Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 78:1-4

ஆசாபின் ஒரு மஸ்கீல்

78 என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள்.
    நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள்.
நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன்.
    நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன்.
நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம்.
    எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள்.
நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம்.
    இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.
நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம்.
    அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம்.

சங்கீதம் 78:12-16

12 எகிப்தின் சோவானில் தேவன்
    அவர்களின் தந்தையருக்குத் தனது மிகுந்த வல்லமையை வெளிப்படுத்தினார்.
13 தேவன் செங்கடலைப் பிளந்து ஜனங்களை அதனூடே நடத்திச்சென்றார்.
    இருபுறங்களிலும் தண்ணீரானது உறுதியான சுவராய் எழுந்து நின்றது.
14 ஒரு உயர்ந்த மேகத்தினால் தேவன் அவர்களை ஒவ்வொரு பகலிலும் வழிநடத்தினர்.
    ஒவ்வோர் இரவும் ஒரு நெருப்புத் தூணின் ஒளியினால் தேவன் அவர்களை வழிநடத்தினர்.
15 பாலைவனத்தின் பாறையை தேவன் பிளந்தார்.
    நிலத்தின் ஆழத்திலிருந்து அவர் அந்த ஜனங்களுக்கு தண்ணீரைக் கொடுத்தார்.
16 கன்மலையிலிருந்து
    ஆறாகப் பெருக்கெடுக்கும் தண்ணீரை தேவன் வரவழைத்தார்!

ஏசாயா 48:17-21

17 கர்த்தரும், மீட்பருமாகிய, இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்கிறார்,

“‘நானே உனது தேவனாகிய கர்த்தர், பயனுள்ளதைச் செய்ய நான் உனக்குக் கற்பிக்கிறேன்.
    நீ போக வேண்டிய பாதையில் உன்னை நான் வழி நடத்துகிறேன்.
18 நீ எனக்குக் கீழ்ப்படிந்திருந்தால்,
    சமாதானம் பாய்ந்து வரும் ஆற்றைப்போன்று உன்னிடம் வந்திருக்கும்.
மீண்டும் மீண்டும் நன்மை கடல்
    அலைகள்போன்று, உன்னிடம் வந்திருக்கும்,
19 நீ எனக்குக் கீழ்ப்படிந்தால், உனக்கு நிறைய பிள்ளைகள் இருந்திருக்கும்.
    அவர்கள் மணல் துகள்களைப்போன்று இருந்திருப்பார்கள்.
நீ எனக்குக் கீழ்ப்படிந்திருந்தால், நீ அழிக்கப்படாமல் இருந்திருப்பாய்.
    என்னோடு நீ தொடர்ந்து இருந்திருப்பாய்.’

20 “எனது ஜனங்களே, பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்!
    எனது ஜனங்களே, கல்தேயரை விட்டு ஓடுங்கள்!
ஜனங்களிடம் இந்தச் செய்தியை மகிழ்ச்சியோடு கூறுங்கள்!
    பூமியிலுள்ள தொலை தூர இடங்களிலும் இந்தச் செய்தியைப் பரப்புங்கள்.
ஜனங்களிடம் சொல்லுங்கள்.
    ‘கர்த்தர் அவரது தாசனாகிய யாக்கோபை மீட்டார்!’
21 கர்த்தர் அவரது ஜனங்களை வனாந்திரத்தின் வழியாக நடத்திச் செல்கிறார்.
    அவர்களுக்கு எப்பொழுதும் தாகமாய் இராது! ஏனென்றால், அவரது ஜனங்களுக்காக அவர் கன்மலையிலிருந்து தண்ணீரைப் பாயச்செய்வார்!
    அவர் பாறைகளைப் பிளந்தார்! தண்ணீர் வெளியே பாய்ந்தது.”

யாக்கோபு 4:11-16

நீங்கள் நியாயாதிபதி அல்ல

11 சகோதர சகோதரிகளே, தீயகாரியங்களைப் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்துங்கள். கிறிஸ்துவில் உன் சகோதரனை அவமானப்படுத்துவது அல்லது அவனை நியாயம் தீர்ப்பது என்பது அவன் பின்பற்றுகிற சட்டத்தை அவமானப்படுத்துவதற்கு சமமாகும். உன் சகோதரனை நியாயம் தீர்த்தால் அவன் பின்பற்றிக்கொண்டிருந்த சட்டத்தையே நியாயம் தீர்க்கிறாய் என்பதே அதன் பொருளாகும். 12 சட்டத்தை உருவாக்கியவர் ஒரே ஒருவரே இருக்கிறார். அவர் தேவனாவார். சட்டத்தையே கேள்விக்குட்படுத்தினால், சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமகனாக இருப்பதை விட்டு நீ நீதிபதியாகிறாய் என்பது பொருளாகும். சட்டத்தைக் காப்பாற்றவும், அழிக்கவும் அதிகாரம் கொண்டவர் அவர் ஒருவரே. எனவே உன் சகோதரனையும் சகோதரியையும் நீ தான் நியாயம் தீர்க்க வேண்டும் என நினைக்க நீ யார்?

தேவன் உன் வாழ்வைத் தீர்மானிக்கட்டும்

13 “இன்று அல்லது நாளை நாம் ஒரு நகரத்திற்குப் போவோம். அங்கே ஓராண்டு தங்குவோம். வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்போம்” என்று உங்களில் சிலர் கூறுகிறார்கள். கவனியுங்கள். 14 "நாளை என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாழ்க்கை பனி புகையைப் போன்றது. கொஞ்ச காலத்திற்கே உங்களால் பார்க்கமுடியும். ஆனால் பிறகு மறைந்துவிடும் என்பதை நினைத்துப்பாருங்கள். 15 எனவே, "தேவனின் விருப்பம் இருந்தால் நாம் வாழ்வோம். இதை அல்லது அதைச் செய்வோம்" என்று எண்ணுங்கள். 16 ஆனால், இப்போது நீங்கள் செய்யத் திட்டமிட்டிருக்கிற பெரிய காரியங்கள் எல்லாவற்றைப்பற்றியும் பெருமை பாராட்டிக்கொள்கிறீர்கள். அது தவறாகும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center