Revised Common Lectionary (Semicontinuous)
இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல்.
31 கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன்.
என்னை ஏமாற்றாதேயும். என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்.
2 தேவனே, எனக்குச் செவிகொடும்.
விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும்.
எனது பாறையாய் இரும். எனக்குப் பாதுகாப்பான இடமாயிரும்.
எனக்குக் கோட்டையாயிரும். என்னைப் பாதுகாத்தருளும்.
3 தேவனே, நீரே என் பாறை.
எனவே, உமது நாமத்தின் நன்மையால் என்னை நடத்தி, வழி காட்டும்.
4 என் பகைவர்கள் எனக்கு முன்னே கண்ணியை வைத்தார்கள்.
அவர்கள் கண்ணிக்கு என்னைக் காப்பாற்றும். நீரே என் பாதுகாப்பிடம் ஆவீர்.
5 கர்த்தாவே, நான் நம்பவல்ல தேவன் நீரே.
என் உயிரை உமது கரங்களில் நான் வைத்தேன். என்னைக் காப்பாற்றும்!
15 என் உயிர் உமது கைகளில் உள்ளது.
என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
சில ஜனங்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
16 உமது வேலையாளை வரவேற்று ஏற்றுக்கொள்ளும்.
என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்!
20 கடந்த காலத்தில், கர்த்தருடைய வார்த்தையைப் பிரச்சாரம் செய்ய இன்னொரு மனிதன் இருந்தான். அவனது பெயர் உரியா. அவன் செமாயாவின் குமாரன். உரியா கீரியாத்யாரீம் என்ற ஊரைச் சேர்ந்தவன். எரேமியா செய்ததுபோன்றே அவனும் இந்நகரத்திற்கும் தேசத்திற்கும் எதிராக தீர்க்கதரிசனம் கூறினான். 21 உரியா பிரச்சாரம் செய்வதை யோயாக்கீம் ராஜாவும் அவனது படை அதிகாரிகளும் யூதாவின் தலைவர்களும் கேட்டனர். அவர்கள் கோபம் கொண்டனர். யோயாக்கீம் ராஜா உரியாவைக் கொல்ல விரும்பினான். ஆனால் உரியா யோயாக்கீம் தன்னைக் கொல்ல விரும்புவதைப்பற்றி அறிந்தான். உரியா பயந்தான். எனவே எகிப்து நாட்டிற்குத் தப்பித்து ஓடினான். 22 ஆனால், யோயாக்கீம் ராஜா எகிப்துக்கு எல்நாத்தானையும் இன்னும் சிலரையும் அனுப்பினான். எல்நாத்தான் அக்போர் என்ற பெயர் உள்ளவனின் குமாரன். 23 அவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்தனர். பிறகு, அவர்கள் உரியாவை ராஜா யோயாக்கீமிடம் கொண்டுபோனார்கள். உரியா பட்டயத்தால் கொல்லப்படவேண்டும் என்று யோயாக்கீம் ராஜா கட்டளையிட்டான். உரியாவின் உடல் ஏழை ஜனங்கள் புதைக்கப்படுகிற சுடுகாட்டில் வீசப்பட்டது.
24 ஒரு முக்கியமான மனிதன் அகீக்காம் என்ற பெயருடன் இருந்தான். அவன் சாப்பானுடைய குமாரன். அகீக்காம் எரேமியாவிற்கு உதவியாக இருந்தான். ஆசாரியர்களாலும் தீர்க்கதரிசிகளாலும் எரேமியா கொல்லப்படாமல், அகீக்காம் அவனைக் காப்பாற்றினான்.
இயேசுவும்-ஆபிரகாமும்
48 யூதர்கள் இயேசுவிடம், “நாங்கள் உன்னை சமாரியன் என்று சொல்கிறோம். பிசாசு உன்னிடம் புகுந்ததால் நீ உளறுகிறாய் என்றும் சொல்கிறோம். நாங்கள் சொல்வது சரிதானே?” என்று கேட்டனர்.
49 “என்னிடம் எந்தப் பிசாசும் இல்லை. நான் என் பிதாவுக்கு மகிமை உண்டாக்குகிறேன். ஆனால் நீங்கள் எனக்கு மகிமையை அளிப்பதில்லை. 50 நான் எனக்கு மகிமையைச் சேர்த்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கவில்லை. இந்த மகிமைக்குரியவர் ஒருவர் இருக்கிறார். அவரே நீதிபதி. 51 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவனொருவன் என் உபதேசத்துக்கு கீழ்ப்படிகிறானோ அவன் ஒருபோதும் இறந்துபோவதில்லை” என்றார் இயேசு.
52 யூதர்களோ இயேசுவிடம், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்பது இப்பொழுது உறுதியாயிற்று. ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும்கூட இறந்துபோய்விட்டார்கள். ஆனால் நீயோ, ‘என் உபதேசத்துக்குக் கீழ்ப்படிகிறவன் ஒருபோதும் இறந்துபோவதில்லை’ என்று கூறுகிறாய். 53 எங்கள் பிதா ஆபிரகாமைவிடப் பெரியவன் என்று நீ உன்னை நினைத்துக்கொள்கிறாயா? ஆபிரகாம் இறந்துபோனார். தீர்க்கதரிசிகளும் இறந்துபோயினர். உன்னை நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டனர்.
54 இயேசு அவர்களிடம், “எனக்கு நானே மகிமை அளித்துக்கொண்டால் அது வீணாகிவிடும். என் பிதா எனக்கு மகிமை அளித்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் தேவன் என்று நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள். 55 ஆனால் அவரை நீங்கள் உண்மையில் அறிந்து கொள்ளவில்லை. நான் அவரை அறிகிறேன். நான் அவரை அறியேன் என்று சொன்னால், நான் உங்களைப் போன்றே ஒரு பொய்யனாக இருப்பேன். ஆனால் அவரை நான் அறிவேன். அவர் சொன்னவற்றுக்குக் கீழ்ப்படிகிறேன். 56 உங்கள் தந்தையாகிய ஆபிரகாம் நான் வந்த நாளைக் காண்பேன் என்று மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்த நாளைக் கண்டு மகிழ்ச்சியும் அடைந்தார்” என்றார்.
57 யூதர்கள் இயேசுவிடம், “என்ன சொன்னாய்? நீ ஒருபோதும் ஆபிரகாமைப் பார்த்திருக்க முடியாது. உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லையே!” என்று கேட்டனர்.
58 “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்” என்றார் இயேசு. 59 இயேசு இதைச் சொன்னதும் மக்கள் அவர் மீதுக் கல் எறிவதற்குக் கற்களைப் பொறுக்கினார்கள். ஆனால் இயேசு மறைந்து அந்த தேவாலயத்தை விட்டு விலகிப்போனார்.
2008 by World Bible Translation Center