Revised Common Lectionary (Semicontinuous)
கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.
84 சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
2 கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது.
ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.
என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
3 என் ராஜாவே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு.
உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
4 உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
5 தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு
ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
6 அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார்.
இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
7 தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில்
ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.
9 தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும்.
நீர் தேர்ந்தெடுத்த ராஜா மீது இரக்கமாயிரும்.
10 வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது.
எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
11 கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர்.[a]
தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு
தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
12 சர்வ வல்லமையுள்ள தேவனே,
உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.
சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறான்
5 ஈராம் தீரு நாட்டு ராஜா. அவன் எப்போதும் தாவீதின் நண்பனாக இருந்தான். தாவீதிற்குப் பிறகு அவனது குமாரன் சாலொமோன் புதிய ராஜாவாகியதை அறிந்து தனது வேலைக்காரர்களை அனுப்பி வைத்தான். 2 சாலொமோன் ஈராம் ராஜாவுக்கு,
3 “என் தந்தை தாவீது எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களோடு போரிட்டுக் கொண்டிருந்தார். அதனால் தன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட நேரம் இல்லாமல் இருந்தது. கர்த்தர் தனது பகைவர்களை எல்லாம் வெல்லும்வரை தாவீது காத்திருந்தார். 4 ஆனால் தேவனாகிய கர்த்தர் எனது நாட்டின் அனைத்து பக்கங்களிலும் அமைதியையும் சமாதானத்தையும் தந்திருக்கிறார். இப்போது எனக்குப் பகைவர்கள் யாரும் இல்லை. என் ஜனங்களுக்கும் ஆபத்தில்லை.
5 “என் தந்தையான தாவீதிற்கு கர்த்தர் ஒரு வாக்குறுதியை அளித்திருக்கிறார். கர்த்தர், ‘உனக்குப் பிறகு உன் குமாரனை ராஜாவாக்குவேன். அவன் எனக்குப் பெருமை தரும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவான்’ என்றார். இப்போது நான் என் தேவனாகிய கர்த்தரைப் பெருமைப்படுத்த ஆலயம் கட்ட திட்டமிடுகிறேன். 6 எனவே எனக்கு உதவும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். லீபனோனுக்கு உங்கள் ஆட்களை அனுப்புங்கள். அவர்கள் அங்கே எனக்காக கேதுரு மரங்களை வெட்டவேண்டும். எனது வேலையாட்களும் அவர்களோடு வேலை செய்வார்கள். உங்கள் ஆட்களுக்கு எவ்வளவு கூலிக் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு கூலியை நான் கொடுப்பேன். ஆனால் உங்கள் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. சீதோனில் உள்ள தச்சர்களைப்போன்று அவ்வளவு சிறந்தவர்களாக இங்குள்ள தச்சர்கள் இல்லை” என்ற செய்தியைச் சொல்லி அனுப்பினான்.
7 சாலொமோனின் வேண்டுகோளை அறிந்து ஈராம் மிகவும் மகிழ்ந்தான். அவனும், “இப்படி ஒரு அறிவு மிக்க குமாரனை தாவீதிற்குத் தந்து இவ்வளவு அதிகமான ஜனங்களை ஆளவிட்டதற்குக் கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படட்டும்!” என்றான். 8 பிறகு ஈராம் சாலொமோனுக்கும் செய்தி அனுப்பினான்.
அதில், “நீங்கள் கேட்டிருந்தவற்றை அறிந்தேன். நான் இங்குள்ள அனைத்து கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும் வெட்டி உங்களுக்குத் தருவேன். 9 எனது ஆட்கள் அவற்றை லீபனோனில் இருந்து கடலுக்குக் கொண்டுவருவார்கள். பிறகு அவற்றைக் கட்டி நீங்கள் விரும்புகின்ற இடத்துக்கு மிதந்து வரும்படி செய்வேன். அங்கே அவற்றைப் பிரித்துத் தருவேன். நீங்கள் எடுத்துச்செல்லலாம்” என்று குறிப்பிட்டிருந்தான்.
10-11 சாலொமோன் ஈராமின் குடும்பத்திற்காக 20,000 கலம் கோதுமையையும் 20 கலம் ஒலிவ மர எண்ணெயையும் கொடுத்தான். இதுவே சாலொமோன் ஈராமிற்கு ஆண்டுதோறும் கொடுப்பது.
12 கர்த்தர் வாக்குறுதி அளித்தபடி சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். ஈராமும் சாலொமோனும் சமாதானமாக இருந்தனர். இருவரும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துக்கொண்டனர்.
தொடர்ந்து கேட்டல்
(மத்தேயு 7:7-11)
5-6 பின்பு இயேசு அவர்களை நோக்கி, “உங்களில் ஒருவன் உங்கள் நண்பனின் வீட்டுக்கு இரவில் வெகு நேரம் கழித்துச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அவனை நோக்கி, ‘இந்த ஊருக்குள் என் நண்பன் ஒருவன் என்னைச் சந்திக்க வந்திருக்கிறான். ஆனால் அவனுக்கு உண்பதற்காகக் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை. தயவுசெய்து மூன்று அப்பங்களைக் கொடுங்கள்’ என்கிறீர்கள். 7 வீட்டின் உள்ளிருக்கும் உங்கள் நண்பன் பதிலாக, ‘போய்விடுங்கள்! என்னைத் தொல்லைப்படுத்தாதீர்கள். கதவு ஏற்கெனவே மூடப்பட்டிருக்கிறது. என் குழந்தைகளும், நானும் படுக்கையில் படுத்திருக்கிறோம். நான் எழுந்து உங்களுக்கு இப்போது அப்பத்தைக் கொடுக்கமுடியாது’ என்கிறான். 8 உங்கள் நட்பு ஒருவேளை அவன் எழுந்து அப்பத்தை எடுத்துக்கொடுப்பதற்குப் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அவன் கண்டிப்பாக எடுத்து உங்களுக்கு வேண்டியதைக் கொடுப்பான், என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். 9 எனவே, நான் உங்களுக்குச் சொல்வதாவது, தொடர்ந்து கேட்டுக்கொண்டிருங்கள். தேவன் உங்களுக்குக் கொடுப்பார். தேடிக் கொண்டே இருங்கள். நீங்கள் தேடியதைக் கண்டடைவீர்கள். தொடர்ந்து தட்டிக்கொண்டே இருங்கள். கதவு உங்களுக்காகத் திறக்கப்படும். 10 ஆம், ஒரு மனிதன் தொடர்ந்து கேட்டால் அவன் பெற்றுக்கொள்வான். ஒரு மனிதன் தொடர்ந்து தேடினால் அவன் தேடியதை அடைவான். ஒரு மனிதன் தொடர்ந்து தட்டினால் கதவு அவனுக்காகத் திறக்கப்படும். 11 உங்களில் யாருக்காவது மகன் இருக்கிறானா? உங்கள் மகன் உங்களிடம் மீனைக் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எந்தத் தந்தையாவது தன் மகனுக்கு பாம்பைக் கொடுப்பானா? இல்லை. அவனுக்கு மீனைக் கொடுப்பீர்கள். 12 உங்கள் மகன் முட்டையைக் கேட்டால் அவனுக்குத் தேளைக் கொடுப்பீர்களா? இல்லை. 13 நீங்கள் பொல்லாதவர்கள். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு நல்லவற்றைக் கொடுக்கவேண்டுமென்பதை அறிவீர்கள். எனவே தன்னிடம் கேட்கின்ற மக்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுக்க வேண்டுமென்பதை பரலோகப் பிதா நிச்சயமாக அறிவார்” என்றார்.
2008 by World Bible Translation Center