Revised Common Lectionary (Semicontinuous)
18 எனவே, தொடக்கத்தில் நிகழ்ந்ததை எண்ணவேண்டாம். வெகு காலத்திற்கு முன்னால் நடந்ததைப்பற்றி நினைக்கவேண்டாம். 19 ஏனென்றால், நான் புதியவற்றைச் செய்வேன். இப்போது நீங்கள் புதிய செடியைப்போல வளருவீர்கள். இது உண்மை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்தீர்கள். நான் உண்மையில் இந்த வனாந்திரத்தில் சாலை அமைப்பேன். நான் உண்மையில் இந்த வறண்ட நிலத்தில் ஆறுகளை உருவாக்குவேன். 20 காட்டு மிருகங்களும் எனக்கு நன்றியுடையவையாக இருக்கும். பெரிய மிருகங்களும் பறவைகளும் என்னைப் பெருமைப்படுத்தும். நான் வனாந்திரத்திலே தண்ணீரை ஊற்றும்போது அவை என்னை பெருமைப்படுத்தும். வறண்ட நிலத்தில் ஆறுகளைக் கொண்டுவரும்போது அவை என்னைப் பெருமைப்படுத்தும். எனது ஜனங்களுக்காக, என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களுக்காகத் தண்ணீர் கொடுக்கும்படி நான் இதனைச் செய்வேன். 21 நான் சிருஷ்டித்த ஜனங்கள் இவர்கள்தான். இவர்கள் என்னைத் துதித்துப் பாடுவார்கள்.
22 “யாக்கோபே! நீ என்னிடம் ஜெபம் செய்யவில்லை. ஏனென்றால், இஸ்ரவேலாகிய நீ என்னிடத்தில் சோர்வடைந்து விட்டாய். 23 நீ உனது ஆடுகளை தகன பலிகளாக எனக்குச் செலுத்தவில்லை. நீ என்னை மகிமைப்படுத்தவுமில்லை. நீ எனக்குப் பலிகளும் கொடுக்கவில்லை. நீ எனக்குப் பலிகள் கொடுக்கும்படி நான் உன்னை வற்புறுத்தவில்லை. நீ சோர்ந்து போகும்வரை நறுமணப் பொருட்களை எரிக்கும்படி நான் உன்னை வற்புறுத்தவில்லை. 24 என்னைக் கனப்படுத்தும்படி படைக்கும் பொருட்களை நீ வாங்கவில்லை. உனது அடிமையைப்போல இருக்கும்படி நீ என்னை பலவந்தப்படுத்தினாய். அதே சமயம், உனது பாவங்களால் நீ என்னைப் பாரப்படுத்தினாய்.
25 “நான், நான் ஒருவரே உனது பாவங்கள் அனைத்தையும் துடைத்துப்போடுகிறவர். என்னைத் திருப்திப்படுத்திக்கொள்ளவே நான் இதனைச் செய்கிறேன். நான் உனது பாவங்களை நினைத்துப்பார்க்கமாட்டேன்.
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்
41 ஏழைகள் வெற்றிபெற உதவி செய்யும் ஒருவன், பல ஆசீர்வாதங்களைப் பெறுவான்.
தொல்லைகள் வரும்போது கர்த்தர் அவனை மீட்பார்.
2 கர்த்தர் அவனைக் காத்து அவன் வாழ்வை மீட்பார்.
பூமியில் அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான்.
அவனை அழிக்க அவனுடைய பகைவர்களை தேவன் அனுமதிக்கமாட்டார்.
3 அவன் நோயுற்றுப் படுக்கையில் விழும்போது கர்த்தர் அவனுக்குப் பலமளிப்பார்.
அவன் நோயுற்றுப் படுக்கையில் இருக்கலாம், ஆனால் கர்த்தர் அவனைக் குணப்படுத்துவார்.
4 நான், “கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும்.
நான் உமக்கெதிராகப் பாவம் செய்தேன்.
ஆனால் என்னை மன்னித்து என்னைக் குணப்படுத்தும்!” என்றேன்.
5 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள்.
அவர்கள், “அவன் எப்போது மரித்து, மறக்கப்படுவான்?” என்றார்கள்.
6 சிலர் என்னைச் சந்திக்க வந்தார்கள்.
ஆனால் அவர்கள் உண்மையில் நினைப்பதை என்னிடம் கூறவில்லை.
அவர்கள் என்னைப்பற்றியச் செய்திகளை தெரிந்து கொள்ள வந்தார்கள்.
அதன் பிறகு அவர்கள் சென்று வதந்திகளை பரப்புகிறார்கள்.
7 என்னைப்பற்றிய தீயசொற்களை என் பகைவர்கள் இரகசியமாக முணுமுணுக்கிறார்கள்.
அவர்கள் எனக்கெதிராகத் திட்டமிடுகிறார்கள்.
8 அவர்கள், “அவன் ஏதோ தவுறு செய்தான், எனவே நோயுற்றான்.
அவன் குணப்படப் போவதில்லை” என்கிறார்கள்.
9 என் சிறந்த நண்பன் என்னோடு சாப்பிட்டான்.
நான் அவனை நம்பினேன்.
ஆனால் இப்போது அவனும் எனக்கெதிராகத் திரும்பிவிட்டான்.
10 எனவே கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும்.
நான் குணமாகி எழுந்திருக்கட்டும், அவர்களுக்குப் பதில் அளிப்பேன்.
11 கர்த்தாவே, என் பகைவர்கள் என்னை காயப்படுத்தாதிருக்கட்டும்.
அப்போது நீர் என்னை ஏற்றுக்கொண்டீர் என்பதை அறிவேன்.
12 நான் களங்கமற்றிருந்தேன். நீர் எனக்கு ஆதரவளித்தீர்.
என்னை எழுந்திருக்கப் பண்ணி, என்றென்றும் உமக்குச் சேவை செய்யப்பண்ணும்.
13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வாழ்த்துங்கள்.
இவர் இருந்தவரும் இருக்கிறவருமானவர்.
ஆமென்! ஆமென்!
18 ஆனால் தேவனை நம்ப முடியுமானால், பிறகு நாங்கள் சொல்பவை ஒரே நேரத்தில் “ஆமாம் என்றும்” “இல்லை என்றும்” இருக்காது என நம்பமுடியும். 19 என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும் போதிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வெறும் “ஆமாம்” மற்றும் “இல்லை” போல அல்லர். கிறிஸ்துவுக்குள் அது எல்லா காலத்திலும் “ஆமாம்” மட்டும்தான். 20 தேவனுடைய வாக்குறுதிகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் “ஆம்” என்றுள்ளது. ஆகவேதான் தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் வழியாகச் சொல்லும்போது “ஆமென்” [a] என்கிறோம். 21 நீங்களும் நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்களே என்பதை தேவனே உறுதியாக்கினார். நமக்கு ஞானஸ்நானம் வழங்கியவரும் அவரே. 22 நாம் அவரைச் சார்ந்தவர் என்பதைக் காட்ட அவரே முத்திரையிட்டார். அவர் தம்முடைய ஆவியை நம் இதயத்தில் நிரப்பினார். அது அவர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதற்கான உறுதிப்பத்திரமும் நிரூபணமுமாயிற்று.
பக்கவாத வியாதிக்காரன் குணமாகுதல்(A)
2 சில நாட்களுக்குப் பின்னர், இயேசு கப்பர்நகூமுக்கு வந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார் என்ற செய்தி பரவியது. 2 ஏராளமான ஜனங்கள் இயேசுவின் போதனையைக் கேட்கக் கூடினார்கள். அந்த வீடு நிறைந்துவிட்டது. அங்கு நிற்பதற்கும் இடமில்லை. வாசலுக்கு வெளியேயும் இடமில்லை. இயேசு அவர்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். 3 ஒரு பக்கவாதக்காரனைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். நான்கு பேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்தனர். 4 ஆனால் அவர்களால் அவனை இயேசுவின் அருகில் கொண்டுவர முடியவில்லை. ஏனென்றால் மக்கள் கூட்டம் அவ்வீட்டைச் சூழ்ந்திருந்தது. எனவே அவர்கள் கூரைமீது ஏறி இயேசு இருந்த இடத்துக்கு மேல் கூரையில் ஒரு திறப்பை உண்டாக்கினார்கள். பிறகு பக்கவாதக்காரனின் படுக்கையை வீட்டுக்குள் இறக்கினார்கள். 5 அவர்களது அளவுக்கடந்த விசுவாசத்தை இயேசு பார்த்தார். எனவே பக்கவாதக்காரனைப் பார்த்து இயேசு, “இளைஞனே! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
6 சில வேதபாரகர்கள் அங்கே உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இயேசு செய்வனவற்றைப் பார்த்து விட்டு தங்களுக்குள், 7 “ஏன் இந்த மனிதர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்? இவர் சொல்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதாகவே உள்ளதே. தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கத்தக்கவர்” என்று சொல்லிக் கொண்டனர்.
8 வேதபாரகர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே இயேசு அறிந்துகொண்டார். எனவே, இயேசு அவர்களிடம், “ஏன் இப்படி யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? 9 பக்கவாதக்காரனைப் பார்த்து, ‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வது எளிதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட’ என்று சொல்வது எளிதா? இரண்டில் எது எளிதாகும்? 10 ஆனால் மனித குமாரனுக்குப் பூமியிலே பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் உண்டு என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறேன்” என்று கூறி பிறகு பக்கவாதக்காரனைப் பார்த்து, 11 “நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்திரு, உனது படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டுக்குப் போ” என்றார்.
12 பக்கவாதக்காரன் எழுந்து, அவனது படுக்கையை எடுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். அனைத்து மக்களும் அவனைப் பார்த்தார்கள். அவர்கள் சந்தோஷப்பட்டு தேவனைப் புகழ்ந்தார்கள். அவர்கள், “இதுபோல ஆச்சரியம் மிக்க ஒன்றை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை!” என்றனர்.
2008 by World Bible Translation Center