Book of Common Prayer
97 கர்த்தர் ஆளுகிறார், பூமி மகிழும்.
தூரத்துத் தேசங்கள் எல்லாம் மகிழ்கின்றன.
2 அடர்ந்த இருண்ட மேகங்கள் கர்த்தரைச் சூழும்.
நன்மையும் நீதியும் அவர் அரசை வலிமையாக்கும்.
3 கர்த்தருக்கு முன்னே ஒரு அக்கினி செல்கிறது,
அது பகைவரை அழிக்கிறது.
4 வானத்தில் அவரது மின்னல் மின்னுகிறது.
ஜனங்கள் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
5 கர்த்தருக்கு முன்பு மலைகள் மெழுகு போல உருகும்.
பூமியின் ஆண்டவருக்கு முன்பாக அவை உருகும்.
6 வானங்களே, அவரது நன்மையைக் கூறுங்கள்!
ஒவ்வொருவரும் தேவனுடைய மகிமையைக் காணட்டும்!
7 ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுதுகொள்கிறார்கள்.
அவர்கள் தங்கள் “தெய்வங்களைப்” பற்றிப் பெருமைப்படுகிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள்.
அவர்கள் “தெய்வங்கள்” குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள்.
8 சீயோனே, செவிக்கொடுத்து மகிழ்வாயாக!
யூதாவின் நகரங்களே, மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்!
ஏனெனில் கர்த்தர் ஞானமுள்ள முடிவுகளை எடுக்கிறார்.
9 மகா உன்னதமான தேவனே, மெய்யாகவே நீரே பூமியின் ராஜா.
பிற தெய்வங்களைக் காட்டிலும் நீர் மகத்துவமுள்ளவர்.
10 கர்த்தரை நேசிக்கும் ஜனங்கள் தீமையை வெறுப்பார்கள்.
எனவே தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
தீயோரிடமிருந்து தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
11 நல்லோர் மீது ஒளியும், மகிழ்ச்சியும் பிரகாசிக்கும்.
12 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்!
அவரது பரிசுத்த நாமத்தை பெருமைப்படுத்துங்கள்!
99 கர்த்தர் ராஜா.
எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும்.
கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.
2 சீயோனில் கர்த்தர் மேன்மையானவர்.
ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர்.
3 எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும்.
தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது.
தேவன் பரிசுத்தர்.
4 வல்லமையுள்ள ராஜா நீதியை நேசிக்கிறார்.
தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர்.
யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர்.
5 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள்.
6 மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர்.
அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன்.
அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது
அவர் அவர்களுக்குப் பதில் தந்தார்.
7 உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார்.
அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார்.
8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர்.
ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும்,
மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர்.
9 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.
நன்றி கூறும் பாடல்.
100 பூமியே, கர்த்தரைப் பாடு.
2 கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்!
மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்.
அவரே நம்மை உண்டாக்கினார்.
நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.
4 நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள்.
துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள்.
அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.
5 கர்த்தர் நல்லவர்.
அவர் அன்பு என்றென்றும் உள்ளது.
என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.
94 கர்த்தாவே, நீர் ஜனங்களைத் தண்டிக்கும் தேவன்.
நீர் வருகிறவரும் ஜனங்களுக்குத் தண்டனையைத் தருகிறவருமான தேவன்.
2 நீர் முழு பூமிக்கும் நீதிபதி.
பெருமையுடைய ஜனங்களுக்கு, அவர்களுக்குரிய தண்டனையைக் கொடும்.
3 கர்த்தாவே, எத்தனை காலம் தீயவர்கள் கேளிக்கைகளில் திளைத்திருப்பார்கள்?
4 எதுவரைக்கும் அக்குற்றவாளிகள்
அவர்கள் செய்த தீய காரியங்களைப்பற்றிப் பெருமை பாராட்டுவார்கள்?
5 கர்த்தாவே, அவர்கள் உமது ஜனங்களைத் தாக்குகிறார்கள்.
உமது ஜனங்கள் துன்புறும்படி அவர்கள் செய்கிறார்கள்.
6 அத்தீயோர் விதவைகளையும் இத்தேசத்தைப் பார்க்க வருவோரையும் கொல்கிறார்கள்.
பெற்றோரில்லாத பிள்ளைகளை அவர்கள் கொலை செய்கிறார்கள்.
7 அவர்கள் அத்தீயக் காரியங்களைச் செய்வதை கர்த்தர் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.
நிகழ்வதை இஸ்ரவேலின் தேவன் அறியார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
8 தீய ஜனங்களாகிய நீங்கள் மூடர்கள்.
நீங்கள் எப்போது உங்கள் பாடத்தைக் கற்பீர்கள்?
கொடிய ஜனங்களாகிய நீங்கள் அறிவில்லாதவர்கள்!
நீங்கள் புரிந்துகொள்ள முயலவேண்டும்.
9 தேவன் நமது காதுகளை உண்டாக்கினார்.
நிச்சயமாக அவருக்கும் காதுகள் உள்ளன.
அவரால் நிகழ்வதைக் கேட்கமுடியும்!
தேவன் நமது கண்களை உண்டாக்கினார்.
நிச்சயமாக அவருக்கும் கண்கள் உள்ளன.
அவரால் நிகழ்வதைக் காணமுடியும்!
10 தேவன் அந்த ஜனங்களை ஒழுங்குபடுத்துவார்.
தேவன் அவர்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கற்பிப்பார்.
11 ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார்.
வெளிப்படும் சிறிய அளவு காற்றைப்போன்றவர்கள் ஜனங்கள் என்பதை தேவன் அறிகிறார்.
12 கர்த்தர் ஒழுங்குபடுத்தும் மனிதன் மகிழ்ச்சியாயிருப்பான்.
சரியான வழியில் வாழ்வதற்கு தேவன் அவனுக்குக் கற்பிப்பார்.
13 தேவனே, குழப்பம் நேருகையில் அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
தீயோர் கல்லறைக்குள் வைக்கப்படும்வரை அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
14 கர்த்தர் அவரது ஜனங்களை விட்டு விலகுவதில்லை.
உதவியின்றி அவரது ஜனங்களை அவர் விட்டுவிடுவதில்லை.
15 நீதி திரும்பும், அது நியாயத்தைக் கொண்டு வரும்,
அப்போது நல்ல, உண்மையான ஜனங்கள் வாழ்வார்கள்.
16 தீயோரை எதிர்ப்பதற்கு ஒருவனும் உதவவில்லை.
தீமை செய்வோரை எதிர்க்கும்போது ஒருவனும் எனக்குத் துணைவரவில்லை.
17 கர்த்தர் எனக்கு உதவியிராவிட்டால்
நான் மரணத்தினால் மௌனமாக்கப்பட்டிருப்பேன்!
18 நான் விழத்தயாராயிருப்பதை அறிகிறேன்,
ஆனால் கர்த்தர் தம்மைப் பின்பற்றுபவனுக்கு உதவுகிறார்.
19 நான் கவலையடைந்து கலங்கியிருந்தேன்.
ஆனால் கர்த்தாவே, நீர் எனக்கு ஆறுதல் கூறி எனக்கு மகிழ்ச்சியளித்தீர்.
20 தேவனே, நீர் அநீதியுள்ள நீதிபதிகளுக்கு உதவுவதில்லை.
ஜனங்களின் வாழ்க்கை கடினமாவதற்கு அத்தீய நீதிபதிகள் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
21 அந்நீதிபதிகள் நல்லோரைத் தாக்குகிறார்கள்.
களங்கமற்ற ஜனங்களைக் குற்றவாளிகள் எனக் கூறி, அவர்களைக் கொல்கிறார்கள்.
22 ஆனால் உயரமான பர்வதங்களில் கர்த்தர் எனக்குப் பாதுகாப்பிடம்.
என் கன்மலையான தேவன் என் பாதுகாப்பிடம்.
23 அத்தீய நீதிபதிகள் செய்த தீய காரியங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டிப்பார்.
அவர்கள் பாவம் செய்ததால் தேவன் அவர்களை அழிப்பார்.
எங்கள் தேவனாகிய கர்த்தர் அத்தீய நீதிபதிகளை அழிப்பார்.
95 வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்!
நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம்.
2 கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம்.
அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம்.
3 ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்!
பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார்.
4 ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை.
5 சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார்.
தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார்.
6 வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம்.
நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம்.
7 அவரே நமது தேவன்!
நாம் அவரது ஜனங்கள்.
அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம்.
8 தேவன்: “பாலைவனத்தில் மேரிபாவில் செய்தது போலவும், மாசாவில் செய்தது போலவும் அடம்பிடிக்காதீர்கள்” என்று கூறினார்.
9 உங்கள் முற்பிதாக்கள் என்னை சோதித்தார்கள்.
அவர்கள் என்னை சோதித்தபோது நான் செய்யக்கூடியவற்றைக் கண்டார்கள்.
10 நாற்பது ஆண்டுகள் அந்த ஜனங்களிடம் நான் பொறுமையாக இருந்தேன்.
அவர்கள் உண்மையில்லாதவர்கள் என நான் அறிவேன்.
அந்த ஜனங்கள் என் போதனைகளைப் பின்பற்ற மறுத்தார்கள்.
11 எனவே நான் கோபமடைந்தேன்,
எனது இளைப்பாறுதலின் தேசத்தில் அவர்கள் நுழைவதில்லை என ஆணையிட்டேன்.
29 பின் இஸ்ரவேல் ஒரு ஆணையிட்டான். “நான் மரிக்கும்போது என் ஜனங்களோடு இருக்க விரும்புகிறேன். என் முற்பிதாக்களோடு நான் அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தக் கல்லறை ஏத்தியரிடம் வாங்கிய எப்பெரோனில் உள்ளது. 30 அந்தக் குகை மம்ரேக்கு அருகில் மக்பேலா எனும் இடத்தில் வயலில் உள்ளது. இது கானான் நாட்டில் உள்ளது. இதனை ஆபிரகாம் எப்ரோனிடமிருந்து விலைக்கு வாங்கி கல்லறையாக மாற்றிவிட்டார். 31 ஆபிரகாமும் அவன் மனைவி சாராளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். நான் என் மனைவி லேயாளையும் அதே குகையில் அடக்கம் பண்ணினேன். 32 அந்தக் குகை இருக்கும் நிலம் ஏத்தின் குமாரன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான். 33 யாக்கோபு பேசி முடித்ததும் படுத்தான். கால்களைக் கட்டிலின்மேல் மடக்கியபடியே மரணமடைந்தான்.
யாக்கோபின் இறுதிச் சடங்கு
50 இஸ்ரவேல் மரித்ததும் யோசேப்பு மிகவும் துக்கப்பட்டான். அவன் தன் தந்தையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது முத்தமிட்டான். 2 பிறகு யோசேப்பு தன் வேலைக்காரர்களுக்கு அவனது தந்தையின் உடலை அடக்கத்திற்கு தயார் செய்யும்படி ஆணையிட்டான். (அவர்கள் அனைவரும் மருத்துவர்கள்.) அடக்கம் செய்வதற்கு ஏற்ற முறையில் அதனைத் தயார்படுத்தினர். எகிப்திய முறையில் அவ்வாறு செய்தனர். 3 சரியான முறையில் தயார் செய்ய 40 நாட்கள் ஆகும். அந்தபடியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக 70 நாட்கள் துக்கம் கொண்டாடினர்.
4 70 நாட்கள் ஆனதும் துக்க நாட்கள் முடிந்தன. எனவே யோசேப்பு பார்வோன் மன்னனின் அதிகாரிகளோடு பேசினான். “இதனை பார்வோன் மன்னனுக்குச் சொல்லுங்கள். 5 ‘என் தந்தை மரணத்தை நெருங்கும்போது அவருக்கு நான் ஒரு வாக்குக் கொடுத்தேன். அவரை கானான் நாட்டில் ஓரிடத்தில் அடக்கம் செய்வதாக ஒப்புக்கொண்டேன். அதுவே அவர் விரும்பிய குகை. எனவே, நான் போய் அவரை அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வேண்டும். பின்னர் நான் உங்களிடம் திரும்பி வருவேன்’” என்றான்.
6 பார்வோனும், “உன் வாக்கைக் காப்பாற்று. போய் உன் தந்தையை அடக்கம் செய்” என்றான்.
7 எனவே யோசேப்பு அடக்கம் செய்யக் கிளம்பினான். பார்வோனின் மூப்பர்களும் (தலைவர்களும்) எகிப்திலுள்ள முதியவர்களும் யோசேப்போடு சென்றார்கள். 8 யோசேப்பின் குடும்பத்தினரும், அவனது சகோதரர்களின் குடும்பத்ததினரும் தந்தையின் குடும்பத்தினரும் அவனோடு சென்றார்கள். குழந்தைகளும் மிருகங்களும் மட்டுமே கோசேன் பகுதியில் தங்கினார்கள். 9 அவர்கள் பெருங்கூட்டமாகப் போனார்கள். வீரர்களும் இரதங்களிலும் குதிரைகளிலும் ஏறிப் போனார்கள்.
10 அவர்கள் கோரான் ஆத்தாத் நதியின் கீழ்க்கரையில் உள்ள கோசேன் ஆத்தாதிற்கு வந்தனர். அங்கே இஸ்ரவேலுக்கு இறுதிச் சடங்குகளையெல்லாம் செய்தனர். இது ஏழு நாட்கள் நடந்தது. 11 கானான் நாட்டிலுள்ள ஜனங்களெல்லாம் இந்தச் சடங்கில் கலந்துகொண்டனர். அவர்களோ, “அந்த எகிப்தியர்கள் பெரிய துக்கமான சடங்கைக் கொண்டுள்ளனர்” என்றனர். இப்போது அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்று பெயர் வழங்குகிறது.
12 யாக்கோபின் குமாரர்கள் தந்தை சொன்னபடியே செய்தனர். 13 அவர்கள் அவனது உடலை கானானுக்குள் எடுத்துச் சென்று மக்பேலாவில் அடக்கம் செய்தனர். இந்தக் குகை ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடமிருந்து வாங்கிய நிலத்தில் மம்ரேக்கு அருகில் இருந்தது. ஆபிரகாம் இதனைக் கல்லறைக்காகவே வாங்கியிருந்தான். 14 யோசேப்பு தன் தந்தையை அடக்கம் செய்த பிறகு, அவனோடு அனைவரும் எகிப்துக்குத் திரும்பிப் போனார்கள்.
கர்த்தரின் திருவிருந்து
17 இப்போது உங்களுக்குச் சொல்பவற்றில் நான் உங்களைப் புகழமாட்டேன். நீங்கள் ஒன்று சேர்வது உங்களுக்குத் தொல்லை உருவாகுவதில் முடிகிறது. 18 முதலில், ஒரு சபையாக நீங்கள் சேரும்போது உங்களுக்குள் பிரிவினைகள் உண்டு என்று நான் கேள்விப்பட்டேன். அதில் சிலவற்றை நான் நம்புகிறேன். 19 பிரிவினைகள் இருப்பது தேவைதான். உங்களில் யார் சரியான காரியத்தைச் செய்கிறவர் என்பதைத் தெளிவுபடுத்த அது உதவும்.
20 நீங்கள் ஒன்று கூடுகையில் கர்த்தரின் திருவிருந்தை[a] உண்மையாகப் புசிப்பதில்லை. 21 ஏன்? ஏனெனில் நீங்கள் சாப்பிடும்போது இன்னொருவருக்காகக் காத்திராது உண்ணுகிறீர்கள். சிலருக்குப் போதுமான அளவு சாப்பிடக் கிடைப்பதில்லை. ஆனால் மற்றும் சிலர் போதைக்கு ஆளாகும் அளவுக்கு உட்கொள்கிறார்கள். 22 உங்கள் வீடுகளில் நீங்கள் சாப்பிடவும், குடிக்கவும் செய்யலாம். தேவனுடைய சபையினர் முக்கியமற்றவரென நீங்கள் நினைப்பதாக எனக்குப் படுகிறது. நீங்கள் ஏழைகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறீர்கள். நான் என்ன கூறமுடியும்? உங்களை இதற்காகப் புகழ்வதா? நான் உங்களைப் புகழேன்.
23 நான் உங்களுக்குச் சொன்ன போதனை உண்மையில் கர்த்தரால் எனக்குக் கொடுக்கப்பட்டது ஆகும். இயேசு கொலை செய்யப்படுவதற்காக ஒப்புவிக்கப்பட்ட இரவில் அவர் அப்பத்தை எடுத்து நன்றி கூறினார். 24 அந்த அப்பத்தைப் பகிர்ந்து அவர் “இதை புசியுங்கள். இது எனது சரீரமாகும். இது உங்களுக்குரியது. என்னை நினைவுகூருவதற்காக இதைச் செய்யுங்கள்” என்றார். 25 அவர்கள் அதைச் சாப்பிட்டபின், இயேசு திராட்சை இரசக் கோப்பையை எடுத்து பகிர்ந்தளித்தார். “தேவனிடமிருந்து அவரது மக்களுக்கு அளிக்கப்பட்ட புது உடன்படிக்கையை இந்த இரசக் கோப்பை காட்டுகிறது! எனது இரத்தத்தில் இந்த உடன்படிக்கை ஆரம்பமாகிறது. நீங்கள் இதைப் பருகும்போது, என்னை நினைப்பதற்காக அவ்வாறு செய்யுங்கள்” என்றார். 26 ஒவ்வொரு முறையும் அப்பத்தைச் சாப்பிடும்போதும் இந்த பானத்தைப் பருகும்போதும், கர்த்தர் வரும்வரையில் கர்த்தருடைய மரணத்தைப் பிறருக்கு அறிவிக்கிறீர்கள்.
27 எனவே தகுதியற்ற வகையில் இந்த அப்பத்தை உண்டாலோ, அல்லது கர்த்தரின் இந்தப் பாத்திரத்தில் பருகினாலோ, அப்போது அந்த மனிதன் கர்த்தரின் சரீரத்துக்கும், இரத்தத்துக்கும் எதிராகப் பாவம் செய்தவனாகிறான். 28 இந்த அப்பத்தை பகிர்ந்துகொள்வதற்கு முன்னரும், இந்த பாத்திரத்தில் இருந்து பருகும் முன்னரும் ஒவ்வொருவனும் தன் இதயத்தைப் பரீட்சித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். 29 கர்த்தருடைய சரீரத்தின் பொருளை நிதானித்து அறியாமல் ஒருவன் இந்த அப்பத்தை உண்ணவோ இந்த பானத்தைப் பருகவோ செய்தால் அந்த மனிதன் உண்பதாலும் பருகுவதாலும் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படுவான். 30 எனவே தான், உங்களில் பலர் நோயுற்றவராகவும் பலவீனராகவும் காணப்படுகிறீர்கள். பலர் இறந்தும் போய்விட்டார்கள். 31 நாமே நம்மைச் சரியான வழியில் நியாயம் தீர்த்திருந்தோமானால் தேவன் நம்மை நியாயம் தீர்த்திருக்கமாட்டார். 32 ஆனால், தேவன் நம்மை நியாயம் தீர்க்கும்போது, நமக்குச் சரியான வழியைக் காட்டும்படி நமக்குத் தண்டனை அளிக்கிறார். நாம் இந்த உலகத்திலுள்ள பிற மனிதரோடு குற்றம் சாட்டப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்கிறார்.
33 சகோதர சகோதரிகளே! எனவே, நீங்கள் ஒன்று சேர்ந்து உண்ணுவதற்கு வருகையில் பிறருக்காகக் காத்திருங்கள். 34 ஒருவன் மிகுந்த பசியால் வாடினால், அவன் வீட்டில் உண்ணட்டும். தேவனுடைய நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் வராதபடிக்கு நீங்கள் ஒன்று கூடுகையில் இதைச் செய்யுங்கள். நான் வரும்போது நீங்கள் செய்யவேண்டிய பிற காரியங்களைக் குறித்து உங்களுக்குக் கூறுவேன்.
நாலாயிரம் பேருக்கு மேல் உணவளித்தல்
(மத்தேயு 15:32-39)
8 மற்றொருமுறை இயேசுவுடன் ஏராளமான மக்கள் இருந்தனர். மக்களுக்கு உண்ண உணவில்லாமல் இருந்தது. ஆகையால் இயேசு தன்னிடம் சீஷர்களை அழைத்தார். 2 “நான் இம்மக்களுக்காகப் பெரிதும் வருந்துகிறேன். அவர்கள் என்னோடு மூன்று நாட்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது உணவில்லை. 3 அவர்களைப் பசியோடு வீட்டுக்கு அனுப்ப நான் விரும்பவில்லை. அவர்கள் உண்ணாமல் போனால், வழியில் சோர்வடைந்து விடலாம். சிலர் இங்கிருந்து வெகு தூரத்துக்குச் செல்ல வேண்டும்” என்றார்.
4 இயேசுவின் சீஷர்களோ, “நாம் எந்த ஊருக்கும் அருகில் இல்லை. இங்குள்ள அனைவருக்கும் உணவளிக்க நாம் எங்கிருந்து உணவுகளைப் பெறுவது?” என்று கேட்டனர்.
5 “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று இயேசு கேட்டார்.
“எங்களிடம் ஏழு அப்பங்கள் மட்டுமே உள்ளன” என்று சீஷர்கள் கூறினர்.
6 இயேசு அந்த மக்களைத் தரையில் உட்காரச் சொன்னர். பிறகு அவர் ஏழு அப்பங்களையும் எடுத்து தேவனுக்கு நன்றி சொன்னார். இயேசு அப்பங்களைப் பங்குவைத்து சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு இயேசு கேட்டுக்கொண்டார். சீஷர்கள் அவர் சொன்னபடி செய்தனர். 7 அச்சீஷர்கள் சில மீன்களையும் வைத்திருந்தனர். அவற்றையும் இயேசு வாங்கிப் பிரார்த்தனை செய்து, மக்களுக்குக் கொடுக்கும்படி சீஷர்களிடம் கூறினார்.
8 அனைத்து மக்களும் திருப்தியாக உண்டனர். பிறகு மீதியான உணவுப் பொருட்களை ஏழு கூடைகள் நிறையச் சேர்த்தனர். 9 அங்கே ஏறக்குறைய 4,000 ஆண்கள் இருந்தனர். அவர்கள் உண்ட பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைத்தார். 10 பிறகு இயேசு ஒரு படகில் ஏறி தன் சீஷர்களோடு தல்மனூத்தா பகுதிக்குச் சென்றார்.
2008 by World Bible Translation Center