Revised Common Lectionary (Semicontinuous)
தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது.
4 என் நல்ல தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கையில் ஜெபத்தைக் கேட்டருளும்.
என் விண்ணப்பத்தைக் கேளும், என்னிடம் இரக்கமாயிரும்!
என் தொல்லைகளிலிருந்து எனக்கு சற்று விடுதலை தாரும்!
2 ஜனங்களே, எத்தனை நாள் என்னைக் குறித்து அவதூறு பேசுவீர்கள்?
என்னைப்பற்றிச் சொல்ல புதுப்புதுப் பொய்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் அப்பொய்களைச் சொல்ல விரும்புகிறீர்கள்.
3 கர்த்தர் தம் நல்ல ஜனங்களின் ஜெபத்தைக் கேட்கிறார்.
கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்போது, எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
4 உங்களை ஏதோ ஒன்று துன்புறுத்துவதினால், நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாதீர்கள்.
படுக்கைக்குச் செல்கையில் அவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள், அப்போது அமைதி அடைவீர்கள்.
5 தேவனுக்கு நல்ல பலிகளைக் கொடுத்துக்
கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள்!
6 “நமக்கு தேவனுடைய நன்மையைக் காட்டுவது யார்?
கர்த்தாவே! பிரகாசமான உமது முகத்தை நாங்கள் காணட்டும்!”
என்று பலர் கூறுகிறார்கள்.
7 கர்த்தாவே! நீர் எனக்கு மகிழ்ச்சியுண்டாக்கினீர்!
தானியமும் திராட்சைரசமும் பெருகிய பண்டிகை நாட்களாகிய அறுவடைக் காலத்தைக் காட்டிலும் இப்போது நான் மகிழ்கிறேன்.
8 நான் படுக்கைக்குச் சென்று சமாதானமாய் உறங்குகிறேன்.
ஏனெனில், கர்த்தாவே, நீர் என்னைப் பாதுகாப்பாய் தூங்கச் செய்கிறீர்.
தானியேலின் ஜெபம்
9 தரியு ராஜாவாகிய முதலாம் ஆண்டில் இவை நிகழ்ந்தன. தரியு அகாஸ்வேரு என்னும் பெயருடையவனின் குமாரன். தரியு மேதிய குலத்தை சேர்ந்தவன். அவன் பாபிலோனின் ராஜாவானான். 2 தரியு ராஜாவாக இருந்த முதலாம் ஆண்டில் தானியேலான நான், சில புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். அப்புத்தகங்களில், கர்த்தர் எரேமியா தீரிக்கதரிசியிடம் எருசலேம் மீண்டும் கட்டப்படுவதற்கு முன் எத்தனை வருடங்கள் கடந்து செல்லும் என்று சொல்லியிருந்ததை நான் பார்த்தேன். கர்த்தர் 70 ஆண்டுகள் கடந்து செல்லும் என்று கூறினார்.
3 பிறகு நான் என் தேவனாகிய ஆண்டவரிடம் திரும்பி, ஜெபம் செய்து உதவி செய்யுமாறு அவரிடம் வேண்டினேன். நான் எந்த உணவையும் உண்ணவில்லை. நான் துக்கத்தைக் காட்டும் ஆடையை அணிந்தேன். நான் என் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டேன்.
4 நான் என் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தேன். நான் எனது எல்லாப் பாவங்களையும் அவரிடம் சொன்னேன்.
நான், “கர்த்தாவே, நீர் மகத்துவமும் பயங்கரமும் வாய்ந்த தேவன். நீர் உம்மிடம் அன்பு செய்கிற ஜனங்களிடம் உமது அன்பும் கருணையும் உள்ள உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கிறீர். உமது கற்பனைகளுக்கு அடிபணிகிறவர்களுக்கு உமது உடன்படிக்கையைக் காப்பாற்றுகிறீர்.
5 “ஆனால் கர்த்தாவே, நாங்கள் பாவம் செய்திருக்கிறோம். நாங்கள் தவறு செய்திருக்கிறோம். நாங்கள் உமக்கு எதிராகத் திரும்பினோம். நாங்கள் உமது கற்பனைகளையும் சரியான நியாயங்களையும் விட்டு விலகிப்போனோம். 6 நாங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் காது கொடுத்து கவனிக்கவில்லை. அவர்கள் உமது ஊழியர்கள். தீர்க்கதரிசிகள் உமக்காகப் பேசினார்கள். அவர்கள் எங்கள் ராஜாக்களிடமும், எங்கள் தலைவர்களிடமும், எங்கள் தந்தைகளிடமும் பேசினார்கள். அவர்கள் இஸ்ரவேலிலுள்ள எல்லா ஜனங்களிடமும் பேசினார்கள். ஆனால் நாங்கள் அத்தீர்க்கதரிசிகள் சொன்னவற்றைக் கவனிக்கவில்லை.
7 “கர்த்தாவே, நீர் நல்லவர். நீதி உமக்கே உரியது. ஆனால் இன்று வெட்கக்கேடு எங்களுக்கு உரியதாயிற்று. யூதா மற்றும் எருசலேமிலுள்ள ஜனங்களுக்கு அவமானம் உரியதாயிற்று. அவமானம் இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களுக்கும் உமக்கு அருகிலே உள்ள ஜனங்களுக்கும் உமக்குத் தொலைவிலே உள்ள ஜனங்களுக்கும் உரியதாயிற்று. கர்த்தாவே, அந்த ஜனங்களை நீர் பலதேசங்களில் சிதறடித்தீர். அத்தேசங்களிலுள்ள இஸ்ரவேல் ஜனங்கள் அவமானப்படுவார்களாக. கர்த்தாவே, அவர்கள் உமக்கு எதிராகச் செய்த அனைத்து கேடுகளுக்கும் அவமானப்படுவார்களாக.
8 “கர்த்தாவே, நாங்கள் எல்லோரும் அவமானப்படவேண்டும். எங்களது எல்லா ராஜாக்களும் தலைவர்களும் அவமானப்படவேண்டும். எங்கள் முற்பிதாக்களும் அவமானப்படவேண்டும். ஏனென்றால், நாங்கள் உமக்கு எதிராகப் பாவங்கள் செய்தோம்.
9 “ஆனாலும் கர்த்தாவே, நீர் தயவுடையவர் நீர் ஜனங்கள் செய்த தீமைகளை மன்னித்துவிடுகிறீர். நாங்கள் உண்மையில் உமக்கு எதிராகத் திரும்பினோம். 10 நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியவில்லை. கர்த்தர் தமது ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளை அனுப்பி எங்களுக்குச் சட்டங்களைக் கொடுத்தார். ஆனால் நாங்கள் அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லை. 11 இஸ்ரவேலில் உள்ள எந்த ஜனங்களும் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் அனைவரும் திரும்பிவிட்டனர். அவர்கள் உமக்குக் கீழ்ப்படியவில்லை. மோசேயின் சட்டத்தில் சாபங்களும் வாக்குத்தத்தங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. (மோசே தேவனுடைய ஊழியன்). அச்சாபங்களும் வாக்குத்தத்தங்களும் சட்டத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்குரிய தண்டனையைப் பற்றிக் கூறுகிறது. அவையெல்லாம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. ஏனென்றால் நாங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
12 “தேவன், எங்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் இவை ஏற்படும் என்று சொன்னார். அவர் அவை எங்களுக்கு ஏற்படும்படிச் செய்தார். அவர், எங்களுக்குப் பயங்கரமானவை ஏற்படும்படிச் செய்தார். எருசலேம் துன்பப்பட்டது போன்று வேறெந்த நகரமும் துன்பப்பட்டதில்லை. 13 அந்தப் பயங்கரமானவை எல்லாம் எங்களுக்கு ஏற்பட்டன. மோசேயின் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தபடியே இவை நிகழ்ந்தன. ஆனால் நாங்கள் இன்னும் கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை. நாங்கள் இன்னும் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. கர்த்தாவே நாங்கள் உமது சத்தியத்தில் கவனம் செலுத்தவில்லை. 14 கர்த்தர் எங்களுக்காகப் பயங்கரமானவற்றைத் தயார் செய்து வைத்திருந்தார். அவை எங்களுக்கு ஏற்படும்படி அவர் செய்தார். கர்த்தர் இதனைச் செய்தார். ஏனென்றால் அவர் செய்கிற எல்லாவற்றிலும் நியாயமாக இருந்தார். ஆனால் நாங்கள் இன்னும் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருக்கிறோம்.
15 “கர்த்தாவே, எங்கள் தேவனே, உமது வல்லமையைப் பயன்படுத்தி எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர். நாங்கள் உமது ஜனங்கள். இதன் மூலம் இன்றும் நீர் புகழ்பெற்று விளங்குகிறீர். கர்த்தாவே நாங்கள் பாவம் செய்திருக்கிறோம். நாங்கள் பயங்கரமானவற்றைச் செய்திருக்கிறோம். 16 கர்த்தாவே, எருசலேம் மீது கொண்ட கோபத்தை நிறுத்தும். எருசலேம் உமது பரிசுத்தமான மலையின் மீது இருக்கிறது. நீர் சரியானவற்றையே செய்கிறீர். எனவே எருசலேம் மீதுள்ள கோபத்தை நிறுத்தும். எங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள் எங்களை அவமதிக்கிறார்கள். அவர்கள் உமது ஜனங்களைக் கேலி செய்கிறார்கள். ஏனென்றால் நாங்களும் எங்கள் முற்பிதாக்களும் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
17 “இப்பொழுதும், கர்த்தாவே, எனது ஜெபத்தைக் கேளும். நான் உமது ஊழியன். உதவிக்கான என்னுடைய ஜெபத்தைக் கேளும். உமது பரிசுத்தமான இடத்திற்கு நன்மையைச் செய்யும். அந்தக் கட்டிடம் அழிக்கப்பட்டது. ஆனாலும் ஆண்டவரே, உமது பரிசுத்தமான இடத்தினிமித்தம் இந்நன்மையைச் செய்யும். 18 என் தேவனே, என்னைக் கவனித்துக் கேளும்! உமது கண்களைத் திறந்து, எங்களுக்கு ஏற்பட்ட கொடூரங்களைப் பாரும். உமது நாமத்தால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு என்ன நேரிட்டது என்று பாரும்! நாங்கள் நல்ல ஜனங்கள் என்று நான் சொல்லவில்லை. அதற்காகத்தான் நான் இவற்றையெல்லாம் கேட்கவில்லை. நான் இவற்றைக் கேட்கிறேன். ஏனென்றால் நான் உமது இரக்கத்தை அறிவேன். 19 கர்த்தாவே, என்னைக் கவனித்துக் கேளும். கர்த்தாவே எங்களை மன்னியும். கர்த்தாவே கவனித்து, ஏதாவது செய்யும். காத்திருக்கவேண்டாம். இப்பொழுது ஏதாவது செய்யும். இதனை உமது மகிமைக்காகச் செய்யும். என் தேவனே, இப்பொழுது உமது நாமத்தால் அழைக்கப்படுகிற உமது நகரத்துக்காகவும், உமது ஜனங்களுக்காகவும் ஏதாவது செய்யும்” என்றேன்.
கிறிஸ்துவின் பகைவரைப் பின்பற்றாதீர்கள்
18 எனது அன்பான பிள்ளைகளே, முடிவு நெருங்குகிறது. போலிக் கிறிஸ்து வந்துகொண்டிருப்பதைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் பகைவர்கள் பலர் இங்கு ஏற்கெனவே உள்ளனர். எனவே முடிவு நெருங்குகிறது என்பதை நாம் அறிவோம். 19 நமது குழுவிலேயே கிறிஸ்துவின் பகைவர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் நம்மை விட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் நம்மோடு சேர்ந்தவர்களாக வாழவில்லை. உண்மையிலேயே நம் குழுவில் உள்ளவர்களாக அவர்கள் இருந்திருந்தால், அவர்கள் நம்மோடு தங்கியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நம்மைப் பிரிந்தனர். அவர்களில் ஒருவர் கூட நம்மோடு உண்மையாகச் சேர்ந்திருந்ததில்லை என்பதை இது காட்டுகிறது.
20 புனிதமான ஒருவர் உங்களுக்குக் கொடுத்த பரிசை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். எனவே உங்கள் எல்லோருக்கும் உண்மை தெரியும். 21 ஏன் நான் உங்களுக்கு எழுதுகிறேன்? நீங்கள் உண்மையை அறியாததால் எழுதுகிறேனா? இல்லை! நீங்கள் உண்மையை அறிந்திருப்பதாலேயே இக்கடிதத்தை எழுதுகிறேன். உண்மையிலிருந்து எந்தப் பொய்யும் வருவதில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
22 எனவே யார் பொய்யன்? இயேசுவை கிறிஸ்துவல்ல என்று கூறுபவனே பொய்யன். அவனே போலிக் கிறிஸ்து. அம்மனிதன் பிதாவிலோ அல்லது குமாரனிலோ நம்பிக்கை வைப்பதில்லை. 23 ஒருவன் குமாரனில் நம்பிக்கை வைக்காமலிருந்தால் அவன் பிதாவை உடையவனல்ல. குமாரனை ஏற்கிற ஒருவனுக்கு பிதாவும்கூட இருக்கிறார்.
24 துவக்கத்திலிருந்தே நீங்கள் கேட்ட போதனையைப் பின்பற்றுவதைத் தொடருங்கள். அப்போதனையைத் தொடர்ந்து பின்பற்றினால், நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 25 நமக்கு குமாரன் வாக்களித்த நித்திய ஜீவன் இதுதான்.
2008 by World Bible Translation Center