Revised Common Lectionary (Complementary)
புத்தகம் 5
107 கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
அவரது அன்பு என்றென்றைக்கும் உள்ளது!
2 கர்த்தரால் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் சொல்லவேண்டும்.
கர்த்தர் பகைவரிடமிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
3 கர்த்தர் அவரது ஜனங்களைப் பல்வேறு வித்தியாசமான நாடுகளிலுமிருந்து ஒருமித்துக் கூடும்படிச் செய்தார்.
அவர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமிருந்தும் வடக்கிலும் தெற்கிலுமிருந்தும் வரச்செய்தார்.
33 தேவன் நதிகளைப் பாலைவனமாக்கினார்.
நீரூற்றுக்கள் பெருக்கெடுப்பதை தேவன் நிறுத்தினார்.
34 தேவன் வளமிக்க தேசத்தை மாற்றினார்.
அது பயனற்ற உப்பு நிலமாக மாறிற்று. ஏனெனில் அங்குத் தீயோர் வாழ்ந்தனர்.
35 தேவன் பாலைவனத்தை மாற்றினார்.
அது குளங்களுள்ள நிலம் ஆயிற்று.
தேவன் உலர்ந்த நிலத்திலிருந்து நீரூற்றுக்களில் தண்ணீர் புறப்படச் செய்தார்.
36 தேவன் பசியுள்ள ஜனங்களை அந்த நல்ல தேசத்திற்கு வழிநடத்தினார்.
அவர்கள் அங்கு வாழ ஒரு நகரத்தை அமைத்தார்கள்.
37 அவர்கள் வயல்களில் விதைகளை நட்டார்கள்.
அவர்கள் வயல்களில் திராட்சைகளை நட்டார்கள்.
அவர்கள் நல்ல அறுவடை செய்தார்கள்.
38 தேவன் அந்த ஜனங்களை ஆசீர்வதித்தார்.
அவர்கள் குடும்பங்கள் பெருகின. அவர்களுக்குப் பற்பல மிருகங்கள் இருந்தன.
39 திடீரென ஏற்பட்ட பேரிழப்பினாலும், துன்பங்களினாலும்,
அவர்கள் குடும்பங்கள் குறுகி பெலவீனமாயின.
40 தேவன் அவர்கள் தலைவர்களை அவமானப்படுத்தி, வெட்கப்படச் செய்தார்.
பாதைகளற்ற பாலைவனத்தின் வழியாக அவர்கள் அலையும்படி தேவன் செய்தார்.
41 பின்பு தேவன் அந்த ஏழை ஜனங்களை அவர்களது துயரங்களிலிருந்து மீட்டார்.
இப்போது அவர்கள் குடும்பங்கள் ஆட்டு மந்தைகளைப் போல் பெருகியுள்ளன.
42 நல்ல ஜனங்கள் இதைக்கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.
ஆனால் தீய ஜனங்களோ இதைக் காணும்போது, என்ன சொல்வதென்று அறியார்கள்.
43 ஒருவன் ஞானமுள்ளவனாக இருந்தால் இக்காரியங்களை நினைவுகூருவான்.
அப்போது தேவனுடைய அன்பு உண்மையாகவே இத்தகையதென்று புரிந்துகொள்ளத் தொடங்குவான்.
திருப்தியளிக்கும் உணவை தேவன் கொடுக்கிறார்
55 “தாகமாயுள்ள ஜனங்களே!
தண்ணீரைக் குடிக்க வாருங்கள்!
உங்களிடம் பணம் இல்லாவிட்டால் வருந்தவேண்டாம்.
வாருங்கள் உங்கள் வயிறு நிறையும்வரை குடியுங்கள், உண்ணுங்கள்!
பாலுக்கும் திராட்சைரசத்திற்கும் விலையில்லை.
2 உண்மையான உணவாக இல்லாதவற்றுக்காக ஏன் நீ உன் பணத்தை வீணடிக்கிறாய்?
உன்னை உண்மையாகவே திருப்தி செய்யாத வேலைகளை ஏன் நீ செய்கிறாய்?
என்னை மிக நெருக்கமாக கவனி! நீ மிக நல்ல உணவை உண்பாய்.
உன் ஆத்துமாவைத் திருப்திப்படுத்தும் உணவை உண்டு மகிழலாம்.
3 நான் சொல்லுகிறவற்றை நெருக்கமாகக் கவனி.
என்னைக் கவனி. அதனால் உன் ஆத்துமா வாழும்.
என்னிடம் வா. நான் என்றென்றும் தொடரும் ஒரு உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்.
நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையைப்போன்று அது இருக்கும்.
நான் அவனை நேசிப்பேன், என்றென்றும் அவனுக்கு வேண்டியவனாக இருப்பேன் என்று தாவீதுக்கு வாக்குறுதிச் செய்தேன்.
நீ அந்த உடன்படிக்கையை நம்பலாம்.
4 அனைத்து நாடுகளுக்கும் எனது வல்லமையின் சாட்சியாக நான் தாவீதைப் படைத்தேன்.
பல நாடுகளுக்கு அவன் ஒரு தலைவனாகவும், தளபதியாகவும் வருவான் என்று நான் வாக்களித்தேன்.”
5 உனக்குத் தெரியாத நாடுகள் பல உள்ளன.
ஆனால் அந்த நாடுகளை அழைப்பாய்.
அந்த நாடுகள் உன்னை அறியாது.
ஆனால் அவை உன்னிடம் ஓடிவரும்.
இது நடக்கும், ஏனென்றால், உனது தேவனாகிய கர்த்தர் இதை விரும்புகிறார்.
இது நடக்கும், ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன்னை மகிமைப்படுத்துகிறார்.
6 இது மிக தாமதமாவதற்கு முன்னால் நீ கர்த்தரைத் தேட வேண்டும்.
அவர் அருகில் இருக்கும்போதே, இப்பொழுது நீ அவரை அழைக்கவேண்டும்.
7 கெட்டவர்கள் கெட்ட வழியில் செல்வதை நிறுத்தவேண்டும்.
அவர்கள் தீயவற்றை நினைப்பதை நிறுத்தவேண்டும்.
அவர்கள் மீண்டும் கர்த்தரிடம் வரவேண்டும்.
பிறகு கர்த்தர் அவர்களுக்கு ஆறுதல் தருவார்.
அந்த ஜனங்கள் கர்த்தரிடம் வருவார்கள் ஏனென்றால்,
நமது தேவன் அவர்களை மன்னிக்கிறார்.
ஜனங்கள் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது
8 கர்த்தர் கூறுகிறார், “உங்களது சிந்தனைகள் எனது சிந்தனைகளைப்போன்று இல்லை.
உனது வழிகள் எனது வழிகளைப்போன்றில்லை.
9 வானங்கள் பூமியைவிட உயரமானவை.
அதேபோன்று, என் வழிகள் உன் வழிகளைவிட உயர்வானவை.
என் சிந்தனைகள் உன் சிந்தனைகளைவிட உயர்வானவை” கர்த்தர் தாமே இவற்றைக் கூறினார்.
நாலாயிரம் பேருக்கு மேல் உணவளித்தல்
(மத்தேயு 15:32-39)
8 மற்றொருமுறை இயேசுவுடன் ஏராளமான மக்கள் இருந்தனர். மக்களுக்கு உண்ண உணவில்லாமல் இருந்தது. ஆகையால் இயேசு தன்னிடம் சீஷர்களை அழைத்தார். 2 “நான் இம்மக்களுக்காகப் பெரிதும் வருந்துகிறேன். அவர்கள் என்னோடு மூன்று நாட்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது உணவில்லை. 3 அவர்களைப் பசியோடு வீட்டுக்கு அனுப்ப நான் விரும்பவில்லை. அவர்கள் உண்ணாமல் போனால், வழியில் சோர்வடைந்து விடலாம். சிலர் இங்கிருந்து வெகு தூரத்துக்குச் செல்ல வேண்டும்” என்றார்.
4 இயேசுவின் சீஷர்களோ, “நாம் எந்த ஊருக்கும் அருகில் இல்லை. இங்குள்ள அனைவருக்கும் உணவளிக்க நாம் எங்கிருந்து உணவுகளைப் பெறுவது?” என்று கேட்டனர்.
5 “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று இயேசு கேட்டார்.
“எங்களிடம் ஏழு அப்பங்கள் மட்டுமே உள்ளன” என்று சீஷர்கள் கூறினர்.
6 இயேசு அந்த மக்களைத் தரையில் உட்காரச் சொன்னர். பிறகு அவர் ஏழு அப்பங்களையும் எடுத்து தேவனுக்கு நன்றி சொன்னார். இயேசு அப்பங்களைப் பங்குவைத்து சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு இயேசு கேட்டுக்கொண்டார். சீஷர்கள் அவர் சொன்னபடி செய்தனர். 7 அச்சீஷர்கள் சில மீன்களையும் வைத்திருந்தனர். அவற்றையும் இயேசு வாங்கிப் பிரார்த்தனை செய்து, மக்களுக்குக் கொடுக்கும்படி சீஷர்களிடம் கூறினார்.
8 அனைத்து மக்களும் திருப்தியாக உண்டனர். பிறகு மீதியான உணவுப் பொருட்களை ஏழு கூடைகள் நிறையச் சேர்த்தனர். 9 அங்கே ஏறக்குறைய 4,000 ஆண்கள் இருந்தனர். அவர்கள் உண்ட பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைத்தார். 10 பிறகு இயேசு ஒரு படகில் ஏறி தன் சீஷர்களோடு தல்மனூத்தா பகுதிக்குச் சென்றார்.
2008 by World Bible Translation Center