Revised Common Lectionary (Complementary)
இசைக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்.
76 யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள்.
இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள்.
2 தேவனுடைய ஆலயம் சாலேமில்[a] இருக்கிறது.
தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது.
3 அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள்,
மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.
4 தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது
மலைகளிலிருந்து மகிமை பொருந்தியவராய் வெளிப்பட்டீர்.
5 அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள்.
ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள்.
அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன.
அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.
6 யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார்.
இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர்.
7 தேவனே, நீர் பயங்கரமானவர்!
நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை.
8-9 கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார்.
தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார்.
பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார்.
பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது.
10 தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள்.
நீர் உமது கோபத்தை வெளிப்படுத்தும்.
தப்பித்து வாழ்பவர்கள் வலிமையுள்ளோராவர்கள்.
11 ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள்.
இப்போது, வாக்குறுதிப் பண்ணினவற்றை நீங்கள் அவருக்குக் கொடுங்கள்.
எல்லா இடங்களிலும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கிறார்கள்.
அவர்கள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள்.
12 தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார்.
பூமியின் எல்லா ராஜாக்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
எகிப்து என்றென்றும் பலவீனமாகும்
20 சிறைபிடிக்கப்பட்ட பதினொன்றாவது ஆண்டின் முதல் மாதத்து (ஏப்ரல்) ஏழாம் நாள் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 21 “மனுபுத்திரனே, நான் எகிப்து மன்னனான பார்வோனின் கையை (பலம்) உடைத்திருக்கிறேன். எவரும் அவனது கையில் கட்டுப்போட முடியாது. அது குணமாவதில்லை. எனவே அவனது கையானது வாளைத் தாங்கும் அளவிற்குப் பலம் பெறுவதில்லை.”
22 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் எகிப்து மன்னனான பார்வோனுக்கு விரோதமானவன். அவனது இரண்டு கைகளையும் நான் உடைப்பேன். அவற்றில் ஒன்று ஏற்கெனவே உடைந்தது; இன்னொன்று பலமுள்ளது. நான் அவனது கையிலிருந்து வாளானது விழும்படிச் செய்வேன். 23 நான் எகிப்தியர்களை நாடுகளிடையே சிதறடிப்பேன். 24 நான் பாபிலோன் ராஜாவின் கையைப் பலப்படுத்துவேன். நான் எனது வாளை அவனது கையில் கொடுப்பேன். ஆனால் நான் பார்வோனின் கைகளை உடைப்பேன். பிறகு பார்வோன் வலியால் கதறுவான். அவனது கதறல் மரிக்கிறவனின் கதறல் போன்றிருக்கும். 25 எனவே நான் பாபிலோன் ராஜாவின் கைகளைப் பலப்படுத்துவேன். ஆனால் பார்வோனின் கைகள் கீழே விழும். பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!
“நான் பாபிலோன் ராஜாவின் கையில் என் வாளைக் கொடுப்பேன். பிறகு அவன் எகிப்து நாட்டிற்கு எதிராக வாளை நீட்டுவான். 26 நான் நாடுகளில் எகிப்தியர்களைச் சிதறடிப்பேன், பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”
உலகத்தின் மீது வெற்றி
25 “நான் இவற்றையெல்லாம் உங்களுக்கு மறை பொருளில் கூறியிருக்கிறேன். ஆனால் காலம் வரும். அப்போது நான் இவ்வாறு மறைபொருளில் பேசாமல் வெளிப்படையாகச் செய்திகளை அந்தப் பிதாவைப்பற்றிக் கூறுவேன். 26 அந்த நாளில் நீங்கள் பிதாவிடம் என்பேரில் உங்களுக்கானதைக் கேட்பீர்கள். நான் உங்களுக்காக என் பிதாவிடம் கேட்டுக்கொள்ளும் தேவை இருக்காது என்று சொல்கிறேன். 27 என் பிதா அவராகவே உங்களை நேசிக்கிறார். ஏனென்றால் நீங்கள் என்னிடம் அன்பாக இருந்தீர்கள். நான் தேவனிடம் இருந்து வந்ததாக நீங்கள் நம்பியிருந்தீர்கள். 28 நான் இந்த உலகத்துக்கு என் பிதாவிடம் இருந்து வந்தேன். இப்பொழுது நான் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என் பிதாவிடம் திரும்பிப் போகிறேன்” என்றார்.
29 பிறகு இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “நீர் இப்பொழுது எங்களிடம் தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கிறீர். புரிந்து கொள்வதற்குக் கடினமான வார்த்தைகளை நீர் பயன்படுத்தவில்லை. 30 உமக்கு எல்லாம் தெரியும் என்பதை நாங்கள் இப்போது தெரிந்துகொண்டோம். உம்மிடம் ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்னரே அக்கேள்விக்கு உம்மால் பதில்கூற முடியும். இவை நீர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை எங்களை நம்ப வைக்கிறது” என்றனர்.
31 இயேசு அவர்களிடம், “எனவே நீங்கள் இப்போது நம்புகிறீர்கள். 32 என்னைக் கவனியுங்கள். நீங்கள் சிதறிப்போகிற வேளை இதோ நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீட்டிற்குப் போய் என்னை விட்டு விலகிப் போவீர்கள். அந்த நேரம் இதோ வந்துவிட்டது. நீங்கள் என்னை விட்டுப் போவீர்கள். நான் தனியே இருப்பேன். எனினும் நான் உண்மையில் தனித்திருக்கமாட்டேன். ஏனென்றால் என்னோடு என் பிதா இருக்கிறார்.
33 “என்னில் உங்களுக்கு சமாதானம் இருக்கும்பொருட்டு இவற்றை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் ஏற்படும். ஆனால் தைரியமாக இருங்கள். நான் உலகத்தை வென்றுவிட்டேன்” என்றார்.
2008 by World Bible Translation Center