Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 1-3

எகிப்தில் யாக்கோபின் குடும்பம்

யாக்கோபு (இஸ்ரவேல்) தன் மகன்களோடு எகிப்திற்குப் பயணமானான். ஒவ்வொரு மகனும் தன் குடும்பத்தோடே சென்றான். பின்வருபவர்களே இஸ்ரவேலின் மகன்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், பென்யமீன், தாண், நப்தலி, காத், ஆசேர். 70 பேர் யாக்கோபின் நேரடி சந்ததியாகப் பிறந்தவர்களாக இருந்தனர். (யோசேப்பு 12 மகன்களில் ஒருவன். ஆனால் அவன் ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.)

பின்னர், யோசேப்பும் அவனது சகோதரர்களும் அத்தலைமுறையைச் சேர்ந்த எல்லோருமே மரித்துவிட்டார்கள். ஆனால் இஸ்ரவேலின் ஜனங்களுக்குப் பல குழந்தைகள் இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருந்தது. இஸ்ரவேலின் ஜனங்கள் வலிமையுடையோரானார்கள். எகிப்து நாடும் இஸ்ரவேலரால் நிரம்பிற்று.

இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தொல்லை

அப்போது யோசேப்பை அறிந்திராத ஒரு புதிய அரசன் எகிப்தை அரசாள ஆரம்பித்தான். இந்த அரசன் தம் ஜனங்களை நோக்கி, “இஸ்ரவேலின் ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் மிக அதிகமாயிருக்கிறார்கள்! நம்மைக் காட்டிலும் அவர்கள் பலம்மிக்கவர்கள்! 10 இஸ்ரவேலர் பலம் பொருந்தியவர்களாய் வளர்ந்துகொண்டிருப்பதைத் தடை செய்ய நாம் திட்டங்கள் வகுக்க வேண்டும். போர் ஏற்படுமானால், இஸ்ரவேலர் நமது பகைவரோடு சேர்ந்துகொள்வதுடன், நம்மைத் தோற்கடித்து, நம்மிடமிருந்து தப்பித்துக்கொள்ளக்கூடும்” என்றான்.

11 இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்க்கையைச் சிரமமாக்குவதென எகிப்திய ஜனங்கள் முடிவெடுத்து, அவர்களிடையே மேற்பார்வையாளர்களை எகிப்தியர் நியமித்தார்கள். இந்த மேற்பார்வையாளர்கள் பித்தோம், ராமசேஸ் நகரங்களை அரசனுக்காகக் கட்டும்படியாக இஸ்ரவேலரைக் கட்டாயப்படுத்தினர். தானியங்களையும் பிற பொருட்களையும் சேர்த்து வைப்பதற்காக அரசன் இந்நகரங்களைப் பயன்படுத்தினான்.

12 மிகக் கடினமாக உழைக்கும்படியாக எகிப்தியர்கள் இஸ்ரவேலரை வற்புறுத்தினார்கள். எந்த அளவுக்கு இஸ்ரவேல் ஜனங்களை வேலை செய்யும்பொருட்டு கட்டாயப்படுத்தினார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் மிகுதியாகப் பெருகிப் பரவினார்கள். இஸ்ரவேல் ஜனங்களைக் கண்டு எகிப்திய ஜனங்கள் அதிக பயமடைந்தனர். 13 எனவே, எகிப்தியர்கள் இஸ்ரவேலரை இன்னும் கடினமாக உழைக்கும்படியாகக் கட்டாயப்படுத்தினார்கள்.

14 இஸ்ரவேலரின் வாழ்க்கையை எகிப்தியர்கள் கடினமாக்கினார்கள். செங்கல்லும், சாந்தும் செய்யும்படியாக இஸ்ரவேலரை அவர்கள் வற்புறுத்தி வேலை வாங்கினார்கள். வயல்களிலும் கடினமாக உழைக்கும்படியாக அவர்களைக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் செய்த ஒவ்வொரு வேலையிலும் கடினமாக உழைக்குமாறு, கட்டாயப்படுத்தினார்கள்.

தேவனைப் பின்பற்றிய மருத்துவச்சிகள்

15 இஸ்ரவேல் பெண்கள் குழந்தை பெறுவதற்கு உதவ சிப்பிராள், பூவாள் என்ற இரண்டு எபிரெய மருத்துவச்சிகள் இருந்தனர். எகிப்தின் அரசன் மருத்துவச்சிகளிடம் பேசி, 16 “எபிரெயப் பெண்களின் பிரசவத்திற்கு நீங்கள் இருவரும் தொடர்ந்து உதவுங்கள். பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை உயிரோடிருக்கட்டும். குழந்தை ஆணாக இருந்தால், நீங்கள் அதைக் கொன்றுவிட வேண்டும்!” என்றான்.

17 ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயப்படுகிறவர்களானதால் அவர்கள் அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எல்லா ஆண் குழந்தைகளையும் உயிரோடு விட்டனர்.

18 எகிப்திய அரசன் மருத்துவச்சிகளை அழைத்து, “நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? ஆண் குழந்தைகளை ஏன் உயிரோடு விடுகிறீர்கள்?” என்று கேட்டான்.

19 மருத்துவச்சிகள் அரசனை நோக்கி, “எபிரெயப் பெண்கள் எகிப்தியப் பெண்களைக் காட்டிலும் வலிமையானவர்கள். நாங்கள் உதவுவதற்குப் போகும் முன்னரே அவர்களுக்குக் குழந்தை பிறந்துவிடுகின்றது” என்றனர். 20 (20-21 தேவன் மருத்துவச்சிகளின்மேல் மகிழ்ச்சி அடைந்து அவர்களுக்கு நன்மை செய்தார். அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் செழிப்படையச் செய்தார்.)

எபிரெய ஜனங்கள் தொடர்ந்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்து, வலிமை மிகுந்தோர் ஆயினர். 22 எனவே பார்வோன், தனது சொந்த ஜனங்களிடம், “எபிரெயரின் எல்லாப் பெண் குழந்தைகளும் உயிரோடிருக்கட்டும், ஆனால் ஒவ்வொரு ஆண் குழந்தை பிறக்கும்போதும், அதனை நைல் நதியில் வீசிவிட வேண்டும்” என்று ஆணையிட்டான்.

குழந்தையான மோசே

லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் லேவியின் குடும்பத்திலிருந்த ஒரு பெண்ணை மணந்தான். அப்பெண் கருவுற்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாய் அக்குழந்தையின் அழகைக் கண்டு அதை மூன்று மாதங்கள் மறைத்து வைத்தாள். அது ஆணாக இருந்ததால், அக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்படுமோ என்று தாய் பயந்தாள். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவள் ஒரு கூடையைச் செய்து, அது மிதக்கும்படியாக கீல் பூசி, குழந்தையை அக்கூடையில் வைத்து, நதியில் உயரமான புற்களிடையே கூடையை மிதக்கவிட்டாள். குழந்தையின் சகோதரி அங்கு நின்று நடப்பதைக் கவனித்தாள். குழந்தைக்கு நிகழப்போவதைப் பார்க்க விரும்பினாள்.

அப்போதுதான் பார்வோனின் மகள் குளிப்பதற்காக நதிக்கு வந்தாள். உயர்ந்த புற்களிடையே இருந்த கூடையை அவள் கண்டாள். நதியருகே அவளது வேலைக்காரிகள் நடந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரிடம் கூடையை எடுத்து வருமாறு அவள் கூறினாள். அரசனின் மகள் கூடையைத் திறந்து அதில் ஒரு ஆண் குழந்தையைக் கண்டாள். அக்குழந்தை அழுதுகொண்டிருந்தது. அவள் அதற்காக மனமிரங்கினாள். அது எபிரெயக் குழந்தைகளில் ஒன்று என்பதை அவள் அறிந்தாள்.

அங்கே நின்றுகொண்டிருந்த குழந்தையின் சகோதரி அரசனின் மகளை நோக்கி, “நான் போய் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கும், அதைக் கவனித்துக்கொள்வதற்கும் ஒரு எபிரெயப் பெண்ணை அழைத்து வரட்டுமா?” என்றாள்.

அரசனின் மகளும், “தயவு செய்து அவ்வாறே செய்” என்றாள்.

எனவே அப்பெண் சென்று, குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.

அரசனின் மகள் அத்தாயை நோக்கி, “குழந்தையை எடுத்து எனக்காக அதற்குப் பாலூட்டு. அவனைக் கவனித்துக்கொள்வதற்காக உனக்குப் பணம் கொடுப்பேன்” என்றாள்.

எனவே, அப்பெண் குழந்தையை எடுத்துச் சென்று, அதனை வளர்த்தாள். 10 குழந்தை வளர்ந்தது. சில காலத்திற்குப் பிறகு, அவள் அக்குழந்தையை அரசனின் மகளிடம் கொடுத்தாள். அரசனின் மகள் குழந்தையைத் தன் சொந்த மகனாகவே ஏற்றுக்கொண்டாள். அக்குழந்தையை தண்ணீரிலிருந்து எடுத்ததால் அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.

மோசே தன் ஜனங்களுக்கு உதவுதல்

11 மோசே வளர்ந்து, பெரியவனானான். அவனது சொந்த ஜனங்களாகிய எபிரெயர்கள் கடினமாக உழைப்பதற்கு வற்புறுத்தப்படுவதைக் கண்டான். ஒரு நாள் ஒரு எபிரெய மனிதனை, எகிப்திய மனிதன் ஒருவன் அடித்துக்கொண்டிருப்பதைக் கண்டான். 12 மோசே சுற்றிலும் நோக்கி, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதைக் கண்டான். பின் மோசே, எகிப்தியனைக் கொன்று, அவனை மண்ணில் புதைத்தான்.

13 மறுநாள் இரண்டு எபிரெய மனிதர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருப்பதையும், அவர்களில் ஒருவன் செய்தது தவறாயிருப்பதையும் மோசே பார்த்தான். மோசே அம்மனிதனை நோக்கி, “நீ ஏன் உனது அயலானை அடிக்கிறாய்?” என்று கேட்டான்.

14 அம்மனிதன் அதற்குப் பதிலாக, “எங்களுக்கு அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் இருக்கும்படியாக உன்னிடம் யாராவது கூறினார்களா? நீ எகிப்தியனை நேற்று கொன்றதுபோல என்னையும் கொல்லப் போகிறாயா?” என்றான்.

இதைக் கேட்டு மோசே அஞ்சினான். மோசே தனக்குள், “நான் செய்ததை எல்லோரும் இப்போது அறிந்திருக்கிறார்கள்” என்று நினைத்துக்கொண்டான்.

15 மோசே செய்ததைக் குறித்து பார்வோன் கேள்விப்பட்டு, அவன் மோசேயைக் கொல்ல முடிவு செய்தான். ஆனால் பார்வோனிடமிருந்து மோசே தப்பி ஓடி, மீதியான் தேசத்திற்குச் சென்றான்.

மீதியானில் மோசே

மீதியானின் ஒரு கிணற்றருகே மோசே நின்றான். 16 ஏழு பெண்களைப் பெற்ற ஒரு ஆசாரியன் மீதியானில் இருந்தான். அப்பெண்கள் வந்து தம்முடைய தந்தையின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டும்படிக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து தொட்டிகளை நிரப்பிக்கொண்டிருந்தார்கள். 17 ஆனால் அங்கிருந்த சில மேய்ப்பர்கள் அப்பெண்களைத் துரத்தி, அவர்கள் தண்ணீர் இறைக்க முடியாதபடி செய்தனர். மோசே அப்பெண்களுக்கு உதவி, அவர்களின் ஆடுகளுக்கு தண்ணீர் கொடுத்தான்.

18 பின் அப்பெண்கள் தங்கள் தந்தையாகிய ரெகுவேலிடம் சென்றனர். அவர்கள் தந்தை அவர்களிடம், “இன்று சீக்கிரமாக வந்துவிட்டீர்களே!” என்று கேட்டான்.

19 அப்பெண்கள், “மேய்ப்பர்கள் எங்களைத் துரத்திவிட முயன்றதால் ஒரு எகிப்திய மனிதன் எங்களுக்கு உதவினான். அவன் எங்களுக்கும் எங்கள் ஆடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தான்” என்று பதில் சொன்னார்கள்.

20 எனவே, ரெகுவேல் அவனது பெண்களை நோக்கி, “அம்மனிதன் எங்கே? ஏன் அவனை விட்டு வந்தீர்கள்? அவனை அழையுங்கள், அவன் நம்மோடு சாப்பிடட்டும்” என்றான்.

21 மோசே அம்மனிதனோடு தங்குவதில் மகிழ்ச்சியடைந்தான். ரெகுவேல், தனது மகளாகிய சிப்போராளை மோசேக்குத் திருமணம் செய்து வைத்தான். 22 சிப்போராள் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். மோசே அவனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டான். தனக்குச் சொந்தமில்லாத நாட்டில் அந்நியனாக இருந்தமையால் மோசே அவனுக்கு இப்பெயரை வைத்தான்.

இஸ்ரவேலுக்கு உதவ தேவன் முடிவு செய்தல்

23 நீண்டகாலம் கழிந்தது. எகிப்தின் மன்னன் மரித்தான். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ கடினமாக உழைப்பதற்கு தொடர்ந்து வற்புறுத்தப்பட்டனர். உதவிக்காக அவர்கள் அழுதார்கள். 24 தேவன் அவர்கள் ஜெபத்தைக் கேட்டார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரோடு செய்த உடன்படிக்கையை அவர் நினைவுகூர்ந்தார். 25 இஸ்ரவேல் ஜனங்கள் அடைந்த துயரங்களை தேவன் கண்டார். விரைவில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை தீர்மானித்தார்.

எரியும் புதர்

மோசேயின் மாமன் எத்திரோ என்ற

பெயருடையவன் ஆவான். (எத்திரோ மீதியானில் ஆசாரியனாக இருந்தான்) எத்திரோவின் ஆடுகளை மோசே கவனித்து வந்தான். ஒரு நாள், மோசே ஆடுகளைப் பாலைவனத்தின் மேற்குத் திசைக்கு அழைத்துச் சென்றான். மோசே ஓரேப் (சீனாய்) எனப்படும் தேவனின் மலைக்குப் போனான். மோசே மலையின்மேல், ஒரு எரியும் புதரில் கர்த்தருடைய தூதனைக் கண்டான். அது பின்வருமாறு நிகழ்ந்தது:

அழியாதபடி எரிந்துகொண்டிருந்த ஒரு புதரை மோசே கண்டான். மோசே புதரின் அருகே சென்று, அழியாதபடி அது எவ்வாறு எரிகிறது என்பதைப் பார்ப்பதற்குத் தீர்மானித்தான்.

புதரைப் பார்ப்பதற்கு மோசே வந்துகொண்டிருப்பதை கர்த்தர் கண்டார். எனவே, தேவன் புதரிலிருந்து, “மோசே, மோசே!” என்று கூப்பிட்டார்.

மோசே, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.

அப்போது கர்த்தர், “பக்கத்தில் நெருங்காதே. உனது செருப்புகளைக் கழற்று. நீ பரிசுத்த பூமியில் நின்றுகொண்டிருக்கிறாய். நான் உனது முற்பிதாக்களின் தேவன். நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனாகவும் இருக்கிறேன்” என்றார்.

தேவனைப் பார்ப்பதற்குப் பயந்ததால் மோசே முகத்தை மூடிக்கொண்டான்.

அப்போது கர்த்தர், “எகிப்தில் என் ஜனங்கள் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். எகிப்தியர்கள் அவர்களைத் துன்புறுத்தும்போது, அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். நான் இப்போது இறங்கிப்போய், எகிப்தியரிடமிருந்து என் ஜனங்களை மீட்பேன். அந்நாட்டிலிருந்து தொல்லைகளில்லாமல் சுதந்திரமாக வாழத்தக்க ஒரு நல்ல நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். [a] அந்நாடு நல்ல பொருட்களால் நிரம்பியதாகும். கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற ஜனங்கள் அந்நாட்டில் வாழ்கிறார்கள். நான் இஸ்ரவேல் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியதையும் கண்டேன். 10 நான், உன்னை இப்போது பார்வோனிடம் அனுப்புகிறேன். நீ போய் எனது ஜனங்களாகிய இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்து!” என்றார்.

11 ஆனால் மோசே தேவனிடம், “நான் பெரிய மனிதன் அல்ல, நான் எவ்வாறு பார்வோனிடம் போய், இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தக் கூடும்?” என்று கேட்டான்.

12 தேவன், “நான் உன்னோடு இருப்பேன். எனவே நீ இதைச் செய்ய முடியும். நான் உன்னை அனுப்புகிறேன் என்பதற்கு இதுவே சான்றாகும்! ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்திய பிறகு, நீ வந்து இம்மலையின் மேல் என்னைத் தொழுவாய்!” என்றார்.

13 அப்போது மோசே தேவனை நோக்கி, “நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவன் என்னை அனுப்பினார்’ என்று கூறினால், அவர்கள், ‘அவரது பெயரென்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்லட்டும்?” என்று கேட்டான்.

14 அப்போது தேவன் மோசேயை நோக்கி, “அவர்களிடம் ‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என்று கூற வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ போகும்போது, ‘இருக்கிறேன்’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார், என்று சொன்னார் என்று சொல்” என்றார். 15 மோசேயிடம் தேவன் மீண்டும், “இஸ்ரவேலர்களிடம், நீ சொல்ல வேண்டியது இதுதான்: ‘உங்களுடைய முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் யேகோவா என்பவர் ஆவார். என் பெயரும் எப்பொழுதும் யேகோவா ஆகும். அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள். யேகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார்.

16 மேலும் கர்த்தர், “போய் ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்களை) ஒருமித்துக் கூடி வரச் செய்து அவர்களுக்கு, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யேகோவா, எனக்குத் தரிசனமளித்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோரின் தேவன் என்னிடம் பேசினார். கர்த்தர், ‘நான் உங்களை நினைவுகூர்ந்து, எகிப்தில் உங்களுக்கு நடந்ததையும் கண்டேன். 17 எகிப்தில் நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து உங்களை விடுவிக்க முடிவு செய்தேன். இப்போது கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற வெவ்வேறு ஜனங்களுக்குச் சொந்தமான தேசத்திற்கு உங்களை அழைத்துச் செல்வேன். பல நல்ல பொருட்களால் நிரம்பிய தேசத்திற்கு உங்களை வழிநடத்துவேன்’ என்று சொன்னார்” என்று சொல்.

18 “மூப்பர்கள் (தலைவர்கள்) உனக்குச் செவி கொடுப்பார்கள். பின்னர் நீயும், அவர்களும் எகிப்திய அரசனிடம் செல்லுங்கள். நீ அரசனிடம், ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய யேகோவா எங்களிடம் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணப்படும்படியாகக் கூறினார். எங்கள் தேவனாகிய யேகோவாவுக்கு நாங்கள் அங்கு பலி செலுத்தவேண்டும்’ என்று சொல்லுங்கள்.

19 “ஆனால் எகிப்திய அரசன் உங்களைப் போக அனுமதிக்கமாட்டான் என்பதை அறிவேன். மிகப் பெரிய ஒரு வல்லமை மட்டுமே உங்களை அனுப்ப அவனைக் கட்டாயப்படுத்தும். 20 ஆகையால் எனது மிகுந்த வல்லமையை எகிப்துக்கு எதிராகப் பயன்படுத்துவேன். அந்த தேசத்தில் வியக்கும்படியான காரியங்கள் நிகழும்படி செய்வேன். நான் இதைச் செய்தபிறகு, அவன் உங்களைப் போக அனுமதிப்பான். 21 இஸ்ரவேல் ஜனங்களிடம் எகிப்திய ஜனங்கள் இரக்கம்கொள்ளும்படி செய்வேன். எகிப்தைவிட்டுப் புறப்படும்போது, உங்கள் ஜனங்களுக்கு எகிப்தியர்கள் பல வெகுமதிகளைக் கொடுப்பார்கள்.

22 “எல்லா எபிரெய பெண்களும் தங்கள் அண்டை வீடுகளிலும், தங்கள் வீடுகளிலும் வசிக்கும் எகிப்திய பெண்களிடம் பரிசுகளைக் கேட்க வேண்டும். அந்த எகிப்திய பெண்கள் அவர்களுக்குப் பரிசுகளைக் கொடுப்பார்கள். உன் ஜனங்கள் பொன், வெள்ளி, விலைமதிப்புள்ள ஆடைகள் ஆகியவற்றைப் பரிசாகப் பெறுவார்கள். பின் நீங்கள் எகிப்தை விட்டுப் புறப்படும்போது, உங்கள் குழந்தைகளுக்கு அப்பரிசுகளை அணிவிப்பீர்கள். இவ்வகையில் நீங்கள் எகிப்து தேசத்தின் செல்வத்தை எடுத்துச் செல்வீர்கள்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center