Revised Common Lectionary (Complementary)
யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய ஒரு பாடல்.
63 தேவனே, நீரே என் தேவன்.
நீர் எனக்கு மிகவும் தேவையானவர்.
நீரற்று உலர்ந்து பாழாய்போன தேசத்தைப்போன்று
என் ஆத்துமாவும் சரீரமும் உமக்காகத் தாகமாயிருக்கிறது.
2 உமது ஆலயத்தில் நான் உம்மைக் கண்டேன்.
நான் உமது வல்லமையையும் மகிமையையும் கண்டேன்.
3 ஜீவனைக் காட்டிலும் உமது அன்பு சிறந்தது.
என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
4 என் வாழ்நாளில் நான் உம்மைத் துதிப்பேன்.
உமது நாமத்தைக் கூறி ஜெபத்தோடு என் கைகளை உயர்த்துவேன்.
5 சுவையான உணவு வகைகளை உண்டது போல் நான் திருப்தியடைவேன்.
மகிழ்ச்சி நிறைந்த உதடுகளுள்ள என் வாய் உம்மைத் துதிக்கும்.
6 என் படுக்கையில் நான் உம்மை நினைவு கூருவேன்.
நள்ளிரவிலும் உம்மை நான் நினைவு கூருவேன்.
7 நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்!
நீர் என்னைப் பாதுகாத்ததால் நான் மகிழ்கிறேன்.
8 என் ஆத்துமா உம்மைப் பற்றிக்கொள்கிறது.
நீர் என் கைகளைப் பிடித்துக்கொள்கிறீர்.
9 சில ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்கள் தங்கள் கல்லறைக்குள்ளேபோவார்கள்.
10 அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள்.
அவர்கள் பிணங்களைக் காட்டு நாய்கள் தின்னும்.
11 ஆனால் ராஜாவோ அவரது தேவனோடு மகிழ்ச்சியாயிருப்பார்.
அவருக்குக் கீழ்ப்படிவதாக உறுதி தந்த ஜனங்கள் தேவனைத் துதிப்பார்கள்.
ஏனெனில் அவர் எல்லாப் பொய்யர்களையும் தோற்கடித்தார்.
வெட்டுக்கிளிகள் விளைச்சலை அழிக்கும்
1 பெத்துவேலின் குமாரனாகிய யோவேல் கர்த்தரிடமிருந்து இந்த செய்தியைப் பெற்றான்.
2 தலைவர்களே, இந்தச் செய்தியைக் கேளுங்கள்.
இந்த நாட்டில் வாழ்கின்ற ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
உங்கள் வாழ்நாளில் இதற்கு முன்பு இது போல் நடந்திருக்கிறதா? இல்லை.
உங்கள் தந்தைகளின் வாழ்நாளில் இதுபோல் நடந்திருக்கிறதா? இல்லை.
3 நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் இவற்றைக் கூறுங்கள்.
உங்கள் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகளிடம் சொல்லட்டும். உங்கள் பேரக்குழந்தைகள் அதற்கு அடுத்தத் தலைமுறையிடம் சொல்வார்கள்.
4 பச்சைப்புழு விட்டதை
வெட்டுக்கிளி தின்றது.
வெட்டுக்கிளி விட்டதைப்
பச்சைக் கிளி தின்றது.
பச்சைக்கிளி விட்டதை
முசுக்கட்டைப் பூச்சி தின்றது.
வெட்டுக்கிளிகளின் வருகை
5 குடியர்களே, விழித்து எழுந்து அழுங்கள்.
திராட்சைரசத்தைக் குடிக்கும் ஜனங்களே அழுங்கள்.
ஏனென்றால் உங்கள் இனிமையான திரட்சைரசம் முடிந்தது.
நீங்கள் இனி அந்தத் திராட்சைரசத்தின் சுவையைப் பெறமாட்டீர்கள்.
6 எனது தேசத்திற்கு எதிராகப் போரிட ஒரு பெரிய வல்லமை வாய்ந்த நாடு வந்தது.
அதன் வீரர்கள் எண்ணமுடியாத அளவிற்கு அநேகராக இருந்தார்கள்.
அவர்களது ஆயுதங்கள் சிங்கத்தின் பற்களைப் போன்று கூர்மையுள்ளதாகவும்,
சிங்கத்தின் தாடையைப்போன்று வல்லமையுள்ளதாகவும் இருந்தது.
7 அது என் திராட்சைச் செடியை அழித்தது.
அதன் நல்ல கொடிகள் வாடி அழிந்தது.
அது என் அத்திமரத்தை அழித்தது.
பட்டைகளை உரித்து எறிந்துவிட்டது.
ஜனங்களின் அழுகை
8 மணமுடிப்பதற்குத் தயாராக இருந்த இளம் பெண்
மரித்துப்போன தன் மணவாளனுக்காக அழுவது போன்று அழுங்கள்.
9 ஆசாரியர்களே, கர்த்தருடைய பணியாளர்களே, அழுங்கள்.
ஏனென்றால், கர்த்தருடைய ஆலயத்தில் இனிமேல் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையும் இருக்கப்போவதில்லை.
10 வயல்வெளிகள் பாழாயின. பூமி கூட அழுதுகொண்டிருக்கிறது.
ஏனென்றால் தானியம் அழிக்கப்பட்டிருக்கிறது.
புதிய திராட்சைரசம் வறண்டிருக்கிறது.
ஒலிவ எண்ணெய் போய்விட்டது.
11 உழவர்களே, துக்கமாயிருங்கள்.
திராட்சை விவசாயிகளே சத்தமாக அழுங்கள்.
கோதுமைக்காகவும் பார்லிக்காகவும் அழுங்கள்.
ஏனென்றால் வயல்வெளியில் அறுவடை இல்லாமல் போனது.
12 திராட்சைக்கொடிகள் காய்ந்துவிட்டன.
அத்திமரம் அழிந்துகொண்டிருக்கிறது.
மாதுளை, பேரீச்சை, கிச்சிலி
மற்றும் அனைத்து மரங்களும் வாடிவிட்டன.
ஜனங்களின் மகிழ்ச்சி மரித்துப்போயிற்று.
13 ஆசாரியர்களே, உங்களது துக்கத்திற்குரிய ஆடையை அணிந்துகொண்டு உரக்க அழுங்கள்.
பலிபீடத்தின் பணியாளர்களே, உரக்க அழுங்கள். எனது தேவனுடைய பணியாளர்களே,
நீங்கள் துக்கத்தின் ஆடைகளோடு தூங்குவீர்கள்.
ஏனென்றால் தேவனுடைய ஆலயத்தில் இனிமேல் தானிய காணிக்கையும் பானங்களின் காணிக்கையும் இருப்பதில்லை.
வெட்டுக்கிளிகளின் பேரழிவு
14 உபவாசமிருக்க வேண்டிய சிறப்பு நேரம் இருக்குமென்று ஜனங்களுக்கு அறிவியுங்கள் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஜனங்களைக் கூட்டுங்கள். தலைவர்களைக் கூப்பிடுங்கள். நாட்டில் வாழ்கிற எல்லா ஜனங்களையும் சேர்த்துக் கூப்பிடுங்கள். அவர்கள் அனைவரையும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்திற்கு வரவழைத்து கர்த்தரிடம் ஜெபம் செய்யுங்கள்.
6 ஆனால் உங்களிடமிருந்து தீமோத்தேயு திரும்பி வந்தான். உங்களது அன்பு மற்றும் விசுவாசம் பற்றிய நல்ல செய்திகளை அவன் கூறினான். நல்வழியில் நீங்கள் எப்போதும் எங்களை நினைத்துக்கொள்வதாகவும் எங்களை நீங்கள் மீண்டும் பார்க்க விரும்புவதாகவும் கூறினான். அதுபோலத் தான் நாங்களும் உங்களைப் பார்க்க விரும்புகிறோம். 7 எனவே, சகோதர சகோதரிகளே! உங்கள் விசுவாசத்தால் உங்களைப் பற்றி ஆறுதல் அடைந்திருக்கிறோம். எங்களுக்கு துன்பங்களும், சிக்கல்களும் உள்ளன. எனினும், நாங்கள் ஆறுதலடைந்திருக்கிறோம். 8 நீங்கள் உறுதியாகக் கர்த்தருக்குள் இருக்கும்போது எங்கள் வாழ்வு முழுமை பெறுவதாக உணர்கிறோம். 9 உங்களால் தேவனுக்கு முன்பு நாங்கள் பெரும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். ஆகவே உங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்கிறோம். ஆனால் எங்கள் முழு மகிழ்ச்சிக்கும் எங்களால் போதுமான நன்றி சொல்ல முடியாது. 10 இரவும் பகலுமாக நாங்கள் உங்களுக்காக மிகவும் உறுதியோடு தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறோம். நாங்கள் அங்கே வந்து உங்களை மீண்டும் பார்க்கவும், உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துவதற்கான செயல்களைச் செய்யவும் பிரார்த்தனை செய்கிறோம்.
11 பிதாவாகிய தேவனும், கர்த்தராகிய இயேசுவும் எங்களுக்கு உங்களிடம் வருவதற்கான வழியைத் தயார் செய்யட்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். 12 உங்கள் அன்பை கர்த்தர் வளரச் செய்ய பிரார்த்திக்கிறோம். ஒருவருக்கொருவர் அன்பு செய்யவும் எல்லா மக்களிடமும் அன்பு செய்யவும் அவர் உங்களுக்கு உதவ பிரார்த்திக்கிறோம். நாங்கள் உங்களை நேசிப்பது போன்று நீங்கள் மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். 13 உங்கள் இதயம் உறுதியாகும்படியாக நாங்கள் இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறோம். அப்பொழுது கர்த்தராகிய இயேசு தம் பரிசுத்த மக்களோடு வரும்போது நீங்கள் பிதாவாகிய தேவன் முன் பரிசுத்தராகவும், குற்றமற்றவர்களாகவும் நிற்பீர்கள்.
2008 by World Bible Translation Center