Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 72

சாலொமோனுக்கு.

72 தேவனே, ராஜாவும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
    உமது நல்லியல்பை ராஜாவின் குமாரனும் அறிந்துகொள்ள உதவும்.
ராஜா உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
    உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
ஏழைகளுக்கு ராஜா நல்லவனாக இருக்கட்டும்.
    திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
    அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.

சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் ராஜாவுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
    என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
வயலில் விழும் மழையைப்போன்றிருக்க ராஜாவுக்கு உதவும்.
    பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
அவன் ராஜாவாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
    சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.

ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும்,
    கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும்.
பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள்.
    புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும்.
10 தர்ஷீசின் ராஜாக்களும் தூரத்துத் தேசங்களின் ராஜாக்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும்.
    ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள ராஜாக்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும்.
11 எல்லா ராஜாக்களும் நமது ராஜாவை விழுந்து வணங்கட்டும்.
    எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும்.

12 நமது ராஜா திக்கற்றோருக்கு உதவுகிறார்.
    ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் ராஜா உதவுகிறார்.
13 ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் ராஜாவைச் சார்ந்திருப்பார்கள்.
    ராஜா அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார்.
14 அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து ராஜா அவர்களைக் காப்பாற்றுகிறார்.
    அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் ராஜாவுக்கு மிக முக்கியமானவை.

15 ராஜா நீடூழி வாழ்க!
    அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும்.
எப்போதும் ராஜாவுக்காக ஜெபம் செய்யுங்கள்.
    ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள்.
16 வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும்.
    மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும்.
நிலங்களில் புல் வளர்வது போன்று
    நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும்.
17 ராஜா என்றென்றும் புகழ்பெறட்டும்.
    சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும்.
ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும்.
    அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.

18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
    தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
    அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!

20 ஈசாயின் குமாரனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.

யோபு 42:10-17

10 யோபு அவனது நண்பர்களுக்காக ஜெபம் செய்தான். தேவன் யோபுவை மீண்டும் வெற்றிபெறச் செய்தார். கர்த்தர் யோபுவுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்காக எல்லாவற்றையும் கொடுத்தார். 11 யோபுவின் எல்லா சகோதரர்களும், சகோதரிகளும் அவனை அறிந்த அனைத்து ஜனங்களும் யோபுவின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் யோபுவோடு கூட ஒரு பெரிய விருந்துணவை உட்கொண்டார்கள். அவர்கள் யோபுவுக்கு ஆறுதல் கூறினார்கள். கர்த்தர் யோபுவுக்கு மிகுந்த தொல்லைகளைக் கொடுத்ததற்காக அவர்கள் வருந்தினார்கள். ஒவ்வொருவரும் ஒரு வெள்ளிக் காசும், ஒரு பொன் மோதிரமும் யோபுவுக்குக் கொடுத்தார்கள்.

12 யோபுவின் வாழ்க்கையின் முதல் பகுதியைக் காட்டிலும் இரண்டாம் பகுதியைக் கர்த்தர் ஆசீர்வதித்தார்! யோபுவுக்கு 14,000 ஆடுகளும், 6,000 ஒட்டகங்களும், 2,000 பசுக்களும், 1,000 பெண் கழுதைகளும் சொந்தமாக இருந்தன. 13 யோபுவுக்கு ஏழு குமாரர்களும் மூன்று குமாரத்திகளும் இருந்தனர். 14 யோபு, முதல் குமாரத்திக்கு எமீமாள் என்று பேரிட்டான். யோபு, இரண்டாவது குமாரத்திக்குக் கெத்சீயாள் என்று பெயரிட்டான். மூன்றாவது குமாரத்திக்குக் கேரேனாப்புக் என்று பெயர் கொடுத்தான். 15 தேசத்தில் யோபுவின் குமாரத்திகளே மிகுந்த அழகிகளாக இருந்தார்கள்! யோபு, அவனது குமாரத்திகளுக்கும் சொத்திலுள்ள பாகத்தைக் கொடுத்தான். அவர்களின் சகோதரர்களைப்போலவே சொத்தில் அவர்களும் பங்கைப் பெற்றார்கள்.

16 அவ்வாறு யோபு இன்னும் 140 ஆண்டுகள் வாழ்ந்தான். அவனது பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், பேரர்களின் பிள்ளைகளையும், பேரர்களின் பேரர்களையும் பார்க்கும்படி அவன் வாழ்ந்தான். 17 பின்பு யோபு மரித்தான். யோபு ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தான். அவன் மிகவும் முதிர்ந்தவனாகும்வரை வாழ்ந்தான்.

லூக்கா 8:16-21

கவனிக்கும் முறை

(மாற்கு 4:21-25)

16 “எந்த மனிதனும் விளக்கைக் கொளுத்தி, ஒரு பாத்திரத்தினால் மூடி, படுக்கையின் கீழே மறைத்து வைப்பது இல்லை. ஆனால் அம்மனிதன் விளக்கை அதற்குரிய விளக்குத் தண்டின்மேல் உள்ளே நுழையும் மக்கள் அனைவருக்கும் ஒளி தரும்படியாக ஏற்றி வைப்பான். 17 மறைக்கப்பட்டவை அனைத்தும் வெளிப்படும். ஒவ்வொரு இரகசியமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும். 18 எவ்வாறு கவனிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். புரியும் திறன் பெற்ற மனிதன் மிகுதியாக அறிந்துகொள்வான். புரியும் திறனற்ற மனிதனோ தனக்கு இருப்பதாக அவன் நினைக்கும், புரியும் திறனையும் இழந்துவிடுவான்” என்றார்.

இயேசுவின் குடும்பத்தினர்

(மத்தேயு 12:46-50; மாற்கு 3:31-35)

19 இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைக் காண வந்தனர். இயேசுவின் தாயும் சகோதரரும் இயேசுவை நெருங்க முடியாதபடி பல மக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். 20 ஒருவன் இயேசுவிடம், “உங்கள் தாயும், சகோதரர்களும் வெளியே நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்கள் உங்களைக் காண விரும்புகின்றனர்” என்றான்.

21 இயேசு அவர்களுக்கு, “தேவனுடைய போதனையைக் கேட்டு, அதன்படி கீழ்ப்படிந்து நடக்கிற மக்களே என் தாயும், சகோதரர்களும் ஆவார்கள்” என்று பதிலளித்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center