Revised Common Lectionary (Semicontinuous)
148 கர்த்தரைத் துதியுங்கள்!
மேலேயுள்ள தேவ தூதர்களே,
பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!
2 தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது சேனைகள்[a] எல்லோரும் அவரைத் துதியுங்கள்!
3 சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்!
நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!
4 மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்!
வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!
5 கர்த்தருடைய நாமத்தைத் துதி.
ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!
6 இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார்.
என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார்.
7 பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்!
சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்!
8 தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும்
புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார்.
9 மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும்
கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.
10 எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும்
ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.
11 பூமியின் தேசங்களையும் ராஜாக்களையும் தேவன் உண்டாக்கினார்.
தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார்.
12 இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார்.
முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார்.
13 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!
அவர் நாமத்தை என்றென்றும்
மகிமைப்படுத்துங்கள்!
பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!
14 தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார்.
தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள்.
ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள்.
தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார்.
கர்த்தரைத் துதியுங்கள்.
17 யோய்தா மரித்தப் பிறகு, யூதாவின் தலைவர்கள் ராஜா யோவாசிடம் வந்து பணிந்து வணங்கினார்கள். அவர்கள் கூறுவதை ராஜா கவனித்தான். 18 ராஜாவும் அந்த தலைவர்களும் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை விட்டு விலகினார்கள். இவர்களது முற்பிதாக்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றி வந்தனர். இவர்களோ விக்கிரகங்களையும், சிலைகளையும் வழிபட்டனர். ராஜாவும் தலைவர்களும் தவறு செய்ததால் தேவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதுக் கோபங்கொண்டார். 19 தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பி ஜனங்களைத் தன்னிடம் திரும்ப அழைக்க முயன்றார். தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரித்தனர். ஜனங்கள் கேட்க மறுத்து விட்டனர்.
20 தேவனுடைய ஆவி சகரியா மீது வந்தது. சகரியாவின் தந்தை ஆசாரியனாகிய யோய்தா ஆவான். சகரியா ஜனங்களின் முன்பு நின்று, “தேவன் சொல்வது இதுதான்: ‘நீங்கள் ஏன் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றீர்கள்? நீங்கள் வெற்றியடையமாட்டீர்கள். நீங்கள் கர்த்தரைவிட்டு விலகிவிட்டீர்கள். எனவே கர்த்தரும் உங்களை விட்டு விலகிவிட்டார்!’” என்றான்.
21 ஆனால் ஜனங்கள் சகரியாவிற்கு எதிராகத் திட்டமிட்டனர். சகரியாவைக் கொல்லும்படி ராஜா கட்டளையிட்டான். எனவே அவன் மரிக்கும்வரை ஜனங்கள் அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஜனங்கள் இதனை ஆலய பிரகாரத்திலேயே செய்தனர். 22 யோய்தா தன் மீது காட்டிய கருணையை யோவாஸ் ராஜா நினைவுக்கூரவில்லை. யோய்தா சகரியாவின் தந்தை. எனினும் யோவாஸ், யோய்தாவின் குமாரனாகிய சகரியவைக் கொன்றான். மரிப்பதற்கு முன்பு சகரியா, “நீ செய்வதை கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் உன்னைத் தண்டிப்பார்!” என்றான்.
23 ஆண்டு முடிவில், யோவாசுக்கு எதிராக ஆராமியப்படை வந்தது. அவர்கள் யூதாவையும் எருசலேமையும் தாக்கினார்கள். மேலும் அவர்கள் அந்த ஜனங்களின் தலைவர்கள் அனைவரையும் கொன்றார்கள். தமஸ்கு ராஜாவுக்கு விலையுயர்ந்தப் பொருட்கள் அனைத்தையும் அனுப்பிவைத்தனர். 24 மிகவும் குறைந்த எண்ணிகையுள்ள வீரர்களுடைய குழுவுடனேயே ஆராமியப்படை வந்தது. ஆயினும் அது பெரும் அளவுடைய யூதாவின் படையை வெல்லுமாறு கர்த்தர் அருளினார். யூதாவின் ஜனங்கள் தம் முற்பிதாக்கள் வழிபட்ட தேவனாகிய கர்த்தரை விட்டு விலகியதால், கர்த்தர் இவ்வாறு செய்தார். எனவே யோவாஸ் தண்டிக்கப்பட்டான்.
உதவியாளர்கள் நியமனம்
6 இயேசுவைப் பின்பற்றுவோராகப் பற்பல மக்கள் மாறிகொண்டிருந்தனர். ஆனால் அதே வேளையில் கிரேக்க மொழி பேசுகின்ற சீஷர்களுக்கும் மற்ற யூதச் சீஷர்களுக்கும் ஒரு விவாதம் நடந்தது. சீஷர்கள் ஒவ்வொரு நாளும் பெற்ற பங்கைப் போன்று அவர்களுடனிருந்த விதவைகளுக்கு அளிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். 2 பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் சீஷர்கள் கூட்டத்தை ஒருமிக்க அழைத்தனர்.
அப்போஸ்தலர்கள் அவர்களை நோக்கி, “தேவனுடைய வார்த்தையைப் போதிக்கும் எங்கள் வேலை தடையுற்றுள்ளது. அது நல்லதல்ல! மக்களுக்கு உண்பதற்கு எதையேனும் கொடுப்பதில் உதவுவதைக் காட்டிலும் தேவனுடைய வார்த்தையைத் தொடர்ந்து போதிப்பதே எங்களுக்கு நல்லது. 3 எனவே, சகோதரர்களே, உங்களில் ஏழு பேரைத் தேர்ந்து எடுங்கள். மக்கள் நல்லவர்களெனக் கருதுவோராக அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் ஆவியாலும், ஞானத்தாலும் நிரம்பப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இந்த வேலையைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களை நியமிப்போம். 4 பின்னர் நாங்கள் எங்கள் முழு நேரத்தையும் பிரார்த்தனை செய்வதற்கும், தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதற்கும் பயன்படுத்துவோம்” என்றனர்.
5 கூட்டத்தினர் எல்லோரும் இந்தத் திட்டத்தை வரவேற்றனர். எனவே அவர்கள் ஏழு பேரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் ஸ்தேவான் (நம்பிக்கை மிகுந்தவனும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவனுமான மனிதன்), பிலிப்பு,[a] ப்ரோகோரஸ், நிகனோர், தீமோன், பர்மேனஸ், நிக்கோலஸ் (அந்தியோகியாவிலிருந்து வந்தவனும் யூதனாக மாற்றப் பட்டவனும் ஆவான்) ஆகியோராவர். 6 அவர்கள் அந்த ஏழு பேரையும் அப்போஸ்தலர்களுக்கு முன்பாக அழைத்து வந்தனர். அப்போஸ்தலர்கள் பிரார்த்தனை செய்து தங்கள் கைகளை அவர்கள் மீது வைத்தனர்.
7 தேவனுடைய வார்த்தை மென்மேலும் பெரும் எண்ணிக்கையிலான மக்களை எட்டியது. எருசலேமில் சீஷர்களின் எண்ணிக்கை மேலும், மேலும் அதிகரித்தது. யூத ஆசாரியர்களில் ஒரு பெரும் கூட்டத்தினரும் கூட விசுவாசம் வைத்துக் கீழ்ப்படிந்தனர்.
51 பின் ஸ்தேவான், “பிடிவாதமான யூதத் தலைவர்களே! நீங்கள் உங்கள் இருதயங்களை தேவனுக்குக் கொடுக்கவில்லை! நீங்கள் அவர் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கமாட்டீர்கள்! பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் கூற முயல்வதை எப்போதும் எதிர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தந்தையர் இதைச் செய்தார்கள். நீங்களும் அவர்களைப் போலவே இருக்கிறீர்கள்! 52 உங்கள் தந்தையர் தங்கள் காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் புண்படுத்தினார்கள். அந்தத் தீர்க்கதரிசிகள் வெகு காலத்திற்கு முன்பே நீதியுள்ள ஒருவர் வருவார் எனக் கூறினார்கள். ஆனால் உங்கள் தந்தையர் அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள். இப்பொழுது நீங்கள் நீதியுள்ள அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளீர்கள். 53 மோசேயின் சட்டத்தைப் பெற்றவர்கள் நீங்கள். தமது தேவதூதர்களின் மூலமாகக் தேவன் இந்தச் சட்டத்தை உங்களுக்குக் கொடுத்தார். ஆனால் நீங்களோ இந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில்லை” என்றான்.
ஸ்தேவான் கொல்லப்படுதல்
54 இவற்றை ஸ்தேவான் கூறுவதை யூதத் தலைவர்கள் கேட்டனர். அவர்கள் மிகுந்த சினம் அடைந்தனர். யூதத் தலைவர்கள் பித்துப் பிடித்தவர்களைப்போல், ஸ்தேவானை நோக்கிப் பற்களைக் கடித்தனர். 55 ஆனால் ஸ்தேவானோ பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக இருந்தான். ஸ்தேவான் வானத்தை அண்ணாந்து பார்த்தான். அவன் தேவனுடைய மகிமையைக் கண்டான். தேவனுடைய வலது பக்கத்தில் இயேசு நிற்பதைக் கண்டான். 56 ஸ்தேவான், “பாருங்கள்! பரலோகம் திறந்திருப்பதை நான் பார்க்கிறேன். தேவனுடைய வலபக்கத்தில் மனித குமாரன் நிற்பதை நான் காண்கிறேன்!” என்றான்.
57 பின் யூத அதிகாரிகள் எல்லோரும் உரத்த குரலில் சத்தமிட்டார்கள். அவர்கள் கைகளால் தமது காதுகளைப் பொத்திக்கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் ஸ்தேவானை நோக்கி ஓடினர். 58 அவர்கள் அவனை நகரத்திற்கு வெளியில் கொண்டு சென்று அவன் சாகும்வரை அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஸ்தேவானுக்கு எதிராகப் பொய் கூறியவர்கள் தங்களது மேலாடைகளை சவுல் என்னும் இளைஞனிடம் கொடுத்தார்கள். 59 பின் அவர்கள் ஸ்தேவானின் மேல் கற்களை வீசினார்கள். ஆனால் ஸ்தேவான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். அவன், “கர்த்தராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்!” என்றான். 60 அவன் முழங்காலில் நின்று, “கர்த்தரே! இந்தப் பாவத்திற்காக அவர்களைக் குற்றம் சாட்டாதிரும்!” என்று பிரார்த்தித்தான். இதைக் கூறிய பிறகு ஸ்தேவான் இறந்து போனான்.
2008 by World Bible Translation Center