Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 99

99 கர்த்தர் ராஜா.
    எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும்.
கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
    எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.
சீயோனில் கர்த்தர் மேன்மையானவர்.
    ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர்.
எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும்.
    தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது.
    தேவன் பரிசுத்தர்.

வல்லமையுள்ள ராஜா நீதியை நேசிக்கிறார்.
    தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர்.
    யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர்.
நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
    அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள்.

மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர்.
    அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன்.
அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது
    அவர் அவர்களுக்குப் பதில் தந்தார்.
உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார்.
    அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
    தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார்.

எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர்.
    ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும்,
    மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர்.
நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
    அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
    நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.

யாத்திராகமம் 39:32-43

மோசே பரிசுத்தக் கூடாரத்தைப் பார்வையிடுதல்

32 இவ்வாறு பரிசுத்தக் கூடாரத்தின் (அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின்) எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்பட்டன. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் ஒவ்வொன்றையும் செய்தனர். 33 பின் அவர்கள் மோசேக்குப் பரிசுத்தக் கூடாரத்தையும், அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் காட்டினார்கள். வளையங்கள், சட்டங்கள், தாழ்ப்பாள்கள், தூண்கள், பீடங்கள் ஆகியவற்றை அவனுக்குக் காட்டினார்கள். 34 சிவப்புச் சாயம் தோய்த்த ஆட்டுக்கடாவின் தோலால் கூடாரம் மூடப்பட்டிருந்ததைக் காட்டினார்கள். அதன் கீழ் பதனிடப்பட்ட மெல்லிய தோலாலாகிய மூடியையும் காட்டினார்கள். மகா பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலை மூடிய திரைச் சீலையயும் அவர்கள் அவனுக்குக் காட்டினார்கள்.

35 அவர்கள் மோசேக்கு உடன்படிக்கைப் பெட்டியைக் காட்டினார்கள். பெட்டியைச் சுமக்கும் தண்டுகளையும், பெட்டியின் மூடியையும் காண்பித்தனர். 36 மேசையை அதனுடன் சேர்ந்த பொருட்களோடும், விசேஷ ரொட்டியோடும் காட்டினார்கள். 37 அவர்கள் அவனுக்குப் பசும் பொன்னால் செய்யப்பட்ட குத்துவிளக்குத் தண்டையும் அதன் அகல்களையும் காட்டினார்கள். அகலுக்குப் பயன்படுத்தவேண்டிய எண்ணெயையும் பிற பொருட்களையும் காண்பித்தனர். 38 பொன் நறுமணப்பீடம், அபிஷேக எண்ணெய், நறுமணப்பொருள், கூடாரத்தை மூடிய தொங்குதிரை ஆகியவற்றையும் அவர்கள் மோசேக்குக் காட்டினார்கள். 39 வெண்கல பலிபீடத்தையும், வெண்கல சல்லடையையும் அவனுக்குக் காட்டினார்கள். பலிபீடத்தைச் சுமக்கும் தண்டுகளையும் காட்டினார்கள். பலிபீடத்தின் பொருட்களையும் காண்பித்தனர். வெண்கலத் தொட்டியையும் அதன் பீடத்தையும் அவனுக்குக் காட்டினார்கள்.

40 பின்பு தூண்களோடும் அவற்றின் பீடங்களோடும் கூடிய வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் காணப்பட்ட தொங்கு திரைகளை அவர்கள் மோசேக்குக் காட்டினார்கள். பிரகாரத்தின் நுழை வாயிலில் இருந்த திரையைக் காண்பித்தனர். கயிறுகளையும், கூடார ஆணிகளையும் காட்டினார்கள். பரிசுத்த கூடாரத்தின் அதாவது ஆசரிப்புக் கூடாரத்தின் எல்லாப் பொருட்களையும் அவர்கள் அவனுக்குக் காட்டினார்கள்.

41 பரிசுத்த பிரகாரங்களில் பணிவிடை செய்யும் ஆசாரியர்களுக்கான ஆடைகளை அவர்கள் மோசேக்குக் காட்டினார்கள். ஆசாரியனான ஆரோனுக்கும், அவனது குமாரர்களுக்கும் தைக்கப்பட்ட விசேஷ ஆடைகளைக் காட்டினார்கள். அவர்கள் ஆசாரியர்களாகப் பணிவிடை செய்யும்போது அணிய வேண்டிய ஆடைகள் இவையாகும்.

42 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் இந்த வேலைகளை எல்லாம் செய்திருந்தனர். 43 மோசே எல்லா வேலைகளையும் கூர்ந்து கவனித்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே எல்லா வேலைகளும் நிறைவேற்றப்பட்டதைக் கண்டான். எனவே மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.

மத்தேயு 14:1-12

ஏரோது இயேசுவைப்பற்றி அறிதல்

(மாற்கு 6:14-29; லூக்கா 9:7-9)

14 அப்போது கலிலேயாவின் மன்னனாயிருந்த ஏரோது இயேசுவைப்பற்றி மக்கள் பேசியவைகளைக் கேள்வியுற்றான். எனவே, ஏரோது தன் வேலைக்காரர்களிடம், “இந்த மனிதனே உண்மையில் யோவான் ஸ்நானகன். மரணத்திலிருந்து அவன் மீண்டும் எழுந்திருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவனால் இத்தகைய அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்று கூறினான்.

யோவான் ஸ்நானகனின் மரணம்

இதற்கு முன்னர், ஏரோது யோவானைக் கைது செய்திருந்தான். ஏரோது யோவானைச் சங்கிலியால் கட்டி சிறையிலிட்டிருந்தான். ஏரோதியாளின் நிமித்தம் யோவானை ஏரோது கைது செய்திருந்தான். ஏரோதுவின் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாள். “நீ ஏரோதியாளை உன்னோடு வைத்திருப்பது சரியல்ல” என்று யோவான் ஏரோதுவிடம் கூறியதால் யோவானை ஏரோது கைது செய்தான். யோவான் தீர்க்கதரிசியென மக்கள் நம்பியிருந்தார்கள். எனவே, யோவானைக் கொல்ல விரும்பிய ஏரோது பயந்தான்.

ஏரோதின் பிறந்த நாளன்று, ஏரோதியாளின் குமாரத்தி ஏரோதுவையும் அவன் நண்பர்களையும் மகிழ்விக்க நடனமாடினாள். அவள் நடனத்தால் ஏரோது மிக மகிழ்ந்தான். எனவே, அவள் எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்தான். தன் குமாரத்தி எதைக் கேட்கவேண்டும் என்பதை ஏரோதியாள் முன்னமே அறிவுறுத்தியிருந்தாள். ஆகவே, அவள் ஏரோதுவிடம், “எனக்கு யோவான்ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்துத் தாருங்கள்” என்று கூறினாள்.

இதனால் மன்னன் ஏரோது மிகுந்த துக்கம் கொண்டான். ஆனால் தன் குமாரத்தி எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்திருந்தான். ஏரோதுவுடன் உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் அவன் வாக்குறுதியைக் கேட்டிருந்தார்கள். எனவே, அவள் விரும்பியதை நிறைவேற்ற ஏரோது கட்டளையிட்டான். 10 சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டுவதற்கு அவன் ஆட்களை அனுப்பினான். 11 அவர்கள் யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து அதை அவளிடம் கொடுத்தனர். பின்னர், அப்பெண் அத்தலையைத் தன் தாய் ஏரோதியாளிடம் எடுத்துச் சென்றாள். 12 யோவானின் சீஷர்கள் அவனது உடலைப் பெற்று அடக்கம் செய்தனர். பின், அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center