Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 102

துன்பப்படும் ஒரு மனிதனின் ஜெபம். அவன் சோர்வடையும்போது தனது குறைகளை கர்த்தரிடம் சொல்லிக் கொள்வதாக உள்ளது.

102 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
    உதவிக்காக நான் கதறும்போது கவனியும்.
கர்த்தாவே, தொல்லைகள் எனக்கு நேரும்போது என்னைவிட்டு உம்மை திருப்பிக் கொள்ளாமலிரும்.
    உதவிக்காக நான் வேண்டிக் கேட்கும்போது, விரைந்து எனக்குப் பதில் தாரும்.

என் வாழ்க்கை புகையைப்போல் மாய்ந்து கொண்டிருக்கிறது.
    எரிந்துபோகும் நெருப்பைப்போல் என் வாழ்க்கை உள்ளது.
என் வலிமை போயிற்று.
    நான் உலர்ந்து மடியும் புல்லைப் போலிருக்கிறேன்.
    நான் என் உணவை உட்கொள்வதற்கும் மறந்து போகிறேன்.
என் துயரத்தினால் என் எடை குறைந்து கொண்டிருக்கிறது.
பாலைவனத்தில் வாழும் ஆந்தையைப்போல் தனித்திருக்கிறேன்.
    பாழடைந்த பழைய கட்டிடங்களில் வாழும் ஆந்தையைப் போல் நான் தனித்திருக்கிறேன்.
என்னால் தூங்க இயலவில்லை.
    கூரையின் மேலிருக்கும் தனித்த பறைவையைப் போல் உள்ளேன்.
என் பகைவர்கள் என்னை எப்போதும் அவமானப்படுத்துகிறார்கள்.
    அவர்கள் என்னைக் கேலி பண்ணி சாபமிடுகிறார்கள்.
என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது.
    என் பானங்களில் என் கண்ணீர் விழுகிறது.
10 ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னிடம் கோபமாயிருக்கிறீர்.
    நீர் என்னைத் தூக்கியெடுத்தீர், பின்பு நீர் என்னைத் தூர எறிந்துவிட்டீர்.

11 பகலின் இறுதியில் தோன்றும் நீளமான நிழல்களைப்போன்று என் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது.
    நான் உலர்ந்து மடியும் புல்லைப்போல் இருக்கிறேன்.
12 ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்!
    உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்!
13 நீர் எழுந்து சீயோனுக்கு ஆறுதலளிப்பீர்.
    நீர் சீயோனிடம் இரக்கமாயிருக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
14 உமது பணியாட்கள் அதின் (சீயோனின்) கற்களை நேசிக்கிறார்கள்.
    அவர்கள் எருசலேமின் தூசியைக்கூட நேசிக்கிறார்கள்.
15 ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்.
    தேவனே, பூமியின் எல்லா ராஜாக்களும் உம்மைப் பெருமைப்படுத்துவார்கள்.
16 கர்த்தர் மீண்டும் சீயோனைக் கட்டுவார்.
    ஜனங்கள் மீண்டும் அதன் மகிமையைக் காண்பார்கள்.
17 தாம் உயிரோடு விட்ட ஜனங்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில் தருவார்.
    தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுப்பார்.

18 வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது.
    எதிர்காலத்தில் அந்த ஜனங்கள் கர்த்தரைத் துதிப்பார்கள்.
19 மேலேயுள்ள தமது பரிசுத்த இடத்திலிருந்து கர்த்தர் கீழே பார்ப்பார்.
    பரலோகத்திலிருந்து கர்த்தர் பூமியைக் கீழே நோக்கிப் பார்ப்பார்.
20 சிறைப்பட்டோரின் ஜெபங்களை அவர் கேட்பார்.
    மரண தண்டனை பெற்ற ஜனங்களை அவர் விடுவிப்பார்.
21 அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள்.
    அவர்கள் அவர் நாமத்தை எருசலேமில் துதிப்பார்கள்.
22 தேசங்கள் ஒருமித்துச் சேரும்.
    அரசுகள் கர்த்தருக்கு சேவைச் செய்ய வரும்.

23 என் ஆற்றல் என்னை விட்டகன்றது.
    என் ஆயுள் குறைந்தது.
24 எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும்.
    தேவனே, நீர் என்றென்றும் எப்போதும் வாழ்வீர்.
25 பல காலத்திற்கு முன்பு, நீர் உலகை உண்டாக்கினீர்.
    உமது சொந்தக் கைகளால் நீர் வானத்தை உண்டாக்கினீர்!
26 உலகமும் வானமும் ஒழிந்துபோகும் ஆனால் நீரோ என்றென்றும் வாழ்வீர்.
    அவை ஆடையைப்போன்று கிழிந்து போகும்.
ஆடையைப் போன்று நீர் அவற்றை மாற்றுகிறீர்.
    அவையெல்லாம் மாறிப்போகும்.
27 ஆனால் தேவனாகிய நீர் என்றும் மாறுவதில்லை.
    நீர் என்றென்றும் வாழ்வீர்!
28 நாங்கள் இன்று உமது பணியாட்கள்.
    நம் பிள்ளைகள் இங்கு வாழ்வார்கள்.
    அவர்களின் சந்ததியினரும் கூட இங்கு வந்து உம்மைத் தொழுதுகொள்வார்கள்” என்றேன்.

சங்கீதம் 107:1-32

புத்தகம் 5

107 கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
    அவரது அன்பு என்றென்றைக்கும் உள்ளது!
கர்த்தரால் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் சொல்லவேண்டும்.
    கர்த்தர் பகைவரிடமிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
கர்த்தர் அவரது ஜனங்களைப் பல்வேறு வித்தியாசமான நாடுகளிலுமிருந்து ஒருமித்துக் கூடும்படிச் செய்தார்.
    அவர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமிருந்தும் வடக்கிலும் தெற்கிலுமிருந்தும் வரச்செய்தார்.

அவர்களுள் சிலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள்.
    அவர்கள் வாழ ஒரு இடம் தேடினார்கள்.
    ஆனால் அவர்களால் ஒரு நகரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்கள் பசியாலும் தாகத்தாலும் வருந்தி,
    சோர்வடைந்து போனார்கள்.
எனவே அவர்கள் உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள்.
    அவர் அவர்களின் தொல்லைகளிலிருந்து அவர்களை மீட்டார்.
தேவன் அந்த ஜனங்களை அவர்கள் வாழவிருக்கும் நகரத்திற்கு நேராக நடத்தினார்.
அவர் ஜனங்களுக்காகச் செய்த வியக்கத்தகு காரியங்களுக்காகவும்
    அவரது அன்பிற்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
தேவன் தாகமடைந்த ஆத்துமாவைத் திருப்திப்படுத்துகிறார்.
    பசியுள்ள ஆத்துமாவை நன்மைகளால் தேவன் நிரப்புகிறார்.

10 தேவனுடைய ஜனங்களில் சிலர் சிறை வாசிகளாக இருந்தார்கள்.
    அவர்கள் இருண்ட சிறைகளுக்குள் கம்பிகளுக்குப்பின்னே அடைக்கப்பட்டார்கள்.
11 ஏனெனில் அவர்கள் தேவன் சொன்னவற்றிற்கு எதிராகப் போராடினார்கள்.
    மிக உன்னதமான தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்க மறுத்தார்கள்.
12 அவர்கள் செய்த காரியங்களால்
    தேவன் அந்த ஜனங்களின் வாழ்க்கையைக் கடினமாக்கினார்.
அவர்கள் இடறி வீழ்ந்தார்கள்.
    அவர்களுக்கு உதவ ஒருவனும் இருக்கவில்லை.
13 அந்த ஜனங்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள். அவர்கள் கர்த்தரிடம் உதவி வேண்டினார்கள்.
    தேவன் அவர்கள் துன்பங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
14 அவர்களை இருண்ட சிறைகளிலிருந்து தேவன் வெளியேற்றினார்.
    அவர்களைக் கட்டியிருந்த கயிறுகளை தேவன் அறுத்தெறிந்தார்.
15 அவரது அன்பிற்காகவும் அவர் ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்களுக்காகவும்
    கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
16 நாம் நமது பகைவரை முறியடிப்பதற்கு தேவன் உதவுகிறார்.
    அவர்களின் வெண்கலக் கதவுகளை தேவனால் உடைக்க முடியும்.
    அவர்களின் வாயிற் கதவுகளின் இரும்புக் கம்பிகளை தேவனால் சிதறடிக்க முடியும்

17 சிலர் தங்கள் பாவங்களின் காரணமாக அறிவற்றவர்களாக மாறினார்கள்.
    தங்களுடைய குற்றங்களுக்காக அவர்கள் மிகவும் துன்பப்பட்டார்கள்.
18 அந்த ஜனங்கள் உண்ண மறுத்தார்கள்.
    அவர்கள் மரிக்கும் நிலையை அடைந்தார்கள்.
19 அவர்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள்.
    கர்த்தரை நோக்கி உதவிக்கென வேண்டினார்கள்.
    அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார்.
20 தேவன் தமது வார்த்தையினால் கட்டளையிட்டு, அவர்களைக் குணமாக்கினார்.
    எனவே அந்த ஜனங்கள் கல்லறையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.
21 அவரது அன்பிற்காகவும்,
    அவர் ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்களுக்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
22 அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் பலிகளைச் செலுத்தி கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
    கர்த்தர் செய்தவற்றை மகிழ்ச்சியோடு கூறுங்கள்.

23 சில ஜனங்கள் கடலைக் கடந்து படகுகளில் சென்றார்கள்.
    பெருங்கடலின் குறுக்கே வேலைகளின் பொருட்டு அவர்கள் சென்றார்கள்.
24 கர்த்தர் செய்யக்கூடியதை அந்த ஜனங்கள் கண்டார்கள்.
    கடலில் அவர் செய்த வியக்கத்தக்க காரியங்களை அவர்கள் கண்டார்கள்.
25 தேவன் கட்டளையிட்டார், ஒரு பெருங்காற்று வீச ஆரம்பித்தது.
    அலைகள் உயரமாக, மேலும் உயரமாக எழும்பின.
26 அலைகள் அவர்களை வானத்திற்கு நேராகத் தூக்கி, மீண்டும் கீழே விழச் செய்தது.
    மனிதர்கள் தங்கள் தைரியத்தை இழக்கும்படி ஆபத்தாக புயல் வீசிற்று.
27 அவர்கள் நிலைதளர்ந்து குடிவெறியர்களைப் போல வீழ்ந்தார்கள்.
    மாலுமிகளாகிய இவர்களுடைய திறமை வீணாய்போயிற்று.
28 அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள்.
    எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள்.
    அவர்கள் துன்பங்களிலிருந்து அவர் அவர்களைக் காப்பாற்றினார்.
29 தேவன் புயலை நிறுத்தினார்.
    அவர் அலைகளை அமைதிப்படுத்தினார்.
30 கடல் அமைதியுற்றதைக் கண்டு மாலுமிகள் மகிழ்ந்தார்கள்.
    அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு தேவன் அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார்.
31 அவரது அன்பிற்காகவும்,
    அவரது ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்ளுக்காகவும் கர்த்தருக்கு நன்றிகூறுங்கள்.
32 பெரிய கூட்டத்தில் தேவனை வாழ்த்துங்கள்.
    முதிய தலைவர்கள் ஒன்றுகூடும்போது அவரை வாழ்த்துங்கள்.

2 இராஜாக்கள் 19:1-20

ராஜாவாகிய எசேக்கியா தீர்க்கதரிசியான ஏசாயாவோடு பேசியது

19 ராஜாவாகிய எசேக்கியா அவற்றைக் கேள்விப்பட்டான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு முரட்டு துணியை அணிந்தான். தனது துக்கத்தையும் பாதிப்பையும் வெளிப்படுத்தினான். பிறகு அவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான்.

அவன் ஆமோத்சின் குமாரனான தீர்க்கதரிசி ஏசாயாவிடம் அரண்மனை விசாரிப்புக்காரனான எலியாக்கீம் என்பவனையும், செயலாளனான செப்னா என்பவனையும், மூத்த ஆசாரியர்களையும் அனுப்பி வைத்தான். அவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தும் முறையில் முரட்டு ஆடையை அணிந்திருந்தனர். அவர்கள் ஏசாயாவிடம், “‘இன்று பிரச்சனைக்குரிய நாள். நாம் தவறாக உள்ளோம் என்பதைக் காட்டும் நாள். இது குழந்தைகளின் பிரசவ காலம் போல உள்ளது. ஆனால் குழந்தையைப் பெறுவதற்கோ பலமில்லை. அசீரிய ராஜாவின் தளபதியால், ஜீவனுள்ள தேவனைப்பற்றிய கெட்டசெய்திகள் சொல்லி அனுப்பப்பட்டன. உங்கள் தேவனாகிய கர்த்தர் இவை எல்லாவற்றையும் கேட்கலாம். ஒருவேளை கர்த்தர் பகைவனைத் தண்டிக்கலாம். இப்போதும் உயிரோடுள்ளவர்களுக்காக வேண்டுதல் செய்க’ என்று எசேக்கியா கூறினார்” என்றான்.

எசேக்கியா ராஜாவின் அதிகாரிகள் ஏசாயாவிடம் சென்றனர். ஏசாயா அவர்களிடம், “எசேக்கியா என்னும் உங்கள் ராஜாவிடம் இதைக் கூறுங்கள்: ‘என்னைப்பற்றி அசீரியாவின் அதிகாரிகள் வேடிக்கையாகச் சொன்னதைப்பற்றி பயப்படவேண்டாம். நான் அவனில் ஒரு ஆவியை வைப்பேன். அவன் ஒரு வதந்தியைக் கேட்பான். பிறகு அவன் தன் சொந்த நாட்டில் வாளால் கொல்லப்படும்படி செய்வேன்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்று சொன்னான்.

எசேக்கியாவை அசீரிய ராஜா மீண்டும் எச்சரிக்கிறான்

அசீரிய ராஜா லாகீசை விட்டுப் புறப்பட்டுவிட்டதை அசீரிய தளபதி கேள்விப்பட்டான். அவன் திரும்பி வந்து தனது ராஜா லிப்னாவில் சண்டையிடுவதாக அறிந்தான். அசீரிய ராஜா எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்காப்பற்றி ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டான். அது, “உனக்கு எதிராக சண்டையிட தீராக்கா வந்துள்ளான்!” என்று சொன்னது.

எனவே அசீரிய ராஜா மீண்டும் ஒரு தூதுவனை எசேக்கியாவிடம் அனுப்பினான். அவன் அவர்களிடம் செய்தியைச் சொன்னான். அவன் சொன்னது: 10 யூத ராஜாவாகிய எசேக்கியாவிடம் கூறுங்கள்:

“‘நீ நம்புகின்ற தேவன் உன்னை முட்டாளாக்குவதற்கு விடாதே. அவனோ, “அசீரிய ராஜா எருசலேம் நகரை வெல்லமாட்டான்!” என்று சொல்கிறான். 11 அசீரிய ராஜா மற்ற நாடுகளில் செய்துள்ளவற்றைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். நாங்கள் அவற்றை முழுமையாக அழித்துவிட்டோம்! நீ காப்பாற்றப்படுவாயா? இல்லை! 12 அந்நாட்டின் தெய்வங்கள் அந்நாட்டு ஜனங்களைக் காப்பற்றவில்லை. எனது முற்பிதாக்கள் அவர்களை அழித்தனர். கோசான், ஆரான், ரேத்சேப், தெலாசாரிலிருந்த ஏதேனின் ஜனங்கள் ஆகியோரையும் அழித்தனர்! 13 ஆமாத்சின் ராஜா எங்கே? அர்பாத்தின் ராஜா எங்கே? செப்பர் வாயிம் நகர ராஜா எங்கே? ஏனா ஈவா நகரங்களின் ராஜாக்களும் எங்கே? அவர்கள் அழிக்கப்பட்டார்கள்’” என்றான்.

எசேக்கியா கர்த்தரிடம் ஜெபிக்கிறான்

14 தூதுவர்களிடமிருந்து கடிதங்களை வாங்கி எசேக்கியா வாசித்துப் பார்த்தான். பிறகு கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். அக்கடிதத்தைக் கர்த்தருக்கு முன்பாக வைத்தான். 15 கர்த்தருக்கு முன்னால் ஜெபம் செய்து, “கர்த்தாவே! இஸ்ரவேலரின் தேவனே! கேருபீன்களின் மத்தியில் (அரசரைப்போன்று) வீற்றிருக்கிறவரே! நீர் ஒருவரே தேவன். பூமியின் அரசுகளுக்கெல்லாம் ராஜா. நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர். 16 கர்த்தாவே, நான் சொல்வதைக் கேளும். கர்த்தாவே, உமது கண்களை திறந்து இக்கடிதத்தைப் பாரும். சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்தித்து சொன்ன வார்த்தைகளைக் கேளும்! 17 கர்த்தாவே இது உண்மை. அசீரிய ராஜா இந்த ஜனங்களையும் இந்த நாடுகளையும் அழித்துவிட்டான்! 18 அவர்கள் அந்த ஜனங்களின் தெய்வங்களை நெருப்பிலே தூக்கியெறிந்தார்கள். ஆனால் அவை உண்மையில் தெய்வங்கள் அல்ல. அவை மனிதர்களால் செய்யப்பட்ட மரத்தாலும் கல்லாலும் ஆன சிலைகள். அதனால் தான் அசீரிய ராஜாக்கள் அவற்றை அழிக்க முடிந்தது. 19 எனவே இப்போது தேவனாகிய கர்த்தாவே அசீரிய ராஜாவிடமிருந்து எங்களைக் காப்பாற்றும். பிறகு பூமியிலுள்ள அனைத்து அரசுகளும் நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்ளும்” என்றான்.

தேவன் எசேக்கியாவிற்கு பதில் தருகிறார்.

20 அப்போது அமோத்சின் குமாரனான ஏசாயா எசேக்கியாவிற்கு ஒரு செய்தியை அனுப்பினான். அவன், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், ‘நீ அசீரிய ராஜாவாகிய சனகெரிபிற்கு எதிராக செய்த ஜெபங்களை நான் கேட்டுக்கொண்டேன்’ என்று சொன்னார்” என்றான்.

1 கொரி 9:16-27

16 நற்செய்தியைப் போதிப்பது நான் பெருமைப்படுவதற்குரிய காரணமல்ல. நற்செய்தியைப் போதிப்பது எனது கடமை. நற்செய்தியைப் போதிப்பது என்பது நான் கண்டிப்பாக செய்யவேண்டியது. அதைச் செய்யாமலிருப்பது எனக்குத் தீமையாகும். 17 நானே என் தேர்வுக்குத் தகுந்தபடி நற்செய்தியைப் போதித்தால் நான் ஒரு வெகுமதிக்குத் தகுதியுடையவனாகிறேன். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. நான் நற்செய்தியைப் போதிக்க வேண்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை நான் செய்கிறேன். 18 எனக்கு என்ன பலன் கிடைக்கிறது? நற்செய்தியை எங்கும் பரப்புவதே எனக்கு கிட்டும் வெகுமதி. எனவே நற்செய்தி எனக்கு வழங்குகிற “பலன் பெறுதல்” என்கிற உரிமையை நான் பயன்படுத்தவில்லை.

19 நான் சுதந்திரமானவன். யாருக்கும் உரியவன் அல்ல. ஆனால் எல்லா மனிதருக்கும் என்னை அடிமையாக்குகிறேன். என்னால் இயன்ற அளவுக்கு மக்களைக் காப்பதற்காக இதைச் செய்கிறேன். 20 யூதர்களிடம் நான் யூதனைப் போலானேன். யூதர்களை காப்பதற்காக இதைச் செய்தேன். நான் சட்டத்தின் ஆளுகைக்குக் கட்டுப்படாதவன்தான். ஆனால் சட்டப்படி வாழும் மக்களின் முன்பு சட்டப்படி வாழும் மனிதனாகவே நான் ஆனேன். சட்டத்தால் ஆளப்படுகிற மக்களைக் காப்பாற்றவே நான் இதைச் செய்தேன். 21 சட்டத்தின் கீழ் இல்லாத மக்களிடம் சட்டத்தைப் பின்பற்றாதவனாக நடந்துகொண்டேன். சட்டத்தின்படி நடவாத மக்களை காப்பதற்காக நான் இதைச் செய்தேன். (ஆனால் தேவனின் சட்டத்தை நான் மீறவில்லை. கிறிஸ்துவின் சட்டப்படியே நான் ஆளப்படுகிறேன்) 22 பலவீனமான மனிதரை அவர்கள் கர்த்தருக்கென்று ஆதாயம் செய்யும்படி பலவீனமானவனைப்போல நடந்துகொண்டேன். எல்லா மனிதர்களுக்கும் நான் எல்லாரையும்போல நடந்துகொண்டேன். எந்த வகையிலாவது மனிதர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென இவ்வாறு செய்தேன். 23 நற்செய்தியின் பொருட்டு இவற்றையெல்லாம் செய்கிறேன். நற்செய்தியின் ஆசீர்வாதத்தில் பங்குபெற விரும்பி இவற்றைச் செய்கிறேன்.

24 ஒரு பந்தயத்தில் எல்லா ஓட்டக்காரர்களும் ஓடுவது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். எனவே அதைப் போன்று ஓடுங்கள். வெற்றி பெறுவதற்காக ஓடுங்கள். 25 பந்தயங்களில் பங்கு பெறுகிறவர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொள்வர். ஒரு கிரீடத்தை வெல்வதற்காக இதைச் செய்வார்கள். கொஞ்ச காலத்தில் அழியக் கூடிய உலக ரீதியான கிரீடம் அது. ஆனால் நாம் பெறும் கிரீடமோ அழியாது நிலைநிற்கும். 26 குறிக்கோளோடு ஓடுகிற மனிதனைப் போன்று நானும் ஓடுகிறேன். காற்றோடு மோதாமல் இலக்கில் தாக்குகிற குத்துச் சண்டை வீரனைப்போல போரிடுகிறேன். 27 எனது சொந்த சரீரத்தையே நான் அடக்குகிறேன். அதை எனக்கு அடிமையாக்குகிறேன். நான் பிறருக்குப் போதித்த பின்பு நானே புறந்தள்ளி விழாதபடிக்கு (தேவனால் அப்புறப்படுத்தப்படாதபடிக்கு) இதைச் செய்கிறேன்.

மத்தேயு 8:1-17

தொழுநோயாளி குணமடைதல்

(மாற்கு 1:40-45; லூக்கா 5:12-16)

இயேசு குன்றின்மீதிருந்து கீழிறங்கி வந்தார். ஏராளமான மக்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழு நோயால் பீடிக்கப்பட்ட ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவின் முன்பாகப் பணிந்து, “கர்த்தாவே, நீர் விரும்பினால், என்னைக் குணப்படுத்த முடியும். அவ்வல்லமையைப் பெற்றிருக்கிறீர்” என்று சொன்னான்.

இயேசு அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணம் அடைவாயாக!” என்று சொன்னார். உடனே அந்த மனிதன் தொழுநோயிலிருந்து குணமாக்கப்பட்டான். பின் இயேசு அவனிடம், “என்ன நடந்தது என்பதை எவரிடமும் கூறாதே. ஆனால் ஆசாரியரிடம் சென்று உன்னைக் காட்டு.[a] நோயிலிருந்து குணம் அடைந்தவர்கள் செலுத்தவேண்டிய காணிக்கையை மோசே கட்டளையிட்டபடி செலுத்து. அதுவே நீ குணமடைந்ததை மக்களுக்குக் காட்டும்” என்று கூறி அனுப்பினார்.

வேலைக்காரன் குணமாகுதல்

(லூக்கா 7:1-10; யோவான் 4:43-54)

இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். இயேசு அந்நகரத்திற்குள் நுழைந்த பொழுது, படை அதிகாரி ஒருவன் வந்து அவரிடம் உதவி கேட்டுக் கெஞ்சினான். அந்த அதிகாரி, “கர்த்தாவே, என் வேலைக்காரன் மிக நோய் வாய்ப்பட்டு வீட்டில் படுத்திருக்கிறான். அவனால் சரீரத்தை அசைக்கக்கூட முடியவில்லை. மிகுந்த வலியினால் அவதிப்படுகிறான்” என்று சொன்னான்.

இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணப்படுத்துகிறேன்” என்று கூறினார்.

அதற்கு அந்த அதிகாரி, “கர்த்தாவே, நீர் என் வீட்டிற்குள் வருமளவிற்கு நான் மேலானவனல்ல. நீர் செய்யவேண்டுவதெல்லாம், என் வேலைக்காரன் குணமடையட்டும் என்று கட்டளையிடுவது மட்டுமே. அப்போது அவன் குணம் அடைவான். நான் என்னிலும் அதிகாரம் மிக்கவர் கீழ்ப் பணிபுரிகிறேன். என் அதிகாரத்திற்குக் கீழும் படைவீரர்கள் உள்ளனர். நான் ஒரு வீரனிடம் ‘போ’ என்றால், அவன் போகிறான். மற்றொரு வீரனிடம் ‘வா’ என்றால், அவன் வருகிறான். நான் என் வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால், அவன் அதைச் செய்கிறான். (அதைப் போலவே நீரும் வல்லமை பெற்றவர் என்பதை நான் அறிவேன்)” என்றான்.

10 இதைக் கேட்ட இயேசு வியப்படைந்தார். தன்னுடன் இருந்த மக்களிடம் இயேசு, “உண்மையைச் சொல்லுகிறேன், நான் பார்த்த மனிதர் அனைவரிலும், இஸ்ரவேலிலும் கூட, இவனே அதிக விசுவாசம் உடையவன். 11 பலர் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருடன் அமர்ந்து பரலோக இராஜ்யத்தில் உணவு உண்பார்கள். 12 ஆனால் பரலோக இராஜ்யத்தை அடைய வேண்டியவர்களான யூதர்களோ வெளியே இருட்டில் எறியப்படுவார்கள். அங்கு அவர்கள் பற்களைக் கடித்துக் கூக்குரலிடுவார்கள்” என்று கூறினார்.

13 பிறகு இயேசு அதிகாரியிடம், “வீட்டிற்குச் செல். நீ எவ்வாறு விசுவாசித்தாயோ அவ்வாறே உன் வேலைக்காரன் குணமாவான்” என்று சொன்னார். அந்த நேரத்திலேயே அந்த அதிகாரியின் வேலைக்காரன் குணமாக்கப்பட்டான்.

இயேசு அநேகரைக் குணமாக்குதல்

(மாற்கு 1:29-34; லூக்கா 4:38-41)

14 இயேசு பேதுருவின் வீட்டிற்குச் சென்றார். அங்குப் பேதுருவின் மாமியார் அதிகக் காய்ச்சலுடன் படுத்திருந்ததைக் கண்டார். 15 இயேசு அவளது கையைத் தொட்டார். உடனே அவளது காய்ச்சல் நீங்கியது. பின்னர் அவள் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தாள்.

16 அன்று மாலை, பிசாசு பிடித்த பல மக்களை அவரிடம் அழைத்து வந்தனர். இயேசு தமது வார்த்தையினால் அப்பிசாசுகளைத் துரத்தி, வியாதியாய் இருந்த அனைவரையும் குணமாக்கினார்.

17 “அவர் எங்களது நோய்களைத் தீர்த்தார்;
    பிணிகளை நீக்கினார்”(A)

என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது நடந்தேறும்படியாக இயேசு இவற்றைச் செய்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center