Book of Common Prayer
118 கர்த்தரே தேவன் என்பதால் அவரை மகிமைப்படுத்துங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் தொடரும்!
2 இஸ்ரவேலே, இதைக்கூறு,
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
3 ஆசாரியர்களே, இதைக் கூறுங்கள்:
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
4 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்களே, இதைக் கூறுங்கள்:
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
5 நான் தொல்லையில் உழன்றேன்.
எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன்.
கர்த்தர் எனக்குப் பதிலளித்து என்னை விடுவித்தார்.
6 கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன்.
என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது.
7 கர்த்தர் எனக்கு உதவி செய்கிறவர்.
என் பகைவர்கள் தோல்வியுறுவதை நான் காண்பேன்.
8 ஜனங்களை நம்புவதைக் காட்டிலும்
கர்த்தரை நம்புவது நல்லது.
9 உங்கள் தலைவர்களை நம்புவதைக் காட்டிலும்
கர்த்தரை நம்புவது நல்லது.
10 பல பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்,
ஆனால் கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடிப்பேன்.
11 பகைவர்கள் பலர் என்னை மீண்டும் மீண்டும் சூழ்ந்துகொண்டார்கள்.
கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
12 தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.
ஆனால் வேகமாக எரியும் பதரைப்போல் அவர்கள் சீக்கிரமாக அழிந்துபோனார்கள்.
கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
13 என் பகைவர்கள் என்னைத் தாக்கி அழிக்க முயன்றனர்.
ஆனால் கர்த்தர் எனக்கு உதவினார்.
14 கர்த்தர் எனக்குப் பெலனும் வெற்றியின் பாடலுமாயிருக்கிறார்.
கர்த்தர் என்னைக் காப்பாற்றுகிறார்!
15 நல்லோரின் வீடுகளில் வெற்றியின் கொண்டாட்டத்தை நீங்கள் கேட்கமுடியும்.
கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
16 கர்த்தருடைய கரங்கள் வெற்றியால் உயர்த்தப்பட்டன.
கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
17 நான் வாழ்வேன், மரிக்கமாட்டேன்.
கர்த்தர் செய்தவற்றை நான் கூறுவேன்.
18 கர்த்தர் என்னைத் தண்டித்தார்,
ஆனால் அவர் என்னை மரிக்கவிடமாட்டார்.
19 நல்ல வாயிற்கதவுகளே, எனக்காகத் திறவுங்கள்,
நான் உள்ளே வந்து கர்த்தரைத் தொழுதுகொள்வேன்.
20 அவை கர்த்தருடைய கதவுகள்,
நல்லோர் மட்டுமே அவற்றின் வழியாகச் செல்ல முடியும்.
21 கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
நீர் என்னைக் காப்பாற்றியதற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
22 கட்டிடம் கட்டுவோர் வேண்டாமெனத் தள்ளிய
கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று.
23 கர்த்தரே இதைச் செய்தார்,
அது அற்புதமானதென நாங்கள் நினைக்கிறோம்.
24 இந்நாள் கர்த்தர் செய்த நாள்.
இன்று நாம் களிப்போடு மகிழ்ச்சியாயிருப்போம்!
25 ஜனங்கள், “கர்த்தரைத் துதிப்போம்!
கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
26 கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
ஆசாரியர்கள், “நாங்கள் உங்களைக்
கர்த்தருடைய வீட்டிற்கு வரவேற்கிறோம்!
27 கர்த்தரே தேவன், அவர் எங்களை ஏற்றுக்கொள்கிறார்.
பலிக்காக ஆட்டுக்குட்டியைக் கட்டி, பலிபீடத்தின் கொம்புகளுக்கு சுமந்து செல்லுங்கள்” என்றார்கள்.
28 கர்த்தாவே, நீரே என் தேவன், நான் உமக்கு நன்றிக் கூறுகிறேன்.
நான் உம்மைத் துதிக்கிறேன்.
29 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் நிலைக்கும்.
தாவீதின் ஜெபங்களுள் ஒன்று
145 என் தேவனும் அரசருமாகிய உம்மைத் துதிக்கிறேன்.
உமது நாமத்தை நான் என்றென்றும் எப்போதும் போற்றுகிறேன்.
2 நான் ஒவ்வொரு நாளும் உம்மைத் துதிக்கிறேன்.
நான் உமது நாமத்தை என்றென்றும் எப்போதும் துதிக்கிறேன்.
3 கர்த்தர் பெரியவர்.
ஜனங்கள் அவரை அதிகம் துதிக்கிறார்கள்.
அவர் செய்கிற பெருங்காரியங்களை நாம் எண்ணமுடியாது.
4 கர்த்தாவே, நீர் செய்யும் காரியங்களுக்காக ஜனங்கள் உம்மை என்றென்றும் எப்போதும் துதிப்பார்கள்.
நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைக் குறித்து அவர்கள் சொல்வார்கள்.
5 உமது பெருமைக்குரிய தோற்றமும் மகிமையும் அற்புதமானவை.
உமது அதிசயங்களைப் பற்றி நான் சொல்வேன்.
6 கர்த்தாவே, நீர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.
நீர் செய்யும் மேன்மையான காரியங்களைப்பற்றி நான் சொல்வேன்.
7 நீர் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.
உமது நன்மையைப்பற்றி ஜனங்கள் பாடுவார்கள்.
8 கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர்.
கர்த்தர் பொறுமையும் மிகுந்த அன்புமுள்ளவர்.
9 கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர்.
தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவரது இரக்கத்தைக் காட்டுகிறார்.
10 கர்த்தாவே, நீர் செய்பவை யாவும் உமக்குத் துதிகளைக் கொண்டுவரும்.
உம்மைப் பின்பற்றுவோர் உம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.
11 உமது அரசு எவ்வளவு மேன்மையானது என அவர்கள் சொல்வார்கள்.
நீர் எவ்வளவு மேன்மையானவர் என்பதை அவர்கள் சொல்வார்கள்.
12 கர்த்தாவே, அப்போது பிறர் நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள்.
உமது அரசு எவ்வளவு மேன்மையும் அற்புதமுமானது என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
13 கர்த்தாவே, உமது அரசு என்றென்றும் தொடரும்.
நீர் என்றென்றும் அரசாளுவீர்.
14 கர்த்தர் வீழ்ந்து கிடக்கின்ற ஜனங்களைத் தூக்கிவிடுகிறார்.
கர்த்தர் தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு உதவுகிறார்.
15 கர்த்தாவே, தங்கள் உணவுக்காக எல்லா உயிரினங்களும் உம்மை நோக்கியிருக்கின்றன.
அவற்றிற்குத் தக்க நேரத்தில் நீர் உணவளிக்கிறீர்.
16 கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து,
ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறீர்.
17 கர்த்தர் செய்கின்ற எல்லாம் நல்லவையே.
அவர் செய்பவை எல்லாம் அவர் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்டும்.
18 கர்த்தரிடம் உதவி கேட்கிற ஒவ்வொருவனிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
உண்மையாகவே அவரைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவரிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
19 கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோர் விரும்புகின்றவற்றைச் செய்கிறார்.
கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோருக்குச் செவிகொடுக்கிறார்.
அவர்களின் ஜெபங்களுக்கு அவர் பதிலளித்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.
20 கர்த்தர் தம்மை நேசிக்கிற ஒவ்வொருவரையும் காப்பாற்றுகிறார்.
ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
21 நான் கர்த்தரைத் துதிப்பேன்!
என்றென்றைக்கும் எப்போதும் அவரது பரிசுத்த நாமத்தை ஒவ்வொருவரும் துதிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.
19 அந்தக் காலத்தில், ஒரு பலிபீடம் எகிப்தின் மத்தியில் கர்த்தருக்காக இருக்கும். எகிப்தின் எல்லையில் கர்த்தருக்கு மகிமை சேர்க்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று இருக்கும். 20 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் வல்லமை மிக்க செயல்களைச் செய்கிறார் என்பதற்கு இது அடையாளமாக இருக்கும். கர்த்தரிடம் உதவி கேட்டு ஜனங்கள் எந்த நேரத்தில் அலறினாலும் கர்த்தர் உதவியை அனுப்புவார். ஜனங்களைக் காப்பாற்றி பாதுகாக்க கர்த்தர் ஒருவனை அனுப்புவார். அந்த ஆள் இந்த ஜனங்களை அவர்களை ஒடுக்கும் மற்ற ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவான்.
21 அந்தக் காலத்தில், எகிப்தின் ஜனங்கள் கர்த்தரைப் பற்றி உண்மையாகத் தெரிந்துகொள்வார்கள். எகிப்தின் ஜனங்கள் தேவனை நேசிப்பார்கள். அந்த ஜனங்கள் தேவனுக்குச் சேவை செய்வார்கள். பல பலிகளைக் கொடுப்பார்கள். அவர்கள் கர்த்தருக்குப் பல வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். அவர்கள் அவ்வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார்கள்.
22 எகிப்தின் ஜனங்களை கர்த்தர் தண்டிப்பார். பிறகு, கர்த்தர் அவர்களை மன்னிப்பார். (குணப்படுத்துவார்) அவர்கள் கர்த்தரிடம் திரும்பி வருவார்கள். கர்த்தர் அவர்களது ஜெபங்களைக் கேட்டு அவர்களைக் குணப்படுத்துவார். (மன்னிப்பார்)
23 அந்தக் காலத்தில், எகிப்திலிருந்து அசீரியாவிற்கு ஒரு பெரும் பாதை இருக்கும். பிறகு, ஜனங்கள் அசீரியாவிலிருந்து எகிப்திற்குப்போவார்கள். ஜனங்கள் எகிப்திலிருந்து அசீரியாவிற்குப்போவார்கள். எகிப்து அசீரியாவோடு சேர்ந்து வேலை செய்யும்.
24 அந்தக் காலத்தில், இஸ்ரவேல் அசீரியாவுடனும் எகிப்துடனும் சேர்ந்து உடன்பாடு செய்யும். இது நாட்டுக்கான ஆசீர்வாதமாக விளங்கும். 25 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இந்த நாடுகளை ஆசீர்வதிப்பார். “எகிப்தியரே நீங்கள் என் ஜனங்கள். அசீரியாவே நான் உன்னை உருவாக்கினேன். இஸ்ரவேலே நான் உன்னைச் சொந்தமாக்கினேன். நீங்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டீர்கள்!” என்று அவர் சொல்வார்.
5 பொறுமையும் பலமும் தேவனிடமிருந்து வந்தன. இயேசு கிறிஸ்து விரும்புகிற வழியை நீங்கள் உங்களுக்குக்குள் ஏற்றுக்கொள்ள தேவனிடம் பிரார்த்திப்பேன். 6 எனவே இதய ஒற்றுமையுடனும் ஒருமித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனைப் புகழ்வீர்கள். 7 கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டார். எனவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தேவனுக்கு மகிமையைக் கொண்டு வரும். 8 இதனால் யூதர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். கிறிஸ்து யூதர்களுக்குப் பணியாளர் ஆனார். இதன் மூலம் அவர் தேவனுடைய வாக்குறுதிகள் உண்மையானவை எனக் காட்டினார். கிறிஸ்து யூதர்களின் தந்தையர்க்குக் கொடுத்த வாக்குறுதியை நிரூபித்துவிட்டார். 9 இதனால் யூதரல்லாதவர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது:
“யூதர் அல்லாத மக்களுக்கிடையில் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
உமது பெயரைப் பாராட்டிப் பாடுவேன்.” (A)
10 மேலும் வேதவாக்கியம் கூறுகிறது:
“யூதரல்லாதவர்களாகிய நீங்கள் தேவனுடைய மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடையுங்கள்.” (B)
11 மேலும் வேத வாக்கியம் கூறுகிறது:
“யூதரல்லாத நீங்கள் கர்த்தரைப் புகழுங்கள்.
அனைத்து மக்களும் கர்த்தரைப் புகழ வேண்டும்.” (C)
12 ஏசாயா இப்படி கூறுகிறார்:
“ஈசாயின் குடும்பத்திலிருந்து ஒருவர் வருவார்.
யூதரல்லாதவர்களை அவர் ஆள்வார்.
அவரால் யூதரல்லாதவர்களும் நம்பிக்கை அடைவார்கள்.” (D)
13 தேவன் வழங்கும் விசுவாசம் உங்களை சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும் நிரப்பட்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிறகு உங்களுக்கு மேலும் மேலும் விசுவாசம் பெருகும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் அது நிரம்பி வழியும்.
இருப்பதைப் பயன்படுத்துங்கள்(A)
11 எருசலேமை நெருங்கி இயேசு பயணம் செய்துகொண்டிருந்தார். தேவனின் இராஜ்யம் சீக்கிரம் வருமென்று சில மக்கள் எண்ணினார்கள். 12 மக்களின் எண்ணத்தை இயேசு அறிந்தார். எனவே அவர்களுக்குப் பின்வரும் உவமையைச் சொன்னார்: “ஒரு உயர்ந்த கௌரவம்மிக்க மனிதன், மன்னனாக நியமனம் பெறும்படியாகத் தூர தேசப் பயணத்திற்காக ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தான். பின்னர் திரும்பி வந்து அவனது மக்களை அரசாள வேண்டுமென்று அவன் திட்டமிட்டான். 13 எனவே அவன் தனது வேலைக்காரர்களில் பத்து பேரை அழைத்தான். அவன் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் ஒரு பை நிறைய பணத்தைக் கொடுத்தான். ‘இந்தப் பணத்தைக்கொண்டு நான் வரும் வரைக்கும் வியாபாரம் செய்யுங்கள்’ என்றான். 14 அந்த இராஜ்யத்தின் மக்கள் அம்மனிதனை வெறுத்தார்கள். எனவே அம்மக்கள் அவன் போகும் தேசத்துக்கெல்லாம் அவனைப் பின் தொடர்ந்து செல்லுமாறு ஒரு கூட்டத்தினரை அனுப்பினர். மற்ற தேசத்துக்கு அக்கூட்டத்தினர் சென்று ‘இந்த மனிதன் எங்களுக்கு அரசன் ஆவதை நாங்கள் விரும்பவில்லை’ என்றார்கள்.
15 “ஆனால் அம்மனிதன் அரசனானான். அவன் தன் நாட்டுக்குத் திரும்பிய பின்பு, ‘நான் பணம் கொடுத்துள்ள அந்த வேலைக்காரரை அழையுங்கள். அதைக்கொண்டு அவர்கள் இன்னும் அதிகமாக எவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறிய நான் விரும்புகிறேன்’ என்றான். 16 முதல் வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் பத்து பை நிரம்பும் அளவுக்குப் பணம் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான். 17 அரசன் அந்த வேலைக்காரனை நோக்கி, ‘நல்லது, நீ ஒரு நல்ல வேலைக்காரன். சிறிய காரியங்களில் உன்னை நம்பக் கூடும் என்று காண்கிறேன். ஆகவே இப்போது எனது பட்டணங்களில் பத்து பட்டணங்களை ஆளும்படியாக உன்னை நியமிப்பேன்’ என்றான்.
18 “இரண்டாவது வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் ஐந்து பைகள் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான். 19 மன்னன் வேலைக்காரனை நோக்கி, ‘நீ ஐந்து பட்டணங்கள் மேல் ஆட்சி செய்யலாம்’ என்றான்.
20 “பின்பு மூன்றாவது வேலைக்காரன் வந்தான் அந்த வேலைக்காரன் அரசனை நோக்கி, ‘ஐயா, இதோ உங்களுடைய பணப் பை இருக்கிறது. நான் அதை ஒரு துணியில் பொதிந்து மறைத்து வைத்தேன். 21 உங்கள் வலிமையைக் கண்டு நான் பயந்து போய் இருந்தேன். நீங்கள் கடினமான மனிதர் என்பதை அறிவேன். உங்களால் சம்பாதிக்கப்படாத பணத்தைக் கூட நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். உங்களால் பயிரிடப்படாத தானியத்தைக் கூட நீங்களே சேர்த்துக் கொள்கிறீர்கள்’ என்றான்.
22 “அரசன் அந்த வேலைக்காரனை நோக்கி, ‘தீய வேலைக்காரனே, உனது சொந்த வார்த்தையாலேயே உன்னை நிராகரிப்பேன். நான் ஒரு கடினமான மனிதன் என்றாய். நான் சம்பாதிக்காத பணத்தை எடுத்துக்கொள்பவன் என்றும், நான் பயிரிடாத தானியத்தைச் சேர்த்துக்கொள்பவன் என்றும் கூறினாய். 23 அது உண்மையென்றால் நீ என் பணத்தை வங்கியில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்போது நான் திரும்பி வந்தபோது என் பணத்துக்கு வட்டியாவது கிடைத்திருக்கும்’ என்றான். 24 பின் அங்கு நின்றுகொண்டிருந்த மனிதரை நோக்கி, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து பையை எடுத்து பத்து பைகள் நிரம்ப பணம் சம்பாதித்தவனுக்குக் கொடுங்கள்’ என்றான்.
25 “அந்த மனிதர்கள் அரசனிடம், ‘ஐயா, அந்த வேலைக்காரனிடம் ஏற்கெனவே பத்துப் பைகள் பணம் இருக்கின்றனவே,’ என்றார்கள்.
26 “அரசன், ‘தன்னிடம் இருப்பவற்றைப் பயன்படுத்துகிறவனுக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும். தன்னிடம் இருப்பவற்றைப் பயன்படுத்தாத மனிதனிடம் இருப்பவையும் எடுத்துக்கொள்ளப்படும். 27 இப்போது எனது பகைவர்கள் எங்கே? தமக்கு அரசனாக நான் ஆவதை விரும்பாத மக்கள் எங்கே? என் பகைவர்களை அழைத்து வந்து அவர்களைக் கொல்லுங்கள். அவர்கள் மடிவதை நான் பார்ப்பேன்’ என்றான்.”
2008 by World Bible Translation Center