Revised Common Lectionary (Semicontinuous)
மகலாத் என்னும் கருவியை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு மஸ்கீல் என்னும் பாடல்.
53 தேவன் இல்லை என்று மூடன் மட்டுமே நினைப்பான்.
அத்தகைய மனிதர்கள் கெட்டவர்களாகவும் தீயவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் இருக்கிறார்கள்.
அவர்கள் நல்ல காரியங்களைச் செய்வதில்லை.
2 தேவனுக்காக எதிர்நோக்கியிருக்கும் ஞானமுள்ளவர்கள் உண்டோ என்று
பரலோகத்திலிருந்து தேவன் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
3 ஆனால் ஒவ்வொருவரும் தேவனை விட்டு வழி விலகிப் போனார்கள்.
ஒவ்வொரு மனிதனும் தீயவன்.
நன்மையான காரியத்தைச் செய்பவன்
ஒருவன் கூட இல்லை.
4 தேவன்: “அத்தீயோர் நிச்சயமாக உண்மையை அறிவர்!
ஆனால் அவர்கள் என்னிடம் ஜெபிப்பதில்லை.
தங்கள் உணவை உண்பதைப் போல் தீயோர் விரைந்து என் ஜனங்களை அழிக்கக் காத்திருக்கிறார்கள்” என்கிறார்.
5 ஆனால் அந்த தீயோர்கள் முன்பு ஒருபோதும் அஞ்சாத அளவுக்கு அஞ்சுவார்கள்.
அத்தீயோர் இஸ்ரவேலரின் பகைவர்கள்.
அத்தீயோரை தேவன் தள்ளிவிட்டார்.
எனவே தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள்.
அத்தீயோரின் எலும்புகளை தேவன் சிதறடிப்பார்.
6 சீயோனிலிருந்து இஸ்ரவேலருக்கு வெற்றி வருவதாக.
தேவன், அவர்கள் வெற்றிபெற உதவுவார்.
அடிமைத்தனத்திலிருந்து தேவன் தமது ஜனங்களை மீட்கும்போது யாக்கோபு களிகூருவான்.
இஸ்ரவேல் மிகுந்த மகிழ்ச்சிகொள்வான்.
சவுலின் பாவத்தைப்பற்றி சாமுவேல் சொன்னது
10 பிறகு சாமுவேல், கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான். 11 அதற்கு கர்த்தர், “சவுல் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டான், அவனை ராஜாவாக்கியதற்காக வருந்துகிறேன். நான் சொல்வதை அவன் செய்வதில்லை” என்றார். சாமுவேலும் கோபங்கொண்டு இரவு முழுவதும் அழுது கர்த்தரை நினைத்து ஜெபம் செய்தான்.
12 சாமுவேல் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து சவுலை சந்திக்க சென்றான். ஆனால் ஜனங்கள் அவனிடம், “கர்மேல் என்ற பேருள்ள யூதேயாவின் நகருக்கு சவுல் போயிருக்கிறான். அங்கே தன்னை பெருமைப்படுத்தும் நினைவு கல்லை எழுப்புகிறான். அவன் பல இடங்களை சுற்றிவிட்டு கில்காலுக்கு வருவான்” என்றனர்.
எனவே சாமுவேல் அவனிருக்கும் இடத்துக்கே சென்று சவுலைத் தேடிப் பிடித்தான். சவுல் அப்போதுதான் கர்த்தருக்கு அமலேக்கியரிடம் இருந்து எடுத்த முதல் பாகங்களை தகனபலி செலுத்திக்கொண்டிருந்தான். 13 சவுல் சாமுவேலை வரவேற்றான், “கர்த்தர் உம்மை ஆசீர்வதிக்கிறார்! கர்த்தருடைய கட்டளைகளை நிறைவேற்றினேன்” என்றான்.
14 ஆனால் சாமுவேலோ, “அப்படியானால் நான் கேட்ட சத்தம் எத்தகையது? ஆடுகளின் சத்தத்தையும், மாடுகளின் சத்தத்தையும் நான் எதற்காகக் கேட்டேன்?” என்று கேட்டான்.
15 அதற்கு சவுல், “இவை அமலேக்கியரிடமிருந்து வீரர்கள் எடுத்தவை. உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும் பொருட்டு சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் பிடித்து வந்தனர். மற்றபடி நாங்கள் அனைத்தையும் அழித்துவிட்டோம்” என்றான்.
16 சாமுவேலோ, “நிறுத்து! நேற்று இரவு கர்த்தர் சொன்னதை நான் சொல்லட்டுமா” என சவுலிடம் கேட்டான்.
சவுல், “நல்லது சொல்லுங்கள்” என்றான்.
17 சாமுவேல், “முக்கியமானவன் இல்லை என்று கடந்த காலத்தில் நீ உன்னை நினைத்திருந்தாய். பின்பு இஸ்ரவேல் ஜனங்களின் தலைவன் ஆனாய். கர்த்தர் உன்னை ராஜாவாக்கினார். 18 கர்த்தருக்கு உன்னை சிறப்பான கடமை நிறைவேற்ற அனுப்பினார். கர்த்தர் சொன்னார், ‘போய் அமலேக்கியரை முழுமையாக அழி! அவர்கள் தீயவர்கள். எல்லோரும் கொல்லப்படும்வரை போரிடு!’ என்றார். 19 ஆனால் நீ கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை! ஏன்? தீயவை என்று கர்த்தர் எதை ஒதுக்கினாரோ அவற்றை சேகரித்துக்கொள்ள நீ விரும்பிவிட்டாய்!” என்றான்.
20 சவுலோ, “கர்த்தருக்கு நான் கீழ்ப்படிந்தேன். அவர் சொன்ன இடத்திற்குப் போனேன். அமலேக்கியரை எல்லாம் அழித்தேன்! அவர்களின் ராஜா ஆகாக்கை மட்டுமே கொண்டுவந்தேன். 21 வீரர்கள் நல்ல ஆட்டையும், மாட்டையும் கொண்டு வந்தனர். அவை கில்காலில் உள்ள உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிட காத்திருக்கின்றன!” என்றான்.
22 ஆனால் சாமுவேல், “கர்த்தருக்குப் பிடித்தமானது எது? தகனபலியா? அன்பளிப்பா? அல்லது கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதா? கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுதான் அனைத்திலும் சிறந்தது. 23 கீழ்ப்படிய மறுப்பது தவறு, அது பில்லிசூனியத்திற்கு இணையான பெரும் பாவம். நீ கீழ்ப்படிய மறுப்பது பிடிவாதமாக பிற விக்கிரகங்களை தொழுதுகொள்வதற்கு சமம் ஆகும். நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தாய். அதனால் கர்த்தர் உன்னை ராஜாவாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான்.
22 அந்நகரத்தில் ஆலயம் எதையும் நான் காணவில்லை. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதன் ஆலயமாக இருக்கின்றனர். 23 அந்நகரத்துக்கு ஒளி தர சூரியனோ சந்திரனோ தேவையில்லை. தேவனுடைய மகிமை அங்கு ஒளி வீசுகிறது. ஆட்டுக்குட்டியானவரே அங்கு ஒளியாக இருக்கிறார்.
24 இரட்சிக்கப்படுகிற மக்கள் அனைவரும் அதின் ஒளியில் நடப்பார்கள். உலகில் உள்ள ராஜாக்கள் தம் மகிமையை அந்நகருக்குள் கொண்டு வருவார்கள். 25 எந்நாளிலும் நகரத்தின் வாசல் கதவுகள் அடைக்கப்படாமல் இருக்கும். ஏனென்றால் அந்நகரில் இரவு என்பதே இல்லை. 26 அவர்கள் தேசங்களின் மகிமையும் கௌரவமும் அதற்குள் கொண்டு வரப்படும். 27 சுத்தமற்ற எதுவும் அந்நகருக்குள் நுழைவதில்லை. வெட்கப்படத்தக்க செயல்களைச் செய்பவர்களும் பொய் சொல்பவர்களும் அந்நகருக்குள் பிரவேசிப்பதில்லை. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப்புத்தகத்தில் எவருடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளனவோ அவர்கள் மட்டுமே அங்கு போகமுடியும்.
22 பின்னர் அந்தத் தூதன் ஜீவதண்ணீர் ஓடுகின்ற ஆற்றினை எனக்குக் காட்டினான். அது பளிங்குபோன்று பிரகாசமாக இருந்தது. அது தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருந்த சிம்மாசனத்தில் இருந்து பாய்ந்தது. 2 அது நகரத் தெருவின் நடுவில் பாய்ந்தது. அந்த ஆற்றின் ஒவ்வொரு கரையிலும் வாழ்வின் மரம் இருந்தது. அது ஆண்டுக்குப் பன்னிரண்டு முறை கனிகளைத் தருகிறது. ஒவ்வொரு மாதமும் அது கனிதருகிறது. அம்மரத்தின் இலைகள் மக்களின் நோயைக் குணமாக்கும் தன்மையுடையவை.
3 தேவனால் குற்றம் என நியாயந்தீர்க்கப்படுகிற எதுவும் அந்நகருக்குள் இருக்காது. தேவனுடைய சிம்மாசனமும் ஆட்டுக்குட்டியானவரும் அங்கே இருப்பார்கள். 4 தேவனுடைய ஊழியக்காரர்கள் அவரை வழிபடுவர். அவர்கள் அவரது முகத்தைப் பார்ப்பார்கள். அவர்களின் நெற்றியில் தேவனுடைய பெயர் எழுதப்பட்டிருக்கும். 5 அங்கு மீண்டும் இரவு வராது. அங்குள்ள மக்களுக்கு விளக்கின் ஒளியோ சூரியனின் ஒளியோ தேவைப்படாது. தேவனாகிய கர்த்தரே அவர்களுக்கு வெளிச்சம் தருவார். அவர்கள் ராஜாக்களைப் போன்று எல்லாக் காலங்களிலும் அரசாளுவர்.
2008 by World Bible Translation Center