Revised Common Lectionary (Semicontinuous)
146 கர்த்தரை துதி!
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
2 என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
3 உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள்.
ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
4 ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.
அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
5 ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.
6 கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.
கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.
7 ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார்.
தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார்.
8 குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார்.
கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.
9 நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்.
விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார்.
ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்!
சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!
கர்த்தரைத் துதியுங்கள்!
ஆசாரியர்களின் நியமன விழா
29 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக்கு ஆசாரியர்களாக விசேஷ பணிவிடையை ஆரோனும் அவன் மகன்களும் செய்யும்பொருட்டு நீ செய்ய வேண்டிய காரியங்களை நான் உனக்குக் கூறுவேன். ஒரு இளங்காளையையும், குறைகள் இல்லாத இரண்டு இளம் வெள்ளாடுகளையும் தேர்ந்தெடுத்துக்கொள். 2 சுத்தமான கோதுமை மாவை புளிப்பில்லாத ரொட்டியாகச் செய்துகொள். அதே மாவைப் பயன்படுத்தி ஒலிவ எண்ணெயால் வார்ப்பு ரொட்டிகளையும் தயாரித்துக்கொள். சிறிய மெல்லிய அடைகளையும் எண்ணெய் பூசி உண்டாக்கு. 3 வார்ப்பு ரொட்டிகளையும், அடைகளையும் ஒரு கூடையில் வைத்து அவைகளையும், காளையையும், இரண்டு கடாக்களையும் ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கொடு.
4 “ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழை வாயிலுக்கு ஆரோனையும், அவனது மகன்களையும் அழைத்துவா. அவர்களை தண்ணீரில் கழுவின பின்பு ஆரோனுக்கு விசேஷ ஆடைகளை அணிவி. 5 முழுவதும் நெய்த வெள்ளை அங்கியையும், ஏபோத்தோடு அணிய வேண்டிய நீல அங்கியையும் உடுத்திவிடு. அதன் மேல் ஏபோத்தையும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தையும் அணியச்செய். அழகிய அரைக்கச்சையை கட்டிவிடு. 6 தலைப்பாகையை அவன் தலையில் வைத்து, அதன்மேல் பரிசுத்த கிரீடத்தை வை. 7 பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து ஆரோனின் தலையின்மேல் ஊற்று. கர்த்தருக்குரிய ஆசாரியப் பணிவிடைக்கு ஆரோன் பிரித்தெடுக்கப்பட்டதை இது காட்டும்.
8 “பின்பு ஆரோனின் மகன்களை அந்த இடத்திற்கு அழைத்து வா. முழுவதும் நெய்யப்பட்ட வெள்ளை நிற அங்கிகளை அவர்களுக்கு அணிவி. 9 பின் அரைக்கச்சைகளைக் கட்டிவிடு. அவர்கள் அணிவதற்கான விசேஷ பாகைகளைக் கொடு. அப்போதிலிருந்து அவர்கள் ஆசாரியர்களாகப் பணி செய்ய ஆரம்பிப்பார்கள். என்றென்றைக்குமான விசேஷ சட்டப்படி அவர்கள் ஆசாரியர்களாக இருப்பார்கள். இவ்வாறு ஆரோனையும் அவன் மகன்களையும் நீ ஆசாரியர்களாக்கவேண்டும்.
பவுலின் சாட்சி
6 “ஆனால் தமஸ்குவிற்கு நான் செல்லும் வழியில் ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்தபோது அது நண் பகல் நேரம். தீடீரென்று என்னைச் சுற்றிலும் வானிலிருந்து மிகுந்த ஒளி பிரகாசித்தது. 7 நான் தரையில் வீழ்ந்தேன். ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் எனக்கு இத்தீய காரியங்களைச் செய்கின்றாய்?’ என்றது.
8 “நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன், அக்குரல், ‘நான் நாசரேத்தின் இயேசு. நீ கொடுமைப்படுத்துகிறவன் நானே’ என்றது. 9 என்னோடிருந்த மனிதர்கள் அக்குரலைக் கேட்கவில்லை. ஆனால் அம்மனிதர்கள் ஒளியைக் கண்டார்கள்.
10 “நான், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யட்டும்?’ என்றேன். கர்த்தராகிய இயேசு பதிலாக, ‘எழுந்து தமஸ்குவுக்குள் போ, நீ செய்ய வேண்டுமென நான் திட்டமிட்டுள்ள அனைத்தையும் குறித்து அங்கே உனக்கு அறிவிக்கப்படும்’ என்றார். 11 என்னால் பார்க்கமுடியாதபடிக்கு, அப்பிரகாசமான ஒளி என்னைக் குருடாக்கிற்று. எனவே என் மனிதர்கள் என்னைத் தமஸ்குவுக்கு வழி நடத்தினார்கள்.
12 “தமஸ்குவில் அனனியா [a] என்னும் பெயருள்ள மனிதன் என்னிடம் வந்தான். அனனியா பக்திமான். அவன் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தவன். அங்கு வாழ்ந்த யூதர்கள் அனைவரும் அவனை மதித்தனர். 13 அனனியா என் அருகில் வந்து, ‘சகோதரனாகிய சவுலே, மீண்டும் பார்ப்பாயாக’ என்றான். உடனே என்னால் பார்க்க முடிந்தது.
14 “அனனியா என்னிடம், ‘நமது முன்னோர்களின் தேவன் அவரது திட்டத்தைத் தெரிந்துகொள்வதற்கு உன்னைத் தேர்ந்தெடுத்தார். நேர்மையானவரைக் கண்டு அவரது வார்த்தைகளை அவரிடமிருந்து கேட்பதற்காக அவர் உன்னைத் தெரிந்துகொண்டார். 15 எல்லா மக்களுக்கும் நீ அவரது சாட்சியாக இருப்பாய். நீ பார்த்ததையும் கேட்டதையும் மனிதருக்குக் கூறுவாய். 16 இப்போது இன்னும் காத்திராமல் எழுந்திரு. ஞானஸ்நானம் பெற்றுக்கொள். உன் பாவங்கள் நீங்கக் கழுவப்படு. உன்னை இரட்சிப்பதற்காக இயேசுவின் மீது விசுவாசம் கொண்டு இதனைச் செய்’ என்றான்.
17 “பிற்பாடு நான் எருசலேமுக்குத் திரும்பி வந்தேன். நான் தேவாலய முற்றத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது ஒரு காட்சியைக் கண்டேன். 18 நான் இயேசுவைக் கண்டேன். இயேசு என்னிடம், ‘விரைவாகச் செயல்படு. இப்போதே எருசலேமை விட்டுச் செல். இங்குள்ள மக்கள் என்னைப்பற்றிய உனது சாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.
19 “நான், ‘ஆனால் கர்த்தாவே, நான் விசுவாசிகளைச் சிறையில் அடைத்தும் அவர்களை அடித்துத் துன்புறுத்தியவனுமாயிருந்தேன் என்பதை மக்கள் அறிவர். உங்களிடம் நம்பிக்கை வைத்த மக்களைத் தேடி யூத ஜெப ஆலயங்களுக்கெல்லாம் சென்றேன். 20 உங்கள் சாட்சியாக ஸ்தேவான் கொல்லப்பட்டபோது நான் அங்கிருந்ததையும் மக்கள் அறிவர். நான் அங்கு நின்று ஸ்தேவான் கொல்லப்பட வேண்டுமென ஆமோதித்தேன். அவனைக் கொன்று கொண்டிருந்த மனிதர்களின் அங்கிகளையும் வைத்திருந்தேன்!’ என்றேன்.
21 “ஆனால் பின்னர் இயேசு என்னை நோக்கி, ‘இப்போது புறப்பட்டுச் செல். நான் உன்னைத் தூர இடங்களுக்கு யூதரல்லாத மக்களிடம் அனுப்புவேன்’ என்றார்” என்றான்.
2008 by World Bible Translation Center