Beginning
அம்னோனும் தாமாரும்
13 தாவீதுக்கு அப்சலோம் என்னும் பெயருள்ள குமாரன் இருந்தான். அப்சலோமின் சகோதரியின் பெயர் தாமார் ஆகும். தாமார் மிகுந்த அழகுடையவள். தாவீதின் மற்றொரு குமாரனாகிய அம்னோன் 2 தாமாரை விரும்பினான். தாமார் ஒரு கன்னிகை. அவளுக்கு எந்தத் தீமையையும் விளைவிக்க அம்னோன் நினைக்கவில்லை. எனினும் அவன் அவளை அதிகமாக நேசித்தான். நோயுறுமளவிற்கு அம்னோன் அவள் நினைவானான்.
3 சிமியாவின் குமாரனாகிய யோனதாப் அம்னோனின் நெருங்கிய நண்பன். (சிமியா தாவீதின் சகோதரன்) யோனதாப் மிகவும் புத்திசாலி. 4 யோனதாப் அம்னோனை நோக்கி, “நாளுக்கு நாள் நீ மெலிந்துக்கொண்டே வருகிறாய். நீ ராஜாவின் குமாரன்! உனக்கு உண்பதற்கு ஏராளமான பொருட்கள் இருந்தும், நீ ஏன் எடை குறைந்து காணப்படுகிறாய்? சொல்!” என்றான்.
அம்னோன் யோனதாபை நோக்கி, “நான் தாமாரை மிகவும் விரும்புகிறேன். அவள் எனது ஒன்று-விட்ட-சகோதரன் அப்சலோமின் சகோதரி” என்றான்.
5 யோனதாப் அம்னோனை நோக்கி, “படுக்கைக்குப் போ. நோயுற்றவன் போல் நடி. உன் தந்தை உன்னைக் காணவருவார். அவரிடம், ‘எனது சகோதரியாகிய தாமார் வந்து எனக்கு உணவு தரட்டும். அவள் என் முன்னே உணவு சமைக்கட்டும். அப்போது அதை நான் பார்த்து அவள் கையால் புசிப்பேன்’ என்று சொல்” என்றான்.
6 அவ்வாறே அம்னோன் படுக்கையில் படுத்து நோயுற்றவன்போல் நடித்தான். தாவீது ராஜா அம்னோனைப் பார்க்க வந்தான். அம்னோன் தாவீது ராஜாவிடம், “தயவு செய்து எனது சகோதரி தாமாரை உள்ளே வரச்செல்லுங்கள். அவள் என் முன்னே எனக்காக இரண்டு அப்பங்கள் சுட்டுதரட்டும். அப்போது அவள் கையால் ஊட்ட அவற்றை புசிப்பேன்” என்றான்.
7 தாவீது தாமாரின் வீட்டிற்கு ஆட்களை அனுப்பினான். செய்தி சொல்ல வந்த ஆட்கள் தாமாரிடம், “உனது சகோதரன் அம்னோன் வீட்டிற்குச் சென்று அவனுக்காக கொஞ்சம் உணவைத் தயாரித்துக் கொடு” என்றார்கள்.
8 எனவே தாமார் தன் சகோதரனாகிய அம்னோனின் வீட்டிற்குச் சென்றாள். அம்னோன் படுக்கையில் இருந்தான். தாமார் மாவை எடுத்து தன் கைகளால் பிசைந்து, அப்பங்களைச் சுட்டாள். அம்னோன் எதிரிலேயே இதனைச் செய்தாள். 9 சமையல் பாத்திரத்திலிருந்து அவற்றை எடுத்து, அம்னோன் உண்பதற்காகப் பரிமாறினாள். ஆனால் அம்னோன் சாப்பிட மறுத்தான். அம்னோன் தன் வேலையாட்களை நோக்கி, “இங்கிருந்து போங்கள், என்னைத் தனிமையில் இருக்கவிடுங்கள்!” என்றான். எனவே எல்லா வேலையாட்களும் அறையை விட்டு வெளியே சென்றனர்.
அம்னோன் தாமாரைக் கற்பழித்தல்
10 அப்போது அம்னோன் தாமாரிடம், “உணவைப் படுக்கையறைக்குள் கொண்டு வந்து உனது கைகளால் எனக்கு உணவூட்டு” என்றான்.
எனவே தாமார் தான் தயாரித்த அப்பங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரனின் படுக்கையறைக்குள் சென்றாள். 11 அவள் அம்னோனுக்கு அவ்வுணவைக் கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால் அவனோ அவளை கையைப் பிடித்திழுத்து அவளிடம், “சகோதரியே, நீ என்னோடு சேர்ந்து படுத்துக்கொள்” என்றான்.
12 தாமார் அம்னோனிடம், “சகோதரனே, வேண்டாம்! அவ்வாறு செய்ய என்னை வற்புறுத்தாதே! அவமானமான இக்காரியத்தைச் செய்யாதே! இஸ்ரவேலில் இந்த கொடிய காரியம் நடக்கக்கூடாது! 13 நான் எனக்கு நேரும் அவமானத்திலிருந்து ஒருபோதும் மீளமுடியாது. நீ ஒரு பயங்கர குற்றவாளி என்று ஜனங்கள் கவனிப்பார்கள். தயவுசெய்து, ராஜாவோடு பேசு. என்னை நீ மணம் செய்துக்கொள்ள அவர் அனுமதியளிப்பார்” என்றாள்.
14 ஆனால் அம்னோன், தாமார் சொன்னதைக் கேட்க மறுத்தான். அவன் தாமாரைக் காட்டிலும் பலசாலி. அம்னோன் தாமாரை பாலின உறவுகொள்ளும்படி கட்டாயப்படுத்தி அவளை பலவந்தமாய் கற்பழித்தான். 15 பின்பு அம்னோன் தாமாரை வெறுக்க ஆரம்பித்தான். அவளை முன்பு விரும்பினதற்கு அதிகமாக அவளை வெறுக்க ஆரம்பித்தான். அம்னோன் தாமாரை நோக்கி, “எழுந்து இங்கிருந்து போ!” என்றான்.
16 தாமார் அம்னோனிடம், “இப்படி என்னை அனுப்பிவிடாதே. முன்பு நிகழ்ந்ததைக் காட்டிலும் அது தீமையானதாக இருக்கும்” என்றாள்.
ஆனால் அம்னோன், தாமார் சொல்வதைக் கேட்க மறுத்தான். 17 அம்னோன் தன் வேலையாளை அழைத்து, “இப்பெண்ணை இந்த அறைக்கு வெளியே கொண்டு செல்லுங்கள். பின்பு அவளுக்குப் பிறகு கதவை தாழ்ப்பாளிடுங்கள்” என்றான்.
18 அவ்வாறே அம்னோனின் வேலைக்காரன் தாமாரை அறைக்கு வெளியே நடத்தி, கதவைத் தாழிட்டான்.
தாமார் பலநிறங்களுள்ள ஒரு நீண்ட அங்கி அணிந்திருந்தாள். ராஜாவின் கன்னிப் பெண்கள் (குமாரத்திகள்) இத்தகைய நீண்ட பலவர்ண அங்கி அணிவது வழக்கமாக இருந்தது. 19 தாமார் பலவர்ண அங்கியைக் கிழித்துக்கொண்டு, தலையின் மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டாள். பின் அவள் தனது கையைத் தலையில் வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
20 அப்போது தாமாரின் சகோதரன் அப்சலோம் அவளை நோக்கி, “நீ உனது சகோதரன் அம்னோனிடம் சென்றாயா? அவன் உன்னைத் துன்புறுத்தினானா? அமைதியாக இரு, அம்னோன் உனது சகோதரன். நாங்கள் இது குறித்து கவனித்துக்கொள்வோம். அதிகமாக உன் மனதை வருத்தாதே” என்றான். தாமார் எதுவும் சொல்லவில்லை. அவள் அமைதியாக அப்சலோமின் வீட்டில் தங்கும்படி சென்றாள்.
21 தாவீது ராஜா இச்செய்தியைக் கேள்விப்பட்டான். அவன் மிகவும் கோபப்பட்டான். 22 அப்சலோம் அம்னோனை வெறுத்தான். அப்சலோம் அம்னோனிடம் நல்லதோ கெட்டதோ ஒரு வார்த்தையும் பேசவில்லை, தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்ததால், அப்சலோம் அம்னோனை வெறுத்தான்.
அப்சலோம் பழிவாங்குதல்
23 இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அப்சலோமின் ஆடுகளிலிருந்து உரோமத்தைக் கத்தரிக்க பாகால்சோரிலிருந்து சிலரை வரவழைத்தான். அதைப் பார்ப்பதற்கென்று ராஜாவின் எல்லாப் பிள்ளைகளையும் அப்சலோம் அழைத்தான். 24 அப்சலோம் ராஜாவிடம் போய், “எனது ஆடுகளின் மயிரைக் கத்தரிக்க சிலர் வந்துள்ளனர். உங்கள் வேலையாட்களோடும் வந்து அதைப் பாருங்கள்” என்றான்.
25 தாவீது ராஜா அப்சலோமிடம், “இல்லை மகனே, நாங்கள் எல்லோரும் வரமாட்டோம். உனக்கு அதிகம் தொல்லையாக இருக்கும்” என்றான்.
தாவீதை வரும்படி அப்சலோம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். ஆனால் தாவீது வரவில்லை, ஆனாலும் தன் ஆசிகளை அவனுக்கு வழங்கினான்.
26 அப்சலோம், “நீங்கள் வர விரும்பாவிட்டால் எனது சகோதரன் அம்னோனை என்னோடு அனுப்புங்கள்” என்றான்.
தாவீது ராஜா அப்சலோமிடம், “அவன் ஏன் உன்னோடு வரவேண்டும்?” என்று கேட்டான்.
27 அப்சலோம் தாவீதை கெஞ்சி, கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தான். எனவே இறுதியாக, அம்னோனும், ராஜாவின் மற்ற குமாரர்களும் அப்சலோமோடு சென்றனர்.
அம்னோன் கொலைச் செய்யப்படுகிறான்
28 பின்பு, அப்சலோம் தன் வேலையாட்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டான். “அம்னோனை கவனித்துக்கொண்டிருங்கள். அவன் குடிக்க ஆரம்பித்து திராட்சைரசப் போதையில் ஆழ்ந்திருக்கும்போது, நான் உங்களுக்குக் கட்டளையிடுவேன். நீங்கள் அம்னோனைத் தாக்கி அவனைக் கொல்லுங்கள். தண்டனை நேரும் என்று அஞ்சாதீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எனது கட்டளைக்குப் பணிகிறீர்கள். இப்போது, துணிவும் வீரமும் உடையவர்களாய் இருங்கள்” என்றான்.
29 ஆகையால் அப்சலோமின் இளம் வீரர்கள் அவன் கூறியபடியே செய்தார்கள். அவர்கள் அம்னோனைக் கொன்றார்கள். ஆனால் தாவீதின் பிற குமாரர்கள் தப்பிப் பிழைத்தார்கள். ஒவ்வொரு குமாரனும் தன் கோவேறு கழுதையின் மேலேறித் தப்பிச் சென்றான்.
தாவீதுக்கு அம்னோனின் மரணச் செய்தி
30 ராஜாவின் குமாரர்கள் தங்கள் நகரத்தை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தனர். ஆனால் நிகழ்ந்தவற்றைப் பற்றிய செய்தியை தாவீது ராஜா முந்திக் கேள்விப்பட்டான். ஆனால் அவனறிந்தச் செய்தி, “ராஜாவின் எல்லா குமாரர்களையும் அப்சலோம் கொன்றுவிட்டான். ஒருவன் கூட உயிரோடு விடப்படவில்லை” என்பதாகும்.
31 தாவீது ராஜா தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு தரையில் கிடந்தான். அவனருகே நின்றுக்கொண்டிருந்த அதிகாரிகளும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர்.
32 ஆனால் தாவீதின் சகோதரனும், சிமியாவின் மகனுமாகிய யோனதாப், “ராஜாவின் எல்லா குமாரர்களும் கொல்லப்பட்டார்கள் என்று நினைக்கவேண்டாம்! அம்னோன் மட்டுமே மரித்தான். அப்சலோமின் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்ததிலிருந்து அப்சலோம் இதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். 33 எனது ஆண்டவனாகிய ராஜாவே, உங்கள் எல்லா குமாரர்களும் மரித்துவிட்டனர் என்று நினைக்கவேண்டாம். அம்னோன் மட்டுமே மரித்தான்” என்றான்.
34 அப்சலோம் ஓடிப்போய்விட்டான். நகரகோட்டைச் சுவரின் மீது ஒரு காவலாள் நின்றுக்கொண்டிருந்தான். மலை மேட்டிலிருந்து பலர் வந்துக்கொண்டிருப்பதை அவன் கவனித்தான். 35 எனவே யோனதாப் தாவீது ராஜாவை நோக்கி, “பாருங்கள், நான் சொன்னது சரியே! ராஜாவின் குமாரர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான்.
36 யோனதாப் அவ்வாறு கூறி முடித்ததும், ராஜாவின் குமாரர்கள் வந்து சேந்தனர். அவர்கள் சத்தமாக அழுதுக்கொண்டிருந்தனர். தாவீதும் அவனது அதிகாரிகளும் அழ ஆரம்பித்தனர். அவர்கள் மிகவும் புலம்பி அழுதனர். 37 தாவீது தனது மகனுக்காக (அம்னோனுக்காக) தினசரி அழுதான்.
அப்சலோம் கேசூருக்குத் தப்பிச் செல்லுதல்
அப்சலோம் அம்மியூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவிடம் ஓடிப் போனான். 38 அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போன பிறகு, அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான். 39 தாவீது ராஜா அம்னோனின் மரணத்திற்குப் பின், ஆறுதல் பெற்றான். ஆனால் அப்சலோமின் பிரிவு அவனை மிகவும் வாட்டியது.
யோவாப் புத்திசாலியான ஒரு பெண்ணை தாவீதிடம் அனுப்புகிறான்
14 தாவீது ராஜா அப்சலோமின் பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்துவதை செருயாவின் குமாரனாகிய யோவாப் அறிந்தான். 2 எனவே, யோவாப் சிலரைத் தெக்கோவாவிற்கு அனுப்பி, அங்கிருந்து புத்திசாலியான ஒரு பெண்ணை அழைத்து வருமாறு கூறினான். யோவாப் அந்தப் பெண்ணிடம், “மிகவும் துக்கமாயிருக்கிறவளைப்போல் காண்பித்துக்கொள். துக்கத்திற்கு அறிகுறியான ஆடைகளை அணிந்துக்கொள். நல்ல ஆடைகளை அணியாதே. மரித்த ஒருவருக்காக பல நாட்கள் வருந்துகிற ஒருவளைப் போல் நடி. 3 ராஜாவிடம் போய் நான் உனக்குச் சொல்லித்தரும் சொற்களைப் பயன்படுத்திப் பேசு” என்றான். பின்பு யோவாப் அப்பெண்ணுக்கு அவள் கூற வேண்டியவற்றைச் சொல்லிக்கொடுத்தான்.
4 பின்பு தெக்கோவாவைச் சேர்ந்த அப்பெண் ராஜாவிடம் பேசினாள். அவள் தரையில் விழுந்து முகம் நிலத்தைத் தொடும்படி வணங்கினாள். அவள் குனிந்து, “ராஜாவே, எனக்கு உதவுங்கள்!” என்றாள்.
5 தாவீது ராஜா அவளிடம், “உனக்கு நேர்ந்த பிரச்சனை என்ன?” என்று கேட்டான்.
அப்பெண், “நான் ஒரு விதவை எனது கணவன் மரித்துப்போனான். 6 எனக்கு இரண்டு குமாரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் களத்தில் போரிட்டனர். ஒருவரும் அவர்கள் சண்டையைச் சென்று நிறுத்தவில்லை. ஒருவன் மற்றவனைக் கொன்றுவிட்டான். 7 இப்போது எனது குடும்பத்தார் எனக்கு விரோதிகளாயிருக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கி, ‘சகோதரனைக் கொன்ற உனது குமாரனை அழைத்து வா, நாங்கள் அவனைக் கொல்லவேண்டும். ஏனெனில் அவன் தனது சகோதரனைக் கொன்றிருக்கிறான்’ என்றனர். எனது குமாரன் நெருப்பில் மீந்திருக்கும் கடைசி கரிநெருப்பைப் போன்றவன். அவன் மரித்தால் எங்கள் குடும்ப விளக்கு அணைந்துவிடும். தந்தையின் சொத்தை சுதந்தரிக்கும்படி பிழைத்திருக்கும் ஒரே குமாரன் அவனே. அவன் மரித்தால் மரித்துப்போன எனது கணவனின் சொத்துக்கள் வேறொருவருக்குச் சொந்தமாகும். அவனது பெயரும் தேசத்தில் இல்லாதபடி அழிந்துப்போகும்” என்றாள்.
8 அப்போது ராஜா அப்பெண்ணை நோக்கி, “வீட்டிற்குப் போ. நான் உன் காரியங்களைக் கவனிப்பேன்” என்றான்.
9 தெக்கோவாவின் பெண் ராஜாவை நோக்கி, “பழி என் மீது இருக்கட்டும். எனது ஆண்டவனாகிய ராஜாவே! நீர் குற்றமற்றவர் உமது சிங்காசனமும் குற்றமற்றது” என்றாள்.
10 தாவீது ராஜா, “யாரேனும் உன் மீது தீயவற்றைக் கூறினால் அவனை என்னிடம் அழைத்து வா. அவன் உன்னை மீண்டும் தொல்லைப்படுத்தமாட்டான்” என்றான்.
11 அந்தப் பெண், “தயவு செய்து, உமது தேவனாகிய கர்த்தருடைய பெயரால் ஆணையிட்டு நீங்கள் அந்த ஜனங்களைத் தடுப்பதாக எனக்கு வாக்களியுங்கள். தனது சகோதரனைக் கொலைச் செய்ததற்காக அவர்கள் எனது குமாரனைத் தண்டிக்க விரும்புகிறார்கள். அவர்கள் என் குமாரனை அழிக்காதபடி நீர் பாதுகாப்பீராக எனக்கு வாக்கு கொடும்” என்றாள்.
தாவீது, “கர்த்தர் உயிரோடிருப்பது போலவே, யாரும் உன் குமாரனைத் தாக்கமாட்டார்கள். உன் குமாரனின் தலையிலிருந்து ஒரு முடிகூட நிலத்தில் விழாது” என்றான்.
12 அப்பெண், “எனது ராஜாவாகிய ஆண்டவனே, தயவுசெய்து நான் வேறு சிலவற்றை உம்மிடம் பேச அனுமதியும்” என்றாள்.
ராஜா, “சொல்” என்றான்.
13 அப்போது அப்பெண், “தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக ஏன் இவ்வாறு திட்டமிடுகிறீர்? இவ்வாறு சொல்லும்போது நீரே குற்றவாளியென்பதைக் காட்டிவிடுகிறீர். ஏனெனில் உமது வீட்டிலிருந்து போகும்படி செய்த உமது குமாரனை வீட்டிற்குத் திரும்ப அழைத்துவரவில்லை. 14 நாம் எல்லோரும் ஒரு நாள் மரிப்போம். நாம் நிலத்தில் சிந்திய தண்ணீரைப் போன்றவர்கள். யாரும் அத்தண்ணீரை நிலத்திலிருந்து மீண்டும் சேகரிக்க முடியாது. தேவன் மக்களை மன்னிப்பாரென்று உமக்குத் தெரியும். பாதுகாப்பான இடத்திற்கு விரட்டப்பட்ட ஜனங்களுக்காக தேவன் திட்டம் வகுத்திருக்கிறார். தேவன் தம்மிடமிருந்து ஓடிப் போகும்படி அவர்களை வற்புறுத்தமாட்டார். 15 எனது ஆண்டவராகிய ராஜாவே, நான் இவ்வார்த்தைகளை உம்மிடம் கூற வந்தேன். ஏனெனில் ஜனங்கள் என்னைப் பயமுறுத்தினர். நான் எனக்குள் சொல்லியதாவது, ‘நான் ராஜாவிடம் பேசுவேன். ராஜா ஒருவேளை எனக்கு உதவலாம். 16 ராஜா நான் சொல்வதைக் கேட்டு, என்னையும் எனது குமாரனையும் கொல்ல விரும்பும் மனிதனிடமிருந்து காப்பாற்றுவார். அம்மனிதன் தேவன் எங்களுக்குக் கொடுத்த பொருட்களைப் பெறாதபடி செய்கிறான்.’ 17 எனது ராஜாவாகிய ஆண்டவனின் வார்த்தைகள் எனக்கு ஆறுதலளிக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நீங்கள் தேவனிடமிருந்து வந்த தூதனைப் போன்றவர். நல்லது எது, கெட்டது எது என்பது உமக்குத் தெரியும். தேவனாகிய கர்த்தர் உம்மோடு இருக்கிறார்” என்றாள்.
18 தாவீது ராஜா அந்த பெண்ணிற்கு உத்தரவாக, “நான் கேட்கவிருக்கும் கேள்விக்கு நீ பதில் சொல்ல வேண்டும்” என்றான். அப்பெண், “எனது ராஜாவாகிய ஆண்டவனே, தயவுசெய்து உங்கள் வினாவை சொல்லுங்கள்” என்றாள்.
19 ராஜா, “இவற்றையெல்லாம் சொல்வதற்கு யோவாப் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டான்.
அப்பெண் பதிலாக, “எனது ராஜாவாகிய ஆண்டவனே, நீங்கள் உயிரோடிருக்குமளவிற்கு நீங்கள் சரியானவர்! உங்கள் அதிகாரியாகிய யோவாப் என்னிடம் இவற்றையெல்லாம் கூறும்படிச் சொன்னார். 20 நடந்த காரியங்களை நீர் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்காக யோவாப் இவற்றைச் செய்தார். என் ஆண்டவனே, நீர் தேவதூதனைப் போன்ற ஞானம் உள்ளவர்! உமக்கு இப்பூமியில் நடப்பவையெல்லாம் தெரியும்” என்றாள்.
அப்சலோம் எருசலேம் திரும்புதல்
21 ராஜா யோவாபை நோக்கி, “இதோ, நான் வாக்களித்தபடியே செய்வேன். போய் இளைஞனாகிய அப்சலோமை இப்போதே அழைத்து வாருங்கள்” என்றான்.
22 யோவாப் முகங்குப்புற விழுந்து வணங்கினான். அவன் தாவீது ராஜாவை வாழ்த்தியபடியே, “நீங்கள் என்னிடம் கருணைக் காட்டுகிறீர்கள் என்பதை இன்று அறிகிறேன். நான் கேட்டதை நீர் நிறைவேற்றுகிறபடியால் அதை நான் அறிகிறேன்” என்றான்.
23 பின்பு யோவாப் எழுந்து கேசூருக்குப் போய் அப்சலோமை எருசலேமுக்கு அழைத்து வந்தான். 24 ஆனால் தாவீது ராஜா, “அப்சலோம் தனது வீட்டிற்குப் போகலாம். ஆனால் அவன் என்னைப் பார்க்க வரமுடியாது” என்றான். எனவே அப்சலோம் தனது வீட்டிற்குப் போனான். அப்சலோம் ராஜாவைப் பார்க்கபோக முடியவில்லை.
25 அப்சலோமின் அழகைக்கண்ட ஜனங்கள் வியந்தனர். இஸ்ரவேலில் ஒருவனும் அப்சலோமைப்போல் அழகுடையவனாக இருக்கவில்லை. தலையிலிருந்து பாதம்வரைக்கும், அவனது உடம்பில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது. 26 ஒவ்வோராண்டின் இறுதியிலும் அப்சலோம் தனது தலையைச் சிரைத்துக்கொண்டான். அவன் சிரைத்தப் பின் தலைமயிரை எடுத்து, நிறுத்துப்பார்த்தான். அது 5 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. 27 அப்சலோமுக்கு மூன்று குமாரர்களும் ஒரு குமாரத்தியும் இருந்தனர். இந்த குமாரத்தியின் பெயர் தாமார். தாமார் ஒரு அழகிய பெண்மணி.
யோவாபுக்கு அப்சலோம் தன்னை வந்து பார்க்குமாறு வற்புறுத்தல்
28 அப்சலோம் இரண்டு ஆண்டுகள் வரை தாவீது ராஜாவைப் பார்க்க அனுமதியின்றி எருசலேமில் வாழ்ந்தான். 29 அப்சலோம் யோவாபிடம் ஆட்களை அனுப்பினான். அவர்கள் யோவாபிடம் அப்சலோமை ராஜாவிடம் அனுப்புமாறு கூறினார்கள். ஆனால் யோவாப் அப்சலோமிடம் வரவில்லை. இரண்டாவது முறையும் அப்சலோம் ஒரு செய்தியை அனுப்பினான். ஆனால் யோவாப் இம்முறையும் மறுத்தான்.
30 அப்போது அப்சலோம் தனது வேலையாட்களிடம், “பாருங்கள், யோவாபின் வயல் எனது வயலுக்கு அருகிலுள்ளது. அவனது வயலில் பார்லியைப் பயிரிட்டிருக்கிறான். போய் அந்த பார்லி பயிரை எரித்துவிடுங்கள்” என்றான்.
எனவே அப்சலோமின் வேலையாட்கள் போய் யோவாபின் வயலுக்கு நெருப்புமூட்டினர். 31 யோவாப் புறப்பட்டு அப்சலோமின் வீட்டிற்கு வந்தான். யோவாப் அப்சலோமிடம், “உன் வேலையாட்கள் எதற்காக என் வயலைக் கொளுத்தினர்?” என்று கேட்டான்.
32 அப்சலோம் யோவாபிடம், “நான் உனக்குச் செய்தி சொல்லியனுப்பினேன். நான் உன்னை இங்கு வருமாறு அழைத்தேன். உன்னை ராஜாவிடம் அனுப்ப விரும்பினேன். கேசூரிலிருந்து என்னை இங்கு ஏன் வரவழைத்தார் என்று எனக்காக நீ அவரைக் கேட்க வேண்டும். நான் அவரை நேரில் பார்க்கமுடியாது, எனவே நான் கேசூரில் தங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இப்போது நான் போய் ராஜாவைக் காணவிடுங்கள். நான் பாவம் செய்திருந்தால் அவர் என்னைக் கொல்லட்டும்!” என்றான்.
அப்சலோம் தாவீது ராஜாவை சந்தித்தல்
33 பின்பு யோவாப் ராஜாவிடம் வந்து அப்சலோமின் வார்த்தைகளைக் கூறினான். ராஜா அப்சலோமை வரவழைத்தான். அப்போது அப்சலோம் ராஜாவிடம் வந்தான். அப்சலோம் ராஜாவுக்கு முன்பு தரையில் விழுந்து வணங்கினான். ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.
அப்சலோம் பல நண்பர்களை கூட்டுதல்
15 இதற்குப் பின்பு அப்சலோம் ஒரு தேரையும், குதிரைகளையும் தனக்காக பெற்றுக்கொண்டான். அவன் தேரைச் செலுத்தும்போது அவனுக்கு முன்னே ஓடுவதற்கு 50 ஆட்கள் இருந்தனர். 2 அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாசலருகே[a] நின்று, நியாயத்திற்காக தாவீது ராஜாவிடம் செல்லும் ஆட்களைக் கவனிப்பான். பின்பு அவர்களோடு பேசி, “எந்த நகரத்திலிருந்து வருகிறாய்?” என்பான். அம்மனிதன், “நான் இஸ்ரவேலின் இந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்” என்று கூறுவான். 3 அப்சலோம் அம்மனிதனிடம், “பாரும், நீ சொல்வது சரியே. ஆனால் தாவீது ராஜா நீ சொல்வதைக் கேட்கமாட்டார்” என்பான்.
4 அப்சலோம் மேலும், “யாராகிலும் என்னை இந்நாட்டின் நீதிபதியாக நியமித்தால் சிக்கலோடு வருகிற ஒவ்வொரு மனிதனுக்கும் நான் உதவக் கூடும். அவனுக்குத் தக்க தீர்ப்பு கிடைப்பதற்கு நான் உதவுவேன்” என்பான்.
5 எவனாகிலும் அப்சலோமிடம் வந்து அவனை வணங்கியதும் அப்சலோம் அவனை நெருங்கிய நண்பனாக எண்ணி நடத்துவான். அப்சலோம் கையை நீட்டி, அவனைத் தொட்டு, முத்தமிடுவான். 6 தாவீது ராஜாவிடம் நீதி வேண்டி வந்த எல்லா இஸ்ரவேலருக்கும் அவ்வாறே செய்தான். அதனால் இஸ்ரவேலருடைய இருதயங்களைக் கவர்ந்துக்கொண்டான்.
தாவீதின் அரசைப் பெற அப்சலோம் திட்டம்
7 நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு[b] அப்சலோம், ராஜா தாவீதிடம், “எப்ரோனில் கர்த்தருக்கு நான் கொடுத்த விசேஷ வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு போகிறேன். 8 ஆராமிலுள்ள கேசூரில் வாழ்ந்து கொண்டிருக்கையில் அந்த வாக்குறுதியை நான் செய்தேன்: ‘என்னை கர்த்தர் எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவந்தால் நான் கர்த்தருக்கு சேவைச் செய்வேன்’ என்றேன்” என்றான்.
9 தாவீது ராஜா, “சமாதானமாகப் போ” என்றான்.
அப்சலோம் எப்ரோனுக்குப் போனான். 10 ஆனால் அப்சலோம் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்கள் மூலமாகவும் உளவாளிகளை அனுப்பினான். இந்த உளவாளிகள் ஜனங்களிடம், “நீங்கள் எக்காளம் முழங்கியதும், ‘அப்சலோம் எப்ரோனின் ராஜா ஆனான்’ என்று கூறுங்கள்!” என்றான்.
11 அப்சலோம் தன்னோடு வர 200 பேரை அழைத்தான். அவர்கள் எருசலேமிலிருந்து அவனோடு புறப்பட்டனர். ஆனால் அப்சலோமின் திட்டத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. 12 அகித்தோப்பேல் தாவீதுக்கு ஆலோசனை வழங்குபவர்களில் ஒருவன். அவன் கீலோ என்னும் ஊரைச் சேர்ந்தவன். அப்சலோம் பலிகளைச் செலுத்தும் போது அகித்தோப்பேலை நகரத்திலிருந்து (கீலோவிலிருந்து) வருமாறு கூறினான். அப்சலோமின் திட்டங்கள் சரிவர நிறைவேறிக்கொண்டிருந்தன. ஜனங்களில் பலர் அவனுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர்.
அப்சலோமின் திட்டங்களை தாவீது அறிகிறான்
13 ஒரு மனிதன் தாவீதிடம் அச்செய்தியைச் சொல்ல வந்தான். அவன், “இஸ்ரவேல் ஜனங்கள் அப்சலோமைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்” என்றான்.
14 அப்போது தாவீது எருசலேமில் தன்னோடிருந்த அதிகாரிகளை நோக்கி, “நாம் தப்பித்து விட வேண்டும். நாம் தப்பிக்காவிட்டால் அப்சலோம் நம்மை விட்டுவிடமாட்டான். அப்சலோம் நம்மைப் பிடிக்கும் முன்னர் விரைவாய் செயல்படுவோம். அவன் நம் எல்லோரையும் அழிப்பான், அவன் எருசலேம் ஜனங்களை அழிப்பான்” என்றான்.
15 ராஜாவின் அதிகாரிகள் அவனை நோக்கி, “நீங்கள் சொல்கின்றபடியே நாங்கள் செய்வோம்” என்றார்கள்.
தாவீதும் அவன் ஆட்களும் தப்பித்தனர்
16 தாவீது தன் வீட்டிலிருந்த எல்லோரோடும் வெளியேறினான். தன் பத்து மனைவியரையும் வீட்டைக் கவனித்துக்கொள்வதற்கு விட்டுச் சென்றான். 17 எல்லா ஜனங்களும் பின் தொடர்ந்து வர ராஜா வெளியேறினான். கடைசி வீட்டினருகே சற்று நின்றார்கள். 18 தன் அதிகாரிகள் எல்லோரும் ராஜா அருகே நடந்தனர். கிரேத்தியர், பிலேத்தியர், கித்தியர், (காத்திலிருந்து வந்த 600 பேர்) எல்லோரும் அருகே நடந்தார்கள்.
19 அப்போது ராஜா கித்தியனாகிய ஈத்தாயிடம், “நீ ஏன் எங்களோடு வந்துக் கொண்டிருக்கிறாய்? திரும்பிச் சென்று புதிய ராஜாவோடு (அப்சலோமோடு) தங்கியிரு. நீ ஒரு அந்நியன். இது உன் சொந்த தேசம் அல்ல. 20 நேற்றுதான் நீ என்னோடு சேர்வதற்கு வந்தாய். நான் எங்கே செல்கிறேன் என்று தெரியாதபொழுது, உன்னையும் அலைந்து திரிய என்னோடு அழைத்துச் செல்லவேண்டுமா? வேண்டாம். திரும்பிப் போ. உனது சகோதரர்களையும் உன்னோடு அழைத்துச் செல். உனக்கு இரக்கமும் உண்மையும் காட்டப்படட்டும்” என்றான்.
21 ஆனால் ஈத்தாய் ராஜாவுக்குப் பதிலாக, “கர்த்தர் உயிரோடிருப்பதைப்போல நீங்கள் வாழும் காலம் வரைக்கும் நான் உங்களோடு இருப்பேன். வாழ்விலும், மரணத்திலும் நான் உங்களோடு இருப்பேன்!” என்றான்.
22 தாவீது ஈத்தாயை பார்த்து, “வா, நாம் கீதரோன் ஆற்றைக் கடக்கலாம்” என்றான்.
எனவே காத் நகரிலிருந்து வந்த ஈத்தாயும் அவனுடைய எல்லா ஜனங்களும் அவர்களுடைய குழந்தைகளும் கீதரோன் ஆற்றைக் கடந்தார்கள். 23 எல்லா ஜனங்களும் சத்தமாய் அழுதார்கள். தாவீது ராஜாவும் கீதரோன் ஆற்றைக் கடந்தான். ஜனங்கள் பாலைவனத்திற்குச் சென்றார்கள். 24 சாதோக்கும் லேவியரும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து சென்றார்கள். அவர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைக் கீழே வைத்தார்கள். எருசலேமை விட்டு எல்லா ஜனங்களும் வெளியேறும் வரைக்கும் அபியத்தார் ஜெபம் செய்துக் கொண்டிருந்தான்.
25 தாவீது ராஜா சாதோக்கிடம், “தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குத் திரும்பவும் கொண்டு போ. கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டினால் என்னைத் திரும்பவும் வரவழைத்துக்கொள்வார். கர்த்தர் எருசலேமையும் அவருடைய ஆலயத்தையும் பார்ப்பதற்கு எனக்கு உதவுவார். 26 கர்த்தர் என்னிடம் கருணை காட்டவில்லை என்பாராயின், அவர் விரும்புகிற எதையும் எனக்குச் செய்யட்டும்” என்றான்.
27 ராஜா ஆசாரியனாகிய சாதோக்கைப் பார்த்து, “நீ தீர்க்கதரிசி அல்லவா? நகரத்திற்குச் சமாதானத்தோடு திரும்பிப் போ. உன் குமாரனாகிய அகிமாசையும் அபியத்தாரின் குமாரன் யோனத்தானையும் உன்னோடு அழைத்துப் போ. 28 ஜனங்கள் பாலைவனத்திற்குள் கடந்து செல்லும் இடங்களில் நான் காத்திருப்பேன். உங்களிடமிருந்து செய்தி எனக்குக் கிடைக்கும் வரைக்கும் நான் காத்திருப்பேன்” என்றான்.
29 எனவே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பரிசுத்த பெட்டியை எருசலேமுக்கு எடுத்துச் சென்று அங்கே தங்கினார்கள்.
அகித்தோப்பேலுக்கு எதிராக தாவீதின் ஜெபம்
30 தாவீது ஒலிவமலைக்குப் போனான். அழுதுக் கொண்டிருந்தான். அவன் தலையை மூடிக்கொண்டு, கால்களில் மிதியடி இல்லாமல் நடந்தான். தாவீதோடிருந்த எல்லா ஜனங்களும் அவர்களுடைய தலைகளை மூடிக்கொண்டனர். அவர்கள் அழுதபடியே, தாவீதோடு சென்றனர்.
31 ஒருவன் தாவீதிடம், “அப்சலோமோடு திட்டமிட்டவர்களில் அகித்தோப்பேலும் ஒருவன்” என்றான். அப்போது தாவீது, “கர்த்தாவே நீர் அகித்தோப்பேலின் உபதேசம் பயனற்றவையாக இருக்கும்படி செய்யும்” என்று ஜெபம் செய்தான். 32 தாவீது மலையின் உச்சிக்கு வந்தான். இங்கு அவன் அடிக்கடி தேவனை தொழுதுகொள்ள வந்திருக்கின்றான். அப்போது அற்கியனாகிய ஊசாய் அவனிடம் வந்தான். அவன் அங்கி கிழிந்திருந்தது. தலையில் புழுதி இருந்தது.
33 தாவீது ஊசாய்க்கு, “நீ என்னோடு வந்தால் எனக்குப் பாரமாவாய். 34 ஆனால் நீ எருசலேமுக்குத் திரும்பிப் போனால் அகித்தோப்பேலின் அறிவுரை பயனற்றுப் போகும்படி நீ செய்யலாம். அப்சலோமிடம், ‘ராஜாவே, நான் உங்கள் பணியாள். நான் உங்கள் தந்தைக்கு சேவை செய்தேன். இப்போது உங்களுக்கு சேவை செய்வேன்’ என்று கூறு. 35 ஆசாரியர்களான சாதோக்கும், அபியத்தாரும் உன்னோடு இருப்பார்கள். நீ அரண்மனையில் கேட்கும் செய்திகளை அவர்களிடம் சொல்லவேண்டும். 36 சாதோக்கின் குமாரன் அகிமாசும் அபியத்தாரின் குமாரன் யோனத்தானும் அவர்களோடிருப்பார்கள். அவர்கள் மூலமாக உனக்குத் தெரியவரும் செய்திகளை எனக்கு அனுப்பு” என்றான்.
37 தாவீதின் நண்பனாகிய ஊசாய் நகரத்திற்குப் போனான். அப்சலோம் எருசலேமுக்கு வந்தான்.
2008 by World Bible Translation Center