Revised Common Lectionary (Semicontinuous)
“உடன்படிக்கையின் அல்லிகள்” என்னும் பாடலை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று.
80 இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும்.
நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர்.
கேருபீன்கள் மேல் ராஜாவாக நீர் வீற்றிருக்கிறீர்.
நாங்கள் உம்மைப் பார்க்கட்டும்.
2 இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும்.
வந்து எங்களைக் காப்பாற்றும்.
3 தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
4 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எப்போது நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்பீர்?
என்றென்றைக்கும் எங்களோடு கோபமாயிருப்பீரோ?
5 உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர்.
உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று.
6 எங்கள் சுற்றத்தினர் சண்டையிடுவதற்கான பொருளாக எங்களை மாற்றினீர்.
எங்கள் பகைவர்கள் எங்களைப் பார்த்து நகைக்கிறார்கள்.
7 சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
8 கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
9 “திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
10 அது பர்வதங்களை மூடிற்று.
அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
11 அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
12 தேவனே, உமது “திராட்சைக்கொடி” யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
13 காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
14 சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி” யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
15 தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
16 உலர்ந்த சருகைப்போல் உமது “திராட்சைக் கொடி” நெருப்பில் எரிக்கப்பட்டது.
நீர் அதனிடம் கோபங்கொண்டு, அதனை அழித்தீர்.
17 தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது குமாரனை நெருங்கும்.
நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
18 அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார்.
அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
19 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும்.
எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.
புதிய காலம் வந்துகொண்டிருக்கிறது
17 “நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைப்பேன்.
ஜனங்கள் கடந்த காலத்தை நினைக்கமாட்டார்கள்.
அவற்றில் எதையும் அவர்கள் நினைக்கமாட்டார்கள்.
18 எனது ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
அவர்கள் என்றும் என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
நான் என்ன செய்யப்போகிறேன்?
நான் மகிழ்ச்சி நிறைந்த ஒரு எருசலேமை உருவாக்குவேன்.
அவர்களை மகிழ்ச்சி நிறைந்த ஜனங்கள் ஆக்குவேன்.
19 “பிறகு, நான் எருசலேமோடு மகிழ்ச்சியாக இருப்பேன்.
நான் என் ஜனங்களோடு மகிழ்ச்சியாக இருப்பேன்.
அந்த நகரத்தில் மீண்டும் அழுகையும் துக்கமும் இராது.
20 இனி ஒருபோதும் ஒரு குழந்தை பிறந்தவுடன் மரிக்காது.
இனி நகரத்தில் எவரும் குறுகிய வாழ்வுடன் மரிக்கமாட்டார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் நீண்ட காலம் வாழும்.
ஒவ்வொரு வயோதிகனும் நீண்ட காலம் வாழ்வான்.
100 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவன் இளைஞன் என்று அழைக்கப்படுவான்.
பாவம் செய்தவன் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்வு முழுவதும் துன்பத்தை அடைவான்.
21 “அந்த நகரத்தில், ஒருவன் வீடுகட்டினால் அவன் அங்கே வாழ்வான்.
ஒருவன் திராட்சைத் தோட்டத்தை வைத்தால், அவன் அந்தத் தோட்டத்திலிருந்து திராட்சைகளை உண்பான்.
22 மீண்டும் ஒருவன் வீடுகட்ட இன்னொருவன் அதில் குடியேறமாட்டான்.
மீண்டும் ஒருவன் திராட்சைத் தோட்டத்தை அமைக்க இன்னொருவன் பழம் உண்ணமாட்டான்.
எனது ஜனங்கள் மரங்கள் வாழும்மட்டும் வாழ்வார்கள்.
நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தாங்கள் செய்தவற்றை அனுபவித்து மகிழ்வார்கள்.
23 பெறும் குழந்தை மரித்துப்போவதற்காக
இனிமேல் பெண்கள் பிரசவிக்கமாட்டார்கள்.
பிரசவத்தின்போது என்ன ஆகுமோ என்று பெண்கள் இனிமேல் பயப்படமாட்டார்கள்.
எனது அனைத்து ஜனங்களும் அவர்களது பிள்ளைகளும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
24 அவர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களுக்கு என்ன தேவை என்று நான் அறிவேன்.
அவர்கள் கேட்டு முடிப்பதற்குள்ளாக நான் அவர்களுக்கு உதவுவேன்.
25 ஓநாயும் ஆட்டுக் குட்டிகளும் சேர்ந்து புல்மேயும்.
சிங்கங்கள் மாடுகளோடு சேர்ந்து வைக்கோலை உண்ணும்.
எனது பரிசுத்தமான மலையில் தரையில் உள்ள பாம்பு யாரையும் பயப்படுத்தாது.
அது எவரையும் தீண்டாது” கர்த்தர் இவை அனைத்தையும் கூறினார்.
18 “பெற்றோர் இல்லாத பிள்ளைகளைப்போன்று நான் உங்களைவிட்டுப் போகமாட்டேன். நான் மீண்டும் உங்களிடம் வருவேன். 19 இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகில் உள்ள மக்கள் என்னை இனிமேல் காணமாட்டார்கள். ஆனால் நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள். நான் உயிர்வாழ்வதால் நீங்களும் வாழ்வீர்கள். 20 அந்த நாளிலே நான் பிதாவில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களிலும் நீங்கள் என்னிலும் இருப்பதையும் அறிவீர்கள். 21 ஒருவன் எனது கட்டளைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் உண்மையாகவே என்னை நேசிக்கிறான். என்னை நேசிக்கிறவனை என் பிதாவும் நேசிப்பார். அதோடு நானும் அவனை நேசிப்பேன். நான் என்னை அவனிடம் வெளிப்படுத்துவேன்” என்றார்.
22 பிறகு யூதா என்பவன் (யூதாஸ்காரியோத் அல்ல) இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் உம்மை உலகத்துக்கு இல்லாமல் எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்று ஏன் திட்டமிடுகிறீர்?” என்றான்.
23 அதற்கு இயேசு, “எவனொருவன் என்னை நேசிக்கிறானோ அவன் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிகிறான். எனது பிதா அவன்மீது அன்பு வைப்பார். நானும் எனது பிதாவும் அவனிடம் வந்து அவனோடு வாழ்வோம். 24 ஆனால் என்னை நேசிக்காதவன், என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படியமாட்டான். நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற எனது உபதேசங்கள் எல்லாம் என்னுடையவையல்ல. அவை என்னை அனுப்பின எனது பிதாவினுடையவை.
25 “நான் உங்களோடு இருக்கையில் இவற்றை எல்லாம் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். 26 ஆனால் உதவியாளர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார். நான் உங்களுக்குச் சொன்னவற்றையெல்லாம் உங்களுக்கு அவர் நினைவுபடுத்துவார். அவரே பரிசுத்த ஆவியானவர். பிதா எனது நாமத்தினால் அவரை அனுப்புவார்.
27 “நான் சமாதானத்தை உங்களுக்கு வைத்துவிட்டுப் போகிறேன். எனது சொந்த சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுப்பதுபோல் இல்லாமல் நான் வித்தியாசமான சமாதானத்தைக் கொடுக்கிறேன். ஆகையால் உங்கள் மனம் கலங்காமல் இருக்கட்டும். அஞ்சவும் வேண்டாம். 28 ‘நான் போவேன், மீண்டும் உங்களிடம் வருவேன்’ என்று சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். நீங்கள் என்னை நேசிப்பதானால், நான் என் பிதாவிடம் திரும்பிப்போவதைப்பற்றி மகிழ்ச்சியடைவீர்கள், ஏனென்றால் என்னைவிட என் பிதா பெரியவர். 29 நான் இவை நடப்பதற்கு முன்னரே இவற்றை உங்களிடம் சொல்கிறேன். இவை நடைபெறும்போது என்னை நீங்கள் நம்புவீர்கள்.
30 “நான் உங்களோடு அதிகம் பேசமாட்டேன். இந்த உலகத்தை ஆளுகிறவன் (சாத்தான்) வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மீது அதிகாரமில்லை. 31 ஆனால் நான் என் பிதாவை நேசிக்கிறேன் என்று உலகத்துக்குத் தெரியவேண்டும். ஆகையால் என் பிதா எனக்குச் சொன்னவற்றை மட்டும் நான் செய்கிறேன். இப்பொழுது வாருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம்” என்றார்.
2008 by World Bible Translation Center