Revised Common Lectionary (Complementary)
ஆசாபின் ஒரு மஸ்கீல்.
78 என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள்.
நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள்.
2 நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன்.
நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன்.
3 நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம்.
எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள்.
4 நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம்.
இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.
நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம்.
அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம்.
52 அப்போது தேவன் இஸ்ரவேலரை ஒரு மேய்ப்பனைப்போல் வழிநடத்தினார்.
அவர் தமது ஜனங்களை மந்தைகளைப் போல் பாலைவனத்தினூடே வழிநடத்திச் சென்றார்.
53 அவர் தமது ஜனங்களைப் பத்திரமாக வழிகாட்டி நடத்தினார்.
தேவனுடைய ஜனங்கள் அஞ்ச வேண்டியது எதுவுமில்லை.
தேவன் அவர்களது பகைவர்களைச் செங்கடலில் அமிழச் செய்தார்.
54 தேவன் அவரது ஜனங்களை அவரது பரிசுத்த தேசத்திற்கு வழிநடத்தினார்.
தமது வல்லமையால் எடுத்துக்கொண்ட மலைக்கு அவர்களை அழைத்துச் சென்றார்.
55 பிற தேசத்தினரை அந்நாட்டிலிருந்து போகும்படியாக தேவன் கட்டாயப்படுத்தினார்.
தேவன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேசத்தில் அவரவர்களின் பங்கைக் கொடுத்தார்.
தேவன் ஒவ்வொரு இஸ்ரவேல் கோத்திரத்தினருக்கும் வசிப்பதற்கு வீட்டைத் தந்தார்.
56 ஆனால் அவர்கள் மிக உன்னதமான தேவனை சோதித்து அவரை விசனத்திற்குள்ளாக்கினார்கள்.
அந்த ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை.
57 இஸ்ரவேலர் தேவனிடமிருந்து விலகிச் சென்றார்கள். அவர்கள் தந்தையர் செய்தாற்போன்று அவர்கள் அவருக்கெதிராகத் திரும்பினார்கள்.
எறியும் வில்லைப்போன்று அவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டார்கள்.
58 இஸ்ரவேலர் உயர்ந்த பீடங்களைக் கட்டி, தேவனை கோபமடையச் செய்தார்கள்.
அவர்கள் பொய் தெய்வங்களுக்குச் சிலைகளை எழுப்பி, தேவனை பொறாமை அடையச் செய்தார்கள்.
59 தேவன் இதைக் கேட்டு மிகுந்த கோபமடைந்தார்.
அவர் இஸ்ரவேலரை முற்றிலும் தள்ளினார்.
60 தேவன் சீலோவிலுள்ள பரிசுத்தக் கூடாரத்தை விட்டு நீக்கினார்.
ஜனங்களோடு கூட தேவன் அக்கூடாரத்தில் வாழ்ந்திருந்தார்.
61 பிற தேசங்கள் அவரது ஜனங்களைச் சிறை பிடிக்க, தேவன் அனுமதித்தார்.
பகைவர்கள் தேவனுடைய “அழகிய நகையை” எடுத்துக்கொண்டார்கள்.
62 தேவன் அவரது ஜனங்களுக்கெதிராகத் தமது கோபத்தைக் காட்டினார்.
அவர்கள் போரில் கொல்லப்படும்படியாக அனுமதித்தார்.
63 இளைஞர்கள் மரணமடையும்படியாக எரிக்கப்பட்டார்கள்.
அவர்கள் மணக்க வேண்டிய இளம் பெண்கள் திருமணப்பாடல் எதையும் பாடவில்லை.
64 ஆசாரியர்கள் கொல்லப்பட்டார்கள்.
ஆனால் அவர்களின் விதவைகள் அவர்களுக்காக அழவில்லை.
65 இறுதியாக, தூக்கத்திலிருந்து விழித்தெழும் ஒரு மனிதனைப்போல நம் ஆண்டவர் எழுந்திருந்தார்.
அவர் மிகுதியாகத் திராட்சைரசத்தைப் பருகிய வீரனைப்போல காணப்பட்டார்.
66 தேவன் தமது பகைவர்களை பின்வாங்கச் செய்து, அவர்களை முறியடித்தார்.
தேவன் தமது பகைவர்களைத் தோற்கடித்து, என்றென்றும் அவர்கள் அவமானமுறும்படி செய்தார்.
67 ஆனால் தேவன் யோசேப்பின் குடும்பத்தை நிராகரித்தார்.
எப்பிராயீமின் குடும்பத்தாரை தேவன் ஏற்கவில்லை.
68 இல்லை, தேவன் யூதாவின் கோத்திரத்தினரைத் தேர்ந்தெடுத்தார்.
தேவன், தாம் நேசிக்கும் சீயோன் மலையைத் தேர்ந்துக் கொண்டார்.
69 அம்மலையின் மேல் உயரத்தில் தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார்.
பூமியைப் போல என்றென்றும் இருக்கும்படியாக தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார்.
70 தனது விசேஷ பணியாளாக தேவன் தாவீதைத் தேர்ந்தெடுத்தார்.
தாவீது ஆட்டுத் தொழுவங்களைக் காத்துக்கொண்டிருந்தான்.
ஆனால் தேவன் அவனை அப்பணியிலிருந்து அகற்றினார்.
71 தாவீது மந்தை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் தேவன் அவனை அவ்வேலையிலிருந்து அகற்றினார்.
தேவன் அவரது ஜனங்களைக் கவனிக்கும் வேலையை தாவீதுக்குக் கொடுத்தார்.
தேவனுடைய சொத்தாகிய யாக்கோபின் ஜனங்களையும் இஸ்ரவேலரின் ஜனங்களையும் கவனிக்கும் பொறுப்பை அவனுக்கு அளித்தார்.
72 தாவீது அவர்களை பரிசுத்த இருதயத்தோடும்,
மிகுந்த ஞானத்தோடும் வழிநடத்தினான்.
13 அன்றிரவு, காடைப் பறவைகள் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிலும் வந்து விழுந்தன. ஜனங்கள் இறைச்சிக்காக அவற்றைப் பிடித்தனர். காலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே பனிபடர்ந்திருந்தது. 14 பனி மறைந்ததும் மெல்லிய அப்பம் போன்ற ஒரு பொருள் நிலத்தின் மேல் காணப்பட்டது. 15 இஸ்ரவேல் ஜனங்கள் ஒருவரையொருவர் நோக்கி, “இது என்ன?”[a] என்றனர். அப்பொருள் என்ன என்று அவர்களுக்குத் தெரியாததினால், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். மோசே அவர்களை நோக்கி, “கர்த்தர் உங்களுக்கு உணவாகக் கொடுப்பது இதுவே. 16 ஒவ்வொருவனும் அவனவனுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவனுக்கும் எட்டு கிண்ண அளவின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்” என்றான்.
17 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறே செய்தார்கள். ஒவ்வொருவனும் இந்த உணவைச் சேகரித்துக்கொண்டான். சிலர் மற்றவர்களை விட அதிகமாக எடுத்துக்கொண்டனர். 18 ஜனங்கள் இந்த உணவைக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். உணவை அளந்தபோது ஒவ்வொருவருக்கும் போதுமான அளவு இருந்தது. ஆனால் ஒருபோதும் அதிகப்படியான உணவு இருந்ததில்லை. ஒவ்வொருவனும் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் தேவையான உணவை மாத்திரம் சேகரித்துக்கொண்டான்.
19 மோசே அவர்களை நோக்கி, “மறுநாள் உண்பதற்காக உணவை வைக்காதீர்கள்” என்றான். 20 ஆனால் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படியவில்லை. சிலர் அடுத்த நாளுக்காகச் சிறிது உணவை எடுத்து வைத்தார்கள். அந்த உணவைப் புழுக்கள் அரித்தபடியால் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இவ்வாறு செய்தவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.
21 ஒவ்வொரு நாள் காலையிலும் உணவைச் சேகரித்துக்கொண்டனர். ஒருவன் தான் சாப்பிடக் கூடிய அளவு உணவை எடுத்துக்கொண்டான். வெயில் ஏறினதும் உணவு உருகி மறைந்துபோனது.
22 வெள்ளியன்று, ஜனங்கள் இரண்டு மடங்கு உணவைச் சேர்த்தார்கள். ஒவ்வொருவருக்கும் 16 கிண்ண அளவு உணவைச் சேர்த்தார்கள். எனவே ஜனங்களின் தலைவர்கள் மோசேயிடம் வந்து இதனை அறிவித்தனர்.
23 மோசே அவர்களை நோக்கி, “இவ்வாறு தான் நடக்கும் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். நாளை கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாளாகிய ஓய்வுநாள் என்பதால் இவ்வாறு நிகழ்ந்தது. இன்றைக்குத் தேவையான எல்லா உணவையும் சமையுங்கள். மீதமாகும் உணவை நாளை காலைக்காக எடுத்து வையுங்கள்” என்றான்.
24 எனவே மீதமான உணவை ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்து அடுத்த நாளுக்காகப் பத்திரப்படுத்தினார்கள். அன்று அந்த உணவு கெட்டுப்போகவில்லை, புழுக்களும் அந்த உணவை அணுகவில்லை.
25 சனிக்கிழமையன்று மோசே ஜனங்களை நோக்கி, “இன்று ஓய்வுநாள், இது கர்த்தருக்கு மரியாதை செலுத்தும் விசேஷ நாள். எனவே உங்களில் ஒருவனும் வெளியே போகக்கூடாது. நேற்று சேர்த்து வைத்த உணவையே உண்ணுங்கள். 26 ஆறு நாட்கள் நீங்கள் உணவைச் சேகரிக்கவேண்டும், ஆனால் வாரத்தின் ஏழாவதுநாள் ஓய்வுக்குரிய நாள். எனவே பூமியில் விசேஷ உணவு எதுவுமிராது” என்றான்.
19 “நமது செயல்களையெல்லாம் தேவனால் கட்டுப்படுத்த முடியுமானால் பிறகு ஏன் அவர் நமது பாவங்களுக்காக நம்மைக் குற்றம் சாட்டுகிறார்” என்று உங்களில் ஒருவர் கேட்கலாம். 20 அதைக் கேட்காதீர்கள். நீங்கள் மானிடர். மானிடர்களுக்கு தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஒரு மண்ஜாடி தன்னைச் செய்தவனிடம் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. “என்னை ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று மண்ஜாடி கேட்கலாமா? 21 ஜாடியைச் செய்கிறவன் தன் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதே களிமண்ணால் அவன் வேறு எந்தப் பொருளை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஒரு பொருளை அவன் சிறப்பான பயனுக்காகவும், மற்றொன்றை அவன் அன்றாட பயனுக்காகவும் செய்யலாம்.
22 இதைப் போன்றுதான் தேவனும் செய்கின்றார். அவர் தமது கோபத்தை வெளிக்காட்டவும் தனது வல்லமையை வெளிப்படுத்தவும் விரும்பினார். தன் கோபத்தைத் தூண்டிய மக்களை அழிக்கத் தயாராய் இருந்த நிலையில் தேவன் அவர்களை மிகப் பொறுமையுடன் சகித்துக்கொண்டார். 23 தன் உயர்வும் சிறப்பும் வெளிப்படும் காலம் வரைக்கும் தேவன் பொறுமையோடு காத்திருந்தார். அவரது இரக்கத்தைப் பெறுவோரிடம் அவர் தனது மகிமையைக் கொடுத்தார். அவர் அதற்குரியவர்களாக அவர்களைத் தயார்படுத்தினார். 24 நாங்களே தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நாங்களே தேவனால் அழைக்கப்பட்டவர்கள். அவர் எங்களை யூதர்களிடமிருந்தும் யூதர் அல்லாதவர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தார்.
25 “எனக்கு உரியவர்கள் அல்ல என்னும் மக்களையும்
‘என் மக்களே’ என்றும்,
நேசிக்கப்படாது இருந்தவர்களையும்,
‘என்னால் நேசிக்கப்படும் மக்கள்’
என்று நான் அழைப்பேன்.(A)
26 “நீங்கள் என்னுடைய மக்கள் அல்லவென்று
அவர்களுக்குச் சொல்லப்பட்ட அதே இடத்திலே
அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்”(B)
என்று ஓசியாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.
27 ஏசாயா இஸ்ரவேலைப்பற்றிக் கதறினார்.
“இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கை கடற்கரையில் உள்ள மணலைப் போன்றிருக்கிறது.
எனினும் சிலரே இரட்சிக்கப்படுவார்கள்.
28 ஆமாம். மண்ணில் வாழும் மக்களை தேவன் விரைவாக நியாயம்தீர்த்து முடிப்பார்.”(C)
29 “கர்த்தருக்கு அனைத்து வல்லமையும் உண்டு.
எங்களுக்காக அவர் சிலரைக் காப்பாற்றினார்.
அவர் அதனைச் செய்திருக்காவிட்டால்
இப்போது நாங்கள் சோதோமைப் போலாகி கொமோராவுக்கு ஒத்தவராய் இருப்போம்.”(D)
என்று ஏசாயா சொன்னார்.
2008 by World Bible Translation Center