Beginning
6 பிறகு சாலொமோன், “இந்த இருண்ட மேகத்தில் நான் இருப்பேன் என்று கர்த்தர் கூறினார். 2 கர்த்தாவே, நீர் வாழ்வதற்காக நான் ஒரு ஆலயத்தைக் கட்டினேன். இது உயரமான வீடு. என்றென்றும் நீர் இருப்பதற்குரிய இடம்!” என்றான்.
சாலொமோனின் பேச்சு
3 தனக்கு முன்னால் கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்களின் பக்கம் திரும்பி அரசன் சாலொமோன் அவர்களை ஆசீர்வாதம் செய்தான். 4 அவன்,
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள். என் தந்தையான தாவீதோடு பேசும்போது கர்த்தர் வாக்களித்தபடி இப்போது செய்து முடித்துள்ளார். தேவனாகிய கர்த்தர், 5 ‘எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை வெளியேற்றி அழைத்துக் கொண்டு வந்த நாள் முதலாக நான் இஸ்ரவேலின் எந்த கோத்திரத்திலிருந்தும் என் நாமத்தில் ஒரு வீட்டை கட்டிக்கொள்ள எந்த நகரத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. என் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்ல எந்த தலைவனையும் தேர்ந்தெடுக்கவில்லை. 6 ஆனால் இப்போது எனது நாமத்திற்காக எருசலேமைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். மேலும் என்னுடைய இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்ல தாவீதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.’
7 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்காக ஆலயம் கட்ட வேண்டுமென்று என் தந்தை தாவீது விரும்பினார். 8 ஆனால் கர்த்தர் என் தந்தையிடம், ‘தாவீது, எனது பேரால் ஆலயம் கட்ட விரும்புகிறாய், உனது எண்ணம் நல்லதுதான். 9 ஆனால் உன்னால் ஆலயம் கட்டமுடியாது. உன் மகன் என்பேரால் ஆலயத்தைக் கட்டுவான்’ என்றார். 10 இப்போது கர்த்தர் தான் என்ன செய்யப் போவதாகச் சொன்னாரோ அதனைச் செய்து முடித்துவிட்டார். என் தந்தையின் இடத்தில் நான் புதிய அரசனாக இருக்கிறேன். தாவீது என்னுடைய தந்தை. இப்போது நான் இஸ்ரவேலரின் அரசன். இதுதான் கர்த்தர் அளித்த வாக்குறுதி. நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்காக ஆலயம் கட்டிவிட்டேன். 11 ஆலயத்திற்குள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைத்துவிட்டேன். உடன்படிக்கைப் பெட்டி கர்த்தருடைய உடன்படிக்கையைக் கொண்டுள்ளது. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார்” என்றான்.
சாலொமோனின் ஜெபம்
12 சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாக நின்றான். அவன் கூடியிருக்கிற எல்லா இஸ்ரவேல் ஜனங்களின் முன்பாக நின்றான். அவன் தன் கைகளை விரித்தான். 13 சாலொமோன் வெண்கலத்தால் ஒரு மேடை செய்திருந்தான். அது 5 முழ நீளமும் 5 முழ அகலமும் 3 முழ உயரமும் கொண்டது. அதனை வெளிப்பிரகாரத்தின் மத்தியில் வைத்தான். பிறகு அவன் மேடையின் மேல் ஏறினான். இஸ்ரவேல் ஜனங்களின் முன்னால் முழங்கால் போட்டு நின்றான். சாலொமோன் தனது கைகளை வானத்தை நோக்கி விரித்து உயர்த்தினான். 14 சாலொமோன்,
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உம்மை போன்ற ஒரு தேவன் இல்லை. நீர் உம்முடைய அன்பினாலும் இரக்கத்தினாலும் ஆன உடன்படிக்கையை காப்பாற்றி வருகிறீர். தம் முழு இருதயத்துடன் நேர்மையாக வாழ்ந்து உமக்கு பணிந்து நடக்கும்போது, உம்முடைய ஊழியக்காரர்களோடும் உடன்படிக்கையைக் காப்பாற்றி வருகிறீர். 15 உம்முடைய ஊழியக்காரனான தாவீதிற்கு நீர் தந்த வாக்குறுதியை காப்பாற்றினீர். தாவீது என்னுடைய தந்தை. வாய் வழியாக நீர் வாக்குறுதி தந்தீர். மேலும் இன்று உம்முடைய கரங்களினால் அந்த வாக்குறுதி நிறைவேறுமாறு செய்திருக்கிறீர். 16 இப்பொழுது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரனான தாவீதிற்குத் தந்த வாக்குறுதியைக் காப்பாற்றும். நீர், ‘தாவீது, என் முன்னிலையில் இஸ்ரவேலரின் சிங்காசனத்தில் உனது குடும்பத்திலிருந்து ஒருவனை அமரச்செய்வதில் நீ தோல்வி அடையமாட்டாய். தாங்கள் செய்வதில் உன் மகன்கள் கவனமாக இருந்தால்தான் இது நடைபெறும். அவர்கள் எனது சட்டங்களுக்கு நீ அடிபணிந்தது போலவே பணியவேண்டும்’ என்று வாக்குறுதி கொடுத்தீர். 17 இப்போது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, உமது வாக்குறுதி உண்மையாகட்டும். நீர் இந்த வாக்குறுதியை உமது ஊழியக்காரனான தாவீதிற்குக் கொடுத்திருக்கிறீர்.
18 “ஆனால் தேவனாகிய நீர் உண்மையில் ஜனங்களோடு பூமியில் வசிக்கமாட்டீர் என்பதை நாங்கள் அறிவோம். பரலோகமும் அதற்கு மேலானதும் கூட உம்மை கட்டுப்படுத்த முடியாது. நான் கட்டியுள்ள இந்த ஆலயமும் கூட உம்மை வைத்திருக்காது என்பதை அறிவோம். 19 எனினும் எனது ஜெபத்தைக் கேளும். நான் இரக்கத்திற்காக கெஞ்சுகிறேன். எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை அழைக்கும் என் குரலைக் கேளும். உம்மை நோக்கி நான் செய்யும் ஜெபங்களையும் கேளும். நான் உம்முடைய ஊழியக்காரன். 20 இரவும் பகலும் இவ்வாலயத்தை கண்ணோக்கிப் பாரும் என்று ஜெபித்துக்கொள்கிறேன். இந்த இடத்தில் உமது நாமத்தை இடுவதாக நீர் சொன்னீர். உம்முடைய அடியானாகிய நான் இவ்வாலயத்தை நோக்கும்பொழுது செய்யும் ஜெபத்தைக் கேளும். 21 எனது ஜெபங்களைக் கேளும். உம்முடைய இஸ்ரவேல் ஜனங்களின் ஜெபங்களையும் கேளும். நாங்கள் இவ்வாலயத்தை நோக்கி ஜெபிக்கும்போது செவிகொடும். நீர் பரலோகத்தில் இருந்தாலும் எங்களை கவனிப்பீராக. எங்கள் ஜெபங்களை நீர் கேட்கும்போதெல்லாம் எங்கள் மீறுதல்களை மன்னியும்.
22 “ஒருவன் இன்னொருவனுக்கு எதிராகக் குற்றம் செய்து இருக்கலாம். அப்படி நேரும்போது, குற்றம் சாட்டப்பட்டவன் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும்பொருட்டு உமது நாமத்தைப் பயன்படுத்தி வாக்குறுதி செய்யலாம். ஆலயத்தில் உள்ள உமது பலிபீடத்தின் முன்னிலையில் அங்ஙனம் ஒருவன் வந்து வாக்குறுதிச் செய்யும்போது, 23 அதனை பரலோகத்தில் இருந்து செவிகொடுத்துக் கேளும். பிறகு அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கும்! கெட்டவர்களைத் தண்டியும். அவன் பிறருக்கு எத்தகைய துன்பத்தைத் தந்தானோ அத்தகைய துன்பத்தை அவன் பெறும்படி செய்யவேண்டும். நேர்மையானதைச் செய்தவன் அப்பாவி என்பதை நிரூபியும்.
24 “உம்முடைய இஸ்ரவேல் ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்து அதனால் அவர்கள் தம் எதிரிகளால் தோற்கடிக்கப்படலாம். அதற்குப்பின் அவர்கள் உம்மிடம் திரும்பிவந்து உம்முடைய பேரைச் சொல்லி ஜெபித்து உமது ஆலயத்தில் கெஞ்சலாம். 25 அப்பொழுது பரலோகத்திலிருந்து அதனை கேட்டு அவர்களது பாவங்களை மன்னியும். நீர் அவர்களுக்கும் அவர்களது முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டிற்கு அவர்களை திரும்பக் கொண்டு வாரும்.
26 “வானம் மூடிக்கொள்வதால் மழை வராமல் போகலாம். இது இஸ்ரவேல் ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்யும்போது நிகழும். இதன் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் மனம்மாறி வருந்தி இவ்வாலயத்திற்கு வந்து ஜெபம் செய்தால் உம்முடைய பேரைச் சொல்லி முறையிட்டு, உம்முடைய தண்டனையால் தம் பாவங்களையும் விட்டுவிட்டால், 27 அவர்களின் முறையீட்டை பரலோகத்திலிருந்து கேளும். அவர்களது பாவங்களை மன்னியும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் உம்முடைய ஊழியர்கள். அவர்கள் சரியான முறையில் வாழ்வதற்குக் கற்றுக்கொடுங்கள். உம்முடைய நிலத்திற்கு மழையைக் கொடும். இது உம்மால் உம்முடைய ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட நாடு.
28 “நிலத்தில் பெரும் பஞ்சமோ, கொடிய நோயோ, வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி போன்றவற்றால் பயிரழிவோ ஏற்படலாம். அல்லது பகைவர்கள் இஸ்ரவேலரின் நகரங்களைத் தாக்கலாம். அல்லது இஸ்ரவேலில் ஏதாவது நோய் வரலாம். 29 உமது இஸ்ரவேல் ஜனங்களில் எவராவது வந்து ஜெபம் செய்து கெஞ்சினால், ஒவ்வொருவரும் தங்கள் துன்பங்களையும் வலியையும் உணர்ந்து இவ்வாலயத்தை நோக்கித் தம் கைகளை விரித்து முறையிட்டால், 30 பரலோகத்திலிருந்து அதனைக் கேளும். நீர் இருக்கிற பரலோகத்திலிருந்து அவற்றைக் கேட்டு மன்னித்துவிடும். ஒவ்வொருவனும் பெறத்தக்கது எதுவோ அதனைக் கொடும். ஏனென்றால் ஒவ்வொருவனின் மனதிலும் இருப்பதை நீர் அறிவீர். பிறகு, நீர் மட்டுமே ஒருவருடைய மனதில் இருப்பதை அறிவீர். 31 ஜனங்கள் எங்கள் முற்பிதாக்களுக்கு நீர் கொடுத்த நிலத்தில் வசிக்கும்வரை உமக்கு பயந்து கீழ்ப்படிவார்கள்.
32 “ஒருவன் அந்நியனாக, இஸ்ரவேலரின் ஒருவனாக இல்லாமல் இருக்கலாம். எனினும் அவன் தூர நாட்டிலிருந்து இவ்வாலயத்திற்கு உம்முடைய மகத்தான நாமத்தின் நிமித்தமும், உம்முடைய வலிமையான கரத்தின் நிமித்தமும் தண்டிக்கின்ற உம்முடைய கரத்தின் நிமித்தமும் வரலாம். அவ்வாறு அவன் வந்து உமது ஆலயத்தில் ஜெபம் செய்தால், 33 அதனை பரலோகத்திலிருந்து கேளும். நீர் இருக்கிற பரலோகத்திலிருந்தே அவனுக்கு வேண்டியதைச் செய்யும். அதனால் பூமியில் உள்ள அனைவரும் உம்முடைய நாமத்தை அறிந்து உம்மை மதிப்பார்கள். அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போன்றே மதிப்பார்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும், என்னால் கட்டப்பட்ட இவ்வாலயம் உமது நாமத்தால் அழைக்கப்படும் என்பதை அறிவார்கள்.
34 “உம்முடைய ஜனங்களைத் தம் பகைவர்களுக்கு எதிராக நீர் சண்டையிட அனுப்பும்போது அவர்கள் அங்கிருந்து உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நகரத்தையோ உம்முடைய நாமத்திற்காக என்னால் கட்டப்பட்ட இவ்வாலயத்தைப் பார்த்தோ ஜெபம் செய்தால், 35 பரலோகத்தில் இருந்து அதனைக் கேளும். உதவிக்காக அவர்கள் கெஞ்சும்போது அதனைக் கேளும். கேட்டு அவர்களுக்கு உதவும்.
36 “ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்வார்கள். பாவம் செய்யாதவர் யாருமில்லை. அவர்கள் மீது உமக்கு கோபம் வரும். அவர்களை எதிரி தோற்கடிக்குமாறு செய்வீர். மேலும் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு அருகிலோ தொலைவிலோ இருக்கிற நிலத்திற்குக் கொண்டு செல்லப்படுமாறு செய்வீர். 37 அவர்கள் சிறையிருக்கிற நிலப்பகுதியில் உண்மையை உணர்ந்து மனம் திரும்பி உம்மிடம் கெஞ்சுவார்கள். அவர்கள், ‘நாங்கள் பாவம் செய்தோம். நாங்கள் தவறு செய்துவிட்டோம். கேடு புரிந்துவிட்டோம்’ என்று சொல்வார்கள். 38 பிறகு அவர்கள் கைதிகளாக உள்ள நிலத்தில் தங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் உம்மிடம் திரும்பிவருவார்கள். அவர்கள் உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமது முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்நாட்டை நோக்கி ஜெபம் செய்யலாம். உம்முடைய பேரால் நான் கட்டிய இவ்வாலயத்தை நோக்கியும் அவர்கள் வணங்கி ஜெபம் செய்யலாம். 39 அப்போது பரலோகத்திலிருந்து நீர் அவற்றைக் கேளும். நீர் இருக்கும் பரலோகத்திலிருந்தே அவர்களது ஜெபங்களை ஏற்றுக் கொண்டு உதவும். உமக்கு எதிராக பாவம் செய்த உம்முடைய ஜனங்களை மன்னியும். 40 இப்போது எனது தேவனே, உம்முடைய கண்களையும் செவிகளையும் திறக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இங்கிருந்து ஜெபிப்பதையெல்லாம் கேட்டு அதில் கவனம் செலுத்தும்.
41 “இப்போது தேவனாகிய கர்த்தாவே! எழுந்திரும். உம்முடைய பலத்தைக் காட்டும்.
இந்த உடன்படிக்கைப் பெட்டி வீற்றிருக்கும் இடத்திற்கு வருக!
உம்முடைய ஆசாரியர்கள் இரட்சிப்பின் ஆடையை அணியட்டும்.
இத்தகைய நல்ல காரியங்களைப்பற்றி உம்முடைய உண்மையான தொண்டர்கள் மகிழட்டும்.
42 தேவனாகிய கர்த்தாவே! அபிஷேகிக்கப்பட்ட உம்முடைய அரசனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
உம்முடைய உண்மையுள்ள ஊழியக்காரனான தாவீதை நினைத்துக்கொள்ளும்” என்றான்.
கர்த்தருக்கென்று ஆலயம் அர்ப்பணிக்கப்படுகிறது
7 சாலொமோன் தனது ஜெபத்தை முடித்தபோது வானத்திலிருந்து அக்கினி வந்தது. அது தகன பலிகளையும் காணிக்கைகளையும் எரித்தது. கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பியது. 2 கர்த்தருடைய மகிமை ஆலயத்தில் நிரம்பியிருந்ததால் ஆசாரியர்களால் ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை. 3 வானுலகத்திலிருந்து அக்கினி இறங்கி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தார்கள். அந்த ஜனங்கள் கர்த்தருடைய மகிமை ஆலயத்திற்குள் நிரம்பியிருப்பதையும் பார்த்தனர். அவர்கள் தரையில் முகங்குப்புற விழுந்து தொழுது கொண்டு கர்த்தருக்கு நன்றி சொன்னார்கள். அவர்கள்,
“கர்த்தர் நல்லவர்.
அவரது கிருபை என்றென்றைக்கும் தொடர்கிறது” என்றனர்.
4 கர்த்தருக்கு முன்னால் சாலொமோனும் ஜனங்களும் பலிகளைச் செலுத்தினர். 5 சாலொமோன் அரசன் 22,000 காளைகளையும், 1,20,000 வெள்ளாடுகளையும் பலியிட்டான். அரசனும் அனைத்து ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பரிசுத்தமாக வைத்துக்கொண்டனர். அவ்வாலயத்தை தேவனை ஆராதிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். 6 ஆசாரியர்கள் தமது பணியைச் செய்ய எப்போதும் தயாராக இருந்தார்கள். லேவியர்களும் கர்த்தரைப் பாட எப்பொழுதும் தயாராக இசைக் கருவிகளோடு நின்றனர். இந்த இசைக் கருவிகள் தாவீது அரசனால் கர்த்தருக்கு நன்றி சொல்வதற்காக உருவாக்கப்பட்டவை. ஆசாரியர்களும், லேவியர்களும், “கர்த்தரைத் துதியுங்கள், அவருடைய அன்பு என்றென்றும் தொடர்கிறது” என்றனர். ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களை லேவியர்களுக்கு எதிராக நின்று ஊதினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் நின்று கொண்டு இருந்தனர்.
7 சாலொமோன் பிரகாரத்தின் நடுப்பகுதியை பரிசுத்தமாக்கினான். அது கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்பாக இருந்தது. அந்த இடத்தில்தான் சாலொமோன் தகன பலிகளையும், சமாதான பலியின் கொழுப்பையும் கொடுத்தான். வெண்கல பலிபீடமானது எல்லா தகனபலிகளையும் தானியக் காணிக்கைகளையும், நிணத்தையும் தாங்காது என்பதாலேயே சாலொமோன் இந்த நடுப்பகுதியைப் பயன்படுத்தினான்.
8 சாலொமோனும் இஸ்ரவேல் ஜனங்களும் ஏழு நாள் பண்டிகையைக் கொண்டாடினார்கள். சாலொமோனோடு பெரிய அளவிலான கூட்டம் சேர்ந்திருந்தது. அவர்கள் ஆமாத் நகரத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதி மட்டும் கூடினார்கள். 9 எட்டாவது நாள் அவர்களுக்குப் பரிசுத்தக் கூட்டம் இருந்தது. ஏனென்றால் அவர்கள் ஏழுநாட்கள் பண்டிகை கொண்டாடினார்கள். அவர்கள் பலிபீடத்தைப் பரிசுத்தமாக்கினார்கள். அதனை கர்த்தரை தொழுதுகொள்வதற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். அவர்கள் அந்தப் பண்டிகையை ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். 10 ஏழாவது மாதத்தின் 23வது நாளில் சாலொமோன் ஜனங்களை வீட்டிற்குத் திரும்ப அனுப்பினான். ஜனங்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களின் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியது. ஏனென்றால் கர்த்தர் தாவீதிடமும் சாலொமோனிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் அன்பாக இருந்தார்.
சாலொமோனிடம் கர்த்தர் வருகிறார்
11 சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மனையையும் கட்டி முடித்தான். கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரண்மனையிலும் திட்டமிட்டபடியே வெற்றிகரமாகக் கட்டி முடித்தான். 12 பிறகு இரவில் சாலொமோனிடம் கர்த்தர் வந்தார். கர்த்தர் அவனிடம்,
“சாலொமோன், நான் உனது ஜெபத்தைக் கேட்டேன். நான் இந்த இடத்தை எனக்குப் பலிகள் தருவதற்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தேன். 13 நான் வானத்தை மூடினால் பின் மழை வராமல் போகும். நான் வெட்டுக்கிளிகளுக்கு கட்டளையிட்டால் அது பயிரை அழித்துப்போடும் அல்லது என் ஜனங்களிடம் நான் நோயை அனுப்புவேன். 14 என் நாமத்தால் அழைக்கப்படும் என் ஜனங்கள் மனம் வருந்தி, ஜெபம் செய்து, என்னைத் தேடினால், மேலும் தம் பாவங்களை விட்டுவிட்டால் நான் பரலோகத்திலிருந்து அவர்களின் ஜெபங்களைக் கேட்பேன். அவர்களது பாவங்களை மன்னித்து இந்த நாட்டை வளப்படுத்துவேன். 15 இப்போது என் கண்கள் திறந்திருக்கின்றன. இந்த இடத்திலிருந்து ஜெபம் செய்யப்படுபவற்றைக் கேட்க என் காதுகள் திறந்திருக்கின்றன. 16 நான் இவ்வாலயத்தைத் தேர்ந்தெடுத்தேன். இதனைப் பரிசுத்தப்படுத்தினேன். எனவே எனது நாமம் இங்கு என்றென்றும் நிலைத்திருக்கும். எனது கண்ணும் மனமும் எப்பொழுதும் இங்கே இந்த ஆலயத்திலேயே இருக்கும். 17 இப்போது சாலொமோனே, உன் தந்தையைப் போலவே நீயும் என் முன்பாக வாழ்ந்தால், என் கட்டளைகளுக்கெல்லாம் நீ கீழ்ப்படிந்து வந்தால், எனது சட்டங்களையும் விதிகளையும் கடைபிடித்தால், 18 பிறகு நான் உன்னைப் பலமுள்ள அரசனாக ஆக்குவேன். உனது அரசு பெருமைக்குரியதாக இருக்கும். உனது தந்தையான தாவீதோடு நான் செய்து கொண்ட உடன்படிக்கை இதுதான். நான் அவனிடம் ‘தாவீது, இஸ்ரவேலின் அரசனாகிறவன் எப்பொழுதும் உனது குடும்பத்திலிருந்தே வருவான்’ என்று கூறினேன்.
19 “ஆனால் நான் அளித்த சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படியவில்லையென்றால், நீங்கள் மற்ற தெய்வங்களை தொழுதுகொண்டு சேவை செய்வீர்களானால், 20 நான் கொடுத்த எனது நிலத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை வெளியேற்றுவேன். எனது நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்காகக் கட்டிய இவ்வாலயத்தை விட்டுவிலகுவேன். எல்லா நாட்டினரும் இவ்வாலயத்தைப் பற்றி தீயதாகப் பேசும்படி செய்வேன். 21 மிக்க உயர்ந்த மாட்சிமை கொண்ட இவ்வாலயத்தைக் கடந்துபோகிற ஒவ்வொருவனும் வியந்து போகும்படி செய்வேன். அவர்கள், ‘ஏன் கர்த்தர் இதுபோன்ற மோசமான காரியத்தை இந்த நாட்டிற்கும் ஆலயத்திற்கும் செய்தார்?’ என்று கூறுவார்கள். 22 அதற்கு மற்ற ஜனங்கள், ‘இதன் காரணம் என்னவென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் தமது முற்பிதாக்களைப்போன்று தேவனாகிய கர்த்தருக்கு கீழ்ப்படிய மறுத்தனர். இந்த தேவன்தான் அவர்களை எகிப்தைவிட்டு வெளியே மீட்டுவந்தார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் விக்கிரகங்களை தொழுதுகொள்ளவும் சேவைசெய்யவும் தொடங்கிவிட்டனர். அதனால்தான் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு இத்தகைய துன்பங்களைக் கொடுத்துள்ளார் என்பார்கள்’” என்றனர்.
சாலொமோன் கட்டிய நகரங்கள்
8 சாலொமோன் கர்த்தருக்கான ஆலயத்தையும் தனது அரண்மனையையும் கட்டி முடிக்க 20 ஆண்டு காலமாயிற்று. 2 ஈராம் தனக்குக் கொடுத்த நகரங்களைப் பிறகு சாலொமோன் கட்டத்தொடங்கினான். அந்நகரங்களில் சாலொமோன் இஸ்ரவேல் ஜனங்களில் சிலரை வாழ அனுமதித்தான். 3 இதற்கு பிறகு சாலொமோன் ஆமாத் சோபாவிற்குச் சென்று அதனைக் கைப்பற்றினான். 4 சாலொமோன் வனாந்தரத்திலே தத்மோர் என்ற நகரத்தையும் கட்டினான். சாலொமோன் ஆமாத் நாட்டிலே பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான நகரங்களைக் கட்டினான். 5 சாலொமோன் மீண்டும் மேல்பெத்தொரோனையும் கீழ்ப்பெத்தோரோனையும் கட்டினான். அந்த ஊர்களைப் பலமான கோட்டைகளாக்கினான். இந்நகரங்களுக்கு பலமான கதவுகளையும் வாசல்களையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தான். 6 சாலொமோன் மீண்டும் பாலாத்தையும் தனது பொருட்களைச் சேமித்துவைத்த வேறு சில ஊர்களையும் மீண்டும் கட்டினான். இரதங்களை நிறுத்திவைப்பதற்கான எல்லா நகரங்களையும், குதிரையோட்டிகள் வாழ்வதற்கான எல்லா நகரங்களையும் நிர்மாணித்தான். எருசலேம், லீபனோன் மற்றும் தான் அரசனாயிருந்த நாடு முழுவதும் தான் விரும்பியவற்றை எல்லாம் கட்டிமுடித்தான்.
7-8 இஸ்ரவேலர் அல்லாத வேறு இனத்தினரும் அங்கு வாழ்ந்தனர். ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என அவர்கள் பலவகையினர். சாலொமோன் இவர்களை அடிமை வேலைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தினான். இவர்கள் இஸ்ரவேல் அல்லாதவர்கள். அவர்கள் இஸ்ரவேலர்களால் அழிக்கப்படாத இந்நிலப்பகுதியை விட்டுப் போனவர்களின் சந்ததியினர். இது இன்றைக்கும் அங்கே தொடர்ந்திருக்கிறது. 9 சாலொமோன் இஸ்ரவேலர் எவரையும் அடிமை வேலைச்செய்யுமாறு பலவந்தப்படுத்தவில்லை. இஸ்ரவேலர்கள் சாலொமோனின் போர் வீரர்களாக பணியாற்றினார்கள். இவர்கள் சாலொமோனின் படையில் தளபதிகளாகவும் அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்கள் சாலொமோனின் தேர்ப்படை அதிகாரிகளாகவும், குதிரை வீரர்களின் அதிகாரிகளாகவும் இருந்தனர். 10 இஸ்ரவேலரில் சிலர் சாலொமோனின் முக்கியமான அதிகாரிகளுக்கான தலைவர்களாக இருந்தனர். இவ்வாறு 250 பேர் ஜனங்களை மேற்பார்வை செய்யும் தலைவர்களாக இருந்தார்கள்.
11 சாலொமோன் பார்வோனின் மகளை தாவீதின் நகரத்திலிருந்து அழைத்துவந்து, அவளுக்காகக் கட்டியிருந்த மாளிகையில் குடிவைத்தான். சாலொமோன், “என் மனைவி தாவீதின் வீட்டிலே இருக்கக் கூடாது. ஏனென்றால் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி இருந்ததால் அவ்விடங்கள் பரிசுத்தமானவை” என்றான்.
12 பிறகு சாலொமோன் கர்த்தருக்காக தகன பலிகளை கர்த்தருடைய பலிபீடத்தில் அளித்தான். இந்தப் பலிபீடத்தை சாலொமோன் ஆலய மண்டபத்திற்கு முன்பு அமைத்திருந்தான். 13 மோசே கட்டளையிட்டபடி ஒவ்வொரு நாளும் சாலொமோன் பலிகளைச் செலுத்தி வந்தான். ஓய்வுநாட்களிலும், மாதப் பிறப்பு நாட்களின் கொண்டாட்டங்களிலும், ஆண்டின் மூன்று விடுமுறை நாட்களிலும் பலிகள் செலுத்தப்பட வேண்டியிருந்தன. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, வாரங்களின் பண்டிகை மற்றும் அடைக்கலக் கூடாரப் பண்டிகை ஆகியவை ஆண்டின் மூன்று விடுமுறை நாட்கள். 14 சாலொமோன் தனது தந்தை தாவீதின் அறிவுரைகளைப் பின்பற்றினான். மேலும் சாலொமோன் ஆசாரியர்கள் குழுவினரை அவர்களது சேவைகளுக்காகத் தேர்ந்தெடுத்தான். தம் பணிகளைச் செய்யுமாறு லேவியர்களையும் நியமித்தான். ஆலயப் பணிகளில் ஒவ்வொரு நாளும் லேவியர்கள் துதிப்பாடல் இசைப்பதில் முதன்மையாக இருந்தும் ஆசாரியர்ளுக்கு உதவியும் வந்தார்கள். அவன் வாசல் காவல் குழுவில் இருந்து பலரை வாயிலைக் காப்பதற்காகத் தேர்ந்தெடுத்தான். இவ்வாறுதான் தேவமனிதனான தாவீது அறிவுறுத்தியிருந்தான். 15 ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் சாலொமோன் இட்ட கட்டளைகளில் எதனையும் இஸ்ரவேல் ஜனங்கள் மாற்றவோ மீறவோ இல்லை. மதிப்பு வாய்ந்த பொருட்களைக் காக்கும் வழிமுறையிலும் அவர்கள் சாலொமோனின் கட்டளைகளை மீறவில்லை. கருவூலங்ளையும் இவ்வாறே காத்துவந்தனர்.
16 சாலொமோனின் அனைத்து வேலைகளும் முடிந்தன. கர்த்தருடைய ஆலயப்பணி தொடங்கிய நாள் முதல் முடியும்வரை திட்டமிட்டபடியே மிகச் சிறப்பாக நடந்தன. எனவே காத்தருடைய ஆலய வேலையும் முடிந்தது.
17 பிறகு சாலொமோன் எசியோன் கேபர், ஏலோத் ஊர்களுக்குச் சென்றான். இவ்வூர்கள் ஏதோம் நாட்டில் செங்கடல் ஓரத்தில் உள்ளன. 18 ஈராம் என்பவன் தனது கப்பல்களை சாலொமோனுக்கு அனுப்பினான். ஈராமின் ஆட்களே கப்பலை ஓட்டினார்கள். அவர்கள் கடலில் கப்பல் ஓட்டுவதில் வல்லவர்கள். இவர்களோடு சாலொமோனின் வேலையாட்களும் சேர்ந்து ஓபிர் என்னும் நகருக்குச் சென்றனர். அங்கிருந்து சாலொமோன் அரசனுக்கு 450 தாலந்து பொன்னைக் கொண்டு வந்தனர்.
2008 by World Bible Translation Center