Revised Common Lectionary (Semicontinuous)
68 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்றுவோம்.
தேவன் அவரது மக்களுக்கு உதவ வந்தார். அவர்களுக்கு விடுதலை தந்தார்.
69 தேவன் நமக்கு வல்லமை பொருந்திய இரட்சகரைத் தந்தார்.
அவர் தாவீது என்னும் தேவனுடைய பணிவிடைக்காரனின் குடும்பத்தைச் சார்ந்தவர்.
70 தேவன் இதைச் செய்வதாகக் கூறினார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவரது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாக இதை அவர் கூறினார்.
71 நம் எதிரிகளிடம் இருந்து தேவன் நம்மைக் காப்பாற்றுவார்.
நம்மை வெறுக்கும் அனைவரின் கைகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவார்.
72 நமது தந்தையருக்கு அருள்புரிவதாக தேவன் சொன்னார்.
தனது பரிசுத்த வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.
73 நமது தந்தையாகிய ஆபிரகாமுக்கு எதிரிகளின் சக்தியிலிருந்து.
74 நம்மை விடுவிப்பதாக தேவன் வாக்குறுதி தந்தார்.
அதனால் பயமின்றி நாம் அவருக்குச் சேவை செய்வோம்.
75 நாம் நம் வாழ்நாள் முழுவதும் அவருடைய முன்னிலையில் நீதியும் பரிசுத்தமும் வாய்ந்தோராக வாழ்வோம்.
76 இப்போதும் சிறுவனே, நீ உன்னதமான தேவனின் ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்.
கர்த்தருக்கு முன்பாக முன்னோடியாக நீ நடப்பாய். கர்த்தரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வாய்.
77 அவரது மக்கள் இரட்சிக்கப்படுவர் என்பதை அவர்களுக்கு உணர்த்துவாய். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் இரட்சிக்கப்படுவர்.
78 நம் தேவனின் அன்பான இரக்கத்தால் பரலோகத்திலிருந்து
புதுநாள் ஒன்று நம்மீது பிரகாசிக்கும்.
79 இருளில் மரணப் பயத்திடையே வாழும் மக்களுக்கு தேவன் உதவி செய்வார்.
சமாதானத்தை நோக்கி அவர் நம்மை வழிநடத்துவார்.”
என்று சகரியா உரைத்தான்.
தீய ராஜாக்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு
22 கர்த்தர், “எரேமியா, ராஜாவினுடைய அரண்மனைக்குப் போ. யூதாவின் ராஜாவிடம் போ. அங்கு இந்த வார்த்தையைப் பிரச்சாரம் செய்: 2 ‘கர்த்தரிடமிருந்து வருகிற வார்த்தையை யூதாவின் ராஜாவே, கேள். நீ தாவீதின் சிங்காசனத்திலிருந்து ஆளுகிறாய். எனவே, கேள். ராஜாவே, நீயும் உன் அதிகாரிகளும் நன்றாகக் கேட்கவேண்டும். எருசலேமின் வாசல் வழியாக வருகிற அனைத்து ஜனங்களும் கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேட்க வேண்டும். 3 கர்த்தர் கூறுகிறார்: நியாயமானவற்றையும் சரியானவற்றையும் செய்யுங்கள். களவாடுகிறவனிடமிருந்து களவாடப்படுகிற மனிதனைக் காப்பாற்றுங்கள். அனாதைகள் அல்லது விதவைகளுக்குக் காயமோ அல்லது வேறு எதுவுமோ செய்யாதீர்கள். அப்பாவி ஜனங்களைக் கொல்லாதீர்கள். 4 இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் பிறகு இதுதான் நடக்கும். தாவீதின் சிங்காசனத்தின் மேல் இருக்கிற ராஜாக்கள் எருசலேம் நகர வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த ராஜாக்கள் தங்கள் அதிகாரிகளோடு வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த ராஜாக்கள், அவர்களின் அதிகாரிகள், அவர்களின் ஜனங்கள், இரதங்களிலும், குதிரைகளிலும் சவாரி செய்துகொண்டு வருவார்கள். 5 ஆனால், நீங்கள் இந்தக் கட்டளைகளுக்கு அடி பணியாவிட்டால், இதுதான் கர்த்தர் சொல்கிறது: கர்த்தராகிய நான் வாக்குறுதியளிக்கிறேன், இந்த ராஜாக்களின் அரண்மனைகள் அழிக்கப்படும். அது கற்குவியல் ஆகும்’” என்றார்.
6 யூதாவின் ராஜாக்கள் வாழ்கிற அரண்மனையைப்பற்றி கர்த்தர் இவற்றைத் தான் கூறுகிறார்:
“அரண்மனை உயரமானது.
கீலேயாத் காடுகளைப் போன்று உயரமானது.
லீபனோனின் மலையைப்போன்று அரண்மனை உயரமானது.
ஆனால் நான் அதனை வனாந்தரம் போன்று ஆக்குவேன்.
இந்த அரண்மனை ஆளில்லாத நகரத்தை போன்று காலியாகும்.
7 அரண்மனையை அழிக்க நான் ஆட்களை அனுப்புவேன்.
ஒவ்வொரு மனிதனும் ஆயுதங்களை வைத்திருப்பான்.
அந்த ஆயுதங்களை அவன் அரண்மனையை அழிக்கப் பயன்படுத்துவான்.
அம்மனிதர்கள் உங்களது பலமான அழகான கேதுரு தூண்களை வெட்டி எறிவார்கள்.
மனிதர்கள் அத்தூண்களை நெருப்பில் போடுவார்கள்.
8 “பலநாடுகளில் உள்ள ஜனங்கள் இந்நகரத்தின் வழியாகக் கடந்துபோவார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் கேட்பார்கள். ‘ஏன் கர்த்தர் எருசலேம் நகரத்திற்கு இந்தப் பயங்கரமான காரியத்தைச் செய்தார்? எருசலேம் ஒரு மாபெரும் நகரமாக இருந்ததே.’ 9 அந்த வினாவிற்கு இதுதான் பதில்: ‘தேவன் எருசலேமை அழித்தார். ஏனென்றால், யூதாவின் ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கையைப் பின்பற்றாமல் விட்டுவிட்டனர். அந்த ஜனங்கள் அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு சேவை செய்தனர்.’”
யோவாகாஸ் ராஜாவிற்கு எதிரான நியாயத்தீர்ப்பு
10 மரித்துப்போன ராஜாவுக்காக அழவேண்டாம்.
அவனுக்காக அழவேண்டாம்.
ஆனால் இந்த இடத்தை விட்டு விலக வேண்டிய ராஜாவுக்காகக் கடினமாக அழுங்கள்.
அவனுக்காக அழுங்கள்.
ஏனென்றால், அவன் மீண்டும் வரமாட்டான்.
தன் தாய்நாட்டை ஒருபோதும் மீண்டும் பார்க்கமாட்டான்.
11 இது தான் கர்த்தர் யோசியாவின் குமாரனான சல்லூம் (யோவாகாஸ்) பற்றி கூறுகிறது. (சல்லூம் அவனது தந்தை யோசியா மரித்த பிறகு யூதாவின் ராஜா ஆனான்.) “யோவாகாஸ் எருசலேமிலிருந்து வெளியே போயிருக்கிறான். அவன் மீண்டும் எருசலேமிற்கு திரும்பி வரமாட்டான். 12 யோவாகாஸ் எகிப்தியர்களால் தான் கொண்டுப்போகப்பட்ட இடத்திலேயே மரிப்பான். அவன் மீண்டும் இந்த நாட்டைப் பார்க்கமாட்டான்.”
யோயாக்கீம் ராஜாவுக்கு எதிரான தீர்ப்பு
13 யோயாக்கீம் ராஜாவுக்கு இது மிகவும் தீயதாக இருக்கும்.
அவன் தீயவற்றைச் செய்துகொண்டிருக்கிறான்.
எனவே, அவனால் அவனது அரண்மனையைக் கட்ட முடியும்.
அவன் ஜனங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.
எனவே, அவனால் மேல்மாடியில் அறைகளைக் கட்டமுடியும்.
அவன் தனது சொந்த ஜனங்களை வீணாக வேலை செய்ய வைப்பான்.
அவன் அவர்களது வேலைக்குச் சம்பளம் தரமாட்டான்.
14 யோயாக்கீம், “நான் எனக்காகப் பெரிய அரண்மனையைக் கட்டுவேன்.
எனக்கு பெரிய மேல்மாடி அறைகள் இருக்கும்” என்கிறான்.
எனவே, அவன் பெரிய ஜன்னல்களோடு வீடு கட்டுகிறான்.
அவன் கேதுரு மரங்களின் தூணுக்கு சிவப்பு வண்ணத்தைப் பூசுகிறான்.
15 யோயாக்கீமும், உனது வீட்டில் ஏராளமாகக் கேதுரு மரங்களை வைத்திருக்கிறாய்.
அவை உன்னைப் பெரிய ராஜாவாக்காது.
உன் தந்தை யோசியா உணவும் தண்ணீரும்பெற்று திருப்தி அடைந்தான்.
எது சரியானதோ நியாயமானதோ, அதைச் செய்தான்.
யோசியா அதனைச் செய்தான்.
அதனால் அவனுக்கு எல்லாமும் சரியாகப் போனது.
16 யோசியா ஏழைகளுக்கும் யாருக்கெல்லாம் தேவை இருந்ததோ அவர்களுக்கும் உதவினான்.
ஆகையால், அவனுக்கு அனைத்துக் காரியங்களும் எளிமையாக நடந்தன.
யோயாக்கீம், “தேவனை அறிவது” என்பதன் பொருள் என்ன?
இதன் பொருள் சரியாக வாழு, நியாயமாக இரு, ஏழை எளியோருக்கு உதவு.
என்னை அறிவது என்பதன் பொருள் இதுதான்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
17 “யோயாக்கீம், உனது கண்கள் உனக்குப் பயனுள்ளவற்றை மட்டுமே பார்க்கின்றன.
நீ எப்பொழுதும் உனக்கு மிகுதியாகத் தேவையானதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறாய்.
உன் இருதயம் அப்பாவி ஜனங்களைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறது.
மற்ற ஜனங்களின் பொருட்களை நீ திருட விரும்புகிறாய்.”
வாழும் நம்பிக்கை
3 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு மகிமை உண்டாவதாக. தேவன் தம் இரக்கத்தால் அழிவில்லாத ஒரு நம்பிக்கையை நாம் அடையும்பொருட்டு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம் நமக்குப் புது வாழ்வையளித்தார். 4 இப்பொழுது தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு பரலோகத்தில் வைத்திருக்கின்ற ஆசீர்வாதங்களை நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கின்றோம். அந்த ஆசீர்வாதங்கள் அழிவற்றது; அழிக்கப்பட முடியாதது; அதன் அழகு மாறாதது.
5 இந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உரியவை. இறுதி நேரத்தில் தம் வல்லமையை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிற இரட்சிப்புக்காக விசுவாசத்தின் மூலம் தேவனுடைய வல்லமையால் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள். 6 இது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும். சில சமயங்களில் பல்வேறு வகைப்பட்ட தொந்தரவுகள் உங்களுக்கு துயரத்தைத் தரலாம். 7 ஏன் இந்தத் துன்பங்கள் நிகழ்கின்றன? உங்கள் விசுவாசம் பரிசுத்தமானது என்று நிரூபிப்பதற்கேயாகும். இந்த விசுவாசத்தின் பரிசுத்தம் பொன்னைக் காட்டிலும் சிறந்தது. பொன்னின் சுத்தத் தன்மை நெருப்பால் சோதித்தறியப்படுகிறது. ஆனால் பொன் அழிவுறும். இயேசு கிறிஸ்து வரும்போது, உங்கள் விசுவாசத்தின் பரிசுத்தமானது உங்களுக்கு கனத்தையும், மகிமையையும், புகழ்ச்சியையும் கொடுக்கும்.
8 நீங்கள் கிறிஸ்துவைப் பார்த்ததில்லை. அப்படியிருந்தும் அவரை நேசிக்கிறீர்கள். நீங்கள் இப்போது அவரைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் அவரை விசுவாசிக்கிறீர்கள். சொல்லமுடியாத சந்தோஷத்தால் உங்கள் மனம் நிரம்பும். அச்சந்தோஷம் மகிமை மிகுந்தது. 9 உங்கள் விசுவாசம் ஒரு குறிக்கோளை உடையது. இறுதியில் உங்கள் ஆத்தும இரட்சிப்பாகிய நற்பலனைப் பெறுவீர்கள்.
2008 by World Bible Translation Center