Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 66:1-12

இராகத் தலைவனுக்கு, ஒரு துதிப்பாடல்.

66 பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும்.
அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்!
    துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்!
அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்!
    தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது!
உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள்.
    அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள்.
உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும்.
    ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும்.

தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்!
    அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும்.
தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார்.
    மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள்.
தேவன், அவரது மிகுந்த வல்லமையால் உலகத்தை ஆளுகிறார்.
    எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார்.
    ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது.

ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள்,
    உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள்.
தேவன் நமக்கு உயிரைத் தந்தார்.
    தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார்.
10 ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரிசோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார்.
11 தேவனே, நீர் எங்களைக் கண்ணியில் விழச் செய்தீர்.
    கனமான பாரத்தை நீர் எங்கள் மேல் வைக்கிறீர்.
12 எங்கள் பகைவர்கள் எங்கள்மீது நடக்க நீர் அனுமதித்தீர்.
    நெருப்பின் வழியாகவும் தண்ணீரின் வழியாகவும் நடக்குமாறு எங்களை வழி நடத்தினீர்.
    ஆனால் ஒரு பத்திரமான இடத்திற்கு எங்களை அழைத்து வந்தீர்.

எரேமியா 25:1-14

எரேமியாவின் பிரசங்கத்தின் சுருக்கம்

25 யூதாவின் ஜனங்களைக் குறித்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை இதுதான். யூதாவின் ராஜாவாக யோயாக்கீம் ஆண்ட நான்காவது ஆண்டில் இந்த வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் குமாரன். அவன் ராஜாவாகிய நான்காவது ஆண்டு, பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு முதல் ஆண்டாக இருந்தது. எருசலேமிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் எரேமியா தீர்க்கதரிசி பேசிய செய்தி இதுதான். கடந்த 23 ஆண்டுகளாக நான் மீண்டும், மீண்டும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்திருக்கிறேன். ஆமோனின் குமாரனான யோசியா யூதாவில் ராஜாவாக 13 ஆண்டுகளானதை தொடர்ந்து நானும் தீர்க்கதரிசியாக இருக்கிறேன். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை உங்களுக்கு கர்த்தரிடமிருந்து செய்தியை நான் சொல்லி வருகிறேன். ஆனால் நீங்கள் கவனிக்கவில்லை. கர்த்தர் அவரது வேலைக்காரராகிய தீர்க்கதரிசிகளை உங்களிடம் மீண்டும், மீண்டும் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஆனால் நீங்கள் அவர்களை கவனிக்கவில்லை. நீங்கள் அவர்களிடம் எவ்வித கவனமும் செலுத்தவில்லை.

அத்தீர்க்கதரிசிகள், “உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள். அத்தீயச் செயல்களைச் செய்வதை நிறுத்துங்கள்! நீங்கள் மாறினால், பிறகு, கர்த்தர் உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் நீண்ட காலத்திற்கு முன்பே கொடுத்த நாட்டிற்குத் திரும்பி வருவீர்கள். அவர் அந்த நாட்டை நீங்கள் என்றென்றும் வாழும்படி தந்தார். அந்நிய தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். அவர்களைத் தொழுதுகொள்ளவோ அவர்களுக்கு சேவைசெய்யவோ வேண்டாம். யாரோ ஒருவர் செய்த விக்கிரகங்களைத் தொழுதுகொள்ள வேண்டாம். அது உங்கள் மீது எனக்குக் கோபத்தை மட்டும் ஊட்டும். இவ்வாறு செய்வது உங்களை மட்டுமே பாதிக்கும்.”

“ஆனால் நீங்கள் என்னை கவனிக்கவில்லை” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “யாரோ ஒருவரால் செய்யப்பட்ட விக்கிரகங்களை நீங்கள் தொழுதுகொண்டீர்கள். அது என்னைக் கோபங்கொள்ளச் செய்தது. அது உங்களையே பாதித்தது.”

எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது இதுதான்: “நீங்கள் எனது வார்த்தைகளை கவனித்துக்கொள்ளவில்லை. எனவே நான் வடக்கில் உள்ள அனைத்து கோத்திரங்களையும் அனுப்புவேன்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் விரைவில் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை அனுப்புவேன். அவன் எனது தாசன். நான் அவர்களை யூதா நாட்டிற்கும் யூதாவின் ஜனங்களுக்கும் எதிராக அனுப்புவேன். உங்களைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் எதிராக அவர்களைக் கொண்டு வருவேன். அந்நாடுகளை எல்லாம் நான் அழிப்பேன். அந்நாடுகளை நான் என்றென்றும் வனாந்தரமாகும்படிச் செய்வேன். அந்நாடுகளை எல்லாம் ஜனங்களை பார்த்து அவை எவ்வாறு அழிக்கப்பட்டன என்று இகழ்ச்சியாக பிரமித்துப் பேசிக்கொள்வார்கள். 10 அவ்விடங்களில் உள்ள மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான ஓசைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவேன். அங்கு இனிமேல் மணமகள் மற்றும் மணமகன்களின் மகிழ்ச்சி ஆராவாரம் இருக்காது. ஜனங்கள் உணவுப் பொருளை அரைக்கும் ஒலியை எடுத்துவிடுவேன். விளக்கு ஒளியையும் நான் எடுத்துவிடுவேன். 11 அந்த இடம் முழுவதும் காலியான வனாந்தரம்போன்று ஆகும். அந்த ஜனங்கள் அனைவரும் பாபிலோன் ராஜாவுக்கு 70 ஆண்டுகளுக்கு அடிமைகளாக இருப்பார்கள்.

12 “ஆனால் 70 ஆண்டுகள் ஆனதும் நான் பாபிலோன் ராஜாவைத் தண்டிப்பேன். நான் பாபிலோன் நாட்டையும் தண்டிப்பேன்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் பாபிலோனியர் நாட்டை அவர்களது பாவங்களுக்காகத் தண்டிப்பேன். நான் அந்த நாட்டினை என்றென்றும் வனாந்தரமாக்குவேன். 13 நான் பாபிலோனுக்குப் பல தீமைகள் வரும் என்று சொல்லி இருந்தேன். அவை அனைத்தும் ஏற்படும். எரேமியா அந்த அயல் நாடுகளைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்னான். அந்த எச்சரிக்கைகள் எல்லாம் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. 14 ஆம். பாபிலோனில் உள்ள ஜனங்கள் பல நாடுகளுக்கும் பல பெரிய ராஜாக்களுக்கும் சேவை செய்வார்கள். அவர்கள் செய்யப் போகும் அனைத்துச் செயல்களுக்கும் உரிய தண்டனையை நான் கொடுப்பேன்.”

2 தீமோத்தேயு 1:13-18

13 என்னிடமிருந்து நீங்கள் கேட்ட உண்மையான போதனைகளைப் பின்பற்றுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பும் விசுவாசமும் கொண்டு அப்போதனைகளைப் பின்பற்றுங்கள். அப்போதனைகள் நீங்கள் போதிக்க வேண்டியவற்றைப் பற்றி உங்களுக்குச் சான்றாகக் காட்டும். 14 உங்களிடம் கொடுக்கப்பட்ட உண்மைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மில் இருக்கிறார். அவர் அவ்வுண்மைகளைப் பாதுகாக்க உதவுவார்.

15 ஆசிய நாடுகளில் உள்ள பலர் என்னை விட்டு விலகிவிட்டார்கள் என்பதை நீ அறிவாய். பிகெல்லும் எர்மொகெனேயும் கூட என்னைவிட்டு விலகிவிட்டனர். 16 கர்த்தரானவர் ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கிருபை காட்டும்படி நான் பிரார்த்தனை செய்கிறேன். பலமுறை அவன் எனக்கு உதவியிருக்கிறான். நான் சிறையில் இருந்தது பற்றி அவன் வெட்கப்படவில்லை. 17 அவன் ரோமுக்கு வந்தபோது என்னைக் காணும் பொருட்டு பல இடங்களில் கடைசி வரைக்கும் தேடியிருக்கிறான். 18 ஒநேசிப்போரு அந்த நாளில் கர்த்தரிடமிருந்து கிருபை பெறவேண்டும் என்று நான் கர்த்தரிடம் வேண்டுகிறேன். எபேசு நகரில் அவன் எவ்வகையில் உதவியிருக்கிறான் என்று உனக்கு நன்றாகவே தெரியும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center