Revised Common Lectionary (Semicontinuous)
தாவீதின் பாடல்.
29 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
2 கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
3 கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
4 கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
5 கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
6 கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது.
எர்மோன் மலை நடுங்குகிறது.
இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
7 கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
8 கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
9 கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
கர்த்தர் காடுகளை அழிக்கிறார்.
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.
10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் ராஜாவாயிருந்தார்.
என்றென்றும் கர்த்தரே ராஜா.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.
கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.
சாமுவேல் பெத்லேகேம் போகிறான்
16 கர்த்தர் சாமுவேலிடம், “நீ எவ்வளவு காலம் சவுலுக்காக வருந்துவாய்? நான் ராஜ பதவியிலிருந்து புறக்கணித்த பின்னும் வருந்துகிறாயே. உனது கொம்பை எண்ணெயால் நிரப்பு. பெத்லேகேமிற்குச் செல். உன்னை ஈசாயினிடம் அனுப்புகிறேன். அவன் அங்கே இருக்கிறான். அவனது குமாரர்களில் ஒருவனையே புதிய ராஜாவாக நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்” என்றார்.
2 சாமுவேலோ, “நான் போனால், அதனை சவுல் அறிவான். என்னைக் கொல்ல முயல்வான்” என்றான்.
கர்த்தர், “பெத்லேகேமிற்கு ஒரு இளம் கன்றுக்குட்டியை எடுத்துக்கொண்டு போ, ‘கர்த்தருக்கு பலி கொடுக்க வந்திருக்கிறேன்’ என்று சொல். 3 ஈசாயையும் பலிக்கு அழைத்தனுப்பு. பிறகு செய்ய வேண்டியது என்ன என்பதைக் காட்டுவேன். நான் காட்டுகிறவனை ராஜாவாக அபிஷேகம் செய்” என்றார்.
4 சாமுவேல் கர்த்தர் சொன்னபடி செய்தான். சாமுவேல் பெத்லேகேம் சென்றதும் அங்குள்ள மூப்பர்கள் நடுங்கினார்கள். அவர்கள் சாமுவேலை சந்தித்து, “சமாதானத்தோடு வந்துள்ளீரா?” என்று கேட்டனர்.
5 அதற்கு சாமுவேல், “ஆமாம், நான் சமாதானத்தோடு வருகிறேன். நான் கர்த்தருக்கு பலிகொடுக்க வந்துள்ளேன். உங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு என்னோடு பலி செலுத்த வாருங்கள்” என்றான். சாமுவேல் ஈசாயையும் அவனது குமாரர்களையும் ஆயத்தம் செய்துப் பலியில் பங்குகொள்ள அழைத்தான்.
6 அவர்கள் சாமுவேலிடம் வந்து சேர்ந்ததும் எலியாபைப் பார்த்தான். சாமுவேல் “நிச்சயமாக இவன்தான் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்!” என எண்ணினான்.
7 ஆனால் கர்த்தர் சாமுவேலிடம், “எலியாப் உயரமானவன், அழகானவன். ஆனால் அப்படி சிந்திக்க வேண்டாம். ஜனங்கள் பார்க்கிறபடி தேவன் கவனிக்கிறதில்லை. ஜனங்கள் ஒருவனின் வெளித் தோற்றத்தைப் பார்க்கிறார்கள். கர்த்தரோ அவன் இருதயத்தைப் பார்க்கிறார். எலியாப் சரியானவன் அல்ல” என்றார்.
8 பிறகு ஈசாய் இரண்டாவது குமாரனான, அபினதாபை அழைத்தான். அவன் சாமுவேலினருகில் நடந்து வந்தபோது சாமுவேல் பார்த்து, “இல்லை, கர்த்தர் இவனைத் தேர்ந்தெடுக்கவில்லை” எனக் கூறினான்.
9 பிறகு ஈசாய் இன்னொரு குமாரனான சம்மாவை அழைத்தான். அவனைப் பார்த்து, “கர்த்தர் இவனையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றான்.
10 ஈசாய் 7 குமாரர்களையும் காட்டினான். சாமுவேல் ஈசாயிடம், “இவர்களில் யாரையும் கர்த்தர் தேர்ந்தெடுக்கவில்லை” என்றான்.
11 சாமுவேல், “உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” எனக் கேட்டான்.
அதற்கு ஈசாய், “இல்லை கடைசி குமாரன் ஆடு மேய்க்கப் போயிருக்கிறான்” என்றான்.
சாமுவேலோ, “அவனை அழைத்து வா, அவன் வரும்வரை நாம் சாப்பிடக்கூடாது” என்றான்.
12 ஈசாய் ஒருவனை அனுப்பி தன் இளைய குமாரனை அழைப்பித்தான். இந்த குமாரன் அழகாய் சிவந்த மயிரோடு நல்ல சொளந்தரிய தோற்றமுடையவனாக இருந்தான்.
கர்த்தர் சாமுவேலிடம், “எழுந்து அவனை அபிஷேகம் செய், இவன்தான்” என்றார்.
13 சாமுவேல் எண்ணெய் நிரம்பிய கொம்பை எடுத்து சிறப்பு எண்ணெயை ஈசாயின் கடைசி குமாரன் மேல் அவனுடைய சகோதரரின் முன்னிலையில் ஊற்றினான். கர்த்தருடைய ஆவியானவர் அன்று முதல் தாவீது மீது பெரும் வல்லமையோடு வந்தார். சாமுவேல் ராமாவிலுள்ள தன் வீட்டிற்குத் திரும்பினான்.
11 கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய். 12 நீ இளமையாக இருக்கிறாய். ஆனால் உன்னை முக்கியம் அற்றவனாக நடத்த யாரையும் அனுமதிக்காதே. விசுவாசம் உடையவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இரு. வார்த்தையிலும், வாழும் வகையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய நடத்தையிலும் விசுவாசிகளுக்கு முன் மாதிரியாக இரு.
13 மக்களுக்குத் தொடர்ந்து வேதவாக்கியங்களை வாசித்துக்காட்டு. அவர்களை பலப்படுத்து, அவர்களுக்குப் போதனைசெய். நான் வரும்வரை இவற்றைச் செய். 14 உனக்குக் கிடைத்துள்ள வரத்தைப் பயன்படுத்த நினைவுகொள். மூப்பராகிய சபையோர் உன் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தின் மூலம் இந்த வரத்தைப் பெற்றாய். 15 இவற்றைத் தொடர்ந்து செய். இவற்றுக்காக உன் வாழ்வைக் கொடு. பிறகு, உன் பணியின் வளர்ச்சியை அனைவரும் கண்டுகொள்வர். 16 உன் வாழ்விலும் போதனையைக் குறித்து எச்சரிக்கையாக இரு. சரியாய் வாழ்ந்து இவற்றைப் போதனை செய். அதனால் உன் வாழ்வையும், உன் போதனையைக் கேட்பவர்களின் வாழ்வையும் நீ காப்பாற்றிக்கொள்ள முடியும்.
2008 by World Bible Translation Center