Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 133

ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென தாவீது அளித்த பாடல்களுள் ஒன்று.

133 சகோதரர்கள் ஒருமித்து உட்கார்ந்து உண்மையாகவே ஒன்றுபடுவது
    மிகவும் நல்லதும் இன்பமுமானது.
அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு,
    கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும்
    வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப் போன்றது.
எர்மோன் மலையிலிருந்து சீயோன் மலையில் வீழும் மென்மையான மழையைப்போன்றுமிருக்கும்.
    ஏனெனில் சீயோனில் இருந்துதான் நித்திய வாழ்க்கைக்கான ஆசீர்வாதத்தை கர்த்தர் தந்தருளினார்.

தானியேல் 2:1-23

நேபுகாத்நேச்சாரின் கனவு

நேபுகாத்நேச்சாரின் ஆட்சியின் இரண்டாவது ஆண்டில் அவனுக்குச் சில கனவுகள் வந்தன. அக்கனவுகள் அவனை மிகவும் துன்புறுத்தின. அவனால் தூங்கமுடியவில்லை. எனவே ராஜா, தனது அறிஞர்களைத் தன்னிடம் அழைத்தான். அவர்கள் தங்கள் மந்திர, தந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நட்சத்திரங்களைக் கவனித்தனர். அவர்கள் கனவுகளின் பலனைச் சொல்லவும் எதிர்காலத்தில் நடக்கக்கூடியதைத் கூறவுமே இவ்வாறு செய்தனர். தனது கனவைப் பற்றி தனக்குச் சொல்லவேண்டும் என்று ராஜா அவர்களிடம் கேட்டான். எனவே அவர்கள் வந்து ராஜாவின் முன்னால் நின்றார்கள்.

ராஜா அவர்களிடம், “நான் ஒரு கனவு கண்டேன். அது என்னைத் தொல்லைப்படுத்துகிறது. நான் கனவின் பொருளை அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.

பிறகு கல்தேயர்கள் ராஜாவுக்குப் பதில் சொன்னார்கள். அவர்கள் அராமிக் மொழியில் பேசினார்கள். அவர்கள் ராஜாவே, “நீர் என்றென்றும் வாழ்க. நாங்கள் உமது வேலைக்காரர்கள். தயவுசெய்து உமது கனவைக் கூறும். பிறகு அதன் அர்த்தம் என்னவென்று நாங்கள் கூறுவோம்” என்று சொன்னார்கள்.

பிறகு ராஜா நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “இல்லை, நீங்கள் எனது கனவைச் சொல்ல வேண்டும். பிறகு அதன் பொருள் என்னவென்றும் செல்லவேண்டும். நீங்கள் இவற்றைச் சொல்லாவிடால் உங்களைத் துண்டுதுண்டாக வெட்டிப் போடும்படிக் கட்டளையிடுவேன். அதோடு உங்கள் வீடுகள் குப்பைமேடுகளாக அழிக்கும்படிக் கட்டளையிடுவேன். ஆனால் நீங்கள் எனது கனவையும், அதன் பொருளையும் சொல்லிவிட்டால் நான் உங்களுக்கு பரிசுகளையும், அன்பளிப்புகளையும், மரியாதையும் தருவேன். எனவே என் கனவையும், அதன் பொருளையும் கூறுங்கள்” என்றான்.

மீண்டும் அந்த ஞானிகள் ராஜாவிடம், “தயவு செய்து கனவை எங்களுக்குச் சொல்லும். பிறகு நாங்கள் அதன் பொருளைக் கூறுகிறோம்” என்றனர்.

பிறகு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், “நீங்கள் காலதாமதம் செய்யப்பார்க்கின்றீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. நான் என்ன சொன்னேன் என்பதின் கருத்தை நீங்கள் அறிவீர்கள். எனது கனவைப்பற்றிச் சொல்லாவிட்டால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள்! எனவே நீங்கள் அனைவரும் என்னிடம் பொய் சொல்ல உடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் காலதாமதம் செய்கின்றீர்கள். நீங்கள் நான் செய்ய விரும்புவதை மறந்துவிடுவேன் என்று நம்புகிறீர்கள். இப்பொழுது எனது கனவைக் கூறுங்கள். உங்களால் எனது கனவைக் கூறமுடியுமானால் அதன் பொருளையும் கூறமுடியும் என்று நான் அறிவேன்” என்றான்.

10 கல்தேயர்கள் ராஜாவுக்குப் பதிலாக, “ராஜா கேட்பவற்றைச் சொல்லக்கூடிய மனிதன் பூமியில் எவனுமில்லை. இதுவரை எந்த அரசரும் இப்படிப்பட்ட ஒன்றை ஒரு மந்திரவாதியிடமோ, ஒரு ஜோசியனிடமோ, ஒரு கல்தேயனிடமோ, கேட்டதில்லை. மிகச் சிறந்தவனும், வலிமைபொருந்தியவனுமான எந்த ராஜாவும் இதுவரை இவ்வாறு அறிவாளிகளிடம் கேட்டதில்லை. 11 ராஜா மிகக் கடினமான ஒன்றைச் செய்யும்படிக் கேட்கிறீர். தெய்வங்களால் மட்டுமே அரசரது கனவையும், அக்கனவின் பொருளையும் கூறமுடியும். ஆனால் தெய்வங்கள் மனிதர்களோடு வாழ்வதில்லை” என்றனர்.

12 ராஜா இதனைக் கேட்டபோது மிகவும் கோபமடைந்தான். எனவே அவன் பாபிலோனில் உள்ள எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படிக் கட்டளையிட்டான். 13 ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கட்டளை அறிவிக்கப்பட்டது. எல்லா ஞானிகளும் கொல்லப்படவிருந்தனர். ராஜாவின் ஆட்கள் தானியேலையும் அவனது நண்பர்களையும் கொலை செய்வதற்காகத் தேடினார்கள்.

14 ராஜாவின் காவலர்களுக்கு ஆரியோகு தலைவனாக இருந்தான். அவன் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்வதற்குப் போனான். ஆனால் தானியேல் அவனிடம் புத்திசாலித்தனமாகவும், சாதுர்யமாகவும் பேசினான். 15 தானியேல் ஆரியோகுவிடம்: “ராஜா எதற்காக, இத்தகைய பயங்கரத் தண்டனையைக் கொடுத்தார்” என்று கேட்டான்.

பிறகு ஆரியோகு ராஜாவின் கனவைப் பற்றிய முழு செய்தியையும் சொன்னான். உடனே தானியேல் புரிந்துகொண்டான். 16 தானியேல் இச்செய்தியை அறிந்ததும் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் சென்றான். தானியேல் ராஜாவிடம் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கும்படி கேட்டான். பிறகு அவனால் ராஜாவின் கனவையும் அதன் பொருளையும் சொல்ல முடியும் என்றான்.

17 பின்னர் தானியேல் தனது வீட்டிற்குப் போனான். அவன் தனது நண்பர்களான அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரிடம் எல்லாவற்றையும் சொன்னான். 18 தானியேல் அவனது நண்பர்களிடம் பரலோகத் தேவனிடம் ஜெபிக்குமாறு வேண்டினான். தானியேல் அவர்களிடம் இந்த இரகசியத்தை அறிந்துகொள்ள உதவ கருணைகாட்டுமாறு தேவனிடம் விண்ணப்பிக்கும்படி வேண்டினான். இதனால் பாபிலோனிலுள்ள ஞானிகளோடு தானியேலும், அவனது நண்பர்களும் கொல்லப்படாமல் இருப்பார்கள்.

19 இரவில், தேவன் தானியேலுக்குத் தரிசனத்தின் மூலம் இரகசியத்தை விளக்கினார். பின்னர் தானியேல் பரலோகத்தின் தேவனைப் புகழ்ந்து போற்றினான்.

20 தானியேல், “என்றென்றும் தேவனுடைய நாமத்தைப் போற்றுங்கள்.
    அதிகாரமும் ஞானமும் அவரோடுள்ளன.
21 அவர் காலத்தையும் பருவத்தையும் மாற்றுகிறார்.
    அவர் ராஜாக்களை மாற்றுகிறார்.
    அவர் ராஜாக்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறார்.
அதோடு ராஜாக்களின் அதிகாரத்தை எடுத்தும்விடுகிறார். அவர் ஜனங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார்.
    எனவே அவர்கள் ஞானம் பெறுகின்றனர். அவர் ஜனங்கள் பலவற்றைக் கற்று ஞானிகளாக அனுமதிக்கிறார்.
22 அவர் புரிந்துகொள்வதற்குக் கடினமான இரகசியங்களைத் தெரிந்திருக்கிறார்.
    அவரிடம் ஒளி வாழ்கிறது.
    எனவே அவருக்கு இருட்டிலும் இரகசியமான இடத்திலும் இருப்பது தெரிகிறது.
23 என் முற்பிதாக்களின் தேவனே நான் நன்றி சொல்லி உம்மைப் போற்றுகிறேன்.
    நீர் எனக்கு ஞானமும் பலமும் கொடுத்தீர்.
நாங்கள் கேட்டவற்றை நீர் சொன்னீர்.
    நீர் ராஜாவின் கனவைப் பற்றி எங்களுக்குச் சொன்னீர்” என்றான்.

அப்போஸ்தலர் 4:23-31

விசுவாசிகளின் பிரார்த்தனை

23 பேதுருவும் யோவானும் யூதத் தலைவர்களின் கூட்டத்தை விட்டு நீங்கி, அவர்களது குழுவிற்குச் சென்றனர். முக்கிய ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் தங்கள், குழுவினருக்குக் கூறினர். 24 விசுவாசிகள் இதனைக் கேட்டபோது, அவர்கள் ஒரே மனதுடன் தேவனிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் எல்லோரும் ஒரே விதமாக உணர்ந்தனர். 25 அவர்கள், “கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், கடலையும், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் நீர் ஒருவரே. எங்களது தந்தையாகிய தாவீது உம் ஊழியனாக இருந்தான். பரிசுத்த ஆவியின் உதவியால் அவன் கீழ்வரும் வார்த்தைகளை எழுதினான்.

“‘தேசங்கள் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏன் உலக மக்கள் தேவனுக்கெதிராகத் திட்டமிடுகின்றனர்?
    அவர்கள் செய்வது வீணானது.

26 “‘பூமியின் ராஜாக்கள் போருக்குத் தயாராகின்றனர்.
    தலைவர்கள் அனைவரும் தேவனுக்கும் அவருடைய கிறிஸ்துவிற்கும் எதிராக ஒருமித்துக் கூடுகின்றனர்.’(A)

27 ஏரோதும் பொந்தியு பிலாத்துவும் தேசங்களும், எல்லா யூத ஜனங்களும் சேர்ந்து எருசலேமில் இயேசுவுக்கு எதிராகக் கூடினபோது இவை அனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்தன. இயேசு உமது தூய ஊழியர். அவரே கிறிஸ்துவாகும்படி நீர் உண்டாக்கியவர். 28 கூடி வந்த இந்த மக்கள் உம் திட்டம் நிறைவேறும்படி இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டனர். உம் வல்லமையின்படியும், சித்தத்தின்படியும் அது நிகழ்ந்தது. 29 கர்த்தாவே, இப்போதும் அவர்கள் கூறுவதைக் கவனியும். அவர்கள் எங்களை அச்சமடையும்படியாகச் செய்ய முயன்றுகொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் உமக்கு ஊழியம் செய்பவர்கள். 30 நீர் விரும்புகிறவற்றை நாங்கள் தைரியமாகக் கூறுவதற்கு எங்களுக்கு உதவும். நோயுற்றோரைக் குணப்படுத்தும். சான்றுகள் கொடும். உம் தூய பணியாளராகிய இயேசுவின் வல்லமையால் அதிசயங்கள் நடக்கும்படிச் செய்யும்” என்று பிரார்த்தனை செய்தனர்.

31 விசுவாசிகள் பிரார்த்தனை செய்த பிறகு அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். அச்சமின்றி தேவனுடைய செய்தியைத் தொடர்ந்து கூறினர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center