Revised Common Lectionary (Semicontinuous)
சாலொமோனுக்கு.
72 தேவனே, ராஜாவும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
உமது நல்லியல்பை ராஜாவின் குமாரனும் அறிந்துகொள்ள உதவும்.
2 ராஜா உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
3 தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
4 ஏழைகளுக்கு ராஜா நல்லவனாக இருக்கட்டும்.
திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.
5 சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் ராஜாவுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
6 வயலில் விழும் மழையைப்போன்றிருக்க ராஜாவுக்கு உதவும்.
பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
7 அவன் ராஜாவாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.
18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!
இஸ்ரவேலின் தண்டனை முடியும்
40 உனது தேவன் கூறுகிறார்,
“ஆறுதல்படுத்துங்கள்! எனது ஜனங்களை ஆறுதல்படுத்துங்கள்!
2 எருசலேமுடன் அன்பாகப் பேசுங்கள்.
உனது சேவைக்கான காலம் முடிந்துவிடுகிறது.
‘உனது பாவங்களுக்கான விலையைக் கொடுத்து விட்டாய்’ என்று எருசலேமிடம் கூறு.
கர்த்தர் எருசலேமை அவள் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும்
இருமுறை தண்டித்தார்.”
3 கவனி! அங்கே ஒருவன் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறான்!
“கர்த்தருக்காக இந்த வனாந்திரத்தில் ஒரு பாதையை தயார் செய்யுங்கள்!
நமது தேவனுக்காக வனாந்திரத்தில் ஒரு சாலை அமையுங்கள்!
4 ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் நிரப்புங்கள்.
ஒவ்வொரு மலையையும் பள்ளத்தாக்கையும் நேராக்குங்கள்.
கரடுமுரடான சாலையை மென்மையாக்குங்கள்.
5 பிறகு, கர்த்தருடைய மகிமை வெளிப்படும்.
கர்த்தருடைய மகிமையை ஜனங்கள் அனைவரும் காண்பார்கள்.
ஆம், கர்த்தர் அவராகவே இவற்றைச் சொன்னார்!”
6 ஒரு குரல் சொன்னது, “பேசு!”
எனவே ஒருவன் கேட்டான், “நான் என்ன சொல்லவேண்டும்?”
அந்த குரல் சொன்னது, “ஜனங்கள் என்றென்றைக்கும் வாழமாட்டார்கள்.
அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள்.
அவர்களது நன்மை ஒரு காட்டு மலர் போன்றது.
7 கர்த்தரிடமிருந்து ஒரு வல்லமையான காற்று புல்மேல் வீசும்.
அந்த புல்களும் காட்டு மலர்களும் வாடி செத்துப்போகும்.
உண்மையாகவே அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள்.
8 புல் வாட்டம் அடையும். பூக்கள் வாடும்.
ஆனால், தேவனுடைய வார்த்தை என்றென்றும் தொடர்ந்து இருக்கும்.”
மீட்பு: தேவனுடைய நற்செய்தி
9 சீயோனே! உன்னிடம் சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன.
உயரமான மலைக்கு மேலே போய் நற்செய்திகளை சத்தமாய் சொல்! எருசலேமே!
உன்னிடம், சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன அஞ்சவேண்டாம்.
சாந்தமாய் பேசு! யூதாவிலுள்ள அனைத்து நகரங்களிலும் இந்தச் செய்திகளைக் கூறு: “பார், உன் தேவன் இங்கே இருக்கிறார்!”
10 எனது கர்த்தராகிய ஆண்டவர் வல்லமையோடு வருகிறார்.
எல்லா ஜனங்களையும் ஆள அவர் தமது வல்லமையைப் பயன்படுத்துவார்.
கர்த்தர் தமது ஜனங்களுக்காக விருதுகளைக் கொண்டுவருவார்.
அவரோடு அவர்களது பலன் இருக்கும்.
11 ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளை வழிநடத்திச் செல்வது போன்று கர்த்தர் தமது ஜனங்களை வழி நடத்துகிறார்.
கர்த்தர் தமது வல்லமையைப் பயன்படுத்தி அவரது ஆடுகளை ஒன்று சேர்ப்பார்.
கர்த்தர் சிறிய ஆடுகளை எடுத்து தனது கைகளில் வைத்துக்கொள்வார். அவற்றின் தாய் ஆடுகள் அவர் பின்னால் நடக்கும்.
இயேசுவைப்பற்றி யோவான்
(மத்தேயு 3:1-12; மாற்கு 1:2-8; லூக்கா 3:1-9,15-17)
19 எருசலேமிலுள்ள யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடம் அனுப்பி வைத்தார்கள். “நீர் யார்?” என்று கேட்பதற்காக அவர்களை யூதர்கள் அனுப்பினர். 20 யோவான் அவர்களிடம் தாராளமாகப் பேசினான். அவன் பதில் சொல்ல மறுக்கவில்லை. “நான் கிறிஸ்து அல்ல” என்று யோவான் தெளிவாகக் கூறினான். இது தான் அவன் மக்களிடம் சொன்னது.
21 “பிறகு நீர் யார்? நீர் எலியாவா?” என்று மேலும் யூதர்கள் யோவானிடம் கேட்டார்கள். “இல்லை. நான் எலியா இல்லை” என்று யோவான் பதிலுரைத்தான்.
“நீர் தீர்க்கதரிசியா?” என யூதர்கள் கேட்டனர்.
“இல்லை. நான் தீர்க்கதரிசி இல்லை” என்றான் யோவான்.
22 “நீர் யார்? உம்மைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் சொல்வதற்கென்று ஒரு பதில் சொல்லுங்கள். உம்மைப்பற்றி நீர் என்ன சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர்.
23 யோவான் அவர்களிடம் தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகளைச் சொன்னான்.
“வனாந்தரத்தில் சத்தமிடுகிறவனின் ஓசையாக நான் இருக்கிறேன்.
‘கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்.’”(A)
24 யூதர்களான இவர்கள் பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்டிருந்தனர். 25 “நீர் கிறிஸ்து அல்ல என்று கூறுகிறீர். நீர் எலியாவோ தீர்க்கதரிசியோ அல்ல என்றும் கூறுகிறீர். பின்னர் நீர் ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்?” என அவர்கள் யோவானிடம் கேட்டார்கள்.
26 “நான் தண்ணீரால் ஞானஸ்நானம் தருகிறேன். ஆனால் உங்களோடு இங்கே இருக்கிற ஒருவர் உங்களால் அறியப்படாதவராக இருக்கிறார். 27 அந்த ஒருவர்தான் எனக்குப் பின்னால் வருகிறவர். அவரது செருப்பின் வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவன் நான்” என்று யோவான் பதிலுரைத்தான்.
28 இந்நிகழ்ச்சிகள் யாவும் யோர்தான் ஆற்றின் அக்கரையில் உள்ள பெத்தானியாவில் நடைபெற்றன. இங்கேதான் யோவான் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான்.
2008 by World Bible Translation Center