Revised Common Lectionary (Semicontinuous)
தேவன் ஏசாயாவைத் தீர்க்கதரிசியின் ஊழியத்திற்கு அழைக்கிறார்
6 உசியா ராஜா மரித்த ஆண்டிலே, நான் எனது ஆண்டவரைப் பார்த்தேன். அவர் மிகவும் உயரமான ஆச்சரியகரமான சிங்காசனத்தின் மேல் அமர்ந்திருந்தார். அவரது நீண்ட அங்கியானது ஆலயத்தை நிறைத்தது.
2 சேராபீன்கள்[a] கர்த்தரைச் சுற்றி நின்றார்கள். ஒவ்வொரு சேராபீனுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. அவர்கள் இரு சிறகுகளால் தங்கள் முகத்தை மூடிக்கொண்டனர். இன்னும் இரு சிறகுகளால் தம் பாதங்களை மூடிக்கொண்டனர். அவர்கள் இரண்டு சிறகுகளைப் பறப்பதற்குப் பயன்படுத்தினார்கள். 3 ஒருவரை ஒருவர் அழைத்து, அவர்கள்: “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மகா பரிசுத்தமானவர். அவரது மகிமை பூமியை நிரப்பியது” என்றனர். அவர்களின் சத்தம் மிகவும் பலமாக இருந்தது. 4 அவர்களின் சத்தம் கதவின் நிலைகளை அசையப்பண்ணிற்று. பிறகு ஆலயமானது புகையால் நிரம்பியது.
5 நான் மிகவும் பயந்துவிட்டேன், நான்: “ஓ! நான் அழிக்கப்படுவேன். நான் தேவனோடு பேசுகிற அளவிற்கு பரிசுத்தமானவன் இல்லை. என்னைச் சுற்றி இருப்பவர்களும் தேவனோடு பேசுகிற அளவிற்கு பரிசுத்தமானவர்கள் இல்லை. எனினும், நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய நமது அரசரைப் பார்த்தேன்” என்றேன்.
6 பலிபீடத்தின்மேல் நெருப்பு இருந்தது. ஒரு சேராபீன் பலிபீடத்திலிருந்து தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்தான். அவன் என்னிடத்தில் நெருப்புத்தழலோடு பறந்து வந்தான். 7 அந்த தனது நெருப்புத் தழலால் என் வாயைத் தொட்டான். பிறகு அவன், “பார் இது உன் உதடுகளைத் தொட்டதால் உன் தீய செயல்கள் எல்லாம் மறைந்தன. உனது பாவங்கள் துடைக்கப்பட்டன” என்றான்.
8 பிறகு நான் என் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டேன். கர்த்தர், “நான் யாரை அனுப்புவேன்? நமக்காக யார் போவார்?” என்று சொன்னார்.
எனவே நான், “நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்றேன்.
தாவீதின் பாடல்.
29 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
2 கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
3 கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
4 கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
5 கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
6 கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது.
எர்மோன் மலை நடுங்குகிறது.
இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
7 கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
8 கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
9 கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
கர்த்தர் காடுகளை அழிக்கிறார்.
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.
10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் ராஜாவாயிருந்தார்.
என்றென்றும் கர்த்தரே ராஜா.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.
கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.
12 சகோதர சகோதரிகளே, நாம் நமது மாம்சங்களால் ஆளப்படக் கூடாது. நமது மாம்சங்களின் விருப்பப்படியும் இருக்கக் கூடாது. 13 பாவம் தூண்டும் தவறான செயல்களைச் செய்ய உங்கள் வாழ்வு பயன்படுமானால் நீங்கள் ஆவிக்குரிய நிலையில் இறந்தவர்களாவீர்கள். ஆனால் நீங்கள் ஆவியின் உதவியோடு தீமை செய்வதை நிறுத்தினால் உண்மையான வாழ்வைப் பெறுவீர்கள்.
14 எவரெல்லாம் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். 15 நம்மை மீண்டும் அடிமைப்படுத்தி அச்சமூட்டுகிற ஆவியைப் நாம் பெறவில்லை. தேவனுடைய பிள்ளைகளாக நம்மை உருவாக்கும் ஆவியைப் பெறுகிறோம். அப்படிப் பெற்றால் “என் அன்பான பிதாவே” என்று அழைக்கும் உரிமையைப் பெறுவோம். 16 ஆவியானவர் நம்முடைய ஆவியோடு சேர்ந்துகொண்டு நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் என்று சாட்சி கொடுக்கிறார். 17 நாம் தேவனுடைய பிள்ளைகளானால், தேவன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருக்கிற மகிமையை நாம் பெறுவோம். நாம் அவற்றை தேவனிடமிருந்து பெறுவோம். கிறிஸ்துவிடம் உள்ள அதே மகிமையும் நமக்குக் கிடைக்கும். ஆனால் கிறிஸ்து துன்பப்பட்டது போன்று நாமும் படவேண்டியதிருக்கும்.
இயேசுவும் நிக்கொதேமுவும்
3 நிக்கொதேமு என்று ஒரு மனிதன் இருந்தான். அவன் பரிசேயர்களுள் ஒருவன். அவன் ஓர் முக்கியமான யூதத் தலைவன். 2 ஓர் இரவு அவன் இயேசுவிடம் வந்தான். “போதகரே! நீங்கள் தேவனிடமிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை நாங்கள் அறிவோம். தேவனின் உதவியின்றி எவரொருவராலும் நீர் செய்வதுபோன்ற அற்புதங்களைச் செய்ய இயலாது” என்று சொன்னான்.
3 அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்தில் இடம்பெற முடியாது” என்று கூறினார்.
4 அதற்கு நிக்கொதேமு, “ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் நுழையமுடியாது. ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாக பிறக்க முடியாதே” என்றான்.
5 இதற்குப் பதிலாக இயேசு, “நான் உனக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். ஒருவன் நீரில் இருந்தும் ஆவியில் இருந்தும் பிறக்க வேண்டும். ஒருவன் இவற்றிலிருந்து பிறக்காவிடில் அவனால் தேவனின் இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. 6 ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. ஆனால் அம்மனிதனது ஆவிக்குரிய வாழ்வோ ஆவியானவரிடமிருந்து பிறக்கிறது. 7 நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். ‘நீ மறுபடியும் பிறக்க வேண்டும்.’ 8 காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் ஆவியானவரிலிருந்து பிறக்கிறான்” என்றார்.
9 “இவை எவ்வாறு இயலும்?” என்று நிக்கொதேமு கேட்டான்.
10 “நீ யூதர்களின் முக்கியமான ஒரு போதகன். ஆனால் உன்னால் இவற்றைப்பற்றி இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லையே! 11 நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன், நாங்கள் எங்களுக்குத் தெரிந்தவற்றைப்பற்றியே பேசுகிறோம். நாங்கள் பார்த்தவற்றை மட்டுமே சொல்லுகிறோம். ஆனால் உன்னைப்போன்றவர்கள் நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. 12 நான் பூமியில் உள்ளவற்றைப் பற்றி உனக்குச் சொன்னேன். ஆனால் நீ என்னை நம்புகிறதில்லை. ஆகையால், நான் பரலோகத்தில் உள்ளவற்றைப்பற்றி சொன்னாலும் நீ அவற்றையும் நம்பப்போவதில்லை. 13 பரலோகத்திற்கு ஏறிச் சென்ற ஒரே ஒருவரே பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவர். அவர்தான் மனிதகுமாரன்.
14 “வனாந்தரத்தில் மோசே பாம்பினை உயர்த்திப் பிடித்தான். அவ்வாறே மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.[a] 15 பிறகு அந்த மனிதகுமாரன்மேல் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெறமுடியும்.
16 “ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் குமாரனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர். 17 தேவன் தன் குமாரனை உலகிற்கு அனுப்பினார். உலகின் குற்றங்களை நியாயம் விசாரிக்க தனது குமாரனை அனுப்பவில்லை. இவ்வுலகம் தேவனுடைய குமாரனால் இரட்சிக்கப்படுவதற்கென்று தேவன் தன் குமாரனை அனுப்பினார்.
2008 by World Bible Translation Center