Revised Common Lectionary (Complementary)
[a]111 கர்த்தரைத் துதியங்கள்!
நல்லோர் கூடிச் சந்திக்கும் கூட்டங்களில்
நான் கர்த்தருக்கு முழு இருதயத்தோடும் நன்றி செலுத்துவேன்.
2 கர்த்தர் அற்புதமான காரியங்களைச் செய்கிறார்.
தேவனிடமிருந்து வரும் நல்ல காரியங்களை ஜனங்கள் விரும்புகிறார்கள்.
3 உண்மையிலேயே மகிமையும் அற்புதமுமான காரியங்களை தேவன் செய்கிறார்.
அவரது நன்மை என்றென்றைக்கும் தொடருகிறது.
4 கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர் என்பதை நாம் நினைவுக்கூரும்படி
தேவன் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறார்.
5 தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு உணவளிக்கிறார்.
அவரது உடன்படிக்கையை தேவன் என்றென்றும் நினைவுகூருகிறார்.
6 அவர் தமது தேசத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுக்கப்போகிறார் என்பதை
தேவன் செய்த வல்லமையான காரியங்கள் காட்டும்.
7 தேவன் செய்பவை ஒவ்வொன்றும் நல்லவையும் நியாயமுள்ளவையும் ஆகும்.
அவரது கட்டளைகள் நம்பத்தக்கவை.
8 தேவனுடைய கட்டளைகள் என்றென்றும் தொடரும்.
அக்கட்டளைகளை தேவன் கொடுப்பதற்கான காரணங்கள் நேர்மையும் தூய்மையானவையுமாகும்.
9 தேவன் தம் ஜனங்களைக் காப்பாற்ற ஒருவரை அனுப்புகிறார்.
தேவன் அவர்களுடன் உடன்படிக்கை என்றென்றும் தொடருமாறு செய்தார். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கதும் பரிசுத்தமானதுமாகும்.
10 தேவனுக்குப் பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கமாயிருக்கிறது.
தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள்.
என்றென்றும் தேவனுக்குத் துதிகள் பாடப்படும்.
லேவியர் குடும்பங்கள்
34 கோகாத்தியர்களையும், மற்ற இஸ்ரவேல் தலைவர்களையும் மோசேயும் ஆரோனும் எண்ணிக் கணக்கிட்டனர். அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்கள் வாரியாகவும் கணக்கிட்டனர். 35 படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் கணக்கிட்டனர். இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்யும்படி நியமிக்கப்பட்டனர்.
36 கோகாத்திய கோத்திரத்தில் 2,750 ஆண்கள் இவ்வேலையைச் செய்ய தகுதியுடையவர்களாக இருந்தனர். 37 எனவே, ஆசரிப்புக் கூடாரத்திற்க்கான சிறப்பு வேலைகளைச் செய்ய கோகாத்திய கோத்திரத்தினர் நியமிக்கப்பட்டனர். கர்த்தர் மோசேயிடம் சொன்னபடியே, மோசேயும், ஆரோனும் இதனைச் செய்தனர்.
38 கெர்சோனிய கோத்திரத்தினரும் எண்ணி கணக்கிடப்பட்டனர். 39 படையில் பணியாற்றும் தகுதியுடைய 30 முதல் 50 வயது வரையுள்ள ஆண்கள் எண்ணப்பட்டனர். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர். 40 கெர்சோன் கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 2,630 ஆண்கள் இருந்தனர். 41 எனவே, கெர்சோன் கோத்திரத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, ஆசரிப்புக் கூடாரத்தின் சிறப்பு வேலைகள் கொடுக்கப்பட்டன. கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி மோசேயும், ஆரோனும் செய்து முடித்தனர்.
42 மெராரி குடும்பத்திலும், கோத்திரங்களிலும் உள்ள ஆண்கள் கணக்கிடப்பட்டனர். 43 அவர்களில் படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரும் எண்ணப்பட்டனர். அந்த ஆண்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர். 44 மெராரி கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 3,200 ஆண்கள் இருந்தனர். 45 எனவே, மெராரி கோத்திரத்தில் உள்ள இந்த ஆண்கள், இச்சிறப்பு வேலைகளுக்கு நியமிக்கப்பட்டனர். கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி மோசேயும் ஆரோனும் செய்து முடித்தனர்.
46 எனவே மோசே, ஆரோன், இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் ஆகியோர் லேவியரின் கோத்திரத்தில் உள்ளவர்களையும் எண்ணிக் கணக்கிட்டனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பவாரியாகவும், கோத்திர வாரியாகவும் கணக்கிடப்பட்டனர். 47 படையில் பணியாற்றக் கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்களும் எண்ணிக் கணக்கிடப்பட்டனர். இவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தின், சிறப்பு வேலைகள் தரப்பட்டன. அவர்கள் தங்கள் பயணத்தின்போது, ஆசரிப்புக் கூடாரத்தைச் சுமக்கும் வேலையைச் செய்தனர். 48 அவர்களின் மொத்த எண்ணிக்கை 8,580. 49 எனவே, கர்த்தர் மோசேயிடம் சொன்னப்படி, ஒவ்வொரு ஆண்மகனும், கணக்கிடப்பட்டான். ஒவ்வொருவனுக்கும் அவன் செய்யவேண்டிய வேலை ஒதுக்கப்பட்டது. அவன் எதனைச் சுமந்து செல்லவேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. இவை யாவும் கர்த்தர் கட்டளையிட்டபடியே நடைபெற்றது.
சுத்தப்படுத்துவதைப் பற்றிய விதிமுறைகள்
5 கர்த்தர் மோசேயிடம், 2 “நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிடுவதாவது: அவர்கள் தங்கள் முகாம்களை நோய்கள் பரவாதபடி வைத்துக்கொள்ளவேண்டும். அவர்களில் யாராவது ஒருவனுக்குத் தொழுநோய் இருந்தால், அவனை முகாமை விட்டு அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாருக்காவது (இரத்தப் போக்கான) விலக்கு தீட்டு இருந்தால் அவர்களையும் அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாராவது பிணத்தைத் தொட்டு அதனால் தீட்டாகியிருந்தால் அவனையும் வெளியே அனுப்பி விடவேண்டும். 3 ஆணா, பெண்ணா என்பது பற்றிக் கவலைப்படாமல் அந்த நபரை வெளியேற்ற வேண்டும். அதனால் மற்றவர்களுக்கு அந்த நோயும், தீட்டும் ஏற்படாமல் இருக்கும். நானும் உங்கள் முகாமில் உங்களோடு வாழ்வேன்” என்றார்.
4 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் இத்தகையவர்களை முகாமைவிட்டு வெளியேற்றினர். கர்த்தர் மோசேயிடம் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தனர்.
நம்பிக்கைக்குரிய வீரன்
2 தீமோத்தேயுவே, நீ என் குமாரனைப் போன்றவன். இயேசு கிறிஸ்துவிற்குள் நாம் கொண்டுள்ள கிருபையில் உறுதியாக இரு. 2 நீ கேட்ட என் போதனைகள் மற்றவர்களுக்கும் கூட போதிக்கப்பட வேண்டும். நீ விசுவாசம் வைத்திருக்கிற மக்களிடம் எல்லாம் அதனைப் போதிப்பாயாக. பிறகு அவர்களாலும் அவற்றை ஏனைய மக்களுக்குப் போதிக்க முடியும். 3 நாம் அனுபவிக்க நேரும் துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம். அவற்றை ஒரு உண்மையான போர் வீரனைப்போன்று ஏற்றுக்கொள்வோம். 4 போர் வீரனாயிருக்கும் ஒருவன் எப்பொழுதும் தனது மேலதிகாரியைத் திருப்திப்படுத்தவே விரும்புவான். எனவே அவன் மற்றவர்களைப் போன்று தன் பொழுதை வேறுவகையில் போக்கமாட்டான். 5 விதிமுறைகளின்படி போட்டியிடாமல் எந்த விளையாட்டு வீரனாலும் வெற்றிக் கிரீடத்தை அடைய முடியாது. 6 பாடுபட்டு விளைய வைக்கிற விவசாயியே, விளைச்சலின் முதல் பகுதி உணவை உண்பதற்குத் தகுதியானவன். 7 நான் சொல்லிக்கொண்டிருக்கிற விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார். இவை பற்றிய முழுமையான அறிவை கர்த்தர் உனக்குத் தருவார்.
2008 by World Bible Translation Center