Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 140

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்.

140 கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும்.
    கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள்.
    அவர்கள் எப்போதும் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள்.
அவர்களது நாவுகள் விஷமுள்ள பாம்புகளைப் போன்றவை.
    அவர்களது நாவுகளின் கீழ் பாம்பின் விஷம் இருக்கும்.

கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
    அவர்கள் என்னைத் துரத்தி என்னைக் காயப்படுத்த முயல்கிறார்கள்.
அப்பெருமைக்காரர்கள் எனக்காக ஒரு கண்ணியை வைத்தார்கள்.
    என்னைப் பிடிக்க அவர்கள் ஒரு வலையை விரித்தார்கள்.
    அவர்கள் என் பாதையில் ஒரு கண்ணியை வைத்தார்கள்.

கர்த்தாவே, நீரே என் தேவன்.
    கர்த்தாவே, நீர் என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
கர்த்தாவே, நீர் என் பெலனான ஆண்டவர்.
    நீரே என் மீட்பர்.
    போரில் என் தலையைக் காக்கும் கவசத்தைப்போன்று இருக்கிறீர்.
கர்த்தாவே, அந்தத் தீய ஜனங்கள் பெற விரும்புகின்றவற்றை பெற அனுமதிக்காதிரும்.
    அவர்கள் திட்டங்கள் வெற்றியடையாமல் போகச் செய்யும்.

கர்த்தாவே, என் பகைவர்கள் வெற்றிப் பெறவிடாதேயும்.
    அந்த ஜனங்கள் தீய காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.
    ஆனால் அத்தீமைகள் அவர்களுக்கே நேரிடுமாறு செய்யும்.
10 நெருப்புத் தழலை அவர்கள் தலையின் மீது ஊற்றும்.
    என் பகைவர்களை நெருப்பில் வீசும்.
    அவர்களைக் குழியில் தள்ளும்,
    அவர்கள் மீண்டும் வெளியேறி வராதபடி செய்யும்.
11 கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும்.
    அத்தீயோருக்குத் தீமைகள் நிகழச் செய்யும்.

12 கர்த்தர் ஏழைகளைத் தக்கபடி நியாயந்தீர்ப்பார் என நான் அறிவேன்.
    தேவன் திக்கற்றோருக்கு உதவுவார்.
13 கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
    நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள்.

சங்கீதம் 142

தாவீதின் பாடல்களில் ஒன்று. அவன் குகையிலிருந்தபோது செய்த ஜெபம்.

142 நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன்.
    நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்.
நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன்.
    நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன்.
என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள்.
    நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன்.
    ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார்.
நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை.
    எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை.

எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன்.
    கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம்.
    கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும்.
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர்.
    என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள்.
இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும்.
    அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
    நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள்.

சங்கீதம் 141

தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று.

141 கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மைக் கூப்பிடுகிறேன்.
    நான் உம்மிடம் ஜெபம் செய்யும்போது, எனக்குச் செவிகொடும்.
    விரைவாக எனக்கு உதவும்!
கர்த்தாவே, என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும்.
    எரியும் நறுமணப் பொருள்களின் பரிசைப் போலவும், மாலையின் பலியாகவும் அது இருக்கட்டும்.

கர்த்தாவே, நான் கூறுபவற்றில் கட்டுப்பாட்டோடிருக்க எனக்கு உதவும்.
    நான் கூறுபவற்றில் கவனமாக இருக்க எனக்கு உதவும்.
தீயவற்றை செய்ய நான் விரும்பாதிருக்கும்படி பாரும்.
    தீயோர் தவறுகளைச் செய்யும்போது அவர்களோடு சேராதிருக்குமாறு என்னைத் தடுத்துவிடும்.
    தீயோர் களிப்போடு செய்யும் காரியங்களில் நான் பங்குகொள்ளாதிருக்கும்படி செய்யும்.

நல்லவன் ஒருவன் என்னைத் திருத்த முடியும்.
    அது அவன் நற்செயலாகும்.
உம்மைப் பின்பற்றுவோர் என்னை விமர்சிக்கட்டும்.
    அது அவர்கள் செய்யத்தக்க நல்ல காரியமாகும்.
    நான் அதை ஏற்றுக்கொள்வேன்.
    ஆனால் தீயோர் செய்யும் தீயவற்றிற்கெதிராக நான் எப்போதும் ஜெபம் செய்கிறேன்.
அவர்களின் ராஜாக்கள் தண்டிக்கப்படட்டும்.
    அப்போது நான் உண்மை பேசினேன் என்பதை ஜனங்கள் அறிவார்கள்.
ஜனங்கள் நிலத்தைத் தோண்டி உழுவார்கள், சேற்றை எங்கும் பரப்புவார்கள்.
    அவ்வாறே கல்லறையில் எங்கள் எலும்புகளும் எங்கும் பரந்து கிடக்கும்.

என் ஆண்டவராகிய கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மை நோக்கிப் பார்ப்பேன்.
    நான் உம்மை நம்புகிறேன்.
    தயவுசெய்து என்னை மரிக்கவிடாதேயும்.
தீயோர் எனக்குக் கண்ணிகளை வைத்தார்கள்.
    அவர்கள் கண்ணிகளில் நான் விழாதபடி செய்யும்.
    அவர்கள் என்னைக் கண்ணிக்குள் அகப்படுத்தாதபடி பாரும்.
10 நான் பாதிக்கப்படாது நடந்து செல்கையில் கெட்ட
    ஜனங்கள் தங்கள் கண்ணிக்குள் தாங்களே விழட்டும்.

சங்கீதம் 143

தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று.

143 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
    என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
    நீர் என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
    நீர் உண்மையாகவே நல்லவரும் நேர்மையானவருமானவர் என்பதை எனக்குக் காட்டும்.
உமது ஊழியனாகிய என்னை நியாயந்தீர்க்காதேயும்.
    என் ஆயுள் முழுவதும் ஒருபோதும் களங்கமற்றவன் என நான் நியாயந்தீர்க்கப்படமாட்டேன்.
ஆனாலும் என் பகைவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
    அவர்கள் என் உயிரை புழுதிக்குள் தள்ளிவிட்டார்கள்.
    அவர்கள் நீண்ட காலத்திற்கு முன் மரித்தோரைப்போன்று என்னை இருண்ட கல்லறைக்குள் தள்ளுகிறார்கள்.
நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிகிறேன்.
    என் தைரியத்தை நான் இழந்துகொண்டிருக்கிறேன்.

ஆனால் பல்லாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காரியங்களை நான் நினைவுக்கூருகிறேன்.
    நீர் செய்த பலக் காரியங்களையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
    உமது மிகுந்த வல்லமையால் நீர் செய்தக் காரியங்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன்!
கர்த்தாவே, நான் என் கரங்களைத் தூக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
    வறண்ட நிலம் மழைக்காக எதிர் நோக்கியிருப்பதைப்போல நான் உமது உதவிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

விரையும், கர்த்தாவே, எனக்கு பதில் தாரும்.
    நான் என் தைரியத்தை இழந்தேன்.
    என்னிடமிருந்து அகன்று திரும்பிவிடாதேயும்.
    கல்லறையில் மாண்டுகிடக்கும் மரித்தோரைப்போன்று நான் மரிக்கவிடாதேயும்.
கர்த்தாவே, இக்காலையில் உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
    நான் உம்மை நம்புகிறேன்.
    நான் செய்யவேண்டியவற்றை எனக்குக் காட்டும்.
    நான் என் உயிரை உமது கைகளில் தருகிறேன்.
கர்த்தாவே, நான் பாதுகாப்பு நாடி உம்மிடம் வருகிறேன்.
    என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
10 நான் செய்யவேண்டுமென நீர் விரும்புகின்றவற்றை எனக்குக் காட்டும்.
    நீரே என் தேவன்.

11 கர்த்தாவே, என்னை வாழவிடும்.
    அப்போது ஜனங்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
நீர் உண்மையாகவே நல்லவரென்பதை எனக்குக் காட்டும்.
    என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
12 கர்த்தாவே, உமது அன்பை எனக்குக் காட்டும்.
    என்னைக் கொல்ல முயல்கிற என் பகைவர்களைத் தோற்கடியும்.
    ஏனெனில் நான் உமது ஊழியன்.

1 சாமுவேல் 13:19-14:15

19 இஸ்ரவேலர்கள் யாருக்கும் இரும்பு ஆயுதங்களைச் செய்யத் தெரியாது. இஸ்ரவேலில் இரும்புக் கொல்லர்கள் யாரும் இல்லை. பெலிஸ்தர்கள் அவர்களுக்கு ஆயுதம் செய்யக் கற்றுக்கொடுக்கவில்லை. அவர்கள் கத்தி, வாள், ஈட்டிகளை செய்துவிடக் கூடாதே என்று அஞ்சினார்கள். 20 பெலிஸ்தர் மட்டுமே தங்கள் ஆயுதங்களைக் கூர்படுத்த அறிந்திருந்தனர். இஸ்ரவேலர் தங்கள் கடப்பாரை, மண் வெட்டி, முக்கூருள்ள வேலாயுதங்கள், கோடரி, தாற்றுக்கோல் போன்றவற்றை கூர்மையாக்க பெலிஸ்தரிடம் சென்றனர். 21 பெலிஸ்தர்களின் கொல்லர்கள் கடப்பாரை, மண்வெட்டியை கூர்மைப்படுத்த 1/3, 1/6 சேக்கல் வெள்ளியை வசூலித்தனர். 22 எனவே, போரிடும் நாளில் சவுலோடு சென்ற இஸ்ரவேலர்களின் கையில் வாளோ அல்லது கேடயமோ எதுவும் இல்லை. சவுலிடமும் அவன் குமாரன் யோனத்தானிடமும் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.

23 ஒரு பெலிஸ்தர் சேனை மிக்மாசியிலிருந்து போகிற மலைப்பாதை மட்டும் காத்துக் கொண்டிருந்தது.

யோனத்தான் பெலிஸ்தர்களைத் தாக்குகிறான்

14 அன்று தன் ஆயுதங்களைத் தூக்கி வந்த இளைஞனோடு சவுலின் குமாரனாகிய யோனத்தான், பேசினான், “பள்ளத்தாக்கின் இன்னொரு பக்கத்தில் உள்ள பெலிஸ்தர்களின் முகாமிற்கு போவோம்” என்றான். தந்தையிடம் சொல்லாமல் போனான்.

சவுல் மலையோரத்தில் மிக்ரோனில் ஒரு மாதுளை மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தான். அதனருகில் போரடிக்கிற களம் இருந்தது. அவனோடு 600 பேர் இருந்தனர். அந்நாட்களில் அகியா என்ற ஒருவன் இருந்தான். இப்போது அகியா ஆசாரியனாயிருந்தான். அகியா ஏபோத்தைத் தரித்து ஆசாரிய ஊழியம் செய்துவந்தான். அகியா என்பவன் இக்கபோத்தின் சகோதரனான அகிதூபின் குமாரன். இக்கபோத் பினெகாசின் குமாரன். பினெகாசு ஏலியின் குமாரன். சீலோவில் முன்பு ஏலி ஆசாரியனாக இருந்தான்.

யோனத்தான் தனியாக விட்டுப் போயிருந்ததை யாரும் அறியவில்லை. அவன் சென்ற வழியில் இரு பக்கமும் போசே, சேனே எனும் இரு பெரும் பாறைகள் இருந்தன. இந்தக் கணவாய் வழியாகச் செல்ல யோனத்தான் திட்டமிட்டான். இந்தப் பாறைகளில் ஒன்று மிக்மாசை நோக்கியும் இன்னொன்று கிபியாவை நோக்கியும் இருந்தன.

யோனத்தான் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்து வந்த இளம் உதவியாளனிடம், “வா, நாம் அந்நியரின் முகாமுக்குப் போவோம், அவர்களைத் தோற்கடிக்க ஒருவேளை கர்த்தர் நமக்கு உதவலாம்! கர்த்தரை யாராலும் தடுக்க முடியாது. நமது எண்ணிக்கை அதிகமோ அல்லது குறைவோ அது காரியமல்ல” என்றான்.

அதற்கு ஆயுதங்களை சுமந்து வந்த இளம் உதவியாளன் “உங்களுக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்யுங்கள், நான் எப்போதும் உங்களோடு இருப்பேன்” என்றான்.

அப்பொழுது யோனத்தான், “சரி போவோம், பள்ளத்தாக்கைக் கடந்து பெலிஸ்தர்களின் எல்லைக்குள் செல்வோம். நம்மை அவர்கள் பார்க்கும்படி செய்வோம். அவர்கள், ‘நாங்கள் வரும்வரை அங்கேயே நில்லுங்கள்’ என்றால் நாம் அங்கேயே நிற்போம். மேலே செல்லமாட்டோம். 10 ஆனால் அவர்கள், ‘இங்கே வாருங்கள்’ என்றால் போவோம். ஏனென்றால் கர்த்தர் நாம் அவர்களைத் தோற்கடிக்க அனுமதிக்கிறார் என்பதற்கு இது தேவனுடைய அடையாளமாகும்” என்றான்.

11 பெலிஸ்தர் பார்வையில் படுமாறு யோனத்தானும், இளம் உதவியாளனும் நடந்தனர். அவர்களோ, “பார்! இஸ்ரவேலர்கள் துவாரங்களில் ஒளிந்திருந்து வெளியே வருகிறார்கள்” என்றனர். 12 கோட்டைக்குமேலிருந்த பெலிஸ்தர், “இங்கே வாருங்கள், உங்களுக்குப் பாடம் கற்பிக்கிறோம்!” என அவர்களை நோக்கிக் கூவினர்.

யோனத்தான் தன் உதவியாளரிடம், “மலைக்கு என்னைப் பின்தொடர்ந்து வா, கர்த்தர் பெலிஸ்தர்களை தோற்கடிக்க அடையாளம் காட்டினார்!” என்றான்.

13-14 யோனத்தான் தன் கைகளாலும், கால்களாலும் பற்றியபடி மலைமீது ஏறினான். உதவியாளன் பின்னால் ஏறினான். அவர்கள் இருவரும் பெலிஸ்தர்களைத் தாக்கி, முதலில் 20 பேரை கொன்றனர். முன்னால் வருகின்றவர்களை யோனத்தானும், பின்னால் வருகிறவரை உதவியாளனும் கொன்றனர்.

15 வயலிலும், கோட்டையிலும், முகாமிலும் உள்ள வீரர்கள் இவர்களைக் கண்டு பயந்தனர்! பூமி அதிர்ந்தது. இதைக் கண்டு மிகுந்த தைரியமுள்ள வீரர்களும் மென்மேலும் பயந்தனர்.

அப்போஸ்தலர் 9:1-9

சவுல் மனம் மாறுதல்

சவுல் கர்த்தரின் சீஷரைப் பயமுறுத்தவும், கொல்லவும் எப்பொழுதும் முயன்று கொண்டிருந்தான். எனவே அவன் தலைமை ஆசாரியனிடம் சென்றான். தமஸ்கு நகரத்தில் ஜெப ஆலயங்களிலுள்ள யூதர்களுக்குக் கடிதங்களை எழுதுமாறு அவரைக் கேட்டான். தமஸ்குவில் கிறிஸ்துவின் வழியைப் பின்பற்றுகிற சீஷர்களைக் கண்டுபிடிக்கும் அதிகாரத்தை அவனுக்குக் கொடுக்குமாறு தலைமை ஆசாரியரைக் கேட்டான். அங்கு ஆணோ, பெண்ணோ, விசுவாசிகள் எவரையேனும் கண்டால் அவன் அவர்களைக் கைதுசெய்து எருசலேமிற்குக் கொண்டு வர விரும்பினான்.

எனவே சவுல் தமஸ்குவிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நகரத்திற்கு அருகே வந்தபோது, அவனைச் சுற்றிலும் மிகுந்த பிரகாசமான ஒளி வானிலிருந்து திடீரென வெளிச்சமிட்டது. சவுல் தரையில் விழுந்தான். அவன் தன்னோடு பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். “சவுலே, சவுலே! நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய்?” என்றது அச்சத்தம்.

சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான்.

அந்தச் சத்தம் பதிலாக, “நான் இயேசு, நீ புண்படுத்த நினைப்பது என்னையே. நீ எழுந்து நகரத்துக்குள் போ. அங்கிருக்கும் ஒருவர் நீ செய்ய வேண்டியதை உனக்குக் கூறுவார்” என்றது.

சவுலோடு பயணம் செய்த மனிதர் நின்றனர். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மனிதர் சத்தத்தைக் கேட்டனர். ஆனால் யாரையும் பார்க்கவில்லை. சவுல் தரையிலிருந்து எழுந்தான். அவன் கண்களைத் திறந்தபோது அவனால் பார்க்க முடிய வில்லை. எனவே சவுலோடு வந்த மனிதர்கள் அவன் கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றனர். மூன்று நாட்கள் சவுலால் பார்க்க முடியவில்லை. அவன் எதையும் உண்ணவோ, எதையும் பருகவோ இல்லை.

லூக்கா 23:26-31

சிலுவையில் இயேசு

(மத்தேயு 27:32-44; மாற்கு 15:21-32; யோவான் 19:17-27)

26 இயேசுவைக் கொல்லும்பொருட்டு வீரர்கள் வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது வயல்களிலிருந்து நகருக்குள் ஒரு மனிதன் வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். அவன், சிரேனே நகரைச் சேர்ந்தவன். இயேசுவின் சிலுவையைச் சுமந்து அவரைத் தொடர்ந்து வருமாறு சீமோனை வீரர்கள் வற்புறுத்தினார்கள்.

27 பலரும் இயேசுவைத் தொடர்ந்தனர். சில பெண்கள் வருந்தி அழுதனர். அவர்கள் இயேசுவுக்காகக் கவலைப்பட்டனர். 28 ஆனால் இயேசு திரும்பி அப்பெண்களை நோக்கி, “எருசலேமின் பெண்களே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காவும் அழுங்கள். 29 ஏனெனில் பிள்ளைகளைப் பெற முடியாத பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்றும் பிள்ளைகள் இல்லாத பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்றும் மக்கள் பேசப்போகும் காலம் வரும். 30 அப்போது மக்கள் மலையை நோக்கி, ‘எங்கள் மேல் விழு’ என்பார்கள். சிறு குன்றுகளை நோக்கி, ‘எங்களை மறைத்துக்கொள்’ என்று சொல்லத் தொடங்குவார்கள்.(A) 31 வாழ்க்கை நன்றாக இருக்கும்போது மக்கள் இவ்வாறு நடந்துகொண்டால், தீமையான காலம் வரும்போது என்ன நிகழும்?”[a] என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center