Revised Common Lectionary (Semicontinuous)
தாவீதின் பாடல்.
29 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
2 கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
3 கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
4 கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
5 கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
6 கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது.
எர்மோன் மலை நடுங்குகிறது.
இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
7 கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
8 கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
9 கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
கர்த்தர் காடுகளை அழிக்கிறார்.
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.
10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் ராஜாவாயிருந்தார்.
என்றென்றும் கர்த்தரே ராஜா.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.
கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.
தாவீது ராஜாவின் மரணம்
2 தாவீது மரித்துப்போவதற்குரிய நேரம் வந்தது. எனவே அவன் சாலொமோனிடம் சொல்லும்போது 2 “நான் எல்லா மனிதரையும் போலவே மரிக்க இருக்கிறேன். ஆனால் நீ மேலும் பலத்தில் வளர்ந்து மனிதனாக இரு. 3 இப்போது, உனது தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்து நட. நீ அனைத்து சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும், முடிவுகளுக்கும் உடன்படிக்கைகளுக்கும் கீழ்ப்படி. மோசேயின் சட்டங்களில் எழுதப்பட்ட அனைத்திற்கும் கீழ்ப்படிந்திரு. நீ இவற்றைச் செய்தால், பின்னர் நீ செய்கிற அனைத்திலும் நீ போகிற அனைத்து திட்டங்களிலும் வெற்றிபெற்றவன் ஆவாய். 4 நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால், கர்த்தர் தன் வாக்குறுதியை காப்பாற்றுவார். கர்த்தர் என்னிடம், ‘நான் சொல்லிய வழிகளில் உன் பிள்ளைகள் கவனமாகவும் மனதுக்கு உண்மையாகவும் நடந்தால், பின்னர் இஸ்ரவேலரின் ராஜா உன் குடும்பத்தில் உள்ள ஒருவனாகவே இருப்பான்’ என்றார்” என்றான்.
10 பின்னர் தாவீது மரித்தான். அவன் தாவீது நகரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டான். 11 இஸ்ரவேலை 40 ஆண்டு தாவீது அரசாண்டான். அதாவது 7 ஆண்டுகள் எப்ரோனிலும் 33 ஆண்டுகள் எருசலேமிலும் ஆண்டான்.
சாலொமோன் தன் இராஜ்யத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்
12 இப்போது சாலொமோன் ராஜா தனது தந்தையின் சிங்காசனத்தில் அமர்ந்தான். அவன் ராஜ்யபாரம் முழுவதையும் தன் ஆளுகையின்கீழ் கொண்டு வந்தான்.
பேதுரு, யாக்கோபு, யோவான்
(மத்தேயு 4:18-22; மாற்கு 1:16-20)
5 கெனெசரேத்து கடலின் அருகே இயேசு நின்றார். மக்கள் அவரைச் சுற்றி சூழ்ந்துகொண்டார்கள். தேவனுடைய போதனைகளைக் கேட்க அவர்கள் விரும்பினர். 2 கடற்கரையில் இயேசு இரண்டு படகுகளைக் கண்டார். மீன் பிடிக்கிறவர்கள் தம் வலைகளைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். 3 சீமோனுக்கு உரிய படகில் இயேசு ஏறிக்கொண்டார். படகைக் கரையிலிருந்து கடலுக்குள் சற்றுத் தள்ளி நிறுத்துமாறு இயேசு சீ மோனுக்குக் கூறினார். பிறகு மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
4 இயேசு போதித்து முடித்தார். அவர் சீமோனிடம், “படகை கடலில் ஆழமான பகுதிக்குச் செலுத்து. நீங்கள் எல்லாரும் வலைவீசினால் மீன்கள் அகப்படும்” என்றார்.
5 சீமோன் பதிலாக, “ஐயா, மீன் பிடிப்பதற்காக இரவு முழுவதும் முயன்று பணி செய்தோம். ஆனால் மீன் எதுவும் அகப்படவில்லை. நான் நீருக்குள் வலை வீசவேண்டும் என்று நீர் கூறுகிறீர். நான் அவ்வாறே செய்வேன்” என்றான். 6 மீன் பிடிக்கிறவர்கள் நீருக்குள் வலை வீசினர். வலைகள் கிழியும்படியாக அவை முழுக்க மீன்களால் நிரம்பின. 7 அவர்கள் பிற படகுகளில் இருந்த தம் நண்பர்களை வந்து உதவுமாறு அழைத்தனர். நண்பர்கள் வந்தனர். இரண்டு படகுகளும் அமிழ்ந்து போகும் நிலையில் மிகுதியான மீன்களால் நிரம்பின.
8-9 தாங்கள் பிடித்த மிகுதியான மீன்களைக் கண்டு மீன் பிடிக்கிறவர்கள் ஆச்சரியப்பட்டனர். சீமோன் பேதுரு இதைக் கண்டபோது இயேசுவின் முன் தலை குனிந்து வணங்கி, “ஆண்டவரே, என்னிடமிருந்து போகவேண்டும். நான் பாவியான மனிதன்” என்றான். 10 செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் கூட ஆச்சரியம் அடைந்தார்கள். (யாக்கோபும் யோவானும் பேதுருவுடன் சேர்ந்து உழைத்தனர்) இயேசு சீமோனை நோக்கி, “பயப்படாதே! இப்போதிலிருந்து மனிதரை ஒன்று சேர்க்கும்படியாக நீ வேலை செய்வாய், மீனைப்பிடிக்க அல்ல!” என்றார்.
11 அம்மனிதர்கள் படகைக் கரைக்கு இழுத்து வந்தனர். அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.
2008 by World Bible Translation Center