யாக்கோபின் கைகளிலும் கழுத்திலும் கட்டினாள். 17 பிறகு அவள் மகன் யாக்கோபிடம் அவள் செய்த ரொட்டியையும் சுவையான உணவையும் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

18 யாக்கோபு தன் தந்தையிடம் போய், “அப்பா” என்று அழைத்தான்.

அவன் தந்தையோ, “மகனே, நீ யார்?” என்று கேட்டான்.

19 யாக்கோபு தன் தந்தையிடம், “நான் ஏசா, உங்கள் மூத்த மகன். நீங்கள் சொன்னபடி செய்துள்ளேன். இப்போது உட்கார்ந்து நான் வேட்டையாடிக் கொண்டு வந்த இறைச்சியை உண்ணுங்கள். பிறகு என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்றான்.

20 ஆனால் ஈசாக்கு தன் மகனிடம், “இவ்வளவு வேகமாக நீ எவ்வாறு வேட்டையாடி மிருகத்தைக் கொன்றாய்?” என்று கேட்டான்.

இதற்கு யாக்கோபு, “உங்கள் தேவனாகிய கர்த்தர் விரைவாக வேட்டையாடி மிருகத்தைக் கொல்ல எனக்கு உதவினார்” என்று சொன்னான்.

21 பிறகு ஈசாக்கு யாக்கோபிடம், “என் அருகிலே வா. உன்னைத் தொட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நீ என் மகன் ஏசாவா இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியும்” என்றான்.

22 யாக்கோபு அவனது அருகிலே போனான். ஈசாக்கு அவனைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “உனது சத்தம் யாக்கோபினுடையதுபோல் உள்ளது. ஆனால் உனது கைகள் ஏசாவின் கைகள் போல் முடி நிறைந்ததாய் இருக்கிறது” என்றான். 23 ஈசாக்கினால் அவனை யாக்கோபு என்று கண்டுகொள்ள முடியவில்லை. எனவே, அவனை ஆசீர்வதித்தான்.

24 எனினும் ஈசாக்கு, “உண்மையில் நீ என்னுடைய மகன் ஏசாதானா?” என்று கேட்டான்.

யாக்கோபு, “ஆமாம்” என்று பதில் சொன்னான்.

யாக்கோபிற்கு ஆசீர்வாதம்

25 பிறகு ஈசாக்கு, “அந்த உணவைக் கொண்டு வா. அதனை உண்டு விட்டு உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்றான். எனவே யாக்கோபு உணவைக் கொடுத்தான். அவனும் அதை உண்டான். பின் யாக்கோபு கொஞ்சம் திராட்சை ரசத்தைக் கொடுத்தான். அதையும் அவன் குடித்தான்.

26 பிறகு ஈசாக்கு அவனிடம், “மகனே அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான். 27 எனவே யாக்கோபு அருகிலே போய் தந்தையை முத்தமிட்டான். ஈசாக்கு அவனது ஆடையை நுகர்ந்து பார்த்து அவனை ஏசா என்றே நம்பி ஆசீர்வதித்தான்.

“என் மகன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட வயலைப் போன்று மணக்கிறான்.
28 கர்த்தர் உனக்கு மிகுதியாக மழையைத் தரட்டும். அதனால் நீ பூமியின் செல்வத்தைப் பெறுவாய்.
29 எல்லா ஜனங்களும் உனக்குச் சேவை செய்யட்டும்.
    நாடுகள் உனக்கு அடிபணியட்டும்.
உன் சகோதரர்களையும் நீ ஆள்வாய்.
உன் தாயின் மகன்கள் உனக்கு அடிபணிந்து கீழ்ப்படிவார்கள்.

“உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படுவார்கள்.
உன்னை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று கூறினான்.

ஏசாவின் ஆசீர்வாதம்

30 ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடித்தான். யாக்கோபு தந்தையிடமிருந்து போன உடனேயே ஏசா வேட்டையை முடித்துவிட்டு உள்ளே வந்தான். 31 தந்தைக்கென வேட்டையாடிய மிருகத்தைச் சிறப்பாக சமைத்தான். அதனை எடுத்துக்கொண்டு தந்தையிடம் போனான். “தந்தையே நான் உங்களின் மகன் எழுந்திருங்கள். உங்களுக்காக வேட்டையாடி சமைத்துக்கொண்டு வந்த உணவை உண்ணுங்கள். பிறகு என்னை ஆசீர்வதியுங்கள்” என்றான்.

32 ஆனால் ஈசாக்கோ “நீ யார்” என்று கேட்டான்.

“நான்தான் உங்கள் மூத்தமகன் ஏசா” என்றான்.

33 அதனால் ஈசாக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தான். “நீ வருவதற்கு முன்னால் இறைச்சி உணவு சமைத்துக் கொடுத்துவிட்டுப் போனானே அவன் யார்? நான் அதனை உண்டு அவனை ஆசீர்வாதம் செய்தேனே. அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான்” என்றான்.

34 ஏசா தந்தையின் வார்த்தைகளைக் கேட்டான். பிறகு கோபமும் ஆத்திரமும் அடைந்து அழுதான். தந்தையிடம் “என்னையும் ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்றான்.

35 ஈசாக்கு அவனிடம், “உன் தம்பி என்னை ஏமாற்றிவிட்டான். அவன் வந்து உனது ஆசீர்வாதத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டான்” என்றான்.

36 “அவன் பெயரே யாக்கோபு, (தந்திரசாலி என்றும் பொருள்.) அவனுக்குப் பொருத்தமான பெயர்தான். அவன் இருமுறை என்னை ஏமாற்றி இருக்கிறான். முன்பு முதல் மகன் என்ற உரிமைப் பங்கையும் அவன் பெற்றுக்கொண்டான். இப்போதோ எனது ஆசீர்வாதங்களையும் எடுத்துக்கொண்டானே” என்று புலம்பினான். பிறகு, “எனக்கென்று ஏதாவது ஆசீர்வாதம் மீதி இருக்கிறதா” என்று கேட்டான்.

37 அதற்கு ஈசாக்கு, “இல்லை. இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. நான் அவனுக்கு உன்மீது ஆளுகை செலுத்தும்படி ஆசீர்வதித்துவிட்டேன். அவனது சகோதரர்கள் அனைவரும் அவனுக்கு வேலை செய்வார்கள் என்றும் கூறிவிட்டேன். ஏராளமான உணவும் திராட்சைரசமும் பெறுவான் என்றும் ஆசீர்வதித்து விட்டேன். உனக்கென்று தர எதுவும் இல்லையே” என்றான்.

38 ஆனால் தொடர்ந்து ஏசா தந்தையை கெஞ்சிக்கொண்டிருந்தான். “அப்பா உங்களிடம் ஒரு ஆசீர்வாதம்தான் உள்ளதா, என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்று அழுதான்.

39 பிறகு ஈசாக்கு

“நல்ல நிலத்தில் நீ வாழமாட்டாய்.
    அதிக மழை இருக்காது.
40 நீ உன் பட்டயத்தால்தான் வாழ்வாய்.
    உன் தம்பிக்கு நீ அடிமையாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் விடுதலைக்காகச் சண்டையிட்டு
    அவனது கட்டுகளை உடைத்துவிடுவாய்” என்றார்.

யாக்கோபு நாட்டைவிட்டு செல்கிறான்

41 அதற்குப் பின் ஏசா யாக்கோபுக்கு எதிராக வஞ்கசம் கொண்டான். ஏனென்றால் தந்தையின் ஆசீர்வாதத்தை அவன் பெற்றுள்ளான். “என் தந்தை விரைவில் மரித்துபோவார். அதனால் நான் சோகமடைவேன். அதற்குப் பின் நான் யாக்கோபை கொன்றுவிடுவேன்” என்று தனக்குள் ஏசா கூறிக்கொண்டான்.

42 யாக்கோபை கொல்ல வேண்டும் என்ற ஏசாவின் திட்டத்தை ரெபெக்காள் அறிந்துகொண்டாள். அவள் யாக்கோபை அழைத்து அவனிடம், “உன் சகோதரன் ஏசா உன்னைக் கொல்லத் திட்டமிடுகிறான். 43 எனவே நான் சொல்கிறபடி நீ செய். ஆரானில் இருக்கிற என் சகோதரன் லாபானிடம் ஓடிச் சென்று அவனோடு இரு. 44 உன் சகோதரனின் கோபம் தீரும்வரை அங்கேயே இரு. 45 கொஞ்சக் காலம் ஆனதும் உன் சகோதரன் நீ செய்ததை மறந்துவிடுவான். பிறகு உன்னை இங்கு அழைக்க ஒரு வேலைக்காரனிடம் செய்தியைச் சொல்லி அனுப்புவேன். ஒரே நாளில் எனது இரண்டு மகன்களையும் நான் இழக்க விரும்பவில்லை” என்றாள்.

46 பிறகு ரெபெக்காள் ஈசாக்கிடம், “உமது மகன் ஏசா ஏத்தியர் பெண்களை மணந்துகொண்டான். நான் அந்தப் பெண்களால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஏனெனில் அவர்கள் நம் இனத்தவர்களல்ல. யாக்கோபும் இதுபோல் மணம் செய்தால் நான் மரித்துப்போவேன்” என்றாள்.

யாக்கோபு மனைவியைத் தேடுதல்

28 ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனை ஆசீர்வதித்தான். அவனுக்கு ஒரு ஆணையிட்டான். “நீ ஒரு கானானியப் பெண்ணை மனைவியாக்கக் கூடாது. எனவே நீ இந்த இடத்தைவிட்டுப் பதான் ஆராமுக்குப் போ. உன் தாயின் தந்தையான பெத்துவேல் வீட்டிற்குப் போ. உன் தாயின் சகோதரனான லாபான் அங்கு வாழ்கிறான். அவனது மகள்களில் ஒருத்தியை மணந்துகொள். சர்வ வல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். உனக்கு நிறைய குழந்தைகள் பிறப்பார்கள். ஒரு பெரிய தேசத்தின் தந்தையாவாய். தேவன் உன்னையும் உன் குழந்தைகளையும் ஆசீர்வதிப்பார். ஆபிரகாமையும் அப்படித்தான் ஆசீர்வதித்தார். நீ வாழ்கிற நாடு உனக்குச் சொந்தமாகும். தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த நாடு இது” என்றான்.

ஆகவே ஈசாக்கு யாக்கோபை பதான் ஆராமுக்கு அனுப்பி வைத்தான். யாக்கோபும் லாபானிடம் போனான். பெத்துவேல் லாபானுக்கும் ரெபெக்காளுக்கும் தந்தை. ரெபெக்காள் ஏசாவுக்கும் யாக்கோபுக்கும் தாய்.

தன் தந்தை யாக்கோபை ஆசீர்வதித்ததையும் ஒரு மனைவியைத் தேட யாக்கோபை பதான் ஆராமுக்கு தன் தந்தை அனுப்பியதையும், கானானியப் பெண்களை மணந்துகொள்ளக் கூடாது என்று ஆணை இட்டதையும் ஏசா அறிந்துகொண்டான். யாக்கோபு தன் தாயும், தந்தையும் சொன்னதைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிந்து பதான் ஆராமுக்குப் போனதையும் அறிந்தான். இதனால் ஈசாக்கு தம் பிள்ளைகள் கானானியப் பெண்களை மணந்துகொள்வதை விரும்பவில்லை என்பதையும் தெரிந்துகொண்டான். அவனுக்கு ஏற்கெனவே இரண்டு மனைவியர் இருந்தனர். ஆனாலும் அவன் இஸ்மவேலிடம் போய் அவன் மகளாகிய மகலாத்தை மணந்துக்கொண்டான். இஸ்மவேல் ஆபிரகாமின் மகன். மகலாத் நெபாயோத்தின் சகோதரி.

பெத்தேல்-தேவனுடைய வீடு

10 யாக்கோபு பெயர்செபாவை விட்டு ஆரானுக்குப் போனான். 11 அவன் பயணத்தின்போது சூரியன் மறைந்தது. அன்றைய இரவு தங்கும்பொருட்டு ஒரு இடத்துக்குச் சென்றான். அங்கே ஒரு கல்லை எடுத்து அதை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான். 12 யாக்கோபு ஒரு கனவு கண்டான். கனவில் வானத்தைத் தொடும் அளவுக்கு உயரமாய் இருந்த ஒரு ஏணியைக் கண்டான். தேவதூதர்கள் அதில் ஏறி மேலும் கீழும் வந்து போய்க்கொண்டிருந்தனர். 13 கர்த்தர் ஏணியின் அருகில் நின்றுகொண்டிருப்பதையும் கண்டான். கர்த்தர், “நானே தேவன். உன் தாத்தாவான ஆபிரகாமுக்கும் நானே தேவன். நான் ஈசாக்குக்கும் தேவன். இப்போது நீ படுத்திருக்கிற பூமியையே உனக்குக் கொடுப்பேன். இது உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் உரியதாகும். 14 உனக்கு எண்ணிறந்த சந்ததிகள் உருவாகுவார்கள். பூமியில் உள்ள தூளைப்போன்று அவர்கள் எண்ணிக்கையில் நிறைந்திருப்பார்கள். அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமாக வடக்கிலும் தெற்கிலுமாகப் பரவுவார்கள். உன்னாலும் உன் சந்ததிகளாலும் உலகிலுள்ள குடும்பங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

15 “நான் உன்னோடு இருக்கிறேன். நீ போகிற ஒவ்வொரு இடத்திலும் உன்னைக் காப்பாற்றுவேன். நான் மீண்டும் உன்னை இங்கே கொண்டுவருவேன். எனது வாக்குறுதியை முடிக்கும்வரை உன்னை விட்டு விலகமாட்டேன்” என்றார்.

16 உடனே யாக்கோபு தனது தூக்கத்திலிருந்து எழுந்தான். “கர்த்தர் இங்கேதான் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன். நான் தூங்கும்வரை இதை அறிந்துகொள்ளவில்லை” என்றான்.

17 அவனுக்கு பயம் வந்தது, “இது மிகச் சிறந்த இடம். இது தேவனுடைய வீடு, பரலோகத்தின் வாசல்” என்றான்.

18 யாக்கோபு அதிகாலையில் எழுந்ததும் தலைக்கு வைத்துப்படுத்த கல்லை நிமிர்த்தி வைத்து, அதன்மேல் எண்ணெய் ஊற்றினான். இவ்வாறு அவன் அந்தக் கல்லை நினைவுச் சின்னமாக ஆக்கினான். 19 இந்த நகரத்தின் பெயர் லூஸ். ஆனால் யாக்கோபு அதற்குப் பெத்தேல் என்று பெயரிட்டான்.

20 பின் யாக்கோபு: “தேவன் என்னோடு இருந்து, எங்கு போனாலும் என்னைத் தேவன் காப்பாற்று வாரானால், உண்ண உணவும் அணிய ஆடையும் தேவன் கொடுப்பாரானால், 21 என் தந்தையின் இடத்துக்குச் சமாதானத்தோடு திரும்புவேனேயானால், தேவன் இதையெல்லாம் செய்வாரானால், கர்த்தர் என் தேவனாயிருப்பார். 22 இந்த இடத்தில் இக்கல்லை ஞாபகார்த்தக் கல்லாக நிறுத்துவேன். தேவனுக்கான பரிசுத்த இடம் இது என்று அடையாளம் காட்டும். தேவன் எனக்குக் கொடுக்கும் அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை அவருக்கே கொடுப்பேன்” என்று பொருத்தனை செய்தான்.

யாக்கோபு ராகேலைச் சந்திக்கிறான்

29 பிறகு யாக்கோபு தன் பயணத்தைத் தொடர்ந்து, கிழக்கே உள்ள நாட்டுக்குப் போனான். யாக்கோபு வயல்வெளியில் ஒரு கிணற்றைப் பார்த்தான். அக்கிணற்றின் அருகில் மூன்று ஆட்டு மந்தைகள் மடக்கப்பட்டிருப்பதையும் பார்த்தான். அக்கிணறு தான் ஆடுகள் தண்ணீர் குடிக்கும் இடம் ஆகும். கிணற்றின் வாயானது ஒரு பெரிய கல்லால் அடைக்கப்பட்டிருந்தது. ஆடுகள் எல்லாம் அங்கு ஒன்று சேர்ந்ததும் மேய்ப்பர்கள் கிணற்றை மூடியுள்ள பாறையை அகற்றி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். ஆடுகள் வயிறு நிறைய தண்ணீர் குடித்த பிறகு மேய்ப்பர்கள் அக்கிணற்றைப் பாறையால் மூடி வைப்பார்கள்.

யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், “சகோதரர்களே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.

மேய்ப்பர்கள், “நாங்கள் ஆரானிலிருந்து வருகிறோம்” என்றார்கள்.

பிறகு யாக்கோபு “உங்களுக்கு லாபானைத் தெரியுமா? அவர் நாகோரின் மகன்” என்று கேட்டான்.

மேய்ப்பர்கள் “எங்களுக்குத் தெரியும்” என்று பதில் சொன்னார்கள்.

“அவர் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டான் யாக்கோபு.

அதற்கு அவர்கள் “அவர் நன்றாக இருக்கிறார். அதோ பாரும் அவரது மகள் ராகேல் ஆட்டு மந்தையோடு வந்துகொண்டிருக்கிறாள்” என்றார்கள்.

யாக்கோபு, “சூரியன் அஸ்தமிக்க இன்னும் பொழுது இருக்கிறதே. ஆடுகளை இன்னும் கொஞ்சம் மேய்த்து தண்ணீர் காட்டலாமே! இது ஆடுகளை அடைக்கிற நேரமில்லையே. தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் அவற்றை, வயல்வெளிக்கு அனுப்புங்கள்” என்றான்.

அதற்கு மேய்ப்பர்கள், “எல்லா ஆடுகளும் சேருமுன்னால் நாங்கள் அவ்வாறு செய்யக் கூடாது. சேர்ந்த பின்னரே கிணற்றின் கல்லை அகற்றுவோம் அப்போது எல்லா ஆடுகளும் தண்ணீர் குடிக்கும்” என்றனர்.

யாக்கோபு மேய்ப்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போதே ராகேல் தன் தந்தையின் ஆடுகளோடு வந்தாள். (அவளது வேலையே ஆடு மேய்ப்பது தான்.) 10 ராகேல் லாபானின் மகள். லாபான் யாக்கோபின் தாயான ரெபெக்காளின் சகோதரன். அவன் ராகேலைக் கண்டதும் கிணற்றின் மேலுள்ள கல்லை நகர்த்தி ஆடுகள் தண்ணீர் குடிக்க உதவினான். 11 பிறகு அவன் ராகேலை முத்தமிட்டு, அழுதான். 12 அவன் அவளிடம், தான் அவளது தந்தையின் குடும்பத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னான். தான் ரெபெக்காளின் மகன் என்றான். ராகேல் ஓடிப் போய் தந்தையிடம் கூறினாள்.

13 லாபான் தன் சகோதரியின் மகன் யாக்கோபைப்பற்றிக் கேள்விப்பட்டதும் அவனைச் சந்திக்க ஓடி வந்தான். அவனை அணைத்து முத்தமிட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். யாக்கோபு நடந்தவற்றையெல்லாம் சொன்னான்.

14 அப்பொழுது லாபான் “இது ஆச்சரியமானது. நீ எனது சொந்தக் குடும்பத்தில் உள்ளவன்” என்றான். எனவே யாக்கோபு அங்கு ஒரு மாத காலம் தங்கி இருந்தான்.

லாபான் யாக்கோபிடம் தந்திரம் செய்கிறான்

15 ஒரு நாள் லாபான் யாக்கோபிடம், “நீ என்னிடம் தொடர்ந்து சம்பளமில்லாமல் வேலை செய்துகொண்டிருப்பது சரியல்ல. நீ எனது அடிமையல்ல, உறவினன். நான் உனக்கு என்ன சம்பளம் தரட்டும்?” என்று கேட்டான்.

16 லாபானுக்கு இரண்டு பெண்கள் இருந்தனர். மூத்தவள் பெயர் லேயாள் இளையவள் பெயர் ராகேல்.

17 ராகேல் மிக அழகானவள். லேயாளின் கண்களோ கூச்சம் உடையவை. [a] 18 யாக்கோபு ராகேலை நேசித்தான். எனவே அவன் லாபானிடம், “உங்கள் மகள் ராகேலை மணமுடிக்க நீங்கள் அனுமதித்தால் நான் ஏழு ஆண்டுகள் உங்களுக்காக வேலை செய்யத் தயார்” என்றான்.

19 அதற்கு லாபான், “அவள் வேறு யாரையாவது மணந்துகொள்வதைவிட உன்னை மணந்துகொள்வது அவளுக்கு நல்லது” என்றான்.

20 அதனால் யாக்கோபு அங்கு ஏழு ஆண்டுகள் தங்கி வேலை பார்த்தான். ஆனால் அவன் ராகேலை நேசித்ததால் ஆண்டுகள் வேகமாக முடிந்துவிட்டன.

21 ஏழு ஆண்டுகள் ஆனதும் அவன் லாபானிடம், “ராகேலை எனக்குத் தாருங்கள். நான் அவளை மணமுடிக்க வேண்டும். நான் வேலை செய்ய வேண்டிய காலமும் முடிந்துவிட்டது” என்றான்.

22 அதனால் அந்த இடத்திலுள்ள எல்லா ஜனங்களுக்கும் லாபான் ஒரு விருந்து கொடுத்தான். 23 அன்று இரவு அவன் தன் மூத்த மகள் லேயாளை யாக்கோபிடம் அழைத்து வந்தான். இருவரும் பாலின உறவு கொண்டனர். 24 (லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளை லேயாளுக்கு வேலைக்காரியாக ஆக்கி இருந்தான்.) 25 காலையில் எழுந்ததும் யாக்கோபு இரவு முழுக்க தன்னோடு இருந்தது லேயாள் என்பதை அறிந்துகொண்டான். லாபானிடம் சென்று “என்னை ஏமாற்றிவிட்டீர்கள். நான் ராகேலை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஏழு ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறேன். ஏன் என்னை ஏமாற்றினீர்கள்?” என்று கேட்டான்.

26 லாபான், “மூத்தவள் இருக்கும்போது இளையவளுக்கு மணம் முடிக்க எங்கள் நாட்டில் அனுமதிக்கமாட்டோம். 27 ஆனால் திருமணச் சடங்குகளை ஒரு வாரத்திற்குத் தொடர்ந்தபின் நான் உனக்கு ராகேலையும் திருமணம் செய்துகொள்ளத் தருவேன். ஆனால் நீ இன்னும் ஏழு ஆண்டுகள் எனக்குப் பணியாற்ற வேண்டும்” என்றான்.

28 எனவே யாக்கோபு அதற்கு ஒப்புக்கொண்டு ஒரு வாரத்தைக் கழித்தான். லாபான் ராகேலை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். 29 (தனது வேலைக்காரியான பில்காளை ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.) 30 யாக்கோபு ராகேலோடும் பாலின உறவு கொண்டான். அவன் லேயாளைவிட ராகேலைப் பெரிதும் நேசித்ததால் மேலும் ஏழு ஆண்டுகள் அங்கு வேலை செய்தான்.

யாக்கோபின் குடும்பம் பெருகுதல்

31 யாக்கோபு லேயாளைவிட ராகேலை அதிகமாக நேசிப்பதை கர்த்தர் கண்டார். எனவே லேயாள் மட்டுமே கருத்தரிக்குமாறு கர்த்தர் செய்தார். ஆனால் ராகேலோ மலடியாய் இருந்தாள்.

32 லேயாளுக்கு ஓர் மகன் பிறந்தான். அவள் அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள். “கர்த்தர் நான் படும் தொல்லைகளைக் கண்டார். என் கணவன் என்னை நேசிக்காமல் இருந்தார். இப்போது ஒரு வேளை அவர் என்னை நேசிக்கலாம்” என்று நினைத்தாள்.

33 லேயாள் மீண்டும் கர்ப்பமானாள். அவள் இன்னொரு மகனைப் பெற்றாள். அவனுக்கு சிமியோன் என்று பெயர் வைத்தாள். “நான் நேசிக்கப்படாததைக் கண்டு கர்த்தர் எனக்கு இன்னொரு மகனை கொடுத்தார்” என்று கூறினாள்.

34 லேயாள் மீண்டும் கர்ப்பமாகி இன்னொரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள். “இப்பொழுது என் கணவர் என்னை நிச்சயம் நேசிப்பார். நான் அவருக்கு மூன்று மகன்களைக் கொடுத்திருக்கிறேன்” என்றாள்.

35 லேயாள் மேலும் ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள். அவள், “நான் இப்போது கர்த்தரைத் துதிப்பேன்” என்றாள். பிறகு குழந்தை பெறுவது நின்றுவிட்டது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center