Beginning
சன்பல்லாத்தும் தொபியாவும்
4 நாங்கள் எருசலேம் சுவர்களைக் கட்டிக்கொண்டிருப்பதை சன்பல்லாத் கேள்விப்பட்டான். அவன் மிகவும் கோபம்கொண்டான், எரிச்சல் அடைந்தான். அவன் யூதர்களைக் கேலிச்செய்யத் தொடங்கினான். 2 சன்பல்லாத் அவனது நண்பர்களோடும் சமாரியாவிலுள்ள படைவீரர்களோடும் பேசி, “பலவீனமுள்ள இந்த யூதர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களை தனியாக விடுவோம் என்று நினைக்கிறார்களா? அவர்கள் பலியிடலாம் என்று நினைக்கிறார்களா? ஒரே ஒரு நாளிலேயே கட்டி முடித்துவிடலாம் என்று நினைக்கிறார்களா? சாம்பல் மேடுகளிலும் புழுதிமேடுகளிலும் உள்ள கற்களுக்கு உயிர்கொடுக்க அவர்களால் முடியாது. இவை சாம்பல் மற்றும் புழுதிக் குவியல்களே” என்றான்.
3 அம்மோனியனாகிய தொபியா சன்பல்லாத்தின் பக்கத்தில் நின்றான். அவன், “இந்த யூதர்கள் எதைக் கட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு சிறு நரி இதன் மேல் ஏறினாலும் சுவரிலுள்ள கற்கள் கீழே விழுந்துவிடும்” என்று சொன்னான்.
4 நெகேமியா தேவனிடம் ஜெபம் செய்தான். அவன், “எங்கள் தேவனே, எங்கள் ஜெபத்தைக் கேளும். அந்த மனிதர்கள் எங்களை வெறுக்கிறார்கள். சன்பல்லாத்தும் தொபியாவும் எங்களை அவமதிக்கிறார்கள். அவர்களுக்கே அந்தத் தீயச்செயல்கள் ஏற்படும்படி செய்யும். அவர்களை கைதிகளாக கொண்டு போகப்பட்டவர்களைப் போல வெட்கமுறும்படிச் செய்யும். 5 அவர்களது குற்றங்களை அகற்றவேண்டாம், அல்லது உமது கண்ணுக்கு முன்னால் செய்திருக்கிற பாவங்களை மன்னிக்கவேண்டாம். அவர்கள் கட்டிடம் கட்டுவோர்களை நிந்தனை செய்தும் அதைரியப்படுத்தவும் செய்தனர்” என்றான்.
6 நாங்கள் எருசலேமின் சுவரைக் கட்டினோம். ஆனால் இச்சுவர்கள் இருக்கவேண்டிய உயரத்திற்கு பாதி உயரம்தான் உள்ளது. நாங்கள் இதுவரை செய்தோம். ஏனென்றால் ஜனங்கள் தங்கள் முழுமனதோடு வேலைச் செய்தனர்.
7 ஆனால் சன்பல்லாத், தொபியா, அரபியர்கள், அம்மோனியர்கள் மற்றும் அஸ்தோத்தியரும் மிகவும் எரிச்சல் அடைந்தனர். அவர்கள், எருசலேம் சுவர்களில் ஜனங்கள் தொடர்ந்து வேலைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டனர். சுவர்களில் உள்ள துவாரங்களை ஜனங்கள் அடைக்கின்றனர் என்றும் அவர்கள் கேள்விப்பட்டனர். 8 எனவே, அம்மனிதர்கள் கூடி எருசலேமிற்கு எதிராகத் திட்டங்கள் தீட்டினர். அவர்கள் எருசலேமிற்கு எதிராகத் தூண்டிவிட திட்டமிட்டனர். அவர்கள் வந்து நகரத்திற்கு எதிராகச் சண்டையிடவும் திட்டமிட்டனர். 9 ஆனால் நாங்கள் எங்கள் தேவனிடம் ஜெபம் செய்தோம். நாங்கள் சுவர்களில் இரவும் பகலும் கண்காணிக்க காவலர்களை ஏற்பாடு செய்தோம். நாங்கள் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருந்தோம்.
10 எனவே அந்த நேரத்தில் யூதாவின் ஜனங்கள், “வேலைக்காரர்கள் சோர்வாக இருக்கிறார்கள். வழியில் எல்லாம் மண்ணும் மேடுமாயும் இருக்கிறது. எங்களால் தொடர்ந்து சுவரைக் கட்ட முடியாது. 11 எங்கள் பகைவர்கள், ‘யூதா ஜனங்கள் அறிந்துக் கொள்வதற்கும் எங்களைப் பார்ப்பதற்கும் முன்னால் நாங்கள் அவர்கள் மத்தியில் இருப்போம். நாங்கள் அவர்களைக் கொல்வோம். அது வேலையை நிறுத்தும்’ என்கிறார்கள்” என்று கூறினர்.
12 பிறகு எங்கள் பகைவர்களின் மத்தியில் வாழும் யூதர்கள் வந்து எங்களிடம் பத்துமுறை, “எங்களைச் சுற்றிலும் எங்கள் பகைவர்கள் உள்ளனர். நாங்கள் திரும்பினாலும், அங்கேயும் இருக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.
13 எனவே நாம் கொஞ்சம் பேரைச் சுவரோடுள்ள பள்ளமான இடங்களில்விட்டேன். சுவர்களில் உள்ள துவாரங்களில் அவர்களை நிற்க வைத்தேன். நான் அவர்களைக், அவர்களது குடும்பங்களோடு அருகில் வாள்கள், ஈட்டிகள், மற்றும் வில்லுகளோடு நிறுத்தினேன். 14 நான் மொத்த சூழ்நிலையையும் பார்த்தேன். பிறகு நான் எழுந்து நின்று முக்கியமான குடும்பங்களிடமும், அதிகாரிகளிடமும் மற்ற ஜனங்களிடமும் பேசினேன். நான் அவர்களிடம், “நமது பகைவர்களுக்குப் பயப்படவேண்டாம். நமது ஆண்டவரை நினைவு கொள்ளுங்கள். கர்த்தர் பெரியவராயும் வல்லமை உடையவராயும் இருக்கிறார். நீங்கள் உங்கள் சகோதரர்கள், மகன்கள், மகள்கள் ஆகியோருக்காகச் சண்டையிடவேண்டும். உங்கள் மனைவிகளுக்காகவும் வீடுகளுக்காகவும் போரிடவேண்டும்” என்று கூறினேன்.
15 பிறகு நாங்கள் அவர்களின் திட்டங்களை அறிந்துகொண்டதை எங்கள் பகைவர்கள் கேள்விப்பட்டனர். அவர்களது திட்டங்களைத் தேவன் அழித்துவிட்டதை அவர்கள் அறிந்தனர். எனவே நாங்கள் அனைவரும் சுவரில் வேலை செய்வதற்குத் திரும்பிப்போனோம். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பிப்போய் தங்கள் வேலையைச் செய்தனர். 16 அந்த நாளில் இருந்து, எனது பாதி ஜனங்கள் சுவர்வேலை செய்தனர். மீதி பாதி ஜனங்கள் ஈட்டிகள், கேடயங்கள், வில்லுகள் மற்றும் கவசங்கள் ஆகியவற்றோடு காவல் காத்தனர். படை அதிகாரிகள் சுவரைக்கட்டும் யூதாவின் ஜனங்களுக்குப் பின்னால் நின்றனர். 17 கட்டிடம் கட்டுவோரும் அவர்களது உதவியாளர்களும் ஒரு கையில் கருவியையும், இன்னொரு கையில் ஆயுதத்தையும் வைத்திருந்தனர். 18 கட்டிடம் கட்டும் ஒவ்வொருவரும் வேலை செய்யும்போது தன் இடுப்பில் வாளை அணிந்திருந்தனர். எனக்கு அடுத்திருந்தவன் எச்சரிக்கை செய்வதற்கு எக்காளம் ஊதுபவனாக இருந்தான். 19 பிறகு நான் பிரதான குடும்பங்களிடமும், அதிகாரிகளிடமும், மற்ற ஜனங்களிடமும் பேசினேன். நான் அவர்களிடம், “இது மிகப் பெரிய வேலை. நாம் சுவர் முழுவதும் பரவியிருக்க வேண்டும். நாம் ஒருவருக்கு ஒருவர் தூரமாக இருக்கிறோம். 20 எனவே, நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்டால் அந்த இடத்திற்கு ஓடிப்போங்கள். அங்கே நாம் அனைவரும் கூடுவோம். தேவன் நமக்காக போரிடுவார்” என்று சொன்னேன்.
21 எனவே, நாங்கள் எருசலேம் சுவரில் தொடர்ந்து வேலைச் செய்துகொண்டிருந்தோம். பாதிபேர் ஈட்டிகளை வைத்திருந்தார்கள். நாங்கள் காலை வெளிச்சம் வந்தது முதல் இரவில் நட்சத்திரம் வரும்வரை வேலைச் செய்தோம்.
22 அந்த நேரத்தில் நானும் ஜனங்களிடம், “கட்டிடம் கட்டுகிற ஒவ்வொருவரும் தங்கள் உதவியாளர்களோடு இரவில் எருசலேமிற்குள்ளே தங்க வேண்டும். பிறகு அவர்கள் இரவில் காவல் செய்யவும் பகலில் வேலை செய்யவும் முடியும்” என்று சொன்னேன். 23 எனவே நானாகிலும் எனது சகோதரராகிலும் எனது வேலைக்காரராகிலும் என்னைப் பின்பற்றி காவல் காக்கிற சேவகராகிலும் எங்கள் ஆடைகளைக் கழற்றிபோடாமல் இருந்தோம். எல்லா நேரமும் எங்களிடம் ஆயுதம் தயாராக இருந்தது. நாங்கள் தண்ணீர் எடுக்கப் போகும்போது கூட ஆயுதம் தயாராக இருந்தது.
நெகேமியா ஏழை ஜனங்களுக்கு உதவுகிறான்
5 ஏழை ஜனங்களுள் அநேகம் பேர் தங்கள் யூத சகோதரர்களுக்கு எதிராக முறையிடத் தொடங்கினார்கள். 2 சிலர், “எங்களுக்கு நிறைய குழந்தைகள் இருக்கின்றனர். நாங்கள் சாப்பிட்டு உயிரோடு இருக்க வேண்டுமானால் தானியங்களைப் பெறவேண்டும்” என்றனர்.
3 மற்ற ஜனங்கள், “இது பஞ்சகாலம், நாங்கள் எங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் தானியங்களைப் பெறுவதற்காக அடமானமாக வைத்திருக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
4 மேலும் சிலர், “நாங்கள் எங்களது வயல்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்களுக்கு அரசனிடம் வரி கட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால் எங்களால் வரிகட்ட முடியாது. எனவே நாங்கள் வரி கட்டுவதற்குப் பணத்தை கடன் வாங்கவேண்டியவர்களாக இருக்கிறோம். 5 அந்த பணக்கார ஜனங்களைப் பாருங்கள். நாங்களும் அவர்களைப் போன்றே நல்லவர்களாக இருக்கிறோம். எங்கள் மகன்களும் அவர்களது மகன்களைப் போன்றே நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் மகன்களையும் மகள்களையும் அடிமையாக விற்கும் நிலையில் உள்ளோம். ஏற்கெனவே எங்களில் சிலர் தங்கள் மகள்களையும் அடிமைகளாக விற்றிருக்கின்றனர். எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. நாங்கள் ஏற்கனவே எங்கள் வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும் இழந்துவிட்டோம். இப்பொழுது அவற்றை மற்றவர்கள் சொந்தமாக்கிக் கொண்டனர்” என்றனர்.
6 நான் அவர்களது குற்றச்சாட்டுகளைக் கேட்டதும் மிகவும் கோபமடைந்தேன். 7 நான் என்னை அமைதிப்படுத்திக் கொண்டு பிறகு நான் பணக்காரக் குடும்பங்களிடமும் அதிகாரிகளிடமும் சென்றேன். நான் அவர்களிடம், “நீங்கள் உங்கள் சொந்த ஜனங்களிடையே உங்கள் பணத்துக்கு வட்டி தருமாறு பலவந்தப்படுத்துகிறீர்கள். இவ்வாறு செய்வதை நீங்கள் நிறுத்தவேண்டும்” என்றேன். பிறகு நான் அனைத்து ஜனங்களையும் கூடும்படி அழைத்தேன். 8 நான் அந்த ஜனங்களிடம், “நமது யூத சகோதரர்கள் மற்ற நாடுகளுக்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். நாங்கள் அவர்களைத் திரும்ப விலைகொடுத்து வாங்கி, அவர்களை விடுதலைச்செய்ய எங்களால் இயன்றதைச் செய்தோம். இப்பொழுது, மீண்டும் நீங்கள் அவர்களை அடிமைகளைப்போன்று விற்றுக்கொண்டிருக்கிறீர்கள்” என்றேன்.
அந்தப் பணக்காரர்களும் அதிகாரிகளும் அமைதியாக இருந்தார்கள். அவர்களால் சொல்வதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 9 எனவே நான் தொடர்ந்து பேசினேன். நான் அவர்களிடம், “நீங்கள் செய்துகொண்டிருப்பது சரியில்லை. நீங்கள் தேவனுக்குப் பயந்து அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். மற்ற ஜனங்கள் செய்வதுபோன்ற வெட்கப்படத்தக்கச் செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. 10 எனது ஜனங்களே, எனது சகோதரர்களே, நானும் கூட அந்த ஜனங்களுக்குப் பணத்தையும் தானியத்தையும் கடனாகக் கொடுத்திருக்கிறேன். அந்தக் கடன்களுக்கு வட்டி கொடுக்குமாறு பலவந்தப்படுத்துவதை விட வேண்டும். 11 நீங்கள் அவர்களது திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும், ஒலிவ வயல்களையும், வீடுகளையும் இப்போதே திருப்பிக் கொடுக்கவேண்டும். நீங்கள் அவர்களிடமிருந்து பெற்ற வட்டியையும் திருப்பிக் கொடுக்கவேண்டும். நீங்கள் அவர்களிடம் பணம், தானியம், புதிய திராட்சைரசம் மற்றும் எண்ணெய் ஆகியவற்றுக்கு நூற்றுக்கு ஒன்று வீதம் வட்டி வசூலித்திருக்கிறீர்கள். நீங்கள் அவற்றை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும்” என்றேன்.
12 பிறகு அந்தப் பணக்காரர்களும் அதிகாரிகளும், “நாங்கள் இவற்றைத் திருப்பிக் கொடுப்போம். நாங்கள் அவர்களிடம் மேலும் எதையும் கேட்கமாட்டோம். நெகேமியா, நீ சொன்னபடியே நாங்கள் செய்வோம்” என்றனர்.
பிறகு நான் ஆசாரியர்களை அழைத்தேன். நான் பணக்காரர்களையும் அதிகாரிகளையும் தாங்கள் சொன்னதைச் செய்வதாக தேவனுக்கு உறுதிமொழி அளிக்கச்செய்தேன். 13 பிறகு நான் எனது ஆடைகளின் மடிப்புகளை உதறிப்போட்டேன். நான், “தனது வாக்குறுதியைக் காப்பாற்றாத எவரையும் தேவன் இவ்வாறே உதறிப்போடுவார். தேவன் அவர்களைத் தமது வீடுகளிலிருந்து உதறுவார். அவர்கள் தமது சம்பாத்தியத்தை எல்லாம் இழப்பார்கள். அம்மனிதன் எல்லாவற்றையும் இழப்பான்” என்றேன்.
நான் இவற்றைச் சொல்லி முடித்தேன். அந்த ஜனங்கள் ஒத்துக்கொண்டனர். அவர்கள் அனைவரும் “ஆமென்” என்றனர். அவர்கள் கர்த்தரை துதித்தனர். எனவே ஜனங்கள் அவர்கள் வாக்குறுதிப்படியே செய்தனர்.
14 அந்தக் காலம் முழுவதும் நான் யூதாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, நானும் என் சகோதரர்களும் ஆளுநருக்கு ஒதுக்கப்பட்டிருந்த உணவை உண்ணவில்லை. எனது உணவை வாங்குவதற்கான வரியைக் கட்டுமாறு நான் ஜனங்களைப் பலவந்தப்படுத்தவில்லை. நான், அர்தசஷ்டா அரசனான இருபதாம் ஆண்டு முதல் முப்பத்திரெண்டாம் ஆண்டுவரை ஆளுநராக இருந்தேன். நான் 12 ஆண்டுகள் யூதாவின் ஆளுநராக இருந்தேன். 15 ஆனால் எனக்கு முன்னால் ஆளுநராக இருந்தவர்கள் ஜனங்களது வாழ்க்கையைக் கடினமாக்கினார்கள். அந்த ஆளுநர்கள் ஒவ்வொருவரையும் ஒரு பவுண்டு வெள்ளி கொடுக்குமாறு பலவந்தப்படுத்தினர். அவர்கள் ஜனங்களிடம் உணவும் திராட்சைரசமும் கொடுக்குமாறு செய்தனர். அந்த ஆளுநர்களுக்குக் கீழே இருந்த தலைவர்களும் ஜனங்களின் வாழ்க்கையை அதிகாரம் செலுத்தி மேலும் கடினமானதாகச் செய்தனர். ஆனால் நான் தேவனுக்கு பயந்து மரியாதை செலுத்தியதால் இதைப்போன்ற செயல்களைச் செய்யவில்லை. 16 நான் எருசலேம் சுவரைக் கட்டுவதில் கடினமாக வேலை செய்தேன். எனது ஜனங்கள் அனைவரும் சுவரில் வேலை செய்வதற்காக அங்கே கூடினார்கள். நாங்கள் எவரிடமிருந்தும் எந்த நிலத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை.
17 நான் ஒழுங்காக 150 யூதர்களை எனது பந்தியில் உண்ண வைத்தேன். சுற்றியிருந்த தேசங்களிலிருந்து எங்களிடத்தில் வந்தவர்களுக்கு உணவு கொடுத்தேன். 18 ஒவ்வொரு நாளும் நான் இவ்வளவு உணவு தான் எனது பந்தியில் பரிமாறவேண்டும் என்று தீர்மானித்தேன். ஒரு பசு, ஆறு நல்ல ஆடு, பல வகை பறவைகள் ஆகியவை. பத்து நாட்களுக்கு ஒருமுறை எனது பந்தியில் எல்லாவகை திராட்சைரசமும் கொண்டு வரவேண்டும். எனினும் நான் ஆளுநருக்கு ஒதுக்கப்படவேண்டிய உணவே வேண்டுமென வற்புறுத்தியதில்லை. எனது உணவுக்காகச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்துமாறு நான் ஜனங்களை எப்பொழுதும் வற்புறுத்தியதில்லை. ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலைச் செய்கிறார்கள் என்பதை நான் அறிவேன். 19 தேவனே, இந்த ஜனங்களுக்காக நான் செய்த நல்லவற்றை எல்லாம் நினைத்துப் பாரும்.
மேலும் பிரச்சனைகள்
6 பிறகு சன்பல்லாத், தொபியா, அரபியனான கேஷேமும் மற்றும் எங்களது மற்ற பகைவர்களும் நான் சுவரைக் கட்டிவிட்டேன் என்பதைக் கேள்விப்பட்டனர். நாங்கள் சுவரிலுள்ள அனைத்து துவாரங்களையும் அடைத்தோம். ஆனால் நாங்கள் இன்னும் வாசலுக்குரிய கதவுகளைப் போட்டிருக்கவில்லை. 2 எனவே சன்பல்லாத்தும் கேஷேமும் எனக்கு, “நெகேமியா வா, நாம் ஒன்றாகக் கூடுவோம். நாம் ஓனோ பள்ளத்தாக்கில் உள்ள கெப்பிரிம் எனும் பட்டணத்தில் கூடிப்பேசுவோம்” என்னும் செய்தியை அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் என்னைத் தாக்கத் திட்டமிட்டனர்.
3 எனவே நான்: “முக்கியமான வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். நான் அங்கு வர முடியாது. நான் கீழே வந்து உங்களைச் சந்திப்பதால் இந்த வேலை தடைபடுவதை விரும்பவில்லை” என்கிற பதிலோடு அவர்களிடம் தூதர்களை அனுப்பினேன்.
4 சன்பல்லாத்தும் கேஷேமும் அதே செய்தியை என்னிடம் நான்குமுறை அனுப்பினார்கள். ஒவ்வொருமுறையும் நான் அதே பதிலையே திரும்ப அனுப்பினேன். 5 பிறகு, ஐந்தாவது தடவை, சன்பல்லாத் தனது உதவியாளனை என்னிடம் அதே செய்தியோடு அனுப்பினான். அதோடு அவனது கையில் முத்திரையிடப்படாத ஒரு கடிதமும் இருந்தது. 6 அக்கடிதத்தில்,
“ஒரு வதந்தி சுற்றிக்கொண்டிருக்கிறது. எங்கெங்கும் ஜனங்கள் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, கேஷேம் இதனை உண்மை என்று கூறுகிறான். நீயும் யூதர்களும் அரசனுக்கு எதிராகத்திரும்ப திட்டமிடுகிறீர்கள் என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகத் தான் நீங்கள் எருசலேம் சுவரைக் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நீ யூதர்களின் புதிய அரசன் ஆவாய் என்றும் ஜனங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 7 ‘யூதாவில் ஒரு அரசன் இருக்கிறான்’ என்று எருசலேமில் அறிக்கையிடுவதற்கு நீ தீர்க்கதரிசிகளைத் தேர்ந்தெடுக்கிறாய் என்றும் வதந்தி உள்ளது.
“நெகேமியா, இப்பொழுது நான் உன்னை எச்சரிக்கிறேன். இதைப்பற்றி அர்தசஷ்டா அரசனும் கேள்விப்படுவான். எனவே வா, நாம் கூடி இதைப் பற்றி பேசுவோம்” என்று எழுதியிருந்தது.
8 எனவே நான் சன்பல்லாத்துக்கு இந்தப் பதிலை அனுப்பினேன். அதில், “நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் நடக்கவில்லை. உன் சொந்த தலைக்குள் நீயே எல்லாவற்றையும் சிந்தித்துக்கொண்டிருக்கிறாய்” என்று எழுதியிருந்தேன்.
9 எங்கள் பகைவர்கள் எங்களைப் பயமுறுத்தவே முயன்றனர். அவர்கள் தங்களுக்குள், “யூதர்கள் பயப்படுவார்கள். வேலைச் செய்துகொண்டிருப்பதில் சோர்வு அடைவார்கள். பிறகு சுவர் வேலை முடியாது” என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான், “தேவனே என்னைப் பலப்படுத்தும்” என ஜெபம் செய்தேன்.
10 ஒரு நாள் தெலாயாவின் மகனாகிய செமாயாவின் வீட்டிற்குப் போனேன். தெலாயா, மெகதாபெயேலின் மகன். செமாயா தன் வீட்டிலேயே தங்கியிருந்தான். செமாயா, “நெகேமியா, நாம் தேவனுடைய ஆலயத்தில் சந்திப்போம். நாம் அந்த பரிசுத்தமான இடத்தின் உள்ளே போய் கதவுகளை மூடிக்கொள்வோம். ஏனென்றால் மனிதர்கள் உன்னைக் கொல்ல வருகின்றனர். இன்று இரவு உன்னைக் கொல்ல வருகின்றனர்” என்றான்.
11 ஆனால் நான் செமாயாவிடம், “என்னைப் போன்ற சாதாரண மனிதன் ஓடலாமா? என்னைப் போன்ற சாதாரண மனிதன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பரிசுத்தமான இடத்திற்கு ஓட முடியாது என்று நீ அறிவாய். நான் போகமாட்டேன்!” என்று சொன்னேன்.
12 செமாயாவை தேவன் அனுப்பியிருக்கவில்லை என்பதை நான் அறிவேன். அவன் எனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துக்கொண்டிருக்கிறான் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் அவ்வாறு செய்வதற்கு அவனுக்குத் தொபியாவும் சன்பல்லாத்தும் சம்பளம் கொடுக்கிறார்கள். 13 செமாயா, என்னைப் பயங்காட்டி அச்சமடைய செய்வதற்குக் கூலி பெற்றிருக்கிறான். நான் ஆலயத்தின் அந்தப் பாகத்திற்குப் போவதால் ஏற்படும் பாவத்தை செய்ய அவர்கள் இத்தகைய தீயகாரியங்களை எனக்கு எதிராக திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். பிறகு எனது பகைவர்களுக்கு என்னை நிந்திக்க ஒரு காரணம் கிடைத்துவிடும். அதன் மூலம் எனக்குக் கெட்ட பெயரைத் தருவார்கள்.
14 தேவனே தயவுசெய்து தொபியாவையும் சன்பல்லாத்தையும் அவர்கள் செய்துள்ள தீயவற்றையும் நினைவுக்கொள்ளும். பெண் தீர்க்கதரிசியான நொவதியாளும் மற்ற தீர்க்கதரிசிகளும் என்னைப் பயங்காட்ட முயன்றதை நினைவுக்கொள்ளும்.
சுவர் முடிக்கப்படுகிறது
15 எனவே, எருசலேம் சுவர் எலூல் மாதத்தின் 25வது நாளன்று கட்டி முடிக்கப்பட்டது. சுவரைக் கட்டிமுடிக்க 52 நாட்கள் ஆயிற்று. 16 பிறகு எங்களது பகைவர்கள் எல்லாம் சுவர் கட்டி முடிக்கப்பட்டது என்பதைக் கேள்விப்பட்டனர். எங்களைச் சுற்றிலும் உள்ள நாட்டினர் சுவர் கட்டி முடிந்துவிட்டது என்பதைப் பார்த்தனர். எனவே அவர்கள் தமது தைரியத்தை இழந்தனர். ஏனென்றால் இவ்வேலை எங்கள் தேவனுடைய உதவியால் செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டனர்.
17 சுவர் வேலை முடிக்கப்பட்டிருந்த அந்த நாட்களில், யூதாவில் உள்ள பணக்கார ஜனங்கள் தொபியாவிற்குப் பல கடிதங்களை அனுப்பினர். தொபியாவும் அவற்றுக்குப் பதில் அனுப்பினான். 18 அவர்கள் அக்கடிதங்களை அனுப்பினர். ஏனென்றால், யூதாவிலுள்ள பல ஜனங்கள் அவனுக்கு உண்மையாக இருப்பதாகச் சத்தியம் செய்துள்ளனர். இதற்கு காரணம், தொபியா செகனியாவிற்கு மருமகனாக இருந்தான். செகனியா ஆராகின் மகன். தொபியாவின் மகனான யோகனான் மெசுல்லாமின் மகளை மண முடித்திருந்தான். மெசுல்லாம், பெரகியாவின் மகனாக இருந்தான். 19 கடந்த காலத்தில் அந்த ஜனங்கள் தொபியாவிற்கு ஒரு சிறப்பான வாக்குறுதியைச் செய்துக் கொடுத்திருந்தனர். எனவே அந்த ஜனங்கள் என்னிடம் தொபியா எவ்வளவு நல்லவன் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். நான் செய்துக்கொண்டிருந்ததையும் அவர்கள் தொபியாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். தொபியா என்னைப் பயங்காட்ட கடிதங்களை அனுப்பிக்கொண்டிருந்தான்.
2008 by World Bible Translation Center