Revised Common Lectionary (Semicontinuous)
2 யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்?
ஏன் அந்தத் தேசங்கள் மதியீனமான திட்டங்களை வகுக்கின்றன?
2 அவர்களுடைய ராஜாக்களும், தலைவர்களும் கர்த்தரையும்,
கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள்.
3 அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த ராஜாவையும் எதிர்த்துக் கலகம் செய்வோம்.
அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள்.
4 ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் ராஜா,
அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.
5-6 தேவன் கோபமடைந்து அந்த ஜனங்களை நோக்கி,
“நான் இம்மனிதனை ராஜாவாகத் தேர்ந்தெடுத்தேன்!
அவன் சீயோன் மலையில் அரசாளுவான்.
சீயோன் என்னுடைய பரிசுத்த மலை” என்கிறார்.
அது மற்ற தலைவர்களை பயமுறுத்தும்.
7 இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன்.
கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்!
நீ எனக்கு குமாரன்.
8 நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன்.
பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்!
9 இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல
நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார்.
10 எனவே ராஜாக்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள்.
அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
11 மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்.
12 தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார்.
கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள்.
ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.
20 எனவே எலியா ஆகாபிடம் சென்றான். ராஜாவோ அவனிடம், “என்னை மீண்டும் பார்க்கிறாய். எப்போதும் எனக்கு எதிராக இருக்கிறாய்” என்றான்.
அதற்கு எலியா, “ஆமாம், நீ எப்போதும் உன் வாழ்வில் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்கிறாய். 21 எனவே கர்த்தர், ‘நான் உன்னை அழிப்பேன். உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழிப்பேன். 22 உனது குடும்பமானது நேபாத்தின் குமாரனான ராஜா யெரொபெயாமின் குடும்பத்தைப்போன்று அழியும். பாஷாவின் குடும்பத்தைப்போல் அழியும். இந்த இரு குடும்பங்களும் முழுவதுமாக அழிந்துவிட்டன. நீ எனக்குக் கோபத்தைத் தந்ததால் நானும் அதுபோல் செய்வேன். இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்யவும் காரணமானாய்’ என்றார். 23 கர்த்தர் மேலும், ‘நாய்கள் யெஸ்ரயேல் நகரில் உன் மனைவியின் உடலை உண்ணும். 24 உன் குடும்பத்திலுள்ள அனைவரும் செத்தபின் நாய்களால் உண்ணப்படுவார்கள். வயலில் மரிக்கும் யாவரும் பறவைகளால் உண்ணப்படுவார்கள்’ என்றார்” எனக்கூறினான்.
25 ஆகாபைப்போன்று இதுவரை எவரும் அதிகப் பாவங்களைச் செய்ததில்லை. அவனது பாவங்களுக்கு அவன் மனைவியும் ஒரு காரணமானாள். 26 அவன் மரவிக்கிரகங்களை தொழுதுகொண்டு பாவம் செய்தான். எமோரியர்களின் பாவங்களைப் போன்றவை இவை. எனவே கர்த்தர் அந்த நாட்டைப் பறித்து இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்தார்.
27 எலியா சொல்லிமுடித்ததும் ஆகாப் வருந்தி, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். வருத்தத்துக்கான ஆடைகளை அணிந்து சாப்பிட மறுத்தான். அப்படியே தூங்கினான்.
28 கர்த்தர் எலியாவிடம், 29 “நான் ஆகாப் திருந்திவிட்டதாக அறிகிறேன். எனவே, அவனுக்குத் துன்பம் தரமாட்டேன். ஆனால் அவனது மகனது வாழ் நாளில் துன்பங்களைத் தருவேன்” என்றார்.
9 இயேசுவும், அவரது சீஷர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தனர். இயேசு தன் சீஷர்களிடம், “மலை மேலே பார்த்ததை நீங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள். மனித குமாரன் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்வரை காத்திருங்கள். பிறகு நீங்கள் பார்த்ததை மக்களுக்குச் சொல்லலாம்” என்று கட்டளையிட்டார்.
10 ஆகையால் சீஷர்களும் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து தாங்கள் பார்த்ததைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் மரணத்திலிருந்து எழுவதன் பொருளைப்பற்றித் தமக்குள் விவாதித்துக் கொண்டனர். 11 சீஷர்கள் இயேசுவிடம், “எலியா முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர் ஏன் கூறுகின்றனர்?” என்று கேட்டனர்.
12 “எலியாதான் முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர்கள் கூறுவது சரிதான். அவன் எல்லாவற்றையும் இருக்க வேண்டிய முறைப்படி சீர்ப்படுத்துவான். மனித குமாரன் மிகவும் கஷ்டப்படுவார் என்றும், உபயோகமற்றவர் என மக்களால் எண்ணப்படுவார் என்றும் வேதவாக்கியங்களில் எழுதி இருப்பது எதற்காக? 13 எலியா ஏற்கெனவே வந்துவிட்டான் என நான் சொல்கிறேன். அவனைப்பற்றி எழுதி இருக்கிறபடி, மக்கள் தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குத் தீமை செய்தனர்” என்றார்.
2008 by World Bible Translation Center