Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 107:1-3

புத்தகம் 5

107 கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
    அவரது அன்பு என்றென்றைக்கும் உள்ளது!
கர்த்தரால் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் சொல்லவேண்டும்.
    கர்த்தர் பகைவரிடமிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
கர்த்தர் அவரது ஜனங்களைப் பல்வேறு வித்தியாசமான நாடுகளிலுமிருந்து ஒருமித்துக் கூடும்படிச் செய்தார்.
    அவர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமிருந்தும் வடக்கிலும் தெற்கிலுமிருந்தும் வரச்செய்தார்.

சங்கீதம் 107:23-32

23 சில ஜனங்கள் கடலைக் கடந்து படகுகளில் சென்றார்கள்.
    பெருங்கடலின் குறுக்கே வேலைகளின் பொருட்டு அவர்கள் சென்றார்கள்.
24 கர்த்தர் செய்யக்கூடியதை அந்த ஜனங்கள் கண்டார்கள்.
    கடலில் அவர் செய்த வியக்கத்தக்க காரியங்களை அவர்கள் கண்டார்கள்.
25 தேவன் கட்டளையிட்டார், ஒரு பெருங்காற்று வீச ஆரம்பித்தது.
    அலைகள் உயரமாக, மேலும் உயரமாக எழும்பின.
26 அலைகள் அவர்களை வானத்திற்கு நேராகத் தூக்கி, மீண்டும் கீழே விழச் செய்தது.
    மனிதர்கள் தங்கள் தைரியத்தை இழக்கும்படி ஆபத்தாக புயல் வீசிற்று.
27 அவர்கள் நிலைதளர்ந்து குடிவெறியர்களைப் போல வீழ்ந்தார்கள்.
    மாலுமிகளாகிய இவர்களுடைய திறமை வீணாய்போயிற்று.
28 அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள்.
    எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள்.
    அவர்கள் துன்பங்களிலிருந்து அவர் அவர்களைக் காப்பாற்றினார்.
29 தேவன் புயலை நிறுத்தினார்.
    அவர் அலைகளை அமைதிப்படுத்தினார்.
30 கடல் அமைதியுற்றதைக் கண்டு மாலுமிகள் மகிழ்ந்தார்கள்.
    அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு தேவன் அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார்.
31 அவரது அன்பிற்காகவும்,
    அவரது ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்ளுக்காகவும் கர்த்தருக்கு நன்றிகூறுங்கள்.
32 பெரிய கூட்டத்தில் தேவனை வாழ்த்துங்கள்.
    முதிய தலைவர்கள் ஒன்றுகூடும்போது அவரை வாழ்த்துங்கள்.

யோபு 29:21-30:15

21 “கடந்தக் காலத்தில், ஜனங்கள் எனக்குச் செவி கொடுத்தார்கள்.
    அவர்கள் எனது அறிவுரைக்காகக் காத்திருந்தபோது அமைதியாக இருந்தார்கள்.
22 நான் பேசி முடித்தப் பின்பு, எனக்குச் செவி கொடுத்த ஜனங்கள், அதற்குமேல் எதையும் கூறவில்லை.
    என் வார்த்தைகளை அவர்கள் மகிழ்சியாக ஏற்றுக்கொண்டனர்.
23 மழைக்காக காத்திருப்பதைப்போல நான் பேசுவதற்காக ஜனங்கள் காத்திருந்தார்கள்.
    வசந்த காலத்தில் தரை மழையை உறிஞ்சுவதுபோல, அவர்கள் என் வார்த்தைகளை குடித்தார்கள்.
24 நான் அந்த ஜனங்களோடு சேர்ந்து சிரித்தேன்.
    அவர்களால் அதை நம்ப முடியவில்லை.
    என் புன்னகை அவர்களுக்கு நல்லுணர்வைக் கொடுத்தது.
25 நான் ஜனங்களுக்குத் தலைவனாக இருந்தும் கூட, நான் அந்த ஜனங்களோடிருப்பதைத் தேர்ந் தெடுத்தேன்.
    பாளையத்தில் தனது சேனைகளோடு வீற்றிருக்கும் ராஜாவைப் போன்று,
    நான் துயரமுற்ற ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.
30 “ஆனால் இப்போது, என்னைக் காட்டிலும்
இளைஞர்கள் கூட என்னைக் கேலிச்செய்கிறார்கள்.
    அவர்களின் தந்தைகளை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவும் வெட்கப் பட்டிருப்பேன்.
அந்த இளைஞர்களின் தந்தைகள் எனக்கு உதவ முடியாதபடிச் சோர்ந்திருக்கிறார்கள்.
    அவர்கள் வயது முதிர்ந்தவர்கள், அவர்களின் களைத்துப்போன தசைநார்கள் வலிமையும் ஆற்றலுமற்றுக் காணப்படுகின்றன.
அவர்கள் மரித்தவர்களைப் போலிருக்கிறார்கள், அவர்கள் உண்பதற்கு எதுவுமில்லாமல் பட்டினியாயிருக்கிறார்கள்.
    எனவே அவர்கள் பாலைவனத்தின் உலர்ந்த அழுக்கை உண்கிறார்கள்.
அவர்கள் பாலைவனத்திலுள்ள உப்புத் தாவரங்களைப் பறித்தெடுக்கிறார்கள்.
    மரத்தின் வேர்களை அவர்கள் தின்றார்கள்.
அவர்கள் பிற ஜனங்களிடமிருந்து துரத்தப்பட்டார்கள்.
    அவர்கள் கள்ளர் என ஜனங்கள் அவர்களை உரத்தக் குரலில் சத்தமிட்டார்கள்.
அவர்கள் உலர்ந்த ஆற்றுப் படுகைகளிலும்,
    மலைப்பக்கத்துக் குகைளிலும் நிலத்தின் துவாரங்களிலும் வாழவேண்டும்.
அவர்கள் புதர்களில் ஊளையிடுகிறார்கள்.
    முட்புதர்களின் கீழே அவர்கள் ஒதுங்கியிருக்கிறார்கள்.
தங்கள் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட, பெயரற்ற,
    தகுதியில்லாத ஒரு கூட்டம் ஜனங்கள் அவர்கள்!

“இப்போது அந்த மனிதர்களின் குமாரர்கள் என்னைக் கேலிச் செய்யும் பாடல்களை பாடுகிறார்கள்.
    என் பெயர் அவர்களுக்கு ஒரு கெட்ட வார்த்தை ஆயிற்று.
10 அந்த இளைஞர்கள் என்னை வெறுக்கிறார்கள், அவர்கள் என்னிலிருந்து தூரத்தில் போய் நிற்கிறார்கள்.
    அவர்கள் என்னைக் காட்டிலும் சிறந்தவர்கள் என நினைக்கிறார்கள்.
    அவர்கள் என் முகத்தில் உமிழவும் செய்கிறார்கள்!
11 தேவன் என் வில்லின் நாணை அறுத்துப் போட்டு என்னைத் தளர்ச்சியடையச் செய்தார்.
    அந்த இளைஞர்கள் நிறுத்தாது, எனக்கெதிராகத் தங்கள் கோபத்தையெல்லாம் காட்டினார்கள்.
12 அவர்கள் என் வலது பக்கத்தில் தாக்குகிறார்கள்.
    அவர்கள் என் பாதங்களை அகல தள்ளிவிட்டார்கள்.
நான் தாக்கப்படும் நகரத்தைப்போல் இருக்கிறேன்.
    என்னைத் தாக்கி அழிப்பதற்கு அவர்கள் என் சுவர்களுக்கெதிராக அழுக்குகளைக் கட்டுகிறார்கள்.
13 அவர்கள் என் பாதையை கெடுத்தார்கள்.
    அவர்கள் என்னை அழிப்பதில் வெற்றியடைகிறார்கள்.
    அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் தேவையில்லை.
14 அவர்கள் சுவரில் துளையிடுகிறார்கள்.
    அவர்கள் அதன் வழியாக விரைந்து வருகிறார்கள்.
    உடையும் கற்கள் என்மீது விழுகின்றன.
15 நான் பயத்தால் நடுங்குகிறேன்.
    காற்று பொருள்களைப் பறக்கடிப்பதைப்போல அந்த இளைஞர்கள் என் மகிமையைத் துரத்திவிடுகிறார்கள்.
    என் பாதுகாப்பு ஒரு மேகத்தைப்போன்று மறைகிறது.

அப்போஸ்தலர் 21:1-16

பவுல் எருசலேமுக்குப் போகிறான்

21 நாங்கள் அனைவரும் மூப்பர்களிடமிருந்து விடைபெற்றோம். பின் கடற்பயணம் துவங்கினோம். நேராகக் கோஸ் தீவிற்குச் சென்றோம். மறுநாள் ரோது தீவிற்குச் சென்றோம். ரோதுவிலிருந்து நாங்கள் பத்தாராவுக்குப் போனோம். சீப்புரு பகுதிக்குப் போய்க்கொண்டிருந்த கப்பல் ஒன்றை பத்தாராவில் கண்டோம். நாங்கள் அக்கப்பலில் ஏறி, கடலில் பயணப்பட்டோம்.

சீப்புரு தீவினருகே நாங்கள் கடற்பயணம் செய்தோம். வடதிசையில் நாங்கள் அதைப்பார்க்க முடிந்தது. ஆனால் நாங்கள் அங்கு நிற்கவில்லை. நாங்கள் சிரியா நாட்டிற்குப் பயணமானோம். தீரு நகரத்தில் சில சரக்குகளை இறக்கும் பொருட்டு கப்பல் நிறுத்தப்பட்டது. தீருவில் சீஷர்கள் சிலரைக் கண்டோம். அவர்களோடு ஏழு நாட்கள் தங்கியிருந்தோம். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கூறியதின்படி, அவர்கள் பவுலை எருசலேமுக்குப் போகாதபடி எச்சரித்தனர். ஆனால் எங்கள் சந்திப்பிற்குப் பின் நாங்கள் புறப்பட்டோம். எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். இயேசுவின் சீஷர்கள் எல்லோரும், பெண்களும், குழந்தைகளும் கூட எங்களோடு நகருக்கு வெளியே வந்து எங்களுக்கு விடை கொடுக்க வந்தனர். கடற்கரையில் நாங்கள் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தோம். பின் நாங்கள் விடை பெற்று கப்பலில் ஏறினோம். சீஷர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

தீருவிலிருந்து நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்து பித்தொலோமாய் நகருக்குச் சென்றோம். அங்கு நாங்கள் சகோதரர்களை வாழ்த்தினோம், அவர்களோடு ஒரு நாள் தங்கியிருந்தோம். மறுநாள் நாங்கள் பித்தொலோமாயை விட்டுப் புறப்பட்டு செசரியா நகரத்திற்குப் போனோம். நாங்கள் பிலிப்புவின் வீட்டிற்குச் சென்று, அவனோடு தங்கினோம். நற்செய்தியைக் கூறும் வேலையை பிலிப்பு செய்து வந்தான். ஏழு உதவியாளரில் அவனும் ஒருவன். அவனுக்குத் திருமணமாகாத நான்கு பெண்கள் இருந்தனர். தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் அப்பெண்களுக்கு இருந்தது.

10 பல நாட்கள் நாங்கள் அங்கிருந்த பிறகு அகபு என்னும் தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். 11 அவன் எங்களிடம் வந்து பவுலின் கச்சையை[a] வாங்கினான். பின்பு அகபு அக்கச்சையால் தனது கைகளையும் கால்களையும் கட்டினான். அகபு, “இக்கச்சையைக் கட்டுகிற மனிதனை இவ்வாறே எருசலேமில் யூதர்கள் கட்டுவார்கள். பின் அவனை யூதரல்லாத மனிதரிடம் ஒப்படைப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் எனக்குக் கூறுகிறார்” என்றான்.

12 நாங்கள் எல்லோரும் இந்த வார்த்தைகளைக் கேட்டோம். எனவே நாங்களும் இயேசுவின் உள்ளூர் சீஷர்களும் எருசலேமுக்குப் போக வேண்டாமென்று பவுலைக் கெஞ்சினோம். 13 ஆனால் பவுல், “ஏன் நீங்கள் அழுதுகொண்டிருக்கிறீர்கள்? ஏன் என்னை இத்தனை கவலை கொள்ளச் செய்கிறீர்கள்? நான் எருசலேமில் கட்டப்படுவதற்குத் தயாராக இருக்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக இறப்பதற்கும் நான் தயாராக உள்ளேன்” என்றான்.

14 பவுலை வற்புறுத்தி அவனை எருசலேமுக்குப் போகாதிருக்கச் செய்ய எங்களால் இயலவில்லை. எனவே அவனை வேண்டுவதை நாங்கள் நிறுத்திவிட்டு, “கர்த்தர் விரும்புவது நடக்கட்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்றோம்.

15 இதன் பிறகு நாங்கள் தயாராகி எருசலேமுக்குப் புறப்பட்டோம். 16 செசரியாவிலுள்ள சீஷர்களில் சிலர் எங்களோடு சென்றனர். இந்தச் சீஷர்கள் செசரியாவிலிருந்த எங்களை சீப்புருவிலிருந்து வந்த மினாசோனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். முதன் முதலாக இயேசுவின் சீஷர்களாக மாறியவர்களில் இந்த மினாசோனும் ஒருவன். நாங்கள் அவனோடு தங்கும்படியாக அவர்கள் எங்களை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center