Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 16-17

தாவீதின் மிக்தாம் என்னும் பாடல்.

16 தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும்.
நான் கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நீர் என் ஆண்டவர்,
    என்னிடமுள்ள நற்காரியம் ஒவ்வொன்றும் உம்மிடமிருந்து வருகிறது” என்றேன்.
பூமியிலுள்ள தன் சீடருக்கு கர்த்தர் அற்புதமானவற்றைச் செய்கிறார்.
    அந்த ஜனங்களை உண்மையாய் நேசிப்பதை கர்த்தர் காட்டுகிறார்.
பிற தெய்வங்களைத் தொழுதுகொள்ள ஓடும் ஜனங்களோ வேதனைக்கு ஆளாவார்கள்.
    அவ்விக்கிரகங்களுக்கு அவர்கள் படைக்கும் இரத்த பலிகளில் நான் பங்கு கொள்ளமாட்டேன்.
    அவ்விக்கிரகங்களின் பெயர்களையும் கூட நான் கூறமாட்டேன்.

என் பங்கும் பாத்திரமும் கர்த்தரிடமிருந்தே வரும்.
    கர்த்தாவே, எனக்கு உதவும், என் பங்கை எனக்குத் தாரும்.
என் பரம்பரைச் சொத்து அற்புதமானது.
    நான் பெற்ற பங்கு மிக அழகானது.

எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன்.
    இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன.
என் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.
    அவர் என் வலதுபுறத்திலிருப்பதால் நிச்சயமாய் விலகமாட்டேன்.
என் இருதயமும் ஆத்துமாவும் மிகவும் மகிழும்.
    என் உடலும் பாதுகாப்பாய் வாழும்.
10 ஏனெனில் கர்த்தாவே, என் ஆத்துமாவை மரணத்தின் இடத்தில் இருக்கவிடமாட்டீர்.
    உம்மீது நம்பிக்கை வைத்த ஒருவரையும் கல்லறையில் அழுகிப்போக அனுமதிக்கமாட்டீர்.
11 சரியான வழியில் வாழ நீர் எனக்குப் போதிப்பீர்.
    கர்த்தாவே, உம்மோடிருப்பதே எனக்குப் பூரண ஆனந்தம் தரும்.
    உமது வலதுபுறத்தில் தங்குவதே என்றென்றும் இன்பம் தரும்.

தாவீதின் ஒரு ஜெபம்.

17 கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும்.
    எனது ஜெபப் பாடலுக்குச் செவிகொடுத்தருளும்.
    எனது நேர்மையான ஜெபத்தைக் கேளும்.
என்னைப் பற்றிய சரியான முடிவு எடுப்பீர்.
    உம்மால் உண்மையைக் காணமுடியும்.
நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர்.
    இரவு முழுவதும் என்னோடிருந்தீர்.
என் இருதயத்தை ஆராய்ந்து என்னில் ஒரு குற்றத்தையும் நீர் காணவில்லை.
    நான் எந்தத் தீய செயல்களையும் திட்டமிடவில்லை.
உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.
உமது வழிமுறைகளை பின்பற்றினேன்.
    உமது வாழ்க்கை வழிகளிலிருந்து என் பாதங்கள் விலகவில்லை.

தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர்.
    எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும்.
தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர்.
    உம்மைப் பின்பற்றுகிறவனின் இந்த ஜெபத்திற்குச் செவிகொடும்.
கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
    உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும்.
கர்த்தாவே, என்னை அழிக்க நினைக்கிற தீயோரிடமிருந்து என்னை மீட்டருளும்.
    என்னைத் தாக்க முயல்கிற ஜனங்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
10 தங்களைப் பற்றிப் பெருமைபாராட்டுகிற அத்தீயோர் தேவனுக்குச் செவிசாய்க்க முடியாதபடி
    பெருமையுடையோராய் இருக்கிறார்கள்.
11 அந்த ஜனங்கள் என்னைத் துரத்தினார்கள்.
    இப்போது அவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
    என்னைத் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
12 பிற விலங்குகளைக் கொன்று சாப்பிடக் காத்திருக்கும் சிங்கத்தைப்போன்று அத்தீயோர் காணப்படுகிறார்கள்.
    தாக்கக் காத்திருக்கும் சிங்கத்தைப்போல் மறைந்திருக்கிறார்கள்.

13 கர்த்தாவே, எழுந்து பகைவரிடம் சென்று, அவர்கள் சரணடையச் செய்யும்.
    உமது வாளால் அத்தீயோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
14 கர்த்தாவே, உயிருள்ளோர் வாழும் தேசத்திலிருந்து அத்தீயோரை
    உமது வல்லமையால் அப்புறப்படுத்தும்.
கர்த்தாவே, பலர் உம்மிடம் உதவிக்காக வருவார்கள். இவ்வாழ்க்கையில் அதிகம் பலனில்லை.
    அவர்களுக்கு அதிக உணவளியும்.
    வேண்டுவனவற்றை அவர்கள் பிள்ளைகளுக்குக் கொடும்.
    அவர்களின் பிள்ளைகளுக்கும் மிகுந்திருக்கும்படியாக அப்பிள்ளைகளுக்குத் திருப்தியாய் உணவளியும்.

15 நான் நீதிக்காக ஜெபிக்கிறேன்.
    கர்த்தாவே, உமது முகத்தைக் காண்பேன்.
    கர்த்தாவே, உம்மைப் பார்ப்பதால் முழுமையான திருப்திகொள்வேன்.

சங்கீதம் 134-135

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.

134 கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் கர்த்தரைத் துதியுங்கள்!
    இரவு முழுவதும் ஊழியர்களாகிய நீங்கள் ஆலயத்தில் சேவைசெய்தீர்கள்.
ஊழியர்களே, உங்கள் கரங்களை உயர்த்தி
    கர்த்தரைப் போற்றுங்கள்.

கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக.
    கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.

135 கர்த்தரைத் துதிப்போம்!

கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்!
    கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
தேவனுடைய ஆலய முற்றத்தில்,
    கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    அவரது நாமத்தைத் துதியுங்கள், ஏனெனில் அது இன்பமானது.

கர்த்தர் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார்.
    இஸ்ரவேல் தேவனுக்கு உரியது.
கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்!
    நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!
பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான.
    சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார்.
பூமியின்மேல் மேகங்களை தேவன் உண்டாக்குகிறார்.
    தேவன் மின்னலையும் மழையையும் உண்டாக்குகிறார்.
    தேவன் காற்றையும் உண்டாக்குகிறார்.

எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும்,
    எல்லா முதற்பேறான மிருகங்களையும் தேவன் அழித்தார்.
எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார்.
    பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் தேவன் அக்காரியங்களை நிகழப்பண்ணினார்.
10 தேவன் பல தேசங்களை முறியடித்தார்.
    தேவன் வல்லமையுடைய ராஜாக்களைக் கொன்றார்.
11 எமோரியரின் ராஜாவாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார்.
    பாஷானின் ராஜாவாகிய ஓகையும் தேவன் தோற்கடித்தார்.
    கானானின் எல்லா தேசங்களையும் தேவன் தோற்கடித்தார்.
12 தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார்.
    அவரது ஜனங்களுக்கு தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.

13 கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும்.
    கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள்.
14 கர்த்தர் தேசங்களைத் தண்டித்தார்.
    ஆனால் கர்த்தர் அவரது ஊழியரிடம் தயவுடையவராயிருந்தார்.

15 பிற ஜனங்களின் தெய்வங்கள் வெறும் பொன்னாலும் வெள்ளியாலுமாகிய சிலைகள் மட்டுமே.
    அவர்களின் தெய்வங்கள் ஜனங்கள் செய்த வெறும் சிலைகள் மட்டுமே.
16 சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை.
    சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை.
17 சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை.
    சிலைகளுக்கு மூக்குகள் இருந்தன, ஆனால் முகர்ந்துபார்க்க முடியவில்லை.
18 அச்சிலைகளைச் செய்த ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
    ஏனெனில் அச்சிலைகள் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நம்பினார்கள்.

19 இஸ்ரவேலின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
    ஆரோனின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
20 லேவியின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
    கர்த்தரைப் பின்பற்றுவோரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
21 கர்த்தர் சீயோனிலிருந்தும்,
    அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார்.

கர்த்தரைத் துதியுங்கள்!

தானியேல் 3:1-18

தங்க விக்கிரகமும் நெருப்புச் சூளையும்

நேபுகாத்நேச்சார் ராஜாவிடம் தங்கத்தினால் செய்த ஒரு விக்கிரகம் இருந்தது. அந்த விக்கிரகம் 60 முழம் உயரமும் 6 முழம் அகலமுமானது. பிறகு அவன் அந்த விக்கிரகத்தைப் பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமவெளியில் நிறுத்தி வைத்தான். பின்னர் ராஜா தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், கருவூலக்காரரையும், ஆலோசகரையும், ஆளுநரையும், நாடுகளிலுள்ள அதிகாரிகள் அனைவரையும் கூடி வருமாறு அழைத்தான். ராஜா, அவர்கள் அனைவரும் விக்கிரகத்தின் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினான்.

எனவே அவர்களெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அமைத்திருந்த விக்கிரகத்தின் முன் வந்து நின்றார்கள். பிறகு ராஜாவுக்காக அறிவிப்பு செய்யும் கட்டியக்காரன் உரத்தக்குரலில், “பல தேசங்களிலிருந்தும், பலமொழி இனங்களிலிருந்தும் வந்துள்ள ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் எல்லா இசைக்கருவிகளின் சப்தங்களைக் கேட்டதும் பணிந்து வணங்கவேண்டும். எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு மற்றும் மற்ற இசைக்கருவிகளின் ஒலியை கேட்கும்போது, நீங்கள் தங்க விக்கிரகத்தை தொழுதுகொள்ளவேண்டும். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்த விக்கிரகத்தை அமைத்திருக்கிறார். எவனாவது கீழே விழுந்து தங்க விக்கிரகத்தை தொழாமலிருந்தால் அவன் சீக்கிரமாக அதிக வெப்பமுள்ள எரிகிற அக்கினிச் சூளையிலே போடப்படுவான். இது அனைவருக்குமுரிய அரச கட்டளையாகும்” என்றான்.

எனவே அவர்கள், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான இசைக்கருவிகளின் ஒலியைக் கேட்டதும் மிக விரைவாக கீழே விழுந்து தங்க விக்கிரகத்தைக் தொழுதுகொண்டார்கள். சகல தேசத்தாரும், இனத்தாரும், மொழிக்காரர்களும் கீழே விழுந்து ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுவிய தங்க விக்கிரகத்தைத் தொழுதுகொண்டார்கள்.

பின்னர், சில கல்தேயர்கள் ராஜாவிடம் வந்தனர். அந்த ஆட்கள் யூதர்களுக்கு விரோதமாகப் பேசத்தொடங்கினர். அவர்கள் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம், “ராஜாவே! நீர் என்றும் வாழ்க. 10 ராஜாவே, நீர் ஒரு கட்டளை கொடுத்தீர். எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகல இசைக் கருவிகளின் ஒலியைக் கேட்டதும் ஒவ்வொருவரும் இந்தத் தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழுதுகொள்ளவேண்டும் என்று சொன்னீர். 11 அதோடு, எவனாவது தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழுதுகொள்ளாமலிருந்தால் அவன் அதிக வெப்பமுள்ள எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படுவான் என்றும் நீர் கட்டளையிட்டீர். 12 சில யூதர்கள் ராஜாவான உமது கட்டளையில் கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர். நீர் அந்த யூதர்களை பாபிலோன் மாகாணத்தின் முக்கியமான அதிகாரிகளாக ஆக்கினீர். அவர்கள் பெயர்களாவன: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ. அவர்கள் உமது தெய்வத்தைத் தொழுவதில்லை. அவர்கள் உம்மால் நிறுவப்பட்ட தங்க விக்கிரகத்தைப் பணிந்து வணங்கவில்லை” என்று புகார் கூறினார்கள்.

13 நேபுகாத்நேச்சார் மிகவும் கோபங்கொண்டான். அவன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அழைத்தான். எனவே அவர்கள் ராஜா முன்பு கொண்டுவரப்பட்டார்கள். 14 நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரே நீங்கள் எனது தெய்வத்தைத் தொழவில்லை என்பது உண்மையா? நீங்கள், என்னால் நிறுவப்பட்ட தங்க விக்கிரகத்தைத் தொழவில்லை என்பது உண்மையா? 15 இப்பொழுது நீங்கள் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு ஆகிய இசைக் கருவிகளின் ஒலியைக் கேட்டதும் நான் நிறுவிய தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழவேண்டும். நான் செய்திருக்கிற இவ்விக்கிரகத்தை நீங்கள் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது. ஆனால், நீங்கள் இதனைத் தொழாவிட்டால், மிகவும் சூடான எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படுவீர்கள். பிறகு உங்களை என் அதிகாரத்திலிருந்து எந்தத் தேவனாலும் காப்பாற்ற முடியாது” என்றான்.

16 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவிடம்: “நேபுகாத்நேச்சாரே, நாங்கள் உம்மிடம் இவற்றைப்பற்றி விளக்கிடத் தேவையில்லை. 17 நீர் எங்களை எரிகிற அக்கினி சூளையில் போட்டால் நாங்கள் சேவிக்கிற எங்கள் தேவன் எங்களைக் காப்பாற்றுவார். அவர் விரும்பினால் உமது வல்லமையிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவார். 18 ஆனால் எங்களை அவர் காப்பாற்றாவிட்டாலும்கூட, நாங்கள் உமது தெய்வங்களைச் சேவிக்கமாட்டோம். நீர் நிறுவிய தங்க விக்கிரகத்தை தொழமாட்டோம். இது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கவேண்டும்” என்றார்கள்.

1 யோவான் 3:1-10

நாம் தேவனின் பிள்ளைகள்

பிதா நம்மை மிகவும் நேசித்தார்! நாம் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம். ஆனால் உலகத்தின் மக்களோ நாம் தேவனின் பிள்ளைகள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அதற்குக் காரணம் தேவனை அவர்கள் அறியாமல் இருப்பது ஆகும். அன்பான நண்பர்களே, நாம் இப்போது தேவனின் பிள்ளைகள். நாம் எதிர்காலத்தில் எவ்வாறு இருப்போம் என்பது இன்னும் நமக்குக் காட்டப்படவில்லை. கிறிஸ்து மீண்டும் வரும்போது நாம் அவரைப்போல இருப்போம் என்பதை நாம் அறிவோம். கிறிஸ்து தூய்மையானவர். கிறிஸ்துவில் இந்த நம்பிக்கையுள்ள ஒவ்வொரு மனிதனும் கிறிஸ்துவைப் போலவே தன்னைத் தூய்மையாக வைத்துக்கொள்கிறான்.

ஒருவன் பாவம் செய்யும்போது, அவன் தேவனின் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். ஆம், தேவனின் நியாயப்பிரமாணத்திற்கு எதிராக வாழ்வதைப்போன்றதே பாவம் செய்தலாகும். மனிதரின் பாவங்களை நீக்குவதற்காக கிறிஸ்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். கிறிஸ்துவில் பாவம் இல்லை. எனவே கிறிஸ்துவில் வாழ்கிற மனிதனும் பாவத்தைச் செய்வதில்லை. ஒருவன் தொடர்ந்து பாவம் செய்தால், அவன் கிறிஸ்துவை உண்மையாகவே புரிந்துகொண்டதில்லை என்றும், கிறிஸ்துவை அறிந்துகொண்டதே இல்லை. என்றுமே பொருள்படும்.

அன்பான பிள்ளைகளே, தவறான வழிக்குள் ஒருவன் உங்களை நடத்தாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். கிறிஸ்து நீதியுள்ளவர். கிறிஸ்துவைப்போல சரியானவராக இருப்பதற்கு ஒரு மனிதன் சரியானதை மட்டுமே செய்யவேண்டும். துவக்கத்தலிருந்தே பிசாசு பாவம் செய்துகொண்டிருக்கிறான். பாவத்தைத் தொடர்ந்து செய்யும் மனிதன் பிசாசுக்குரியவன். தேவ குமாரன் பிசாசின் செயலை அழிக்கும்பொருட்டே வந்தார்.

தேவன் ஒருவனை அவரது பிள்ளையாக மாற்றும்போது அவன் பாவத்தைத் தொடர்ந்து செய்வதில்லை. ஏன்? தேவன் அவனுக்கு அளித்த புது வாழ்க்கை அவனில் நிலைத்திருக்கிறது. எனவே அம்மனிதன் பாவத்தில் தொடர முடியாது. ஏன்? அவன் தேவனின் பிள்ளையாக மாறியிருக்கிறான். 10 எனவே தேவனின் பிள்ளைகள் யாரென்பதையும் பிசாசின் பிள்ளைகள் யாரென்பதையும் நாம் பார்க்க முடியும். மேலும் தனது சகோதரனை நேசிக்காத ஒருவனும் தேவனின் பிள்ளை இல்லை.

லூக்கா 3:15-22

15 எல்லா மக்களும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி இருந்தனர். எனவே யோவானைக் கண்டு அவர்கள் ஆச்சரியம் கொண்டனர். அவர்கள், “இவன் கிறிஸ்துவாக இருக்கக்கூடும்” என்று எண்ணினர்.

16 அவர்கள் அனைவரிடமும் பேசிய யோவான், “நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப் பின்னால் வருகிறவரோ நான் செய்வதைக் காட்டிலும் அதிகமாகச் செய்ய வல்லவர். அவரது மிதியடிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் ஆவியானவராலும், அக்கினியாலும், உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 17 தானியங்களைச் சுத்தமாக்குவதற்குத் தயாராக அவர் வருவார். பதரிலிருந்து தானியத்தைப் பிரித்துக் களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவர் எரிப்பார். அணைக்க முடியாத நெருப்பில் அவற்றைச் சுட்டெரிப்பார்,” என்று பதில் கூறினான். 18 யோவான் நற்செய்தியைத் தொடர்ந்து போதித்து, மக்களுக்கு உதவும்படியான மற்ற பல காரியங்களையும் சொல்லி வந்தான்.

யோவானுக்கு ஏற்பட்ட உபத்திரவம்

19 ஆளுநராகிய ஏரோதுவை யோவான் கண்டித்தான். ஏரோதுவின் சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை அவன் தகாத முறையில் சேர்த்துக்கொண்டதை யோவான் கண்டனம் செய்தான். ஏரோது செய்த பல தீய செயல்களையும் யோவான் கண்டித்தான். 20 எனவே ஏரோது இன்னொரு தீய காரியத்தையும் செய்தான். அவன் யோவானை சிறையிலிட்டான். ஏரோது செய்த பல தீய காரியங்களோடு கூட இதுவும் ஒரு தீய செயலாக அமைந்தது.

இயேசு ஞானஸ்நானம் பெறுதல்

(மத்தேயு 3:13-17; மாற்கு 1:9-11)

21 யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு அவனால் எல்லா மக்களும் ஞானஸ்நானம் பெற்றனர். இயேசுவும் அப்போது அங்கு வந்து அவனிடம் ஞானஸ்நானம் பெற்றார். இயேசு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது வானம் திறந்தது. 22 பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்தார். ஆவியானவர் ஒரு புறாவைப்போலத் தோற்றமளித்தார். அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம் கேட்டது. அது “நீர் என் அன்புள்ள குமாரன். நான் உம்மில் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center