Book of Common Prayer
நினைவுகூரும் நாளுக்கான தாவீதின் பாடல்.
38 கர்த்தாவே, நீர் கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும்.
என்னை ஒழுங்குபடுத்துகையில் கோபமடையாதேயும்.
2 கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர்.
உமது அம்புகள் என்னை ஆழமாகத் தாக்கியுள்ளன.
3 நீர் என்னைத் தண்டித்தீர்.
இப்போது என் உடல் முழுவதும் புண்களாயிருக்கின்றன.
நான் பாவம் செய்ததினால், நீர் என்னைத் தண்டித்தீர்.
என் எலும்புகள் எல்லாம் வலிக்கின்றன.
4 தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன்.
என் தோளில் அக்குற்றங்கள் பாரமாக உள்ளன.
5 நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன்.
இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன.
6 நான் குனிந்து வளைந்தேன்.
நாள் முழுவதும் நான் வருத்தமடைந்திருக்கிறேன்.
7 காய்ச்சலினாலும் வலியினாலும்
என் உடல் முழுவதும் துன்புறுகிறது.
8 நான் பெரிதும் தளர்ந்து போகிறேன்.
வலியினால் முனகவும், அலறவும் செய்கிறேன்.
9 என் ஆண்டவரே, என் அலறலின் சத்தத்தைக் கேட்டீர்.
என் பெருமூச்சு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
10 என் காய்ச்சலினால் என் பெலன் மறைந்தது.
என் பார்வை பெரிதும் மங்கிப் போயிற்று.
11 என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை.
என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை.
12 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீய காரியங்களைச் சொல்கிறார்கள்.
பொய்யையும், வதந்திகளையும் அவர்கள் பரப்புகிறார்கள்.
என்னைக் குறித்து எப்போதும் பேசுகிறார்கள்.
13 நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன்.
நான் பேசமுடியாத ஊமையைப் போலானேன்.
14 நான், ஒருவனைக் குறித்தும் பிறர் கூறுபவற்றைக் கேட்க முடியாத மனிதனைப் போலானேன்.
என் பகைவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க என்னால் இயலவில்லை.
15 கர்த்தாவே எனக்கு ஆதரவளியும்.
எனது தேவனாகிய ஆண்டவரே, நீர் எனக்காகப் பேச வேண்டும்.
16 நான் ஏதேனும் பேசினால், என் பகைவர்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள்.
நான் நோயுற்றிருப்பதை அவர்கள் காண்பார்கள்.
செய்த தவற்றிற்கு நான் தண்டனை அனுபவிப்பதாக அவர்கள் கூறுவார்கள்.
17 தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன்.
என் நோவை என்னால் மறக்க இயலாது.
18 கர்த்தாவே, நான் செய்த தீயக் காரியங்களைக் குறித்து உம்மிடம் பேசினேன்.
என் பாவங்களுக்காகக் கவலையடைகிறேன்.
19 என் பகைவர்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள்.
அவர்கள் பல, பல பொய்களைக் கூறியுள்ளார்கள்.
20 என் பகைவர்கள் எனக்குத் தீயக் காரியங்களைச் செய்தனர்.
ஆனால் நான் அவர்களுக்கு நல்லவற்றையே செய்தேன்.
நான் நல்லவற்றை மட்டுமே செய்ய முயன்றேன், ஆனால் அந்த ஜனங்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்.
21 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
என் தேவனே, என் அருகே தங்கியிரும்.
22 விரைந்து வந்து எனக்கு உதவும்!
என் தேவனே, என்னை மீட்டருளும்.
டாலெத்
25 நான் விரைவில் மரிப்பேன்.
கர்த்தாவே, கட்டளையிடும், என்னை வாழவிடும்.
26 நான் என் வாழ்க்கையைப்பற்றி உமக்குக் கூறினேன்.
நீர் எனக்கு பதிலளித்தீர்.
இப்போது, உமது சட்டங்களை எனக்குக் கற்பியும்.
27 கர்த்தாவே, உமது சட்டங்களை நான் புரிந்துகொள்ள எனக்கு உதவும்.
நீர் செய்த அற்புதமான காரியங்களை நான் படிக்கட்டும்.
28 நான் வருத்தமடைந்து களைத்துப்போனேன்.
நீர் கட்டளையிடும், என்னை மீண்டும் பலப்படுத்தும்.
29 கர்த்தாவே, நான் பொய்யாக வாழாதபடிச் செய்யும்.
உமது போதனைகளால் என்னை வழிநடத்தும்.
30 கர்த்தாவே, நான் உம்மிடம் நேர்மையாயிருப்பதைத் தேர்ந்தெடுத்தேன்.
உமது ஞானமுள்ள முடிவுகளை நான் கவனமாகக் கற்கிறேன்.
31 கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையில் உறுதியாயிருக்கிறேன்.
நான் வெட்கமடையவிடாதிரும்.
32 நான் மகிழ்ச்சியோடு உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை மகிழ்ச்சியாக்கும்.
எ
33 கர்த்தாவே, உமது சட்டங்களை எனக்குப் போதியும்,
நான் அவற்றைப் பின்பற்றுவேன்.
34 நான் புரிந்துகொள்ள உதவும்.
நான் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
நான் அவற்றிற்கு முற்றிலும் கீழ்ப்படிவேன்.
35 கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும்.
நான் அவ்வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன்.
36 செல்வந்தனாவதைப்பற்றி நினைப்பதைப் பார்க்கிலும் உமது
உடன்படிக்கையைப்பற்றி நினைக்க எனக்கு உதவும்.
37 கர்த்தாவே, பயனற்ற காரியங்களைப் பார்க்கவிடாதேயும்,
உமது வழியில் வாழ எனக்கு உதவும்.
38 ஜனங்கள் உம்மை மதிக்கும்படி உமது
ஊழியனுக்கு உறுதியளித்தபடியே செய்யும்.
39 கர்த்தாவே, நான் அஞ்சும் வெட்கத்தை எடுத்துப்போடும்.
உமது ஞானமுள்ள முடிவுகள் நல்லவை.
40 பாரும், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
எனக்கு நல்லவராக இருந்து, என்னை வாழவிடும்.
வௌ
41 கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டும்.
நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
42 அப்போது என்னை அவமானப்படுத்திய ஜனங்களுக்கு நான் பதிலளிக்கமுடியும்.
கர்த்தாவே, நீர் கூறும் காரியங்களை நான் உண்மையாகவே நம்புகிறேன்.
43 உமது உண்மையான போதனைகளை நான் எப்போதும் பேசட்டும்.
கர்த்தாவே, நான் உமது ஞானமுள்ள முடிவுகளை சார்ந்திருக்கிறேன்.
44 கர்த்தாவே, என்றென்றைக்கும் எப்போதும் உமது போதனைகளைப் பின்பற்றுவேன்.
45 நான் விடுதலையாவேன், ஏனெனில் நான் உமது
சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.
46 நான் உமது உடன்படிக்கையை ராஜாக்களோடு கலந்து ஆலோசிப்பேன்.
அவர்கள் என்னை ஒருபோதும் அவமானப்படுத்தமாட்டார்கள்.
47 கர்த்தாவே, உமது கட்டளைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.
நான் அக்கட்டளைகளை நேசிக்கிறேன்.
48 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளைத் துதிக்கிறேன்.
அவற்றை நேசிக்கிறேன். நான் அவற்றைக் கற்பேன்.
சுவரின் மேல் எழுதிய கை
5 ராஜாவாகிய பெல்ஷாத்சார் தனது அதிகாரிகளில் 1,000 பேருக்கு விருந்து கொடுத்தான். ராஜா அவர்களோடு திராட்சைரசம் குடித்துக் கொண்டிருந்தான். 2 பெல்ஷாத்சார் திராட்சைரசம் குடித்துக்கொண்டிருக்கும்போதே அவன் தனது வேலைக்காரர்களுக்குத் தங்கத்தாலும் வெள்ளியாலுமான கிண்ணங்களைக் கொண்டுவரக் கட்டளையிட்டான். இந்தக் கிண்ணங்கள் அவனது தந்தையான நேபுகாத்நேச்சாரால் எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுத்துக் கொண்டு வரப்பட்டவை. ராஜாவாகிய பெல்ஷாத்சார், தனது பிரபுக்களும், மனைவிகளும், அடிமைப் பெண்களும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடிக்க வேண்டும் என்று விரும்பினான். 3 எனவே அவர்கள் எருசலேமின் தேவாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டக் கிண்ணங்களைக் கொண்டு வந்தனர். ராஜாவும், அவனது அதிகாரிகளும், மனைவிகளும், அடிமைப் பெண்களும் அவற்றில் குடித்தனர். 4 அவர்கள் குடித்துக்கொண்டே தங்கள் விக்கிரக தெய்வங்களைப் போற்றினார்கள். அவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல், மண் போன்றவற்றால் செய்யப்பட்ட வெறும் சிலைகளைப் போற்றினார்கள்.
5 பிறகு திடீரென்று ஒரு மனிதக் கை தோன்றி சுவரில் எழுதத் தொடங்கியது. விரல்கள் சுவரிலுள்ள சாந்துபூச்சின் மீது எழுதிற்று. அந்தக் கை ராஜாவின் அரண்மனையில் விளக்குக்கு எதிராயிருந்த சுவரில் எழுதியது. ராஜா அந்தக் கை எழுதும்போது கவனித்துக்கொண்டிருந்தான்.
6 ராஜாவாகிய பெல்ஷாத்சார் மிகவும் பயந்தான். அவனது முகம் பயத்தால் வெளிறிற்று. அவனது முழங்கால்கள் நடுங்கி இடித்துக்கொண்டன. அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. ஏனென்றால் அவனது கால்கள் அவ்வளவு பலவீனமாக இருந்தன. 7 ராஜா ஜோசியர்களையும், கல்தேயர்களையும் தன்னிடம் வருமாறு அழைத்தான். அவன் அந்த ஞானிகளிடம், “இந்த எழுத்தை வாசித்து இதன் பொருளை எனக்கு விளக்கும் எவருக்கும் நான் பரிசளிப்பேன். அவனுக்கு இரத்தாம்பர ஆடை அணிவித்து, அவன் கழுத்தில் பொன்மாலை அணிவிப்பேன். நான் அவனை எனது இராஜ்யத்தில் மூன்றாவது நிலையில் உள்ள ஆளுநராக ஆக்குவேன்” என்றான்.
8 எனவே, ராஜாவின் எல்லா ஞானிகளும் உள்ளே வந்தனர். அவர்களால் அந்த எழுத்துக்களை வாசிக்கமுடியவில்லை. 9 பெல்ஷாத்சாரின் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். அதோடு ராஜா மேலும் பயந்து கவலைப்பட்டான். அவனது முகம் அச்சத்தால் வெளிறியது.
10 பிறகு ராஜாவின் தாய் விருந்து நடைபெற்ற அந்த இடத்திற்கு வந்தாள். அவள் ராஜா மற்றும் அவனது அதிகாரிகளின் குரல்களைக் கேட்டபின்: “ஓ ராஜாவே நீர் என்றென்றும் வாழ்க. நீர் பயப்பட வேண்டாம். உனது முகம் பயத்தால் வெளிறவேண்டாம். 11 உனது இராஜ்யத்தில் ஒருவன் இருக்கிறான். அவனிடம் பரிசுத்தமான தேவர்களின் ஆவி உள்ளது. உன் தந்தையின் நாட்களில் அவனால் பல இரகசியங்களைச் சொல்லமுடிந்தது. அவன் தன்னைச் சுறுசுறுப்பும் ஞானமும் உள்ளவனாகக் காட்டினான். அவன் இவ்விஷயங்களில் தேவர்களைப் போன்றிருந்தான். உன் தந்தையான நேபுகாத்நேச்சார் அந்த மனிதனை ஞானிகளுக்கெல்லாம் பொறுப்பதிகாரியாக வைத்திருந்தார். அவன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் ஆண்டான். 12 நான் சொல்லிக்கொண்டிருக்கிற அவனுடைய பெயர் தானியேல். ராஜா அவனுக்கு பெல்தெஷாத்சார் என்று பெயரிட்டார். பெல்தெஷாத்சார் மிக சுறுசுறுப்புடையவன். அவனுக்குப் பல செய்திகள் தெரியும். அவனால் கனவின் பலன்களும், இரகசியங்களின் விளக்கமும், கடினமான விஷயங்களுக்குத் தீர்வுகளும் தெரியும். தானியேலைக் கூப்பிடு, அவனால் சுவர் மேல் எழுதியுள்ளவற்றுக்கு விளக்கம் சொல்லமுடியும்” என்றாள்.
தேவனின் மக்கள் உலகை எதிர்த்து வெற்றி பெறுகிறார்கள்
5 இயேசுவே கிறிஸ்து என நம்புகிற மக்கள் தேவனின் பிள்ளைகளாவர். பிதாவை நேசிக்கிற மனிதன் தேவனின் பிள்ளைகளையும் நேசிக்கிறான். 2 நாம் தேவனின் பிள்ளைகளை நேசிக்கிறோம் என்பதை எவ்வாறு அறிவோம்? தேவனை நேசிப்பதாலும், அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதினாலும் அறிகிறோம். 3 தேவனை நேசித்தல் என்பது அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் என்று பொருள்படும். தேவனின் கட்டளைகள் நமக்கு மிகவும் கடினமானவையல்ல. 4 ஏன்? தேவனின் பிள்ளையாகிய ஒவ்வொரு மனிதனும் உலகை எதிர்த்து வெல்கிற ஆற்றல் பெற்றிருக்கிறான். 5 நமது விசுவாசமே உலகத்திற்கு எதிராக வென்றது. எனவே உலகை எதிர்த்து வெற்றியடைகிற மனிதன் யார்? இயேசு தேவனின் குமாரன் என்று நம்புகிற ஒருவனே ஆவான்.
தேவன் நமக்கு அவரது குமாரனைக் குறித்துக் கூறினார்
6 இயேசு கிறிஸ்துவே நம்மிடம் வந்தவர். இயேசு நீரோடும் இரத்தத்தோடும் வந்தவர். இயேசு நீரினால் மட்டுமே வரவில்லை. இல்லை, இயேசு நீரினாலும் இரத்தத்தினாலும் வந்தார். இது உண்மையென்று நமக்கு ஆவியானவர் கூறுகிறார். ஆவியானவர் உண்மையாவார். 7 எனவே இயேசுவைக் குறித்து நமக்குக் கூறும் மூன்று சாட்சிகள் இருக்கின்றன. 8 ஆவி, நீர், இரத்தம் இந்த மூன்று சாட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன.
9 சிலவற்றை உண்மையானவையாக மக்கள் கூறும்போது அவற்றை நம்புகிறோம். ஆனால் தேவன் சொல்வது அதைக் காட்டிலும் முக்கியமானது. இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். அவரது சொந்த குமாரனைக் குறித்து உண்மையை அவர் நமக்குக் கூறினார். 10 தேவனின் குமாரனை நம்புகிற மனிதன் தேவன் நமக்குக் கூறிய உண்மையை தனக்குள் கொண்டிருக்கிறான். தேவனை நம்பாத மனிதனோ தேவனைப் பொய்யராக்குகிறான். ஏன்? தேவன் அவரது குமாரனைக் குறித்துக் கூறிய செய்திகளை அம்மனிதன் நம்பவில்லை. 11 இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். தேவன் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுத்துள்ளார். மேலும் இந்த நித்திய ஜீவன் அவரது குமாரனில் உள்ளது. 12 குமாரனைக் கொண்டிருக்கிற மனிதனுக்கு உண்மையான ஜீவன் உண்டு. ஆனால் தேவனின் குமாரனைக் கொண்டிராத ஒருவன் அந்த ஜீவனைக் கொண்டிருப்பதில்லை.
சீமோனின் மாமி குணமடைதல்
(மத்தேயு 8:14-17; மாற்கு 1:29-34)
38 இயேசு ஜெப ஆலயத்தில் இருந்து சென்றார். அவர் சீமோனின்[a] வீட்டிற்குச் சென்றார். சீமோனின் மாமியார் மிகவும் உடல் நலமின்றி இருந்தாள். அவளுக்கு கடும் காய்ச்சலாய் இருந்தது. அவளுக்கு உதவி செய்யும் பொருட்டு எதையேனும் செய்யும்படியாக மக்கள் இயேசுவை வேண்டினர். 39 இயேசு அவளருகே சென்று நின்று, அவள் நோயைக் குணமாகும்படியாய் கட்டளையிட்டார். நோய் அவளை விட்டு நீங்கியது. அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை புரிய ஆரம்பித்தாள்.
பலரையும் குணமாக்குதல்
40 கதிரவன் மறையும் சமயத்தில் மக்கள் தம் நோயுற்ற நண்பர்களை இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவர்கள் வெவ்வேறு வகை நோய்களால் துன்புற்றனர். ஒவ்வொரு நோயுற்ற மனிதனையும் அவரது கைகளால் தொட்டு இயேசு குணமாக்கினார். 41 பிசாசின் அசுத்த ஆவிகள் பலரிடமிருந்து வெளியேறின. அவை “நீர் தேவனுடைய குமாரன்” எனக் கூக்குரலிட்டன. ஆனால் அவை பேசாமல் இருக்கும்படியாக அந்த ஆவிகளை இயேசு வன்மையாகக் கண்டித்தார். இயேசுவே கிறிஸ்து என்று அவை அறிந்திருந்தன.
பிற நகரங்களுக்கு இயேசு செல்லுதல்
(மாற்கு 1:35-39)
42 தான் தனித்திருக்கும் பொருட்டு மறு நாள் இயேசு ஓர் இடத்திற்குச் சென்றார். மக்கள் இயேசுவின் வருகைக்காகப் பார்த்திருந்தார்கள். கடைசியில் அவர் இருந்த இடத்தைக் கண்டார்கள். மக்கள் இயேசுவைக் கண்டபோது அவர் போகாமல் இருக்கும்படியாகத் தடுக்க முற்பட்டனர். 43 ஆனால் இயேசு அவர்களை நோக்கி, “தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை நான் வேறு நகரங்களிலும் சொல்ல வேண்டும். அதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார்.
44 பின்னர் யூதேயாவில் உள்ள ஜெப ஆலயங்களில் இயேசு போதித்தார்.
2008 by World Bible Translation Center