Beginning
லோத்தின் பார்வையாளர்கள்
19 அன்று மாலையில் இரண்டு தேவ தூதர்கள் சோதோம் நகரத்திற்கு வந்தனர். நகர வாசலில் இருந்துகொண்டு லோத்து தேவதூதர்களைப் பார்த்தான். அவர்கள் நகரத்துக்குப் போகும் பயணிகள் என்று நினைத்தான். அவன் எழுந்து அவர்களிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். லோத்து அவர்களிடம், “ஐயா, எனது வீட்டிற்கு வாருங்கள். நான் உங்களுக்குச் சேவை செய்வேன். உங்கள் பாதங்களைக் கழுவிக்கொண்டு இரவில் அங்கே தங்கி, நாளை உங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றான்.
அதற்கு தேவதூதர்கள், “இல்லை, நாங்கள் இரவில் வெட்டவெளியில் தங்குவோம்” என்றனர்.
3 ஆனால் லோத்து தொடர்ந்து தன் வீட்டிற்கு வருமாறு அவர்களை வற்புறுத்தினான். அவர்களும் ஒப்புக்கொண்டு அவனது வீட்டிற்குப் போனார்கள். அவர்களுக்காக அவன் ஆயத்தம் செய்த ரொட்டியை அவர்கள் சாப்பிட்டார்கள்.
4 அன்று மாலை தூங்குவதற்கு முன்னால், லோத்தின் வீட்டிற்கு நகரின் பலபாகங்களில் இருந்தும் இளைஞர், முதியோர்கள் எனப் பலரும் கூடிவந்து வீட்டைச் சுற்றிலும் நின்றுகொண்டு அவனை அழைத்தனர். 5 அவர்கள், “இன்று இரவு உன் வீட்டிற்கு வந்த இருவரும் எங்கே? அவர்களை வெளியே அழைத்து வா, நாங்கள் அவர்களோடு பாலின உறவு கொள்ள வேண்டும்” என்றனர்.
6 லோத்து வெளியே வந்து வீட்டின் கதவை அடைத்துக்கொண்டான். 7 லோத்து அவர்களிடம், “நண்பர்களே வேண்டாம். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கெட்டச் செயல்களைச் செய்ய வேண்டாம். 8 எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை எந்த ஆணையும் அறியாதவர்கள். நான் அவர்களை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் அவர்களோடு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால் இந்த மனிதர்களை எதுவும் செய்து விடாதீர்கள். இவர்கள் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றான்.
9 வீட்டைச் சுற்றி நின்றவர்கள், “எங்கள் வழியில் குறுக்கிடாதே” என்று சத்தமிட்டார்கள். பிறகு அவர்கள் தங்களுக்குள்ளேயே, “லோத்து நமது நகரத்திற்கு விருந்தாளியாக வந்தான். இப்போது நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நமக்கே கூறுகிறான்” என்றனர். பிறகு அவர்கள் லோத்திடம், “நாங்கள் அந்த மனிதர்களை விட உனக்கே அதிகக் கொடுமையைச் செய்வோம்” என்று கூறி லோத்தை நெருங்கி வந்து, கதவை உடைப்பதற்கு முயன்றனர்.
10 ஆனால் லோத்தின் வீட்டிற்குள் இருந்த இருவரும் கதவைத் திறந்து லோத்தை வீட்டிற்குள் இழுத்து கதவை மூடிக்கொண்டனர். 11 பிறகு அவர்கள் கதவுக்கு வெளியே இருந்த இளைஞர்களும் முதியவர்களும் தங்கள் பார்வையை இழக்கும்படி செய்தனர். எனவே, அவர்களால் கதவு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சோதோமிலிருந்து தப்பித்தல்
12 அந்த இருவரும் லோத்திடம், “உன் குடும்பத்திலுள்ளவர்களில் யாராவது இந்த நகரத்தில் இருக்கிறார்களா? உனக்கு மருமகன்களோ, மகன்களோ, மகள்களோ அல்லது வேறு யாராவது இந்நகரத்தில் இருந்தால் அவர்களை உடனே இந்நகரத்தைவிட்டு விலகச் சொல்ல வேண்டும். 13 நாங்கள் இந்த நகரத்தை அழிக்கப் போகிறோம். இந்த நகரம் எவ்வளவு மோசமானது என்பதைப்பற்றி கர்த்தர் அறிந்தபடியால் இதனை அழிக்க எங்களை அனுப்பினார்” என்றார்கள்.
14 ஆகவே, லோத்து வெளியே போய், தனது மகள்களை மணந்துகொள்வதாயிருந்த மருமகன்களிடம், “வேகமாக இந்த நகரத்தை விட்டு வெளியேறுங்கள். விரைவில் கர்த்தர் இந்த நகரத்தை அழிக்கப் போகிறார்” என்றான். அவர்களோ அவன் வேடிக்கையாகப் பேசுவதாய் எண்ணினார்கள்.
15 அடுத்த நாள் காலையில் தேவதூதர்கள் லோத்தை வெளியேற விரைவுபடுத்தினார்கள். அவர்கள், “இந்நகரம் தண்டிக்கப்படும். எனவே, உனது மனைவியையும், இரண்டு பெண்களையும், இன்னும் உன்னோடு வருகிறவர்களையும், அழைத்துக்கொண்டு இந்த இடத்தைவிட்டு விலகிப் போ. அவ்வாறு செய்தால் நீ இந்நகரத்தோடு அழியாமல் இருப்பாய்” என்றனர்.
16 லோத்து குழப்பத்துடன் வேகமாகப் புறப்படாமல் இருந்தான், எனவே அந்த இரண்டு தேவதூதர்கள் அவன், அவனது மனைவி, மகள்கள் ஆகியோரின் கையைப் பிடித்து அவர்களைப் பாதுகாப்பாக நகரத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். லோத்தோடும் அவனது குடும்பத்தோடும் கர்த்தர் மிகவும் கருணை உடையவராக இருந்தார். 17 எனவே, இரு தேவதூதர்களும் லோத்தையும் அவன் குடும்பத்தையும் பாதுகாப்பாக நகரத்திற்கு வெளியே கொண்டு வந்தபின்னர் தூதர்களில் ஒருவன், “இப்போது உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிப் போங்கள். இந்நகரத்தைத் திரும்பிப் பார்க்காதீர்கள். இந்தச் சமவெளியில் எங்கும் நிற்காதீர்கள். மலைக்குப் போய்ச் சேரும்வரை ஓடுங்கள். இடையில் நின்றால் நகரத்தோடு நீங்களும் அழிந்துபோவீர்கள்” என்றான்.
18 ஆனால் லோத்து அந்த இருவரிடமும், “ஐயா, அவ்வளவு தூரத்துக்கு ஓடும்படி என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள். 19 உங்கள் சேவகனாகிய என் மீது நீங்கள் மிகவும் இரக்கம் வைத்திருக்கிறீர்கள். என்னைக் காப்பாற்ற கருணையுடன் இருக்கிறீர்கள். ஆனால் மலைவரை என்னால் ஓட முடியாது. நான் மரித்துப்போய்விட வாய்ப்புண்டு. 20 அருகில் ஒரு சிறிய நகரம் உள்ளது. என்னை அந்நகரத்திற்கு ஓடிப்போகவிடுங்கள். அந்த அளவுக்கு என்னால் ஓடி என்னை பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்றான்.
21 அதற்கு தேவதூதன், “நல்லது, அவ்வாறு செய்ய உன்னை அனுமதிக்கிறேன். நான் அந்நகரத்தை அழிக்கமாட்டேன். 22 ஆனால் அங்கு வேகமாக ஓடு. அங்கு நீ பாதுகாப்பாகப் போய்ச் சேரும்வரை சோதோம் நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றான். (அந்நகரின் பெயர் சோவார். ஏனெனில் அது மிகச் சிறிய நகரம்)
சோதோமும் கொமோராவும் அழிக்கப்படுதல்
23 சூரியன் உதயமானபோது லோத்து சோவார் நகரத்திற்குள் நுழைந்தான். 24 அதே நேரத்தில் கர்த்தர் சோதோமையும் கோமோராவை அழிக்க ஆரம்பித்தார். கர்த்தர் வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் அந்நகரின் மேல் விழுமாறு செய்து, 25 அந்த நகரங்களையும் அதன் முழு சமவெளியையும், அங்கிருந்த செடிகளையும், ஜனங்களையும் அழித்துவிட்டார்.
26 அவர்கள் ஓடிப்போகும்போது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். அதனால் அவள் உப்புத்தூண் ஆனாள்.
27 அதே நாள் அதிகாலையில், ஆபிரகாம் எழுந்து கர்த்தரை தொழுதுகொள்ளும் இடத்துக்குச் சென்றான். 28 அவன் அங்கிருந்து சோதோம், கொமோரா நகரங்கள் இருக்கும் திசையையும், அதன் சமவெளியையும் பார்த்தபோது அங்கிருந்து புகை எழும்புவதைக் கண்டான். அது பெரிய நெருப்பினால் ஏற்படும் புகைபோல் தோன்றியது.
29 தேவன் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்களை அழித்துவிட்டார். அப்போது அவர் ஆபிரகாமை நினைத்து, ஆபிரகாமின் உறவினனான லோத்தை அழிக்காமல் விட்டார். பள்ளத்தாக்கில் இருக்கும் நகரங்களுக்குள் லோத்து வாழ்ந்துகொண்டிருந்த அவ்விடங்களை அழிக்கும் முன்பு லோத்தை தேவன் வெளியேற்றினார்.
லோத்தும் அவனது மகள்களும்
30 சோவாரில் தங்கியிருக்க லோத்துவுக்கு அச்சமாக இருந்தது. எனவே, அவனும் அவனது மகள்களும் மலைக்குச் சென்று அங்கு ஒரு குகையில் வசித்தனர். 31 ஒரு நாள் மூத்தவள் இளையவளிடம், “உலகில் எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும் மணந்துகொண்டு குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் நமது தந்தையோ வயதானவராக உள்ளார். நமக்கு குழந்தை தர வேறு ஆண்களும் இங்கே இல்லை. 32 எனவே, நாம் தந்தைக்கு மதுவைக் கொடுக்கலாம். அவர் மயங்கியபின் அவரோடு பாலின உறவு கொள்ளலாம். இப்படியாக நமக்குச் சந்ததி உண்டாக நம் தந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றாள்.
33 அன்று இரவு இரண்டு பெண்களும் தந்தைக்கு மதுவைக் கொடுத்து குடிக்க வைத்தனர். பிறகு மூத்தவள் தந்தையின் படுக்கைக்குச் சென்று அவரோடு பாலின உறவு கொண்டாள். லோத்துவுக்குத் தன் மகள் தன்னோடு படுத்ததும், எழுந்து போனதும் தெரியவில்லை. அந்த அளவுக்குக் குடித்திருந்தான்.
34 மறுநாள் மூத்தவள் இளையவளிடம்: “நேற்று இரவு நான் தந்தையோடு பாலின உறவு கொண்டேன். இன்று இரவும் அவரை மீண்டும் குடிக்க வைப்போம். பிறகு நீ அவரோடு பாலின உறவுகொள். இதன் மூலம் நாம் குழந்தை பெற நம் தந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் குடும்பமும் அழியாமல் இருக்கும்” என்றாள். 35 அதனால் இருவரும் அந்த இரவிலும் தந்தையை மது குடிக்கும்படி செய்தனர். பிறகு இளையவள் தந்தையோடு படுத்து பாலின உறவு கொண்டாள். லோத்து மதுவைக் குடித்திருந்தபடியால் அவள் படுத்ததையும், எழுந்து போனதையும் அறியாமலிருந்தான்.
36 லோத்தின் இரு மகள்களும் கர்ப்பமுற்றனர். அவர்களின் தந்தையே அவர்களது பிள்ளைகளுக்கும் தந்தை. 37 மூத்தவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவள் அவனுக்கு மோவாப் என்று பெயர் வைத்தாள். அவன் மோவாபியருக்கெல்லாம் தந்தையானான். 38 இளையவளும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு அவள் பென்னம்மி என்று பெயரிட்டாள். அவன் அம்மோன் ஜனங்களுக்குத் தந்தை ஆனான்.
ஆபிரகாம் கேராருக்குப் போகிறான்
20 ஆபிரகாம் அந்த நாட்டைவிட்டுப் பாலைவனப் பகுதிக்குச் சென்றான். அவன் காதேசுக்கும், சூருக்கும் நடுவிலுள்ள கேராரில் தங்கினான். 2 அவன் கேராரிலே தங்கி இருந்தபோது தன் மனைவி சாராளைச் சகோதரி என்று சொன்னான். அபிமெலேக்கு கேராரின் அரசன். அவன் சாராளை மிகவும் விரும்பினான். எனவே, வேலைக்காரர்களை அனுப்பி அவளைக் கொண்டு வருமாறு சொன்னான். 3 ஆனால் இரவில் தேவன் அபிமெலேக்கின் கனவிலே பேசி, “நீ மரித்து போவாய். நீ கைப்பற்றிய பெண் திருமணமானவள்” என்றார்.
4 ஆகையால் அபிமெலேக்கு சாராளைத் தொடவில்லை. அவன் தேவனிடம், “கர்த்தாவே! நான் குற்றமுடையவன் அல்ல. ஒன்றும் தெரியாத அப்பாவியை நீர் கொல்வீரா? 5 ஆபிரகாமே என்னிடம், ‘இவள் என் சகோதரி’ என்று சொன்னானே! சாராளும் ஆபிரகாமை ‘இவர் என் சகோதரன்’ என்று கூறிவிட்டாள். நான் அப்பாவி. நான் வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை” என்றான்.
6 தேவன் அவனிடம், “நீ என்ன மனநிலையில் இதைச் செய்தாய் என்று எனக்குத் தெரியும். நீ என்ன செய்கிறாய் என்பது உனக்குத் தெரியாது. நீ எனக்கு எதிராகப் பாவம் செய்யாதபடி நான் உன்னைக் காப்பாற்றினேன். நீ அவளைத் தொடாதபடி நானே உன்னைத் தடுத்தேன். 7 ஆகவே ஆபிரகாமிடம் அவன் மனைவியைத் திரும்பக் கொடுத்துவிடு. ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி. அவன் உனக்காக ஜெபிப்பான். நீ வாழ்வாய். ஆனால் நீ சாராளை ஆபிரகாமிடம் திரும்பக் கொடுக்காவிட்டால் நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் மரித்துப்போவீர்கள் என்று அறிந்துகொள்” என்றார்.
8 எனவே, மறுநாள் அதிகாலையில், அபிமெலேக்கு தன் வேலைக்காரர்களை அழைத்து, நடந்தவைகளைப்பற்றிக் கூறினான், அவர்கள் பயந்தார்கள். 9 பிறகு அபிமெலேக்கு ஆபிரகாமை அழைத்து அவனிடம்: “நீ ஏன் எங்களுக்கு இதுபோல் செய்தாய்? உனக்கு எதிராக நான் என்ன செய்தேன்? அவள் உன் சகோதரி என்று ஏன் பொய் சொன்னாய்? எனது அரசுக்கு நீ நிறைய தொந்தரவுகளைக் கொடுத்துவிட்டாய். நீ இவ்வாறு செய்திருக்கக் கூடாது. 10 நீ எதற்காகப் பயந்தாய்? ஏன் இவ்வாறு செய்தாய்” என்று கேட்டான்.
11 பிறகு ஆபிரகாம், “நான் பயந்துவிட்டேன், இந்த இடத்தில் உள்ள எவரும் தேவனை மதிக்கமாட்டார்கள் என்று நினைத்தேன். சாராளுக்காக என்னை எவராவது கொன்று விடுவார்களோ என்று நினைத்தேன். 12 அவள் எனது மனைவி, ஆனால் அவள் என் சகோதரியும் கூட, அவள் என் தந்தைக்கு மகள். ஆனால் என் தாய்க்கு மகளல்ல. 13 தேவன் என்னை என் தந்தையின் வீட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து என்னைப் பல்வேறு இடங்களில் அலைந்து திரியும்படி செய்திருக்கிறார். அப்போதெல்லாம் சாராளிடம், ‘நாம் எங்கு சென்றாலும் நான் உன் சகோதரன் என்று சொல்லு’ என்று கேட்டுக்கொண்டேன்” என்றான்.
14 என்ன நடந்தது என்பதை அபிமெலேக்கு புரிந்துகொண்டான். எனவே சாராளைத் திரும்ப ஆபிரகாமிடம் அனுப்பிவிட்டான். அவளுக்குச் சில ஆடுகளையும் மாடுகளையும் அடிமைகளையும் கொடுத்தான். 15 பிறகு, “உன்னைச் சுற்றிலும் பார், இது எனது நிலம், நீ விரும்புகிற எந்த இடத்திலும் வாழலாம்” என்றான்.
16 அவன் சாராளிடம், “நான் உன் சகோதரன், ஆபிரகாமிடம் 1,000 வெள்ளிக் காசுகள் கொடுத்தேன். நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்கவே அவ்வாறு செய்தேன். நான் செய்தது சரியென்று எல்லோருக்கும் தெரியவேண்டும்” என்றான்.
17-18 கர்த்தர், சாராளினிமித்தம் அபிமெலேக்கின் குடும்பத்தில் எவருக்கும் குழந்தை இல்லாமல் இருக்கும்படி செய்திருந்தார். இப்போது ஆபிரகாம் தேவனிடம் வேண்டிக்கொள்ளவே, தேவன் அபிமெலேக்கு, அவன் மனைவி, வேலைக்காரப் பெண்கள் அனைவரையும் குணப்படுத்தினார்.
இறுதியாக, சாராளுக்கு ஒரு குழந்தை
21 கர்த்தர், சாராளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றினார். 2 சாராள் கர்ப்பமுற்றாள். ஆபிரகாமின் வயோதிப காலத்தில் அவனுக்கு ஓர் ஆண் மகனைப் பெற்றுக் கொடுத்தாள். இவையெல்லாம் தேவன் வாக்களித்தபடியே நடந்தது. 3 சாராள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆபிரகாம் அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான். 4 ஈசாக்கு பிறந்து எட்டு நாள் கழிந்தபோது ஆபிரகாம் அவனுக்கு விருத்தசேதனம் செய்து வைத்தான். தேவனின் ஆணைப்படி இவ்வாறு நடந்தது.
5 ஈசாக்கு பிறக்கும்போது அவனது தந்தை ஆபிரகாமுக்கு 100 வயதாயிருந்தது. 6 சாராள், “தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்தார். இதைக் கேள்விப்படும் எவரும் என்னோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவார்கள். 7 ஆபிரகாமின் குழந்தையை நான் பெற்றெடுப்பேன் என்று எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால் நான் இந்த வயோதிப காலத்திலும் அவருக்கு ஆண் பிள்ளையைப் பெற்றுக் கொடுத்தேன்” என்றாள்.
வீட்டில் பிரச்சனை
8 ஈசாக்கு பால்குடிக்க மறக்கும் நாளில் ஆபிரகாம் பெரிய விருந்து கொடுத்தான். 9 ஆகார் என்னும் எகிப்திய அடிமைப்பெண் ஆபிரகாமின் முதல் மகனைப் பெற்றிருந்தாள். சாராள் அவனைப் பார்த்தாள். அவன் கேலிச் செய்துகொண்டிருப்பதைக் கண்டு அவளுக்கு அவன் மேல் எரிச்சல் வந்தது. 10 சாராள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் வெளியே தள்ளும். நாம் சாகும்போது நமக்குரிய அனைத்தையும் ஈசாக்கே பெற வேண்டும். அந்த அடிமைப் பெண்ணின் மகன் அதில் பங்கு போடுவதை நான் விரும்பவில்லை” என்றாள்.
11 இது ஆபிரகாமுக்கு துயரத்தைத் தந்தது. அவன் தன் மகன் இஸ்மவேலைப்பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தான். 12 ஆனால் தேவன் ஆபிரகாமிடம், “அடிமைப் பெண்ணையும், அவள் மகனையும்பற்றிக் கவலைப்படாதே, சாராள் விரும்புவது போலவே செய். ஈசாக்கு ஒருவனே உனது வாரிசு. 13 ஆனால் நான் உனது அடிமைப் பெண்ணின் மகனையும் ஆசீர்வதிப்பேன். அவனும் உன் மகன் என்பதால் அவனிடமிருந்தும் ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன்” என்றார்.
14 மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் கொஞ்சம் தண்ணீரும், உணவும் எடுத்து அவற்றை ஆகாரிடம் கொடுத்தான். அவள் அவற்றை எடுத்துக்கொண்டு தன் மகனோடு வெளியேறி, பெயெர்செபா பாலைவனத்தில் அலைந்து திரிந்தாள்.
15 கொஞ்ச நேரம் கழிந்ததும் தண்ணீர் தீர்ந்து போனதால் குடிப்பதற்கு எதுவும் இல்லாமல் போயிற்று. எனவே ஆகார் தன் மகனை ஒரு புதரின் அடியில் விட்டாள். 16 ஆகார் கொஞ்ச தூரம் போய் உட்கார்ந்தாள். அவள் தன் மகன் தண்ணீர் இல்லாமலேயே மரித்துப்போவான் என்று எண்ணினாள். அவன் மரிப்பதை அவள் பார்க்க விரும்பவில்லை. எனவே அவள் அங்கே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.
17 சிறுவனின் அழுகையை தேவன் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: “ஆகாரே! உனக்கு என்ன நடந்தது? அஞ்ச வேண்டாம், கர்த்தர் சிறுவனின் அழுகையைக் கேட்டார். 18 போய் சிறுவனுக்கு உதவி செய், அவனது கையைப் பிடித்து வழிநடத்திச்செல். நான் அவனை ஏராளமான ஜனங்களுக்குத் தந்தையாக்குவேன்” என்றார்.
19 பிறகு தேவன், ஆகாரை ஒரு கிணற்றைப் பார்க்கும்படிச் செய்தார். அவள் அந்த கிணற்றின் அருகே சென்று, தன் பை நிறைய தண்ணீரை நிரப்பியதுடன், தன் மகனுக்கும் குடிக்கக் கொடுத்தாள். 20 அவன் வளர்ந்து ஆளாகும்வரை தேவன் அவனோடு இருந்தார். இஸ்மவேல் பாலைவனத்தில் வாழ்ந்து பெரிய வேட்டைக்காரன் ஆனான். வில்லைப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டான். 21 அவனது தாய் அவனுக்கொரு மனைவியை எகிப்தில் கண்டுபிடித்தாள். அவர்கள் பாரான் பாலைவனத்தில் வாழ்ந்தனர்.
அபிமெலேக்கோடு ஆபிரகாமின் உடன்படிக்கை
22 இவைகளுக்குப் பின்னர் அபிமெலேக்கும் பிகோலும் ஆபிரகாமோடு பேசினர். பிகோல் அபிமெலேக்கின் படைத் தளபதி. அவர்கள் ஆபிரகாமிடம், “நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவன் உன்னோடு இருக்கிறார். 23 எனவே இப்போது எனக்கு தேவனுக்கு முன்பு ஒரு வாக்குறுதி கொடு. நீ என்னோடும், என் பிள்ளைகளோடும் நியாயமாக நடந்துகொள்வேன் என்றும், நீ என்னோடும், நீ வாழ்கிற இந்தத் தேசத்தோடும் கருணையாய் இருப்பேன் என்றும் வாக்குறுதிகொடு. நான் உன்னோடு கருணையாய் இருப்பதுபோன்று நீ என்னோடு கருணையாய் இருப்பதாக உறுதியளி” என்று கேட்டனர்.
24 ஆபிரகாமோ, “நீங்கள் என்னை நடத்துவது போன்று நானும் உங்களை நடத்துவேன்” என்று சொன்னான். 25 பிறகு ஆபிரகாம் அபிமெலேக்கிடம் அரசனின் ஆட்கள் அவனது கிணற்றை அபகரித்துக்கொண்டதாய் முறையிட்டான்.
26 ஆனால் அபிமெலேக்கோ, “யார் இதைச் செய்தது என்று எனக்குத் தெரியாது, இதற்கு முன் நீ எனக்கு இதைப்பற்றி சொல்லவில்லை” என்று கூறினான்.
27 ஆகவே, அபிமெலேக்கும் ஆபிரகாமும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன்படி ஆபிரகாம் அரசனுக்குச் சில ஆடுகளையும் மாடுகளையும் ஒப்பந்தத்தின் அத்தாட்சியாகக் கொடுத்தான். 28 ஆபிரகாம் ஏழு பெண் ஆட்டுக்குட்டிகளையும் தனியாக அபிமெலேக்கு முன்பு நிறுத்தினான்.
29 அபிமெலேக்கு ஆபிரகாமிடம், “ஏன் இவற்றைத் தனியாக இதுபோல் நிறுத்தியிருக்கிறாய்” என்று கேட்டான்.
30 அதற்கு ஆபிரகாம், “என்னிடத்திலிருந்து நீ இவற்றை ஏற்றுக்கொண்டால், அது நான் இந்தக் கிணற்றைத் தோண்டியதற்கு அடையாளமாகும்” என்றான்.
31 அதற்குப் பிறகு அந்தக் கிணறு பெயெர்செபா என்று அழைக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துகொண்ட இடம் என்று இதற்குப் பொருள்.
32 இவ்வாறு அபிமெலேக்கும் ஆபிரகாமும் அந்த இடத்தில் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் அபிமெலேக்கும் அவனது படையும் அந்த இடத்தை விட்டு பெலிஸ்தருடைய நாட்டுக்குத் திரும்பிப் போனார்கள்.
33 ஆபிரகாம் பெயெர்செபாவில் ஒரு புதிய மரத்தை நட்டு என்றென்றும் ஜீவிக்கும் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தான். 34 ஆபிரகாம் பெலிஸ்தருடைய நாட்டில் நீண்ட காலம் தங்கியிருந்தான்.
2008 by World Bible Translation Center