Revised Common Lectionary (Semicontinuous)
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
21 கர்த்தாவே, உமது பெலன் ராஜாவை மகிழ்விக்கிறது.
நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான்.
2 நீர் ராஜாவுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தீர்.
ராஜா சிலவற்றைக் கேட்டான்.
கர்த்தாவே, அவன் கேட்டவற்றை நீர் கொடுத்தீர்.
3 கர்த்தாவே, நீர் உண்மையாகவே ராஜாவை ஆசீர்வதித்தீர்.
அவன் தலையில் பொற்கிரீடத்தைச் சூட்டினீர்.
4 தேவனே ராஜா உம்மிடம், ஆயுளைக் கேட்டான். நீர் அதை அவனுக்குக் கொடுத்தீர்.
நீர் அவனுக்கு என்றென்றும் நிலைத்துத் தொடரும் நீண்ட ஆயுளைக் கொடுத்தீர்.
5 வெற்றிக்கு நேராக நீர் ராஜாவை வழிநடத்தினீர்.
அவனுக்குப் பெரும் மேன்மையைத் தந்தீர்.
அவனுக்குப் பெருமையையும், புகழையும் தந்தீர்.
6 தேவனே, நீர் உண்மையாகவே என்றென்றைக்கும் தேர்ந்தெடுத்த ராஜாவை ஆசீர்வதித்தீர்.
உமது உயர்ந்த வல்லமையை உபயோகித்து ராஜாவைப் பாதுகாத்தீர்.
ராஜா உம்முகத்தைப் பார்க்கும்போது அது அவனை மகிழச் செய்யும்.
7 ராஜா கர்த்தரை நம்புகிறான்.
உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர்.
8 தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர்.
உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும்.
9 கர்த்தாவே, நீர் ராஜாவோடு இருக்கும் போது, அவர் எல்லாவற்றையும் கொளுத்திவிடும் உலையைப்போல் இருப்பார்.
அவர் தன் பகைவர்களை அழிப்பார்.
10 அவரது பகைவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படும்.
அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்.
11 ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள்.
அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை.
12 கர்த்தாவே, அந்த ஜனங்களை அடிமைகளைப் போலாக்கினீர்.
நீர் அவர்களைக் கயிறுகளால் கட்டினீர்.
அவர்களின் கழுத்துக்களைச் சுற்றி கயிறுகளால் வளைத்தீர்.
அடிமைகளைப் போல் உம்மைக் குனிந்து வணங்கச் செய்தீர்.
13 கர்த்தாவே, உமது மகத்துவத்தில் நீர் உயர்ந்திரும்.
கர்த்தருடைய மேன்மையைப் பாடல்களால் பாடி இசைப்போம்!
பெலிஸ்தியருக்கு எதிராக தாவீது சண்டையிடுகிறான்
17 இஸ்ரவேலின் ராஜாவாக தாவீதை இஸ்ரவேலர் அபிஷேகம் செய்தார்கள் என்பதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டனர். தாவீதைக் கொன்றுவிடுவதற்காக பெலிஸ்தியர் அவனைத் தேடிப் புறப்பட்டனர். தாவீது இதையறிந்து எருசலேமில் கோட்டைக்குள் இருந்தான். 18 பெலிஸ்தியர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டு தங்கினார்கள்.
19 தாவீது கர்த்தரிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்த்துப் போரிட வேண்டுமா? பெலிஸ்தியரைத் தோற்கடிக்க நீர் எங்களுக்கு உதவுவீரா?” என்று கேட்டான்.
கர்த்தர் தாவீதிடம், “பெலிஸ்தியரைத் தோற்கடிப்பதற்கு நான் கண்டிப்பாக உதவுவேன்” என்றார்.
20 பின்பு தாவீது பாகால் பிராசீம் என்னும் இடத்துக்கு வந்து அந்த இடத்தில் பெலிஸ்தியரைக் தோற்கடித்தான். தாவீது, “உடைந்த அணையில் வெள்ளம் பெருக்கெடுப்பதைப்போல கர்த்தர் எனது பகைவர்களிடையே பாய்ந்தார்” என்று கூறினான். எனவே அவ்விடத்திற்குப் “பாகால் பிராசீம்” என்று பெயரிட்டான். 21 பெலிஸ்தியர்கள் பாகால் பிராசீமில் தம் தெய்வங்களின் உருவங்களை விட்டுச் சென்றனர். தாவீதும் அவன் ஆட்களும் அவற்றை அப்புறப்படுத்திவிட்டனர்.
22 மீண்டும் பெலிஸ்தியர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டு தங்கினார்கள்.
23 தாவீது கர்த்தரிடம் பிராத்தனை செய்தான். இம்முறை கர்த்தர் தாவீதிடம், “நீ அங்குப் போகாதே. அவர்கள் படைக்குப் பின்னே சென்று வளைத்துக்கொள். முசுக்கட்டை செடிகளுக்கு அருகே இருந்து அவர்களைத் தாக்கு. 24 முசுக்கட்டை செடிகளின் உச்சியிலிருந்து பெலிஸ்தியர் போருக்காக அணிவகுத்து வரும் ஒலியைக் கேட்பீர்கள். அப்போது நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். ஏனெனில் அதுவே கர்த்தர் உங்களுக்கு முன்பாக சென்று பெலிஸ்தியரைத் தோற்கடிக்கும் சமயமாகும்” என்றார்.
25 கர்த்தர் கட்டளையிட்டபடியே தாவீது செய்தான். அவன் பெலிஸ்தியரை வென்றான். கேபாவிலிருந்து கேசேர் வரைக்கும் அவர்களைத் துரத்தினான்.
இயேசுவும் அவரது சகோதரர்களும்
7 இதற்குப் பிறகு இயேசு கலிலேயாவைச் சுற்றிப் பிரயாணம் செய்தார். அவர் யூதேயா நாட்டில் பிரயாணம் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் அங்குள்ள யூதர்கள் அவரைக் கொலை செய்ய விரும்பினர். 2 அப்பொழுது யூதர்களின் கூடாரப் பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. 3 ஆகையால் இயேசுவின் சகோதரர்கள் அவரிடம், “நீங்கள் இந்த இடத்தை விட்டு பண்டிகைக்காக யூதேயாவிற்கு போங்கள். அங்கே உமது சீஷர்கள் உம்முடைய அற்புதங்களைக் காண்பார்கள். 4 மக்கள் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் அவன், தான் செய்கிற காரியங்களை மறைக்கக் கூடாது. உங்களை உலகத்துக்கு வெளிப்படுத்துங்கள். அவர்களும் நீங்கள் செய்யும் அற்புதங்களைக் கண்டுகொள்ளட்டும்” என்றார்கள். 5 (இயேசுவின் சகோதரர்கூட அவரிடம் நம்பிக்கை இல்லாமலேயே இருந்தார்கள்.)
6 இயேசு தனது சகோதரர்களிடம், “எனக்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் நீங்கள் போவதற்கு எந்த நேரமும் சரியான நேரம்தான். 7 இந்த உலகம் உங்களை வெறுப்பதில்லை. ஆனால் உலகம் என்னை வெறுக்கிறது. ஏனென்றால் நான் அவர்களிடம் அவர்கள் தீமை செய்கிறார்கள் என்று சொல்கிறேன். 8 ஆகையால் நீங்கள் பண்டிகைக்குப் போங்கள். நான் இப்பொழுது பண்டிகைக்குப் போவதாக இல்லை. எனக்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை” என்றார். 9 இயேசு இவற்றைச் சொன்ன பிறகு கலிலேயாவிலேயே தங்கிவிட்டார்.
2008 by World Bible Translation Center