மத்தேயு 15:32-39
Tamil Bible: Easy-to-Read Version
நாலாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு அளித்தல்
(மாற்கு 8:1-10)
32 இயேசு தம் சீஷர்களை அருகில் அழைத்து, “இம்மக்களுக்காக நான் வருந்துகிறேன். இவர்கள் மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது அவர்களுக்கு உணவு ஏதுமில்லை. அவர்களைப் பசியுடன் அனுப்ப எனக்கு விருப்பமில்லை. வீட்டிற்குத் திரும்பும்பொழுது அவர்கள் சோர்வடையலாம்” என்றார்.
33 இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “இவர்கள் அனைவருக்கும் போதுமான அப்பத்துக்கு நாம் எங்கே போக முடியும்? எந்த நகரமும் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது” என்றார்கள்.
34 இயேசு, “எத்தனை அப்பங்கள் உங்களிடம் உள்ளன?” என்று கேட்டார்.
அதற்கு அவரது சீஷர்கள், “எங்களிடம் ஏழு அப்பங்களும் சில மீன்களும் உள்ளன” என்றனர்.
35 இயேசு மக்களைத் தரையில் உட்காரச் சொன்னார். 36 இயேசு ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்துக் கொண்டார். பின் அவர் அவ்வுணவுக்காகத் தேவனுக்கு நன்றி கூறி, அவ்வுணவைத் தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்கு உணவை அளித்தனர். 37 மக்கள் அனைவரும் திருப்தியாய் உண்டனர். அதன் பின்னர், எஞ்சிய உணவைச் சீஷர்கள் ஏழு கூடை நிறைய நிறைத்தார்கள். 38 அங்கு சுமார் 4,000 ஆண்கள் உணவருந்தினர். மேலும் பல பெண்களும் குழந்தைகளும் உணவு உண்டார்கள். 39 அவர்கள் உண்டபின், இயேசு அவர்களைத் திரும்பிச் செல்லப் பணித்தார். இயேசு ஒரு படகில் ஏறி, மக்தலாவின் பிரதேசத்திற்குச் சென்றார்.
Read full chapter2008 by Bible League International