Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 132:1-12

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் சங்கீதம்.

132 கர்த்தாவே, தாவீது துன்புற்ற வகையை நினைத்துப்பாரும்.
தாவீது கர்த்தருக்கு ஒரு வாக்குறுதி அளித்தான்.
    யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்கு தாவீது ஒரு விசேஷ வாக்குறுதி அளித்தான்.
தாவீது, “நான் என் வீட்டிற்குள் போகமாட்டேன்,
    நான் என் படுக்கையில் படுக்கமாட்டேன்,
நான் தூங்கமாட்டேன்,
    என் கண்கள் ஓய்வெடுக்க விடமாட்டேன்,
கர்த்தருக்கு ஒரு வீட்டை நான் கண்டுபிடிக்கும் மட்டும்,
    யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குரிய வீட்டை நான் காணும்மட்டும், இக்காரியங்களில் ஒன்றையும் நான் செய்யமாட்டேன்!” என்றான்.

எப்பிராத்தாவில் நாங்கள் இதைப்பற்றிக் கேள்விப்பட்டோம்.
    கீரியாத் யாரீமில் உடன்படிக்கைப் பெட்டியை நாங்கள் கண்டோம்.
நாம் பரிசுத்தக் கூடாரத்திற்குச் செல்வோம்.
    தேவன் பாதங்களை ஓய்வாக வைக்கும் பாதப்படியில் நாம் தொழுதுகொள்வோம்.
கர்த்தாவே நீர் ஓய்வுக்கொள்ளும் இடத்திலிருந்து எழும்பும்.
    கர்த்தாவே, உமது வல்லமையுள்ள பெட்டியோடு எழும்பும்.
கர்த்தாவே, உமது ஆசாரியர்கள் நன்மையை அணிந்திருக்கிறார்கள்.
    உம்மைப் பின்பற்றுவோர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.

10 உமது பணியாளகிய தாவீதின் நன்மைக்காக,
    நீர் தேர்ந்தெடுத்த ராஜாவைத் தள்ளிவிடாதேயும்.
11 கர்த்தர் தாவீதுக்கு ஒரு வாக்குறுதியை அருளினார்.
    தாவீதிடம் நேர்மையோடிருப்பதாக கர்த்தர் வாக்களித்தார். தாவீதின் குடும்பத்திலிருந்து ராஜாக்கள் வருவார்கள் என்று கர்த்தர் வாக்குறுதி அளித்தார்.
12 கர்த்தர், “தாவீதே, உனது பிள்ளைகள் என் உடன்படிக்கைக்கும் நான் கற்பிக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்தால்,
    உன் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் என்றென்றும் ராஜாவாக இருப்பார்கள்” என்றார்.

சங்கீதம் 132:13-18

13 அவரது ஆலயத்திற்குரிய இடமாக விரும்பி கர்த்தர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்.
    அந்த இடத்தையே தம்முடைய ஆலயத்திற்காக விரும்பினார்.
14 கர்த்தர், “என்றென்றைக்கும் எப்போதும் இதுவே என் இடமாக இருக்கும்.
    நான் இருக்கப்போகும் இடமாக இதனைத் தேர்ந்தெடுக்கிறேன்.
15 நான் இந்நகரை மிகுதியான உணவினால் நிரப்பி ஆசீர்வதிப்பேன்.
    ஏழைகளுக்கும் உண்ணும் உணவு மிகுதியாகக் கிடைக்கும்.
16 மீட்பினால் ஆசாரியர்களை நான் உடுத்துவிப்பேன்.
    என்னைப் பின்பற்றுவோர் இங்கு மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.

17 “இங்கு நான் தாவீதைப் பலப்படுத்துவேன்.
    நான் தேர்ந்தெடுத்த ராஜாவுக்கு ஒரு விளக்கை அளிப்பேன்.
18 தாவீதின் பகைவர்களை வெட்கத்தால் மூடுவேன்.
    ஆனால் நான் தாவீதின் அரசைப் பெருகும்படி செய்வேன்” என்றார்.

2 இராஜாக்கள் 23:1-14

சட்டங்களை ஜனங்கள் கேட்கிறார்கள்

23 தன்னை சந்திக்கும்படி யூதர் தலைவர்களையும் எருசலேம் தலைவர்களையும் ராஜா யோசியா அழைத்தான். பிறகு ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். யூத ஜனங்களும் எருசலேமிலுள்ள ஜனங்களும் அவனோடு சென்றனர். ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஜனங்களுள் முக்கியமானவர்களும் முக்கியம் இல்லாதவர்களும் அவனோடு சென்றனர். பிறகு ராஜா உடன்படிக்கைப் புத்தகத்தை வாசித்துக்காட்டினான். இந்த சட்டப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்டது. ராஜா அதனை வாசித்தபோது ஜனங்களால் அதனைக் கேட்க முடிந்தது.

ராஜா (மேடை மேல்) தூண் அருகே நின்றுக் கொண்டு கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்துக்கொண்டான். கர்த்தரைப் பின்பற்றவும், அவரது கட்டளைகளுக்கும் உடன்படிக்கைக்கும் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். அவன் அதனை முழு மனதோடும் ஆத்துமாவோடும் செய்வதாக ஒப்புக்கொண்டான். இப்புத்தகத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். சுற்றி நின்ற ஜனங்களும் உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்வதாக உறுதி கூறினார்கள்.

பிறகு ராஜா தலைமை ஆசாரியனான இல்க்கியாவுக்கும் மற்ற ஆசாரியர்களுக்கும் வாயில் காவலர்களுக்கும் பாகாலுக்கும் அசெரியாவிற்கும் வானுலக நட்சத்திரங்களுக்கும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த சகல வழிபாட்டுப் பொருட்களையும் நீக்கி வெளியே போடச் சொன்னான். பிறகு யோசியா அவற்றை எருசலேமிற்கு வெளியே கீதரோன் வெளிகளில் எரித்துப்போட்டான். பின் அவற்றின் சாம்பலை பெத்தேலுக்கு கொண்டுவந்தனர்.

யூத ராஜா ஆசாரியர்களாகப் பணி செய்ய மிகச் சாதாரண ஆட்களைத் தேர்ந்தெடுத்திருந்தான். இவர்கள் ஆரோன் வம்சத்தில் உள்ளவர்கள் அல்ல. அப்பொய் ஆசாரியர்கள் மேடையில் எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள யூத நகரங்களிலும் நறுமணப் பொருட்களை எரித்து வந்தனர். அவர்கள் பாகால், சூரியன், சந்திரன், கிரகங்கள், வானுலக நட்சத்திரங்கள் போன்றவற்றுக்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். ஆனால் இல்க்கியா அப்போலி ஆசாரியர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார்.

யோசியா கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அசேரா என்னும் தேவதையின் விக்கிரகத்தை அகற்றினான். அதனை நகரத்திற்கு வெளியே கொண்டு போய் கீதரோன் வெளியில் எரித்துப்போட்டான். பின் அவன் எரிந்தவற்றை அடித்து சாம்பலாக்கி சாதாரண ஜனங்களின் கல்லறையில் தூவிவிட்டான்.

பின் ராஜாவாகிய யோசியா கர்த்தருடைய ஆலயத்திற்குள் விபசாரம் செய்து கொண்டிருந்த ஆண்களின் வீடுகளை நொறுக்கினான். பெண்களும் அவ்வீடுகளைப் பயன்படுத்தி வந்தனர். அசேராவுக்காக என்றும் (பொய்த் தேவதைக்காக) அங்கே சிறு கூடாரங்களை அமைத்திருந்தனர். 8-9 அப்போது, ஆசாரியர்கள் எருசலேமிற்கு பலிகளைக் கொண்டு வந்து ஆலயத்திற்குள் பலியிடவில்லை. ஆசாரியர்கள் யூத நாடு முழுவதிலும் வாழ்ந்தனர். ஆனால் பொய்த் தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து பலியிட்டு வழிபாடு செய்துவந்தனர். இப்பொய் தெய்வங்களுக்கான மேடைகள் கேபா முதல் பெயெர்செபா மட்டும் நிறைந்திருந்தன. ஆசாரியர்கள் சாதாரண ஜனங்களோடு புளிப்பில்லாத அப்பங்களை உண்டு வந்தனர். எருசலேமின் ஆலயத்தில் ஆசாரியர்களுக்கென இருந்த சிறப்பு இடத்தில் அவர்கள் உண்ணவில்லை. ஆனால் ராஜா (யோசியா) அப்பொய்த் தெய்வங்களின் மேடைகளை அழித்து, அந்த ஆசாரியர்களை எருசலேமிற்கு அழைத்து வந்தான். இல்க்கியாவும் பட்டணத்து வாசலுக்குப் போகும் வழியின் இடது புறமிருந்த யோசுவாவினால் கட்டப்பட்ட மேடையை அழித்தான். (யோசுவா அந்நகரை ஆட்சி செய்தவன்).

10 தோப்பேத் இன்னோமின் மகனது பள்ளத்தாக்கிலுள்ள ஒரு இடம். அங்கே ஜனங்கள் தம் பிள்ளைகளைக் கொன்று பலிபீடத்தில் எரித்து மோளேகு என்ற பொய்த்தெய்வத்தை மகிமைப்படுத்தி வந்தனர். ராஜா இந்த இடத்தையும் ஜனங்கள் மீண்டும் பயன்படுத்த முடியாதபடி அழித்துப்போட்டான். 11 முன்பு, யூத ராஜா கர்த்தரின் ஆலய வாசல் அருகில் குதிரைகளையும் இரதங்களையும் வைத்திருந்தான். இது நாத்தான்மெலெக் எனும் அதிகாரியின் அறையின் அருகில் இருந்தது. இவை சூரியத் தெய்வத்தை சிறப்பிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. ராஜா குதிரைகளை அப்புறப்படுத்திவிட்டு சூரியனின் இரதங்களை எரித்துவிட்டான்.

12 முன்பு, யூத ராஜாக்கள் ஆகாப் கட்டிடத்தின் கூரைமீது பலிபீடங்களைக் கட்டியிருந்தார்கள். மனாசேயும் கர்த்தருடைய இரு ஆலய முற்றத்திலும் பலிபீடங்களைக் கட்டியிருந்தான். யோசியா இப்பலிபீடங்கள் அனைத்தையும் அழித்து அவற்றின் துண்டுகளையும் தூளையும் கீதரோன் பள்ளத்தாக்கில் எறிந்தான்.

13 முன்பு, சாலொமோன் ராஜா எருசலேம் அருகிலுள்ள நாசமலையின் அருகில் பொய்த் தெய்வங்களுக்கான மேடைகளை அமைத்தான். அவை மலையின் தென்புறத்தில் இருந்தன. சீதோனியர்களால் தொழுதுகொள்ளப்பட்ட அருவருப்புமிக்க அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவெருப்பு தெய்வமான காமோசிற்கும், அம்மோனியரின் அருவெருப்பு தெய்வமான மில்கோமுக்கும் மேடைகளை சாலொமோன் ராஜா அமைத்திருந்தான். ஆனால் யோசியா அவையனைத்தையும் அழித்துப் போட்டான். 14 அதோடு யோசியா ராஜா ஞாபகக் கற்களையும் அசெரா என்னும் பெண் தேவதையின் விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கினான். பின் மரித்துப்போனவர்களின் எலும்புகளை அவற்றின் மீது தூவினான்.

யோவான் 3:31-36

பரலோகத்திலிருந்து வந்தவர்

31 “பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசு மற்ற எல்லாரையும்விடப் பெரியவர். பூமியில் இருந்து வந்தவன் பூமியைச் சார்ந்தவன். அவன் பூமியில் உள்ளவற்றைப்பற்றி மட்டுமே பேசுவான். ஆனால் பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசுவோ மற்ற எல்லாரையும்விட உயர்ந்தவர். 32 அவர் எதைக் கண்டாரோ, கேட்டாரோ அதையே கூறுகிறார். ஆனால் எவரும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. 33 அவர் சொல்வதை எவனொருவன் ஒப்புக்கொள்கிறானோ அவன், தேவன் உண்மையாய் இருக்கிறார் என்று நிரூபிக்கிறான். 34 தேவன் இயேசுவை அனுப்பினார். அவர் தேவன் சொன்னதைச் சொல்கிறார். தேவன் அவருக்கு ஆவியை நிரம்பக் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் தன் குமாரனை நேசிக்கிறார். அவர் தன் குமாரனுக்கு அனைத்தின் மேலும் அதிகாரம் கொடுத்திருக்கிறார். 36 இந்தக் குமாரனை நம்புகிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவர். ஆனால் அவருக்குக் கீழ்ப்படிய மறுக்கிற எவரும் அந்த வாழ்வை ஒருபோதும் பெற முடியாது. தேவனுடைய கோபம் அவர்கள் மேல் இருக்கும்” என்று யோவான் அவர்களுக்குக் கூறினான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center