Revised Common Lectionary (Semicontinuous)
சாமெக்
113 கர்த்தாவே, உம்மிடம் முற்றிலும் நேர்மையாக இராத ஜனங்களை நான் வெறுக்கிறேன்.
ஆனால் நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
114 என்னை மூடிமறைத்துப் பாதுகாத்துக்கொள்ளும்.
கர்த்தாவே, நீர் கூறுகிற ஒவ்வொன்றையும் நான் நம்புகிறேன்.
115 கர்த்தாவே, தீய ஜனங்கள் என்னருகே வரவிடாதேயும்.
நான் என் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
116 கர்த்தாவே, நீர் வாக்குறுதியளித்தபடியே என்னைத் தாங்கி உதவும். நானும் வாழ்வேன்.
நான் உம்மை நம்புகிறேன், நான் ஏமாற்றமடையாதபடிச் செய்யும்.
117 கர்த்தாவே, எனக்கு உதவும், நான் காப்பாற்றப்படுவேன்.
நான் உமது கட்டளைகளை என்றென்றைக்கும் கற்பேன்.
118 கர்த்தாவே, உமது சட்டங்களை மீறுகிற ஒவ்வொருவரையும் நீர் தள்ளிவிடுகிறீர்.
ஏனெனில் அந்த ஜனங்கள் உம்மைப் பின்பற்ற சம்மதித்தபோது பொய் கூறினார்கள்.
119 கர்த்தாவே, நீர் பூமியிலுள்ள தீயோரைக் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர்.
எனவே நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நேசிப்பேன்.
120 கர்த்தாவே, நான் உம்மைக் கண்டு பயப்படுகிறேன்.
நான் உமது சட்டங்களுக்குப் பயந்து அவற்றை மதிக்கிறேன்.
ஆயின்
121 நான் நியாயமும் நல்லதுமானவற்றைச் செய்கிறேன்.
கர்த்தாவே, என்னைத் துன்புறுத்த விரும்புவோரிடம் என்னை ஒப்புவியாதேயும்.
122 என்னிடம் நல்லவராக இருக்க உறுதியளியும்.
நான் உமது ஊழியன். கர்த்தாவே, அந்தப் பெருமைக்காரர்கள் என்னைத் துன்புறுத்தவிடாதேயும்.
123 கர்த்தாவே, உம்மிடமிருந்து உதவியை எதிர் நோக்கியும், ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்த்தும்,
என் கண்கள் தளர்ந்து போய்விட்டன.
124 நான் உமது ஊழியன்.
உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
125 நான் உமது ஊழியன்.
உமது உடன்படிக்கையை நான் அறிந்துகொள்ளும்படியான புரிந்துகொள்ளுதலைப் பெற எனக்கு உதவும்.
126 கர்த்தாவே, நீர் ஏதேனும் செய்வதற்கு இதுவே தக்கநேரம்.
ஜனங்கள் உமது சட்டத்தை மீறிவிட்டார்கள்.
127 கர்த்தாவே, மிகவும் தூய்மையான பொன்னைக் காட்டிலும்
நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
128 நான் உமது கட்டளைகளுக்கெல்லாம் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
தவறான போதனைகளை நான் வெறுக்கிறேன்.
6 தாவீது பெலிஸ்தியர்களோடு சண்டையிட வெளியேறினான். போரிலிருந்து வெற்றிபெற்று திரும்பியபோது, இஸ்ரவேலின் ஒவ்வொரு நகரப் பெண்மணிகளும் தாவீதைப் பாராட்ட வந்தனர். சிரித்து நடனமாடி மேளமும் யாழும் வாசித்தனர். சவுல் எதிரில் இதனைச் செய்தனர். 7 பெண்கள்,
“சவுல் ஆயிரம் பகைவர்களை கொன்றிருக்கிறான்.
ஆனால் தாவீதோ பதினாயிரம் பகைவர்களை கொன்றான்!”
என்று பாடினார்கள்.
8 இதனால் சவுல் கோபம் அடைந்தான். பெண்கள் சொன்னதை நினைத்து விசனப்பட்டான். 9 அன்று முதல் தாவீதை நெருக்கமாகப் பின்தொடர ஆரம்பித்தான்.
தாவீதைக் கண்டு சவுல் பயப்படுகிறான்
10 மறுநாள், தேவனிடமிருந்து ஒரு கெட்ட ஆவி சவுலை ஆட்கொண்டது. தாவீது வழக்கம்போல் சுரமண்டலத்தை எடுத்து மீட்டிக்கொண்டிருக்கும்போது, சவுல் தன் வீட்டில் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தான். 11 சவுலிடம் ஈட்டி இருந்தது. சவுல், “சுவரோடு சேர்த்து தாவீதைக் குத்திக் கொன்றுவிடலாம்” என எண்ணினான். அதன்படியே இரண்டு முறை ஈட்டியை வீசினான். ஆனால் இரண்டு முறையும் தாவீது தப்பிவிட்டான்.
12 தாவீதோடு கர்த்தர் இருந்தார். சவுலிடமிருந்து கர்த்தர் விலகிவிட்டார். எனவே சவுல் தாவீதைக் கண்டு பயந்தான். 13 தன்னிடமிருந்து வெகுதொலைவான இடத்துக்குத் தாவீதை சவுல் அனுப்பினான். 1,000 வீரர்களுக்கு அதிகாரியாக தாவீதை ஆக்கினான். வீரர்களை போருக்கு வழி நடத்துகிறவனாயிருந்தான். 14 கர்த்தர் தாவீதோடு இருந்ததால் எல்லா யுத்தங்களிலும் வென்றான். 15 சவுல் தாவீதின் வெற்றிகளைக் கண்டபோது அவனுக்கு மேலும், மேலும் பயம் வந்தது. 16 ஆனால் யூதாவிலும் இஸ்ரவேலிலும் உள்ளவர்கள் தாவீதை நேசித்தனர். போரில் தங்களுக்காகப் போராடுவதால் அனைவரும் தாவீதை நேசித்தனர்.
தாவீதுக்கு தன் குமாரத்தியை திருமணம் செய்துவைக்க சவுல் விரும்புகிறான்
17 ஆனால், சவுல் தாவீதைக் கொல்ல விரும்பி தந்திரமான ஒரு வழியை யோசித்தான். அவன், “என் மூத்த குமாரத்தி மேராப்பை உனக்கு மணமுடித்துத் தருவேன், பின் நீ வலிமை மிக்க வீரனாகலாம். என் குமாரன் போல இருக்கலாம்! பிறகு நீ போய் கர்த்தருடைய யுத்தங்களை நடத்தலாம்!” என்றான். மேலும் சவுல், “இவனை நான் கொல்லாமல், எனக்காக பெலிஸ்தியர்களால் கொல்லச்செய்வேன்” என்று எண்ணினான்.
18 தாவீதோ, “நான் பெரிய குடும்பத்தவனும் அல்ல! முக்கியமானவனும் அல்ல! என்னால் ராஜாவின் குமாரத்தியை மணந்துகொள்ள முடியாது!” என்றான்.
19 எனவே மேராப் தாவீதை மணக்கவேண்டிய காலம் வந்தபோது, அவளை மேகோலத்தியனாகிய ஆதரியேலுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.
20 சவுலின் அடுத்த குமாரத்தி மீகாள் தாவீதை நேசித்தாள். இவ்விஷயத்தைப் பற்றி சவுலிடம் ஜனங்கள் சொன்னார்கள். இது சவுலுக்கு மகிழ்ச்சி தந்தது. 21 எனவே, “மீகாளைப் பயன்படுத்தி தாவீதை சூழ்ச்சிக்குட்படுத்த வேண்டும். அவள் அவனை மணக்கட்டும். பிறகு அவன் பெலிஸ்தியர்களால் கொல்லப்படுவான்” என்று நினைத்த சவுல் இரண்டாம் தடவையாக, “இன்று என் குமாரத்தியை மணமுடிக்கலாம்” என்றான்.
22 சவுல் தன் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டு, “தனியாக தாவீதிடம் கூறுங்கள், பார், ராஜாவும் உன்னை விரும்புகிறான். அவரது அதிகாரிகளும் உன்னை விரும்புகின்றனர். நீ அவனுடைய குமாரத்தியை மணக்க வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.
23 அதிகாரிகள் இதை அவனிடம் கூற, அவனோ, “ராஜாவுக்கு மருமகனாவது அவ்வளவு எளிதா? ராஜாவின் குமாரத்திக்குத் தருகிற அளவிற்கு என்னிடம் செல்வமில்லை! நான் சாதாரண ஏழை” என்றான்.
24 தாவீது சொன்னதை சவுலிடம் அதிகாரிகள் சொன்னார்கள். 25 சவுல் அவர்களிடம், “ராஜா உன்னிடம் பணத்தை எதிர்பார்க்கவில்லை. பணத்திற்கு பதிலாக 100 பெலிஸ்தியர்களின் நுனித்தோல் போதும் என தாவீதிடம் கூறுங்கள்” என்றான். இதுதான் சவுலின் சூழ்ச்சி. பெலிஸ்தியர்கள் தாவீதை நிச்சம் கொல்வார்கள் என சவுல் நம்பியிருந்தான்.
26 அதிகாரிகள் தாவீதிடம் இதனைக் கூறினார்கள். ராஜாவின் மருமகனாக வாய்ப்புக் கிடைத்ததற்காய் மகிழ்ச்சியடைந்தான். 27 எனவே, தாவீதும் அவனது வீரர்களும் உடனே பெலிஸ்தரியர்களோடு சண்டைக்குப் போய் 200 பெலிஸ்தியரைக் கொன்று, அவர்களின் நுனித்தோலை வெட்டி கொண்டு வந்து சமர்ப்பித்தான். ராஜாவின் மருமகனாக விரும்பினபடியால் தாவீது இதைச் செய்தான்.
தன் குமாரத்தி மீகாளை தாவீது மணந்துக்கொள்ள சவுல் அனுமதித்தான். 28 தாவீதோடு கர்த்தர் இருப்பதைச் சவுல் அறிந்துக் கொண்டான். அதோடு அவனது குமாரத்தி மீகாள் தாவீதை நேசித்தாள் என்பதையும் அறிந்துக்கொண்டான். 29 எனவே, சவுலுக்கு தாவீது மீது மேலும் பயம் வந்தது. அவனைத் தனது எதிரியாக எப்போதும் எண்ணி வந்தான்.
30 பெலிஸ்திய தளபதிகள் தொடர்ந்து இஸ்ரவேலருக்கு எதிராக சண்டையிட்டனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தாவீது அவர்களைத் தோற்கடித்தான். தாவீது மிகச் சிறந்த அதிகாரி என்று புகழ் பெற்றான்.
புயல்
13 தெற்கிலிருந்து ஒரு நல்ல காற்று வீசியது. கப்பலிலிருந்த மனிதர்கள், “நமக்குத் தேவையான காற்று இது. இப்போது அது வீசுகிறது!” என்று நினைத்தார்கள். எனவே அவர்கள் நங்கூரத்தை மேலே இழுத்தார்கள். கிரேத்தா தீவுக்கு வெகு அருகில் பயணம் செய்தோம். 14 “வட கிழக்கன்” என்னும் பெயருள்ள மிகப் பலமான காற்று தீவின் குறுக்காக வந்தது. 15 இக்காற்று கப்பலைச் சுமந்து சென்றது. காற்றுக்கு எதிராகக் கப்பலால் செல்ல முடியவில்லை. எனவே, முயற்சி செய்வதைவிட்டு, காற்று எங்களைச் சுமந்து செல்லும்படியாக விட்டோம்.
16 கிலவுதா என்னும் ஒரு சிறிய தீவின் கீழே சென்றோம். எங்களால் உயிர் மீட்கும் படகை வெளியே எடுக்கமுடிந்தது. ஆனால் அதை எடுப்பது மிகக் கடினமான செயலாக இருந்தது. 17 உயிர் மீட்கும் படகை மனிதர்கள் எடுத்த பின், அவர்கள் கப்பலைச் சுற்றிலும் கயிறுகளால் கப்பல் சரியாக இருப்பதற்கென்று கட்டினார்கள். சிர்டிஸின் மணற் பாங்கான கரையில் கப்பல் மோதக்கூடுமென்று அவர்கள் நினைத்தார்கள். எனவே துடுப்புகளை எடுத்துவிட்டு, காற்று கப்பலைச் செலுத்தும்படியாக விட்டார்கள்.
18 மறுநாள் புயல் கடுமையாகத் தாக்கியதால் மனிதர்கள் கப்பலிலிருந்து சில பொருட்களை வெளியே வீசினார்கள். 19 ஒரு நாள் கழிந்ததும் கப்பலின் கருவிகளை வெளியே வீசினர். 20 பல நாட்கள் எங்களால் சூரியனையோ, நட்சத்திரங்களையோ பார்க்க முடியவில்லை. புயல் கொடுமையாக இருந்தது. நாங்கள் உயிர் பிழைக்கும் நம்பிக்கையைக் கைவிட்டோம். நாங்கள் இறந்து விடுவோமென எண்ணினோம்.
21 நீண்ட காலமாக அம்மனிதர்கள் சாப்பிடவில்லை. பின்பு ஒருநாள் பவுல் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, “மனிதரே, கிரேத்தாவை விட்டுப் புறப்படாதீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் நான் சொல்வதைக் கேட்டிருக்க வேண்டும். இத்தனை தொல்லைகளும் நஷ்டமும் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது. 22 ஆனால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்படிக்கு உங்களுக்குக் கூறுகிறேன். உங்களில் ஒருவரும் இறக்கமாட்டீர்கள்! ஆனால் கப்பல் அழிந்து போகும். 23 நேற்று இரவு தேவனிடமிருந்து ஒரு தூதன் என்னிடம் வந்தான். நான் வணங்குகிற தேவன் அவரே. நான் அவருடையவன். 24 தேவதூதன், ‘பவுலே, பயப்படாதே! நீ இராயருக்குமுன் நிற்க வேண்டும். தேவன் உனக்கு இவ்வாக்குறுதியைத் தருகிறார். உன்னோடு பயணமாகிற எல்லா மனிதரின் உயிர்களும் காப்பாற்றப்படும்’ என்றான். 25 எனவே மனிதரே மகிழ்ச்சியாயிருங்கள்! நான் தேவனிடம் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது தூதன் கூறியபடி எல்லாம் நடக்கும். 26 ஆனால் நாம் ஒரு தீவிற்குச் சென்று மோதுவோம்” என்றான்.
27 பதினான்காம் நாள் இரவில் ஆதிரியாக் கடலைச் சுற்றிலும் நாங்கள் கப்பலில் மிதந்துகொண்டிருந்தோம். மாலுமிகள் கரையை நெருங்குகிறோம் என்று எண்ணினர். 28 அவர்கள் ஒரு கனமான பொருளை நுனியில் கட்டி கயிற்றை நீருக்குள் வீசினர். நீர் 120 அடி ஆழமானது என்று அவர்கள் கண்டனர். இன்னும் சற்று தூரம் சென்று கயிற்றை மீண்டும் வீசினர். அங்கு நீர் 90 அடி ஆழமாயிருந்தது. 29 நாங்கள் பாறையில் மோதுவோமென்று மாலுமிகள் பயந்தார்கள். எனவே நான்கு நங்கூரங்களை நீருக்குள் பாய்ச்சினர். மறுநாளின் பகலொளிக்காகப் பிரார்த்தனை செய்தனர். 30 சில மாலுமிகள் கப்பலைக் கைவிட விரும்பினர். அவர்கள் உயிர் மீட்கும் படகை நீரில் இறக்கினர். கப்பலின் முன்பக்கத்திலிருந்து அதிகமான நங்கூரங்களை வீசுவதாக பிறமனிதர்கள் கருதும்படியாக நடந்துகொண்டனர். 31 ஆனால் பவுல் படை அதிகாரியையும், பிற வீரர்களையும் நோக்கி, “இம்மனிதர்கள் கப்பலிலே இருக்காவிட்டால் உங்கள் உயிர்களைக் காக்க முடியாது” என்றான். 32 எனவே வீரர்கள் கயிறுகளை அறுத்து உயிர் மீட்கும் படகை நீரில் விழச்செய்தனர்.
33 அதிகாலைக்குச் சற்று முன் பவுல் எல்லா மக்களையும் ஏதேனும் உண்பதற்குச் சம்மதிக்க வைத்தான். அவன் “கடந்த இரண்டு வாரங்களாக நீங்கள் காத்துக்கொண்டும், கவனித்துக்கொண்டும் இருக்கிறீர்கள். பதினான்கு நாட்களாக நீங்கள் எதையும் உண்ணவில்லை. 34 நீங்கள் இப்போது எதையாவது சாப்பிடுமாறு உங்களை வேண்டுகிறேன். உயிரோடிருப்பதற்கு உங்களுக்கு இது தேவை. உங்களில் யாரும் ஒரு தலை முடியைக் கூட இழக்கமாட்டீர்கள்” என்றான். 35 இதைக் கூறிய பிறகு பவுல் ரொட்டியை எடுத்து எல்லோர் முன்பாகவும் அதற்காக தேவனுக்கு நன்றி சொன்னான். அதில் ஒரு பகுதியை எடுத்து, அவன் உண்ண ஆரம்பித்தான். 36 எல்லா மனிதர்களும் உற்சாகம் பெற்றனர். அவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். 37 (கப்பலில் 276 பேர் இருந்தனர்.) 38 நாங்கள் திருப்தியாகச் சாப்பிட்டோம். பின் கப்பலிலிருந்த தானியங்களை எல்லாம் கப்பலின் பாரத்தைக் குறைக்கும்பொருட்டு கடலுக்குள் வீசினோம்.
2008 by World Bible Translation Center