Revised Common Lectionary (Semicontinuous)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
126 கர்த்தர் நம்மை மீண்டும் விடுவிக்கும்போது
அது ஒரு கனவைப் போன்றிருக்கும்.
2 நாம் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடல்களைப்
பாடிக்கொண்டும் இருப்போம்! பிற தேசத்து ஜனங்கள்,
“இஸ்ரவேலின் ஜனங்களுக்கு கர்த்தர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்!” என்பார்கள்.
3 ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால்
நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
4 கர்த்தாவே, பாலைவன நீரூற்றுக்கள் மீண்டும் ஓடிவரும் வெள்ளத்தின்
தண்ணீரால் நிரம்புவதைப்போல எங்களை மீண்டும் விடுவியும்.
5 ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம்.
ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான்.
6 அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும்,
ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான்.
தேவன் எப்போதும் தமது ஜனங்களோடு இருக்கிறார்
43 யாக்கோபே! கர்த்தர் உன்னைப் படைத்தார்! இஸ்ரவேலே! கர்த்தர் உன்னைப் படைத்தார்! இப்போது கர்த்தர் கூறுகிறார் “அஞ்சாதே! நான் உன்னைக் காப்பாற்றினேன். நான் உனக்குப் பெயரிட்டேன். நீ என்னுடையவன். 2 உனக்குத் தொல்லைகள் இருக்கும்போது நான் உன்னோடு இருக்கிறேன். நீ ஆறுகளைக் கடக்கும்போது, நீ பாதிக்கப்படமாட்டாய். நீ நெருப்பினூடே நடக்கும்போது, நீ எரிக்கப்படமாட்டாய். நெருப்புச் ஜூவாலைகள் உன்னைப் பாதிக்காது. 3 ஏனென்றால், கர்த்தராகிய நான் உனது தேவன். இஸ்ரவேலின் பரிசுத்தரான நான் உனது மீட்பர். உன்னை மீட்கும் பொருளாக எகிப்தைக் கொடுத்தேன். உன்னை என்னுடையவனாக்க எத்தியோப்பியாவையும், சேபாவையும் கொடுத்தேன். 4 நீ எனக்கு மிகவும் முக்கியமானவன். எனவே, நான் உன்னைப் பெருமைப்படுத்துவேன். நான் உன்னை நேசிக்கிறேன். நான் (உன் ஜீவனுக்குப் பதிலாக) அனைத்து ஜனங்களையும் தேசங்களையும் கொடுப்பேன். எனவே நீ வாழலாம்.”
5 “அஞ்ச வேண்டாம்! நான் உன்னோடு இருக்கிறேன். நான் உனது பிள்ளைகளைச் சேர்த்து அவர்களை உன்னிடம் அழைத்து வருவேன். நான் அவர்களைக் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஒன்று சேர்ப்பேன். 6 நான் வடக்குக்குச் சொல்வேன், எனது ஜனங்களை எனக்குக் கொடு. தெற்குக்கு நான் சொல்லுவேன், எனது ஜனங்களைச் சிறையில் வைக்காதீர்கள். தொலைதூர இடங்களில் இருந்து எனது குமாரர்களையும், குமாரத்திகளையும் என்னிடம் கொண்டு வாருங்கள். 7 எனக்குரிய அனைத்து ஜனங்களையும், என்னிடம் கொண்டு வாருங்கள். எனது நாமத்தை வைத்திருக்கிற ஜனங்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்! அவர்களை நான் எனக்காக படைத்தேன். அவர்களை நான் படைத்தேன். அவர்கள் என்னுடையவர்கள்.”
தீமோத்தேயு, எப்பாப்பிரோதீத்து பற்றி
19 தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்ப நான் கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்புகிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன். 20 தீமோத்தேயுவைப் போன்று வேறு ஒருவரும் என்னிடம் இல்லை. உண்மையிலேயே அவன் உங்கள் மேல் அதிகக் கரிசனையுள்ளவன். 21 மற்ற அனைவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் மட்டும் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதில் விருப்பம் இல்லை. 22 தீமோத்தேயு எப்படிப்பட்டவன் என்பது உங்களுக்குத் தெரியும். நற்செய்தியைப் பரப்புவதில் அவன் என்னோடு பணி செய்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் ஒரு குமாரன் தந்தைக்குத் தொண்டு செய்வது போன்று செய்தான். 23 விரைவில் அவனை உங்களிடம் அனுப்பத் திட்டமிட்டுள்ளேன். எனக்கு என்ன நேரும் என்பதை அறிந்துகொள்ளும்போது நான் அவனை உங்களிடம் அனுப்பிவைப்பேன். 24 உங்களிடம் நான் விரைவில் வர நமது கர்த்தர் உதவுவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
2008 by World Bible Translation Center