Beginning
எலிசாவும் கோடரியும்
6 தீர்க்கதரிசிகளின் குழு எலிசாவிடம், “நாங்கள் அங்கிருக்கும் இடத்தில் தங்கியிருக்கிறோம், ஆனால் அது மிகவும் சிறியது. 2 நாம் யோர்தான் ஆற்றுவெளிக்குப் போய் கொஞ்சம் மரங்களை வெட்டிவருவோம். ஒவ்வொருவரும் ஒரு மரத்தடி கொண்டுவந்தால் வசிப்பதற்கு ஒரு இடம் அமைக்கலாம்” என்றனர்.
எலிசாவும், “நல்லது, போய் செய்யுங்கள்” என்றான்.
3 அவர்களில் ஒருவன், “எங்களோடு வாரும்” என்று அழைத்தான்.
எலிசாவும், “நல்லது நான் உங்களோடு வருகிறேன்” என்றான்.
4 எனவே எலிசாவும் தீர்க்கதரிசிகளின் குழுவோடு சென்றான். அவர்கள் யோர்தான் ஆற்றை அடைந்ததும் சில மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். 5 ஆனால் ஒரு மனிதன் மரத்தை வெட்டும்போது, அவனது கோடரியின் தலை கழன்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. அதற்கு அவன், “ஐயோ என் எஜமானனே! அது கடனாக வாங்கியதாயிற்றே!” என்று கூறினான்.
6 தேவமனுஷனோ, (எலிசா) “எங்கே அது விழுந்தது?” என்று கேட்டான்.
அந்த மனிதன் எலிசாவிற்குக் கோடரி விழுந்த இடத்தைக் காட்டினான். அவன், (எலிசா) ஒரு கொம்பை வெட்டி அதை தண்ணீருக்குள் எறிந்தான். அது (மூழ்கிவிட்ட) இரும்புக்கோடரியை மிதக்கச் செய்தது. 7 எலிசா, “கோடரியை எடுத்துக்கொள்” என்றான். பிறகு அவன் கை வைத்து அதனை எடுத்துக்கொண்டான்.
ஆராமின் ராஜா இஸ்ரவேல் ராஜாவைத் தந்திரமாகப் பிடிக்க முயற்சிக்கிறான்
8 ஆராமின் ராஜா இஸ்ரவேலுக்கு எதிராகப் போரை ஆரம்பித்தான். வேலைக்காரர்களோடும் படை அதிகாரிகளோடும் ஆலோசனை கூட்டம் நடத்தினான். ராஜா, “இந்த இடத்தில் ஒளிந்திருங்கள். இஸ்ரவேலின் படைகள் வரும்போது தாக்க வேண்டும்” என்றான்.
9 ஆனால் தேவமனிதனோ (எலிசாவோ) இஸ்ரவேல் ராஜாவுக்கு ஒரு தூதுவனை அனுப்பி, “எச்சரிக்கையாய் இரு! அந்த வழியாகப் போகாதே! ஆராமியப் படை வீரர்கள் ஒளிந்திருக்கிறார்கள்!” என்று சொல்லச் செய்தான்.
10 உடனே ராஜா எலிசாவின் எச்சரிக்கைச் செய்தியை தன் படைவீரர்களுக்கு அந்த இடத்திற்கு அனுப்பி பெரும் எண்ணிக்கையில் அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றினான்.
11 இதை அறிந்ததும் ஆராமின் ராஜா மிகவும் குலைந்து போனான். அவன் தன் அதிகாரிகளை அழைத்து, “நம் திட்டத்தை இஸ்ரவேல் ராஜாவுக்கு வெளிப்படுத்திய ஒற்றன் உங்களில் யார்?” என்று கேட்டான்.
12 ஒரு அதிகாரி, “எங்கள் ராஜாவும் ஆண்டவனுமானவரே! நம்மில் எவரும் ஒற்றராகவில்லை. நீங்கள் உங்களுடைய படுக்கையறையில் பேசுகின்ற பல இரகசியங்களையும் கூட, இஸ்ரவேலில் இருக்கிற தீர்க்கதரிசி எலிசாவால் இஸ்ரவேல் ராஜாவிடம் சொல்ல முடியும்!” என்றான்.
13 அதற்கு ராஜா, ஆட்களை அனுப்பி “போய் எலிசாவை கண்டுபிடியுங்கள். நான் அவனைப் பிடித்துக்கொண்டுவர ஆட்களை அனுப்புவேன்” என்றான்.
வேலைக்காரர்களோ, “எலிசா தோத்தானில் இருக்கிறார்” என்றனர்.
14 பிறகு ராஜா குதிரைகள், இரதங்கள், பெரும் படை ஆகியோரைத் தோத்தானுக்கு அனுப்பினான். அவர்கள் இரவில் அந்நகரை முற்றுகை இட்டனர். 15 தேவ மனிதனின் (எலிசாவின்) வேலைக்காரன் காலையில் விரைவில் எழுந்து, வெளியே சென்றபோது படைவீரர்கள், குதிரைகள், மற்றும் இரதங்கள் ஆகியவற்றைக் கண்டான். எலிசாவின் வேலைக்காரன் (அவரிடம் ஓடி வந்து), “எஜமானரே! நாம் என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான்.
16 எலிசாவோ, “பயப்படவேண்டாம், ஆராம் ராஜாவுக்காகப் போரிடும் வீரர்களை விட நமக்காக போரிடும் வீரர்கள் அதிகம்” என்றான்.
17 பிறகு அவன் ஜெபம் செய்து “கர்த்தாவே! என் வேலைக்காரனின் கண்ணை திறந்துவிடும். அதனால் அவன் கண்டுகொள்வான்” என்று வேண்டிக்கொண்டான்.
அந்த வேலைக்காரனின் கண்களை கர்த்தர் திறந்தார். அவன் பார்த்தபோது, மலை முழுவதும் படை வீரர்களும் குதிரைகளும் இரதங்களும் நிற்பதைப் பார்த்தான் அவர்கள் எலிசாவை சுற்றியிருந்தனர்!
18 பின் அவர்கள் (ஆராமியர்கள்) கீழே இறங்கி எலிசாவிடம் வந்து நின்றதும், அவன் கர்த்தரிடம், “இம்மனிதர்கள் குருடாகப் போகும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்” என்றான். பிறகு கர்த்தர் எலிசா வேண்டிக்கொண்டபடியே ஆராமியர்களை குருடாக்கினார். 19 எலிசா அவர்களைப் பார்த்து, “இது சரியான வழியல்ல. இது சரியான நகரமும் அல்ல. என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை நீங்கள் தேடுகிறவரிடம் அழைத்துப் போவேன்” என்றான். பிறகு அவர்களை சமாரியாவிற்கு அழைத்துப்போனான்.
20 அவர்கள் சமாரியாவை அடைந்ததும் எலிசா “கர்த்தாவே, இப்போது இந்த மனிதர்களின் கண்களைத் திறக்கச்செய்யும். எனவே அவர்கள் பார்க்க முடியும்” என்றான்.
பிறகு கர்த்தர் அவர்களின் கண்களைத் திறந்தார். அவர்கள் சமாரியாவின் நடுவே இருப்பதை பார்த்தனர்! 21 இஸ்ரவேலின் ராஜா ஆராமிய படைகளைக் கண்டதும் எலிசாவிடம் “என் தந்தையே, இவர்களைக் கொல்லட்டுமா? இவர்களைக் கொல்லட்டுமா?” என்று கேட்டான்.
22 அதற்கு எலிசா, “இவர்களைக் கொல்ல வேண்டாம். இவர்கள் உன் வாளாலும் வில்லாலும் போரில் கைப்பற்றிய வீரர்கள் அல்ல! இவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்களை உண்ணவும் குடிக்கவும்விடு. பின் எஜமானனிடம் செல்லவும் அனுமதிகொடு” என்றான்.
23 ஆராமியப் படைக்காக இஸ்ரவேல் ராஜா நிறைய உணவைத் தயாரித்தான். ஆராமியப்படை உண்டு குடித்தது. பிறகு, இஸ்ரவேல் ராஜா ஆராமியப்படையை ஆராமுக்கு அனுப்பினான். ஆராமியப் படையினர் தங்களது எஜமானனிடம் திரும்பச் சென்றார்கள். பறிமுதல் செய்வதற்காக இஸ்ரவேலுக்குள் ஆராமியர்கள் அதற்குமேல் படைகளை அனுப்பவில்லை.
சமாரியாவைப் பஞ்சம் தாக்கிய கொடிய காலம்
24 இதற்குப் பிறகு, ஆராமிய ராஜாவாகிய பெனாதாத்தும் முழுப்படைகளையும் சேர்த்து சமாரியாவைத் தாக்கினான். சமாரியாவைக் கைப்பற்றினான். 25 வீரர்கள் நகருக்குள் உணவு வராதபடி தடுத்து விட்டனர். எனவே சமாரியாவில் பஞ்சமும் பட்டினியும் அதிகரித்தது. அங்கு ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுகளுக்கும், புறாக்களுக்குப் போடும் கால்படி புறா-புழுக்கை ஐந்து வெள்ளி காசுகளுக்கும் மிக மோசமாக விற்கப்பட்டன.
26 ஒரு நாள் இஸ்ரவேல் ராஜா நகரச்சுவரின் மேல் நடந்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் அவனிடம், “எனது ராஜாவாகிய ஆண்டவனே, என்னைக் காப்பாற்றும்!” என்று சத்தமிட்டாள்.
27 அதற்கு ராஜா அவளிடம், “கர்த்தரே உன்னைக் காப்பாற்றாவிட்டால் நான் எவ்வாறு உன்னைக் காப்பாற்றமுடியும்? உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. தூற்றி சுத்தம் செய்த தானியத்திலிருந்து செய்த மாவு அல்லது திராட்சையை நசுக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட திராட்சை ரசம் என எதுவுமில்லை” என்றான் 28 பிறகு ராஜா அவளிடம், “உனது பிரச்சனை என்ன?” என்றான்.
அதற்கு அவள், “நானும் அந்தப் பெண்ணும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். அதன்படி என்னிடம் இவள், ‘நீ உன் குமாரனை தா. நாம் அவனைக் (கொன்று) தின்போம். பிறகு நான் என் குமாரனைத் தருவேன். அவனை நாளைத் தின்னலாம் என்றாள்.’ 29 அதன்படி என் மகனை வேகவைத்து தின்றுவிட்டோம். பிறகு மறுநாள் நான் அவளிடம், ‘எனக்கு உன் மகனைத் தா நாம் அவனைக் கொன்றுத் தின்போம்’ என்றேன். ஆனால் தன் மகனை ஒளித்து வைத்திருக்கிறாள்!” என்றாள்.
30 ராஜா அந்த பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டதும், தன் துக்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். ராஜா சுவர் வழியாகச் செல்லும்பொழுது, ராஜா தனது உடைகளுக்கடியில் சாக்குத்துணியை அணிந்திருந்ததை ஜனங்கள் பார்த்தார்கள். அது ராஜா துக்கமாயிருப்பதைக் காண்பித்தது.
31 ராஜா எலிசாவின் மீது கோபங்கொண்டு, “சாப்பாத்தின் குமாரனான எலிசாவின் தலையானது அவனது உடலில் இன்றைக்கும் தொடர்ந்து இருந்தால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்!” என்றான்.
32 எலிசாவிடம் ராஜா ஒரு தூதுவனை அனுப்பினான். எலிசா தன் வீட்டில் சில மூப்பர்களோடு இருந்தான். தூதுவன் வருமுன் அவன் (எலிசா), “கொலைக்காரனின் குமாரன் (இஸ்ரவேல் ராஜா) என் தலையை வெட்ட ஆட்களை அனுப்பியுள்ளான்! தூதுவன் வருகிறபோது கதவுகளை அடையுங்கள்! அவனுக்கு எதிராக சென்று அவனை வேகமாகப் பிடியுங்கள்! அவனை உள்ளே விடாதீர்கள்! அவனுக்குப் பின்னால் அவனது எஜமானின் காலடி சத்தம் கேட்கிறது!” என்றான்.
33 இவ்வாறு எலிசா மூப்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போதே தூதுவன் வந்தான். அவன், “கர்த்தரிடமிருந்தே இந்த பிரச்சனை வந்துள்ளது. எதற்காக இனி கர்த்தருக்காக காத்திருக்கவேண்டும்?” எனக் கேட்டான்.
7 எலிசா, “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள்! அவர், ‘நாளை இதே நேரத்தில், உணவு பொருட்கள் மிகுதியாகக் கிடைக்கும். அவற்றின் விலை மலிவாக இருக்கும். சமாரியாவின் வாசல் அருகிலுள்ள சந்தையில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் ஒருவனால் வாங்கமுடியும்’ என்று கூறுகிறார்” என்றான்.
2 பிறகு ராஜாவுக்கு நெருக்கமான அதிகாரி தேவ மனிதனை நோக்கி, “கர்த்தர் பரலோகத்திலே ஜன்னல் அமைத்தாலும், இதுபோல் நடக்காது” என்று சொன்னான்.
அதற்கு எலிசா, “உனது கண்களால் காண்பாய். ஆனால் அந்த உணவை நீ உண்ணமாட்டாய்” என்றான்.
ஆராமிய முகாம் காலியானதைக் கண்டுபிடித்த தொழுநோயாளிகள்
3 நகர வாசலருகில் நான்கு தொழு நோயாளிகள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள், “நாம் மரணத்தை எதிர்பார்த்து ஏன் இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறோம்? 4 சமாரியாவில் உண்ண உணவில்லை. நகரத்திற்குள் போனால் நாம் மரித்துப்போவாம். இங்கிருந்தாலும் மரித்துப்போவோம். எனவே ஆராமிய படைக்குச் செல்வோம். அவர்கள் வாழவைத்தால் வாழ்வோம், கொல்ல நினைத்தால் மரித்துப்போவோம்” என்றனர்.
5 எனவே அன்று மாலையில் அவர்கள் ஆராமியர்களின் முகாமிற்கு அருகில் சென்றார்கள். முகாமின் விளிம்புவரைக்கும் சென்றார்கள். அங்கு யாருமே இல்லை எனக் கண்டார்கள்! 6 ஆராமிய வீரர்களின் காதுகளில் வீரர்கள், குதிரைகள், இரதங்கள், ஆகியவற்றின் ஓசையைக் கேட்கும்படி கர்த்தர் செய்தார். அவர்கள் தமக்குள், “ஏத்திய மற்றும் எகிப்திய ராஜாக்களின் துணையுடன் இஸ்ரவேல் ராஜா நம்மோடு போர் செய்யவருகிறான்!” என்று பேசிக் கொண்டனர்.
7 அதனால் அவர்கள் (பயந்து) அன்று மாலையே ஓடிவிட்டனர். அப்போது கூடாரங்கள், குதிரைகள், கழுதைகள் முகாமில் உள்ள எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டுத் தம் உயிருக்காக ஓடிவிட்டனர்.
பகை முகாம்களில் தொழுநோயாளிகள்
8 முகாம் தொடங்கும் இடத்திற்கு வந்தடைந்த தொழுநோயாளிகள், காலியாக இருந்த கூடாரத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் நன்றாக உண்டு குடித்தனர். பின் அவர்கள் தங்கம், வெள்ளி, துணி போன்றவற்றை அள்ளிக்கொண்டு வந்தனர். வெளியே கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் இன்னொரு கூடாரத்திற்குள் நுழைந்தனர். அங்குள்ள பொருட்களையும் எடுத்துப் போய் ஒளித்து வைத்தனர். 9 பிறகு அவர்கள் தங்களுக்குள், “நாம் தவறு செய்கிறோம்! இன்று நம்மிடம் நல்ல செய்தி உள்ளது. ஆனால் அமைதியாக இருக்கிறோம். விடியும்வரை இவ்வாறு இருந்தால் தண்டிக்கப்படுவோம். எனவே இப்போது ராஜாவினுடைய வீட்டில் இருக்கிற ஜனங்களிடம் சொல்வோம்” என்று சொல்லிக்கொண்டனர்.
தொழுநோயாளிகள் சொன்ன நற்செய்தி
10 எனவே தொழுநோயாளிகள் வந்து வாயில் காவலரை அழைத்தனர். அவர்களிடம், “நாங்கள் ஆராமியர்களின் முகாமிற்குச் சென்றோம். அங்கே மனிதர்களும் யாரும் இல்லை. குதிரைகளும் கழுதைகளும் கட்டப்பட்டுள்ளன. கூடாரங்களும் அங்கு உள்ளன. ஆனால் மனிதர்கள் யாரும் இல்லை” என்றனர்.
11 பிறகு நகரவாயில் காப்போர்கள் சத்தமிட்டு அரண்மனையில் உள்ளவர்களிடம் சொன்னார்கள். 12 அது இரவு நேரம், ஆனால் ராஜா படுக்கையிலிருந்து எழுந்து தன் அதிகாரிகளிடம், “ஆராமிய வீரர்கள் நமக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று கூறுகிறேன். நமது பட்டினியையும் வறுமையையும் பார்த்து, கூடாரத்தைவிட்டு வயலில் ஒளிந்துக்கொண்டனர். ‘இஸ்ரவேல் ஜனங்கள் நகரத்தைவிட்டு வெளியே வரும்போது உயிரோடு நாம் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம்’ என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ‘அதன் பிறகு நகருக்குள் நுழையலாம்’ என்று இருக்கிறார்கள்” என்று சொன்னான்.
13 ஒரு அதிகாரியோ, “சிலர் 5 குதிரைகளைக் கொண்டுபோக அனுமதி வழங்குங்கள். அவை எப்படியாவது இங்கு மரித்துப் போகும். இவை ஜனங்களைப் போலவே பட்டினியாக உள்ளன. அவற்றை அனுப்பிப் பார்ப்போம்” என்றான்.
14 எனவே ஜனங்கள் இரண்டு இரதங்களைக் குதிரையோடு தயார் செய்தனர். ராஜா அவர்களை ஆராமியப் படையை நோக்கி அனுப்பினான். ராஜா அவர்களிடம், “என்ன நடக்கிறது என்று போய் பாருங்கள்” என்றான்.
15 அவர்கள் ஆராமியர்களைத் தொடர்ந்து யோர்தான் ஆறுவரைக்கும் சென்றார்கள். வழியெல்லாம் ஆடைகளும் ஆயுதங்களும் கிடந்தன. அவை வீரர்கள் ஓடும்போது எறிந்தவை. தூதர்கள் ராஜாவிடம் திரும்பி வந்து இவற்றைக் கூறினார்கள்.
16 பிறகு ஜனங்கள் கூடாரங்களுக்கு ஓடிப் போய் அங்குள்ள பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடிவந்தனர். எனவே இது கர்த்தர் சொன்னது போலானது. ஒருவனால் ஒரு மரக்கால் கோதுமை மாவை ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமையை ஒரு சேக்கலுக்கும் வாங்க முடிந்தது.
17 ராஜாவின் அரச ஆணைப்படி காவலுக்கு நெருக்கமான அதிகாரி வாசலில் இருந்தான். ஜனங்கள் கூடாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அவனைத் தள்ளி மிதித்துவிட்டு ஓடியதால் கொல்லப்பட்டான். ராஜா அவரது வீட்டிற்கு போனபோது, தேவமனிதர் (எலிசா) சொன்னது போலவே எல்லாம் நடந்தது. 18 எலிசா, “சமாரியாவின் நகர வாசலுக்கருகில் உள்ள சந்தையில் ஒருவன் ஒரு மரக்கால் கோதுமை மாவை ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமையை ஒரு சேக்கலுக்கும் வாங்கமுடியும்” என்று சொல்லியிருந்தான். 19 ஆனால் அந்த அதிகாரி அவனுக்கு, “பரலோகத்தின் ஜன்னல்கள் திறந்தாலும் அது சாத்தியமில்லை!” என்று பதில் சொல்ல, எலிசா, “இதனை நீ உன் கண்களால் காண்பாய், ஆனால் அந்த உணவை உன்னால் உண்ண முடியாது” என்றான். 20 அந்த அதிகாரிக்கும் அது அவ்வாறே நடந்தது. ஜனங்கள் நகரவாசலில் அவனைத் தள்ளி, அவன் மீதே நடந்து சென்றார்கள். அவனும் செத்துப்போனான்.
எலிசா சூனேமியப் பெண்ணைப் போகச் சொன்னது
8 எலிசா தன்னால் உயிர்தரப்பட்ட பிள்ளையின் தாயுடன் பேசிக்கொண்டிருந்தான். அவன், “நீயும் உனது குடும்பத்தாரும் இன்னொரு நாட்டிற்குப் போகவேண்டும். ஏனென்றால் கர்த்தர் இங்கு பஞ்ச காலத்தை உருவாக்க தீர்மானித்துள்ளார். இந்நாட்டில் இப்பஞ்சம் ஏழு ஆண்டுகளுக்கு இருக்கும்” என்றான்.
2 எனவே, அப்பெண் தேவமனிதன் சொன்னது போலவே நடந்துகொண்டாள். பெலிஸ்திய நாட்டில் ஏழு ஆண்டுகள் வசிப்பதற்கு அவள் தன் குடும்பத்தோடு சென்றாள். 3 ஏழு ஆண்டுகள் முடிந்ததும் அவள் பெலிஸ்தியர்களின் நிலத்திலிருந்து திரும்பினாள்.
அவள் ராஜாவோடு பேசுவதற்குச் சென்றாள். தனது வீட்டையும் நிலத்தையும் திரும்பப் பெறுவதற்காக முறையிட்டாள்.
4 ராஜா தேவமனிதனுடைய வேலைக்காரனான கேயாசியோடு பேசிக்கொண்டிருந்தான். அவன் எலிசாவின் வேலைக்காரனிடம், “எலிசா செய்த அருஞ்செயல்களையெல்லாம் கூறு” எனக்கேட்டான்.
5 கேயாசி, மரித்துப்போன குழந்தைக்கு எலிசா உயிர் கொடுத்ததைப்பற்றிச் சொன்னான். அப்போது அந்தப் பெண் அங்கு வந்து, தனது வீட்டையும் நிலத்தையும் திரும்பப்பெற உதவவேண்டும் என்று ராஜாவிடம் வேண்டினாள். அவளைக் கண்டதும் கேயாசி, “எனது ஆண்டவனாகிய ஆண்டவனே! இவள் தான் அந்தப்பெண்! இந்தப் பையனுக்குத்தான் எலிசா உயிர்கொடுத்தான்!” என்று கூறினான்.
6 ராஜா அவளது விருப்பத்தை விசாரிக்க அவளும் விளக்கிச் சொன்னாள்.
பிறகு ராஜா ஒரு அதிகாரியை அவளுக்கு உதவுமாறு நியமித்தான். அவனிடம், “இவளுக்குரியவற்றையெல்லாம் இவள் பெறுமாறு செய். இவள் இந்த நாட்டைவிட்டு போன நாள் முதல் இன்றுவரை இவள் நிலத்தில் விளைந்த தானியத்தையும் இவள் பெறுமாறு செய்” என்றான்.
பெனாதாத் ஆசகேலை எலிசாவிடம் அனுப்பினது
7 எலிசா தமஸ்குவுக்குச் சென்றான். ஆராம் தேசத்து ராஜா பெனாதாத் நோயுற்றிருந்தான். ஒருவன் அவனிடம். “தேவமனிதர் (தீர்க்கதரிசி) இங்கே வந்துள்ளார்” என்றான்.
8 பிறகு பெனாதாத் ஆசகேலிடம், “அன்பளிப்போடு போய் தேவமனிதரை (தீர்க்கதரிசி) சந்தி, நான் நோயிலிருந்து குணமடைவேனா என்று அவரை கர்த்தரிடம் கேட்டுக்கொள்ளுமாறு கூறு” என்றான்.
9 எனவே, ஆசகேல் எலிசாவை சந்திக்க சென்றான். தன்னோடு அன்பளிப்பையும் எடுத்துச்சென்றான். தமஸ்குவிலுள்ள சிறந்த பொருட்களையெல்லாம் கொண்டு சென்றான். அவற்றை 40 ஒட்டகங்களில் எடுத்துச் சென்றான். அவன், “உங்கள் தொண்டனான ஆராமின் ராஜாவான பெனாதாத் என்னை உங்களிடம் அனுப்பினார். நோயிலிருந்து தான் குணமாவேனா என்று கேட்கச்சொன்னார்” என்றான்.
10 பிறகு எலிசா ஆசகேலிடம், “போய் பெனாதாத்திடம், ‘நீ நோய் நீங்கிப் பிழைப்பாய்’ என்று கூறு. எனினும், கர்த்தர் ‘அவன் மரித்துப்போவான்’ என்றே கூறுகிறார்” என்றான்.
எலிசா ஆசகேலைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்னது
11 எலிசா ஆசகேலை உற்றுப் பார்த்து பிறகு அழுதான். 12 ஆசகேல் அவனிடம், “ஐயா ஏன் அழுகிறீர்?” என்று கேட்டான்.
அதற்கு எலிசா, “நீ இஸ்ரவேலர்களுக்குச் செய்யப்போகும் தீமைகள் என்னென்ன என்பதை நான் அறிவேன். அதற்காக அழுகிறேன். நீ அவர்களின் கோட்டையுள்ள நகரங்களை எரிப்பாய். நீ வாளால் இளைஞர்களைக் கொல்வாய், குழந்தைகளைக் கொல்வாய், கருவிலுள்ள குழந்தைகளையும் கீறிப்போடுவாய்” என்றான்.
13 ஆசகேல், “நான் வல்லமையுள்ளவன் அல்ல! என்னால் இவ்வளவு பெரிய காரியங்களைச் செய்ய முடியாது!” என்று கூறினான்.
அதற்கு எலிசா, “நீ ஆராம் நாட்டின் ராஜா ஆவாய் என்று கர்த்தர் என்னிடம் காட்டிக்கொண்டிருக்கிறார்” என்றான்.
14 பிறகு ஆசகேல் எலிசாவிடமிருந்து கிளம்பி ராஜாவிடம் போக, அவன் இவனிடம், “எலிசா உன்னிடம் என்ன சொன்னார்?” என்று கேட்டான்.
ஆசகேல், “நீர் பிழைப்பீர் என்று எலிசா சொன்னார்” என்றான்.
ஆசகேல் பெனாதாத்தைக் கொலை செய்கிறான்
15 ஆனால் மறுநாள், ஆசகேல் ஒரு போர்வையை எடுத்து தண்ணீரில் நனைத்து அதனை பெனாதாத்தின் முகத்தில் மூடினான். மூச்சை நிறுத்தினான். பெனாதாத் மரித்துப்போனான். எனவே ஆசகேல் புதிய ராஜா ஆனான்.
யோராம் ஆளத்தொடங்குகிறான்
16 யூதாவில் யோசபாத்தின் குமாரனான யோராம் ராஜாவாக இருந்தான். இவனது ஐந்தாம் ஆட்சியாண்டில் ஆகாபின் குமாரனான யோராம் ராஜாவாக இருந்தபோது அவன் ஆளத் தொடங்கினான். 17 யோராம் ஆளத் துவங்கும்போது அவனுக்கு 32 வயது. எருசலேமில் 8 ஆண்டுகள் ஆண்டான். 18 ஆனால், அவன் இஸ்ரவேலின் ராஜாக்களைப் போன்றே கர்த்தருக்குப் பிடிக்காதப் பாவங்களைச் செய்து வந்தான். அவனது மனைவி ஆகாபின் குமாரத்தியானதால் யோராம் ஆகாபின் குடும்பத்தவர்களைப் போன்றே வாழ்ந்து வந்தான். 19 ஆனால் தன் வேலையாள் தாவீதிற்கு கர்த்தர் சத்தியம் செய்து கொடுத்திருந்ததால் யூதாவை அழிக்கமாட்டார். அவர் ஏற்கெனவே தாவீதின் குடும்பத்தில் உள்ளவனே ராஜாவாக எப்பொழுதும் இருப்பான் என்று ஆணையிட்டுள்ளார்.
20 யோராமின் காலத்தில் யூதாவின் ஆட்சிக்குள்ளிருந்து ஏதோம் கலகம் செய்ததால் உடைந்துவிட்டது, அவர்கள் தங்களுக்குரிய ராஜாவைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
21 அதனால் யோராம் (யூதாவைச் சேர்ந்தவன்) இரதங்களோடு சாயீருக்குப் போனான். அவர்களை ஏதோமிய படை சூழ்ந்தபோது, யோராமும் அவனது தளபதிகளும் ஏதோமியர்களைத் தாக்கினார்கள். யோராமின் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குத் தப்பிச் சென்றார்கள். 22 எனவே ஏதோம் யூதாவின் ஆட்சியிலிருந்து (கலகத்தால்) உடைந்துவிட்டது. இன்றுவரை அவர்கள் சுதந்திரமாகவே உள்ளனர்.
அப்போது, லிப்னாத்தும் யூதாவின் ஆட்சியில் இருந்து பிரிந்தது.
23 யோராம் செய்த மற்ற செயல்களும் அவன் செய்த அனைத்தும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
24 இவன் மரித்தப்போது இவனை தாவீது நகரத்தில் முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். அவனது குமாரன் அகசியா ராஜாவானான்.
அகசியா தனது ஆட்சியைத் தொடங்குகிறான்
25 யோராமின் குமாரனான அகசியா யூதாவின் ராஜாவானான். அப்போது, இஸ்ரவேலில் ஆகாபின் குமாரனான யோராம் 12வது ஆட்சியாண்டில் இருந்தான். 26 அகசியாவிற்கு அவன் ஆளவந்தபோது 22 வயது. ஓராண்டு எருசலேமில் ஆண்டான். அவன் தாயின் பெயர் அத்தாலியாள். அவள் இஸ்ரவேலின் ஓம்ரி ராஜாவின் குமாரத்தி. 27 தவறு என்று கர்த்தர் குறிப்பிட்ட செயல்களையே அவனும் செய்தான். ஆகாபின் குடும்பத்தவர்களைப்போன்றே ஆண்டான். ஏனெனில் அவன் ஆகாபின் மருமகன்.
ஆசகேலுக்கு எதிரான போரில் யோராம் புண்பட்டது
28 யோராம் ஆகாபின் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆராமிய ராஜாவாகிய ஆசகேலோடு ராமோத் கீலேயாத்தில் போரிடுவதற்காக அகசியா யோராமுடன் சென்றான். ராமோத் கீலேயாத்தில் ஆராமியர்கள் யோராமைத் தாக்கிக் காயப்படுத்தினார்கள். 29 ராஜாவாகிய யோராம் இஸ்ரவேலுக்குத் திரும்பித் தன்னைக் காயங்களிலிருந்து குணப்படுத்திக் கொள்ள யெஸ்ரயேல் பகுதிக்குச் சென்றான். யோராமின் குமாரனான அகசியா யூதாவின் ராஜாவாயிருந்தான். அகசியா யோராமைக்காண யெஸ்ரயேலுக்குச் சென்றான்.
2008 by World Bible Translation Center