Revised Common Lectionary (Complementary)
எப்பொழுதும் தேவனை நேசித்துக் கீழ்ப்படி!
6 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குப் போதிக்கும்படி என்னிடம் கூறியக் கட்டளைகளும், சட்டங்களும், நியாயங்களும் இவைகளே. குடியேறும்படி நீங்கள் போகிற தேசத்திலே இந்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். 2 நீயும் உன் சந்ததியினரும் நீங்கள் வாழ்கின்ற காலம்வரை உங்கள் தேவனாகிய கர்த்தரை மதிக்க வேண்டும். நான் உங்களுக்குத் தரும் சட்டங்களுக்கும் கற்பனைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்தால், நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீர்கள். 3 இஸ்ரவேல் ஜனங்களே, நான் கூறுவதைக் கவனமாகக் கேட்பதுடன் இந்தச் சட்டங்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும், அப்போது உங்களுக்கு எல்லாம் நல்லவையாக அமையும், நீங்கள், அநேக குழந்தைகளைப் பெறுவீர்கள். உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடி பாலும் தேனும் ஓடக்கூடிய வளமான தேசத்தைப் பெறுவீர்கள்.
4 “இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! 5 உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில், நீ முழு இருதயத்துடன், நிறைவான ஆத்மாவுடன், உன் முழு வலிமையுடன் அன்பு செலுத்தவேண்டும். 6 இன்று நான் கூறும் இந்தக் கட்டளைகளை என்றும் உங்கள் மனதில் வைக்கவேண்டும். 7 நீங்கள் இவற்றைக் கட்டாயமாக உங்கள் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். உங்கள் வீட்டினுள் இருக்கும்போதும் வீதிகளில் நடக்கும்போதும் அவற்றைப் பற்றிப் பேசவேண்டும். நீங்கள் தூங்கச் செல்லும்போதும் உறங்கி எழும்போதும் அவற்றைப் பற்றியே அவர்களிடம் பேச வேண்டும். 8 அவற்றை எழுதிக்கொண்டு அடையாளமாக உங்கள் கைகளில் அணிந்து கொள்ளுங்கள். என் போதனைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப் பயன்படும்படி எப்போதும் அவைகளை உங்கள் நெற்றியில் அணிந்துகொள்ளுங்கள். 9 அவைகளை உங்கள் வீட்டுக்கதவு நிலைக்கால்களிலும் வாசல்களிலும் எழுதி வையுங்கள்.
ஆலெப
119 பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள்.
2 கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
3 அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை.
அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
4 கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர்.
அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர்.
5 கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக்
கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன்.
6 நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது
நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை.
7 உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது
உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும்.
8 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
எனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்!
புதிய உடன்படிக்கையின்படி வழிபாடு
11 மேலும் இப்போது வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியனாகக் கிறிஸ்து வந்திருக்கிறார். (சாதாரண கூடாரத்தின் வழியே அவர் வரவில்லை). மனிதக் கைகளால் உருவாக்கப்படாத உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான கூடாரத்தின் வழியே வந்தார். அக்கூடாரமானது தேவன் உருவாக்கிய இவ்வுலகத்தின் பகுதியல்ல. 12 மேலும் மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் இயேசு நுழைந்தபோது, வெள்ளாட்டுக்கடாக்கள் மற்றும் காளைகளின் இரத்தத்தை அவர் பயன்படுத்தவில்லை. மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் நுழைய அவர் தன் சொந்த இரத்தத்தையே பயன்படுத்தினார். எல்லா காலத்திற்கும் போதுமென்கிற அளவிற்கு ஒரே ஒருமுறை தான் அவர் அதற்குள் சென்றார். இவ்வழியில் நமக்கு அவர் நித்திய விடுதலையைப் பெற்றுத்தந்தார்.
13 வெள்ளாட்டுக்கடா காளை ஆகியவற்றின் இரத்தமும் தீட்டுப்பட்ட மக்கள் மீது தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும் அவர்களைப் பரிசுத்தமாக்கிப் புறப்பரிசுத்தம் உடையவர்களாக்க முடியும். 14 இது உண்மை எனில், கிறிஸ்துவின் இரத்தம் இதிலும் மிக்க வல்லமை உள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனுக்கு இயேசு தன்னைத் தானே ஒரு முழுமையான பலியாக வழங்கினார். ஆகவே நமக்கு ஆன்மீக மரணத்தைக் கொண்டுவருகிற தீய செயல்களில் இருந்து அவர் இரத்தமானது நம் இதயத்தை சுத்தமாக்கும். ஜீவனுள்ள தேவனை வழிபடும் வண்ணம் நாம் சுத்தமாக்கப்படுகிறோம்.
மிக முக்கியமான கட்டளை எது?
(மத்தேயு 22:34-40; லூக்கா 10:25-28)
28 வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவும் சதுசேயர்களும், விவாதிப்பதைக் கேட்டான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுப்பதைப் பார்த்தான். எனவே அவன் இயேசுவிடம், “கட்டளைகளுள் எது மிக முக்கியமானது?” என்று கேட்டான்.
29 அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். 30 நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’(A) இது முதல் கட்டளை. 31 ‘உங்களை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அடுத்தவர்களையும் நேசிக்க வேண்டும்’(B) என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிட மிக முக்கியமான வேறு கட்டளைகள் எதுவும் இல்லை” என்றார்.
32 அதற்கு அந்த மனிதன், “போதகரே! இது ஒரு நல்ல பதில். நீங்கள் சரியான பதிலையே சொல்லி இருக்கிறீர்கள். கர்த்தர் ஒருவரே நம் தேவன். அவரைத் தவிர வேறு தேவன் இல்லை. 33 ஒருவன் தேவனைத் தன் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும். ஒருவன் தன்னை நேசிப்பது போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். இந்தக் கட்டளைகளே, ஏனைய கட்டளைகளைக் காட்டிலும் முக்கியமானவை. இவை தகனபலிகள் போன்றவற்றைவிட மிக முக்கியமானவை” என்றான்.
34 அந்த மனிதன் புத்திசாலித்தனமாகப் பதில் கூறுவதை இயேசு அறிந்து கொண்டார். எனவே அவனிடம், “நீ தேவனின் இராஜ்யத்தை நெருங்கிவிட்டாய்” என்றார். அதற்குப் பிறகு ஒருவருக்கும் இயேசுவிடம் எந்தக் கேள்வியும் கேட்கும் தைரியம் வரவில்லை.
2008 by World Bible Translation Center