Revised Common Lectionary (Semicontinuous)
105 கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்.
அவர் செய்யும் அற்புதங்களைத் தேசங்களுக்குக் கூறுங்கள்.
2 கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்.
அவருக்குத் துதிகளைப் பாடுங்கள்.
அவர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைக் குறித்துக் கூறுங்கள்.
3 கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்துப் பெருமைகொள்ளுங்கள்.
ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரைத் தேடிவந்தீர்கள். சந்தோஷமாயிருங்கள்!
4 வல்லமைக்காக கர்த்தரிடம் போங்கள்.
உதவிக்காக எப்போதும் அவரிடம் போங்கள்.
5 அவர் செய்யும் வியப்பிற்குரிய காரிங்களை நினைவுகூருங்கள்.
அவர் செய்த அதிசயங்களையும் ஞானமுள்ள முடிவுகளையும் எண்ணிப் பாருங்கள்.
6 நீங்கள் அவரது பணியாளாகிய ஆபிரகாமின் சந்ததியினர்.
நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாக்கோபின் சந்ததியினர்.
16 தேவன் தேசத்தில் பஞ்சம் வரப்பண்ணினார்.
ஜனங்களுக்கு உண்பதற்குத் தேவையான உணவு இருக்கவில்லை.
17 ஆனால் அவர்களுக்கு முன்னே தேவன் யோசேப்பு என்ற மனிதனை அனுப்பினார்.
யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்டான்.
18 யோசேப்பின் கால்களை அவர்கள் ஒரு கயிற்றால் கட்டினார்கள்.
அவன் கழுத்தைச் சுற்றிலும் ஒரு இரும்பு வளையத்தை அணிவித்தார்கள்.
19 அவர் சொன்ன காரியங்கள் அப்படியே நிகழும்வரை யோசேப்பு அடிமையாக இருந்தான்.
யோசேப்பு நேர்மையானவன் என்பதை கர்த்தருடைய செய்தி நிரூபித்தது.
20 எனவே எகிப்திய ராஜா அவனை விடுதலை செய்தான்.
தேசத்தின் தலைவன் அவனைச் சிறையினின்று விடுவித்தான்.
21 அவர் அவனுக்குத் தமது வீட்டின் பொறுப்பைக் கொடுத்தார்.
அவருக்குச் சொந்தமான அனைத்தையும் யோசேப்பு கண்காணித்து வந்தான்.
22 பிற தலைவர்களுக்கு யோசேப்பு ஆணைகள் அளித்தான்.
யோசேப்பு முதியவர்களுக்குக் கற்பித்தான்.
45 ஏன் தேவன் இதைச் செய்தார்?
அப்போதுதான் அவரது ஜனங்கள் அவரளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிய முடியும்.
அவர்கள் கவனமாக அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.
கர்த்தரைத் துதியுங்கள்!
ஏசாவின் குடும்பம்
36 இது ஏசாவின் குடும்ப வரலாறு. 2 ஏசா கானான் நாட்டுப் பெண்களை மணந்துகொண்டான். அவன் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியான ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோலிபாமாளையும் முதலில் மணந்துகொண்டான். 3 இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும் பிறகு மணந்தான். 4 ஏசாவுக்கும் ஆதாளுக்கும் எலீப்பாஸ் என்ற குமாரன் பிறந்தான். பஸ்மாத்துக்கு ரெகுவேல் என்ற குமாரன் பிறந்தான். 5 அகோலிபாமாளுக்கு எயூஷ், யாலாம், கோரா என்ற மூன்று குமாரர்கள் பிறந்தனர். ஏசாவின் இந்தப் பிள்ளைகள் கானான் நிலப் பகுதியிலேயே பிறந்தனர்.
6-8 யாக்கோபு மற்றும் ஏசா ஆகியோரின் குடும்பங்கள் கானான் நாட்டில் வளர்ந்து மிகப் பெரிதாயின. எனவே ஏசா தன் சகோதரன் யாக்கோபை விட்டு விலகிப்போனான். ஏசா தனது மனைவியரையும், பிள்ளைகளையும், அடிமைகளையும், பசுக்கள் மற்றும் மிருகங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டு சேயீர் எனும் மலைப் பகுதிக்குச் சென்றான். (ஏசாவுக்கு ஏதோம் என்ற பேரும் உண்டு. சேயீர் நாட்டுக்கும் இந்தப் பெயர் உண்டு)
அப்பொல்லோவின் ஊழியம்
24 அப்பொல்லோ என்னும் பெயருள்ள யூதன் எபேசுவிற்கு வந்தான். அப்பொல்லோ, அலெக்ஸாண்டிரியா நகரத்தில் பிறந்தவன். அவன் கல்வியில் தேர்ந்தவன். அவன் வேத வாக்கியங்களை வல்லமையுடன் பயன்படுத்தினான். 25 கர்த்தரைப் பற்றி அவன் கற்றிருந்தான். அப்பொல்லோ ஆன்மீக உற்சாகம் நிரம்பியிருந்தான். இயேசுவைக் குறித்து மக்களிடம் பேசிக்கொண்டிருந்தான். இயேசுவைக் குறித்து சரியான கருத்துக்களையே அப்பொல்லோ கற்பித்தான். அவனுக்குத் தெரிந்தது யோவானின் ஞானஸ்நானம் மட்டுமே. 26 அப்பொல்லோ ஜெப ஆலயங்களில் துணிவாகப் பேசத் தொடங்கினான். ஒவ்வொரு முறையும் அவன் துணிவுடன் அதைச் செய்தான். அவன் பேசுவதைப் பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் கேட்டனர். அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று தேவனுடைய வழியை இன்னும் துல்லியமாக அறிய உதவினார்கள்.
27 அகாயா நாட்டிற்குப் போவதற்கு அப்பொல்லோ விரும்பினான். அதற்கு எபேசுவின் சகோதரர்கள் அவனுக்கு உதவினர். அகாயாவிலுள்ள இயேசுவின் சீஷர்களுக்கு அவர்கள் ஒரு கடிதம் எழுதினர். அக்கடிதத்தில் அப்பொல்லோவை இச்சீஷர்கள் வரவேற்குமாறு அவர்கள் கேட்டனர். அகாயாவில் உள்ள இந்தச் சீஷர்கள் தேவனுடைய கிருபையின் மூலமாக இயேசுவில் விசுவாசம் வைத்திருந்தார்கள். அப்பொல்லோ அங்கு வந்து சேர்ந்தபொழுது அவன் அவர்களுக்கு மிகவும் உதவினான். 28 அவன் எல்லா மக்களுக்கும் முன்பாக யூதர்களுக்கு எதிராக மிக வன்மையாக வாதிட்டான். யூதர்கள் தவறான போதனைகளைப் பெற்றிருந்தார்கள் என்பதை நிரூபித்தான். அவன் வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி இயேசுவே கிறிஸ்து என்று காட்டினான்.
2008 by World Bible Translation Center