Add parallel Print Page Options

அதிகாரியின் குமாரன் குணப்படுதல்

(மத்தேயு 8:5-13; லூக்கா 7:1-10)

43 இரு நாட்கள் கழிந்ததும் இயேசு அந்நகரத்தை விட்டு கலிலேயாவுக்குச் சென்றார். 44 (இயேசு ஏற்கெனவே “ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் மதிக்கப்படமாட்டான்” என்று சொல்லியிருந்தார்) 45 அவர் கலிலேயாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் அவரை நல்ல முறையில் வரவேற்றனர். அந்த மக்கள் இயேசு எருசலேமில் பஸ்கா பண்டிகையில் செய்தவற்றையெல்லாம் நேரில் கண்டவர்கள். அந்த மக்கள் அப்பண்டிகையில் கலந்துகொண்டவர்கள்.

46 கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊருக்கு இயேசு மீண்டும் சென்றார். ஏற்கெனவே அவர் அங்குதான் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். ராஜாவின் முக்கியமான அதிகாரி ஒருவன் கப்பர்நகூமில் வசித்து வந்தான். அவனது குமாரன் நோயுற்றிருந்தான். 47 அந்த மனிதன், இயேசு இப்பொழுது யூதேயா நாட்டிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டான். ஆகையால் அவன் கானா ஊருக்குப் போய் இயேசுவைச் சந்தித்தான். கப்பர்நகூமுக்கு வந்து தன் மகனது நோயைக் குணமாக்கும்படி இயேசுவை வேண்டினான். அவனது குமாரன் ஏற்கெனவே சாகும் நிலையில் இருந்தான். 48 “நீங்கள் அற்புதங்களையும் அதிசயங்களையும் காணாவிட்டால் என்னை நம்பமாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார்.

49 அந்த அதிகாரியோ, “ஐயா, என் சிறிய குமாரன் சாவதற்கு முன் என் வீட்டிற்கு வாருங்கள்” என்று அழைத்தான்.

50 அதற்கு இயேசு, “போ, உன் குமாரன் பிழைப்பான்” என்றார்.

அந்த மனிதன் இயேசு சொன்னதில் நம்பிக்கை வைத்து தன் வீட்டிற்குத் திரும்பினான். 51 வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் குமாரன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள்.

52 “என் குமாரன் எப்போது குணமாகத் தொடங்கினான்?” என்று கேட்டான் அவன். “நேற்று ஒருமணி இருக்கும்போது உங்கள் குமாரனின் காய்ச்சல் விலகி குணமானது” என்றார்கள் வேலைக்காரர்கள்.

53 இயேசு, “உன் குமாரன் பிழைப்பான்” என்று சொன்ன நேரமும் ஒரு மணிதான் என்பதை அந்த அதிகாரி உணர்ந்துகொண்டான். ஆகையால் அவனும் அவனது வீட்டில் உள்ள அனைவரும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர்.

54 யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் இது.

Read full chapter