Revised Common Lectionary (Semicontinuous)
ஆலயத்தில் வைக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி
8 பின் சாலொமோன் இஸ்ரவேலரின் முதியவர்களையும் கோத்திரத் தலைவர்களையும் கூட்டினான். அவர்களை எருசலேமுக்கு வரச்செய்தான். அவர்களை தாவீது நகரத்திலிருந்து உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்திற்கு கொண்டு வரும்படி கேட்டான்.
6 பின்னர் ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை அதற்கு உரிய சரியான இடத்தில் வைத்தனர். அது ஆலயத்தின் உள்ளே மகா பரிசுத்தமான இடத்தில் இருந்தது. உடன்படிக்கைப் பெட்டியானது கேருபீன்களின் சிறகுகளுக்கு அடியில் இருந்தது.
10 ஆசாரியர்கள் பரிசுத்தப் பெட்டியை மகா பரிசுத்த இடத்தில் வைத்தனர். ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியேறியதும் மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை மூடிக்கொண்டது. 11 ஆசாரியர்களால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனது. ஏனென்றால் கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிவிட்டது.
22 பிறகு சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்தின் முன்பு நின்றான். அனைவரும் அவனுக்கு முன்பு நின்றனர். 23 அவன் தன் கைகளை விரித்து வானத்தை நோக்கி,
“இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உம்மைப் போன்று வேறு ஒரு தேவன் இல்லை. நீர் உம்முடைய ஜனங்களிடம் அன்பாயிருந்ததால் அவர்களோடு உடன்படிக்கை செய்துக்கொண்டீர். அதனைக் காப்பாற்றினீர். உம்மைப் பின்பற்றுபவர்களிடம் கருணையோடும் உண்மையோடும் இருந்தீர். 24 உமது சேவகனான என் தந்தை தாவீதிடம், ஒரு வாக்குறுதி தந்தீர். அதையும் காப்பாற்றினீர். உம்முடைய வாயாலேயே அந்த வாக்குறுதியைச் செய்தீர். அதை உண்மையாக்கிட உம்முடைய சொந்த பலத்தைப் பயன்படுத்தினீர். 25 இப்போது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தாவீதிற்குத் தந்த மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். நீர், ‘உன் குமாரர்கள் உன்னைப்போலவே எனக்குக் கவனமாகக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் அவ்வாறு செய்தால் பிறகு எப்பொழுதும் உன் குடும்பத்தில் உள்ளவர்களே இஸ்ரவேல் ஜனங்களை ஆள்வார்கள்’ என்று சொன்னீர். 26 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தந்தைக்களித்த வாக்குறுதியைக் காப்பாற்றும்படி மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
27 “ஆனால், தேவனே உண்மையில் நீர் இந்தப் பூமியில் எங்களோடு வாழ்கின்றீரா? வானங்களும், வானாதி வானங்களும் உமக்குப் போதாதே. என்னால் கட்டப்பட்ட இந்த ஆலயம் எம்மாத்திரம்? 28 ஆனால் என் ஜெபங்களையும் வேண்டுகோள்களையும் தயவுசெய்து கேளும். நான் உமது ஊழியன், நீர் எனது தேவனாகிய கர்த்தர், இன்று என் ஜெபத்தைக் கேட்டருளும். 29 முன்பு நீர், ‘அங்கே நான் மகிமைப்படுத்தப்படுவேன்’ என்றீர். இவ்வாலயத்தை இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும். இந்த ஆலயத்தில் நான் செய்யும் ஜெபங்களைக் கேட்டருளும் 30 கர்த்தாவே, நானும் இஸ்ரவேல் ஜனங்களும் இங்கே உம்மிடம் திரும்பி ஜெபிக்கிறோம். தயவு செய்து அந்த ஜெபங்களைக் கேளும்! நீர் பரலோகத்தில் இருப்பதை அறிவோம். அங்கிருந்து எங்கள் ஜெபங்களைக் கேட்டு எங்களை மன்னியும்.
41-42 “வெளி இடங்களில் உள்ள ஜனங்களும் உமது உயர்வையும் பலத்தையும் அறிவார்கள். இந்த ஆலயத்தில் ஜெபிப்பதற்காக அவர்கள் வெகு தூரத்திலிருந்து வருவார்கள். 43 பரலோகத்திலிருந்து அவர்களது ஜெபங்களுக்குச் செவிசாயும். அவர்கள் கேட்பவற்றை தந்து உதவும். பிறகு அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே உம்மிடம் பயமும் மரியாதையும் வைத்திருப்பார்கள். பின் எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்களும் உமது நாமத்தைத் தாங்கிய நான் கட்டியிருக்கிற இந்த ஆலயத்தை அறிவார்கள்.
கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.
84 சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
2 கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது.
ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.
என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
3 என் ராஜாவே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு.
உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
4 உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
5 தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு
ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
6 அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார்.
இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
7 தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில்
ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.
9 தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும்.
நீர் தேர்ந்தெடுத்த ராஜா மீது இரக்கமாயிரும்.
10 வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது.
எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
11 கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர்.[a]
தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு
தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
12 சர்வ வல்லமையுள்ள தேவனே,
உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.
முழு ஆயதங்களையும் அணியுங்கள்
10 இறுதியாக நான் எழுதுவது யாதெனில்: அவரது பெரும் பலத்தால் நீங்கள் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். 11 அவரது முழு ஆயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு உங்களால் சாத்தானின் தந்திரங்களை எதிர்த்துப் போராட முடியும். 12 நமது போராட்டம் பூமியிலுள்ள மக்களை எதிர்த்தல்ல. நாம் இருட்டில் உள்ள ராஜாக்களையும், அதிகாரிகளையும், அதிகாரங்களையும் எதிர்த்தே போராடுகிறோம். வானமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுக்கு எதிராகப் போர் செய்கிறோம். 13 அதனால்தான் தேவனின் முழுக் கவசங்களும் உங்களுக்குத் தேவை. அப்போது தான் உங்களால் தீங்கு நாளில் எதிர்த்து பலத்துடன் இருக்க முடியும். போர் முடித்த பிறகும் வல்லமையுடன் நிற்கமுடியும்.
14 எனவே உண்மை என்னும் இடுப்புக் கச்சையைக் கட்டிக்கொண்டு வலிமையாகுங்கள். சரியான வாழ்க்கை என்னும் கவசத்தை உங்கள் மார்பில் அணிந்துகொள்ளுங்கள். 15 சமாதானத்தின் நற்செய்தி என்னும் செருப்புகளை உங்கள் கால்களில் அணிந்துகொண்டு முழு தயார் நிலையில் நில்லுங்கள். 16 நம்பிக்கை என்னும் கேடயத்தைக் கைகளில் தாங்கிக்கொள்ளுங்கள். சாத்தான் எறியும் அம்புகளை அதனால் தடுத்துவிட முடியும். 17 தேவனின் வார்த்தை என்னும் தலைக்கவசத்தை அணிந்துகொள்க! ஆவி என்னும் வாளை எடுத்துக்கொள்க. அது தேவனின் போதகங்களாகும். 18 எப்பொழுதும் ஆவிக்குள் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லா வகையான பிரார்த்தனைகளையும் செய்து உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கேளுங்கள். இதனைச் செய்வதற்கு எப்பொழுதும் தயாராக இருங்கள். ஒருபோதும் மனம் தளராதீர்கள். எப்பொழுதும் தேவனுடைய எல்லாப் பிள்ளைகளுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
19 எனக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள், அப்பொழுது நான் பேசும்போது தேவன் எனக்கு வார்த்தைகளைக் கொடுப்பார். நான் அச்சம் இல்லாமல் சுவிசேஷத்தின் இரகசிய உண்மைகளைப் போதிக்க வேண்டும். 20 நற்செய்தியைப் போதிக்கும் பணி என்னுடையது. அதை இப்பொழுது சிறைக்குள் இருந்து செய்கிறேன். இதற்கான தைரியத்தை நான் பெற்றுக்கொள்ள எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
56 ஒருவன் எனது சரீரத்தைப் புசித்து என் இரத்தத்தை அருந்துவானேயானால் அவன் என்னிலும் நான் அவனிலும் வாழ்வதாகும்.
57 “பிதா என்னை அனுப்பினார். பிதா வாழ்கிறார். அவரால் நானும் வாழ்கிறேன். ஆகையால் என்னை உண்ணுகிறவன் என்னால் உயிர் வாழ்கிறான். 58 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் புசித்த அப்பத்தைப்போல் அல்ல நான். அவர்கள் அந்த அப்பத்தை உண்டார்கள். ஆனால், மற்றவர்களைப்போன்று அவர்கள் இறந்துபோயினர். நானோ பரலோகத்திலிருந்து இறங்கி வந்த அப்பம். இதனை உண்ணுகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான்” என்றார் இயேசு.
59 இவை எல்லாவற்றையும் இயேசு, கப்பர்நகூமிலுள்ள யூதர்களின் ஜெப ஆலயத்தில் போதனைசெய்யும்போது கூறினார்.
நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகள்
60 இயேசுவின் சீஷர்கள் இவற்றைக் கேட்டார்கள். “இந்த உபதேசங்கள் ஏற்றுக்கொள்வதற்குக் கடினமானவை, இவற்றை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்?” என சீஷர்கள் கூறினர்.
61 அவருடைய சீஷர்கள் முறுமுறுப்பதை இயேசு அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நான் சொன்னவற்றை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
62 “அப்படியானால் மனித குமாரன் தாம் வந்த இடத்திற்கே திரும்பி ஏறிப்போவதைக் காண்பது எப்படியிருக்கும்? 63 ஒரு மனிதனுக்கு அவனது சரீரம் மட்டுமே வாழ்வு அளிப்பது இல்லை. அவனது ஆவியே ஜீவனைத் தருகிறது. நான் உங்களுக்குச் சொன்ன வசனங்கள் யாவும் ஆவியே. இவையே ஜீவனைத் தருவன. 64 ஆனால் உங்களில் சிலர் விசுவாசம் இல்லாமல் இருக்கிறீர்கள்” என்றார். (தன்னை விசுவாசிக்காதவர்களை இயேசு புரிந்துகொண்டார். இதனை அவர் துவக்கம் முதலே புரிந்துகொண்டார். தனக்கு எதிராகத் திரும்புகிறவனையும் இயேசு அறிந்திருந்தார்.) 65 அதனால்தான், “நான், ‘பிதா அனுமதித்தால் ஒழிய ஒருவனும் என்னிடம் வரமாட்டான்’ என்று சொன்னேன்” என்றார் இயேசு.
66 இயேசு இவ்வாறு சொன்னபிறகு அவரது சீஷர்களில் அநேகர் அவரை விட்டுப் போயினர். அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்வதை நிறுத்தினர்.
67 பிறகு இயேசு தனது பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும் பார்த்து, “நீங்களும் விட்டுவிட்டு விலகிச் செல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.
68 சீமோன் பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாங்கள் எங்கே போவோம்? நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகளை நீரே வைத்திருக்கிறீர். 69 நாங்கள் உம்மை நம்புகிறோம். நீரே தேவனிடமிருந்து வந்த பரிசுத்தமானவர் என்பதை நாங்கள் அறிவோம்” என்றார்.
2008 by World Bible Translation Center