Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 34:9-14

கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும்.
    கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை.
10 வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள்.
    ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள்.
11 பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
    கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன்.
12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,
13 மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது.
    அம்மனிதன் பொய் பேசக்கூடாது.
14 தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும்.
    நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு.
    அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்.

யோபு 11

சோப்பார் யோபுவிடம் பேசுகிறான்

11 அப்போது நாகமாவின் சோப்பார் யோபுவுக்குப் பதில் கூறினான்.

“இவ்வார்த்தைப் பெருக்குக்குப் பதில் தரப்பட வேண்டும்!
    இத்தனை பேச்சுக்களும் யோபுவுக்கு நீதி வழங்குகின்றனவா? இல்லை?
யோபுவே, உனக்குச் சொல்ல எங்களிடம் பதில் இல்லை என்று நினைக்கிறாயா?
    நீ நகைத்து பேசும்போது உன்னை எச்சரிக்க ஒருவருமில்லை என நினைக்கிறாயா?
யோபுவே, நீ தேவனிடம், ‘என் விவாதங்கள் சரியானவை,
    நான் தூயவன் என நீர் காணமுடியும்’ என்கிறாய்.
யோபுவே, தேவன் உனக்குப் பதில் சொல்லி,
    நீ கருதுவது தவறென உனக்குச் சொல்வார் என விரும்புகிறேன்.
தேவன் ஞானத்தின் இரகசியங்களை உனக்குச் சொல்லமுடியும்.
    ஏனெனில் ஞானத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை அவர் உனக்குச் சொல்வார்.
தேவன் உன்னைத் தண்டிக்க வேண்டிய அளவிற்கு அவர் தண்டிப்பதில்லை.

“யோபுவே, நீ உண்மையாகவே தேவனைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறாயா?
    சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அறிவை நீ புரிந்துகொள்ள முடியுமோ?
அது பரலோகத்திற்கும் உயர்ந்தது.
    மரணத்தின் இடத்தைக் காட்டிலும் ஆழமானது.
    அதுபற்றி நீர் அறியக்கூடுமோ?
தேவனுடைய அறிவின் அளவு உயர்ந்தது.
    பூமியைக் காட்டிலும் கடல்களைக் காட்டிலும் பெரியது.

10 “தேவன் உன்னைச் சிறைபிடித்து நியாய சபைக்கு அழைத்துவந்தால்,
    ஒருவனும் அவரைத் தடுக்க முடியாது.
11 உண்மையாகவே, யார் தகுதியற்றவரென்று தேவன் அறிகிறார்.
    தேவன் தீமையைப் பார்க்கும்போது அதை நினைவுக்கூர்கிறார்.
12 ஒரு காட்டுக் கழுதை மனிதனை ஈன்றெடுக்காது.
    மூடனான மனிதன் ஒருபோதும் ஞானம் பெறமாட்டான்.
13 ஆனால் யோபுவே, உன் இருதயத்தை தேவனுக்கு நேராக தயார்ப்படுத்த வேண்டும்.
    உன் கரங்களை அவருக்கு நேராக உயர்த்தி அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.
14 உன் வீட்டிலிருக்கும் பாவத்தை நீ அகற்றிப்போட வேண்டும்.
    உன் கூடாரத்தில் தீமை தங்கியிருக்கவிடாதே.
15 அப்போது நீ தேவனை வெட்கமின்றிப் பார்க்கக்கூடும்.
    நீ தைரியமாக நின்று, அச்சமில்லாது இருக்க முடியும்.
16 அப்போது நீ உன் தொல்லைகளை மறக்கக் கூடும்.
    வழிந்தோடும் வெள்ளத்தைப்போல் உன் தொல்லைகள் நீங்கிவிடும்.
17 நண்பகலில் சூரியனின் பிரகாசத்தைக் காட்டிலும், உன் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்.
    வாழ்க்கையின் இருண்ட நேரங்களும் காலை சூரியனைப் போன்று பிரகாசிக்கும்.
18 அப்போது நீ பாதுகாவலை உணர்வாய்.
    ஏனெனில், உனக்கு நம்பிக்கை உண்டு.
    தேவன் உன்னைக் கவனித்து உனக்கு ஓய்வளிப்பார்.
19 நீ ஓய்வெடுக்கப் படுத்துக்கொள்வாய், யாரும் உனக்குத் தொல்லை தரமாட்டார்கள்.
    பலர் உன்னிடம் உதவி நாடி வருவார்கள்.
20 தீயோர் உன்னிடம் உதவியை எதிர்பார்ப்பர், அவர்கள் தங்கள் தொல்லைகளிலிருந்து தப்பமுடியாது.
    அவர்களின் நம்பிக்கை அவர்களை மரணத்திற்கு நேராக மட்டுமே வழிநடத்தும்” என்றான்.

அப்போஸ்தலர் 6:8-15

ஸ்தேவானுக்கு எதிராக யூதர்கள்

ஸ்தேவான் மிகுந்த ஆசீர்வாதத்தைப் பெற்றான். தேவனிடமிருந்து ஸ்தேவானும் அற்புதங்கள் செய்யும் வல்லமையையும் தேவனிடமிருந்து மக்களுக்குச் சான்றுகளைக் காட்டும் வல்லமையையும் பெற்றிருந்தான். ஆனால் சில யூதர்கள் வந்து ஸ்தேவானிடம் விவாதித்தனர். அவர்கள் ஒரு யூத ஜெப ஆலயத்திலிருந்து வந்திருந்தனர். அது விடுதலை பெற்ற யூதர்களுக்குரிய ஜெப ஆலயமாக இருந்தது. (இந்த ஜெப ஆலயம் சிரேனே, அலெக்ஸாண்டிரியா ஆகிய இடங்களிலுள்ள யூதர்களுக்கு உரியது) சிலிசியா, ஆசியா ஆகிய இடங்களின் யூதர்களும் அவர்களோடிருந்தனர். அவர்கள் எல்லோரும் வந்து ஸ்தேவானிடம் விவாதித்தனர். 10 ஞானத்தோடு பேசுவதற்கு ஆவியானவர் ஸ்தேவானுக்கு உதவினார். அவனுடைய வலிமையான சொற்கள் யூதர்கள் அவனோடு வாதிட முடியாதபடி செய்தன.

11 எனவே யூதர்கள் சில மனிதர்களுக்குக் கூலி கொடுத்து “மோசேக்கு எதிராகவும், தேவனுக்கெதிராகவும் ஸ்தேவான் தீயவற்றைக் கூறுவதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லச் செய்தார்கள். 12 இவ்வாறு செய்ததால் யூதர்கள் மக்களையும். முதிய யூதத் தலைவர்களையும், வேதபாரகரையும் கலக்கமுறச் செய்தனர். அவர்கள் மிகுந்த கோபமடைந்து ஸ்தேவானிடம் வந்து அவனைப் பிடித்தனர். யூத அதிகாரிகள் கூடியிருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர்.

13 யூதர்கள் சிலரை அக்கூட்டத்திற்கு அழைத்து வந்தனர். ஸ்தேவானைக் குறித்துப் பொய் சொல்லும்படி அவர்களுக்கு யூதர்கள் கூறியிருந்தனர். அந்த மனிதர்கள், “இவன் எப்போதும் பரிசுத்தமான இடத்தைக் குறித்துக் கெட்டதையே சொல்கிறான். மோசேயின் சட்டத்திற்கு எதிராகவே எப்போதும் சொல்கிறான். 14 நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இந்த இடத்தை அழிப்பார் என்று அவன் கூறியதை நாங்கள் கேட்டோம். நாம் கடைப்பிடிக்குமாறு மோசே சொன்னவற்றை இயேசு மாற்றுவார் என்றும் அவன் கூறினான்” என்றனர். 15 கூட்டத்தில் அமர்ந்திருந்த மக்கள் எல்லோரும் ஸ்தேவானைக் கூர்ந்து நோக்கினர். அவனது முகம் தேவதூதனின் முகத்தைப்போன்று தோன்றியது. அவர்கள் அதைக் கண்டனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center