Revised Common Lectionary (Complementary)
96 கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும்.
2 கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்!
அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்!
ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்!
3 தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள்.
தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள்.
4 கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர்.
வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.
5 பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே.
ஆனால் கர்த்தரோ வானங்களை உண்டாகினவர்.
6 அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும்.
தேவனுடைய பரிசுத்த ஆலயத்தில் பெலனும் அழகும் விளங்கும்.
7 குடும்பங்களும் தேசங்களும்
கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள்.
8 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
உங்கள் காணிக்கைகளோடு ஆலயத்திற்குச் செல்லுங்கள்.
9 கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள்.
10 கர்த்தரே அரசரென்று தேசங்களுக்கெல்லாம் அறிவியுங்கள்!
அதனால் உலகம் அழிக்கப்படுவதில்லை.
கர்த்தர் ஜனங்களை நியாயமாக அரசாளுவார்.
11 விண்ணுலகங்களே!
மகிழ்ச்சிகொள்ளுங்கள்.
பூமியே! களிகூரு.
கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்!
12 வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்!
வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்!
13 கர்த்தர் வருகிறார், ஆதலால் மகிழ்ச்சியடையுங்கள்.
கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வந்துகொண்டிருக்கிறார்.
நீதியோடும் நியாயத்தோடும்
அவர் உலகை ஆளுகை செய்வார்.
3 கர்த்தர் உங்களது கடின வேலைகளை எடுத்துப்போட்டு உங்களுக்கு ஆறுதலைத் தருவார். கடந்த காலத்தில் நீங்கள் அடிமைகளாக இருந்தீர்கள். மனிதர்கள் உங்களைக் கடினமான வேலை செய்யும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் கர்த்தர் உங்கள் கடின வேலைகளை முடிவுக்குக் கொண்டுவருவார்.
பாபிலோனிய ராஜாவைப்பற்றிய பாடல்
4 அந்த நேரத்தில், பாபிலோன் ராஜாவைப்பற்றிய இந்தப் பாடலை பாடத் துவங்குங்கள்:
ராஜா நம்மை ஆளும்போது, ஈனமாக ஆண்டான்.
ஆனால் இப்போது அவனது ஆட்சி முடிந்துவிட்டது.
5 கர்த்தர் தீய ராஜாக்களின் கொடுங்கோலை உடைப்பார்.
கர்த்தர் அவர்களின் அதிகாரத்தை எடுத்துக்கொள்வார்.
6 கோபத்தில் பாபிலோனிய ராஜா ஜனங்களை அடித்தான்.
ஜனங்களை அடிப்பதை அவன் ஒருபோதும் நிறுத்தவில்லை.
அத்தீய ராஜா ஜனங்களைக் கோபத்துடன் ஆண்டான்.
அவன் எப்பொழுதும் ஜனங்களைத் துன்புறுத்துவதை நிறுத்தவில்லை.
7 ஆனால் இப்பொழுது, முழு நாடும் ஓய்வெடுக்கிறது. நாடு அமைதியாக உள்ளது.
இப்பொழுது ஜனங்கள் கொண்டாடத் துவங்குகின்றனர்.
8 நீ தீய ராஜாவாக இருந்தாய்.
இப்பொழுது நீ முடிந்து போனாய்.
பைன் மரங்களும் கூட மகிழ்ச்சியாய் உள்ளன.
லீபனோனில் உள்ள கேதுரு மரங்களும் மகிழ்ச்சியாய் உள்ளது.
“ராஜா எங்களை வெட்டிச் சாய்த்தான்.
ஆனால் இப்பொழுது ராஜாவே விழுந்துவிட்டான்.
அவன் இனி ஒருபோதும் நிற்கமாட்டான்” என்று மரங்கள் சொல்கின்றன.
9 மரணத்தின் இடமான பாதாளம் அதிர்கிறது.
ஏனென்றால் நீ வந்துகொண்டிருக்கிறாய்.
உனக்காக பூமியில் இருந்த அனைத்துத் தலைவர்களின் ஆவிகளையும்
பாதாளம் எழுப்பிக்கொண்டிருக்கிறது.
ராஜாக்களை அவர்களின் சிங்காசனத்திலிருந்து
பாதாளம் எழுந்து நிற்கச் செய்துகொண்டிருக்கிறது.
உன் வருகைக்காக அவை தயாராக உள்ளன.
10 இந்த அனைத்துத் தலைவர்களும் உன்னைக் கேலிசெய்வார்கள்.
“இப்பொழுது எங்களைப்போன்று நீயும் மரித்த உடல்.
இப்பொழுது நீ சரியாக எங்களைப்போன்றே இருக்கிறாய்” என்று அவர்கள் சொல்வார்கள்.
11 உங்கள் தற்பெருமை பாதாளத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும்.
உங்கள் சுரவீணைகளிலிருந்து வரும் இசை, உங்கள் பெருமைக்குரிய ஆவியின் வரவைப்பற்றிக் கூறும்.
பூச்சிகள் உங்கள் உடலை உண்ணும்.
பூச்சிகளின்மேல் படுக்கையைப்போல் நீ படுத்திருப்பாய்.
புழுக்கள் உங்கள் உடலைப் போர்வையைப்போல் மூடும்.
ஏரோது இயேசுவைப்பற்றி அறிதல்
(மாற்கு 6:14-29; லூக்கா 9:7-9)
14 அப்போது கலிலேயாவின் மன்னனாயிருந்த ஏரோது இயேசுவைப்பற்றி மக்கள் பேசியவைகளைக் கேள்வியுற்றான். 2 எனவே, ஏரோது தன் வேலைக்காரர்களிடம், “இந்த மனிதனே உண்மையில் யோவான் ஸ்நானகன். மரணத்திலிருந்து அவன் மீண்டும் எழுந்திருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவனால் இத்தகைய அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்று கூறினான்.
யோவான் ஸ்நானகனின் மரணம்
3 இதற்கு முன்னர், ஏரோது யோவானைக் கைது செய்திருந்தான். ஏரோது யோவானைச் சங்கிலியால் கட்டி சிறையிலிட்டிருந்தான். ஏரோதியாளின் நிமித்தம் யோவானை ஏரோது கைது செய்திருந்தான். ஏரோதுவின் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாள். 4 “நீ ஏரோதியாளை உன்னோடு வைத்திருப்பது சரியல்ல” என்று யோவான் ஏரோதுவிடம் கூறியதால் யோவானை ஏரோது கைது செய்தான். 5 யோவான் தீர்க்கதரிசியென மக்கள் நம்பியிருந்தார்கள். எனவே, யோவானைக் கொல்ல விரும்பிய ஏரோது பயந்தான்.
6 ஏரோதின் பிறந்த நாளன்று, ஏரோதியாளின் குமாரத்தி ஏரோதுவையும் அவன் நண்பர்களையும் மகிழ்விக்க நடனமாடினாள். அவள் நடனத்தால் ஏரோது மிக மகிழ்ந்தான். 7 எனவே, அவள் எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்தான். 8 தன் குமாரத்தி எதைக் கேட்கவேண்டும் என்பதை ஏரோதியாள் முன்னமே அறிவுறுத்தியிருந்தாள். ஆகவே, அவள் ஏரோதுவிடம், “எனக்கு யோவான்ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்துத் தாருங்கள்” என்று கூறினாள்.
9 இதனால் மன்னன் ஏரோது மிகுந்த துக்கம் கொண்டான். ஆனால் தன் குமாரத்தி எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்திருந்தான். ஏரோதுவுடன் உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் அவன் வாக்குறுதியைக் கேட்டிருந்தார்கள். எனவே, அவள் விரும்பியதை நிறைவேற்ற ஏரோது கட்டளையிட்டான். 10 சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டுவதற்கு அவன் ஆட்களை அனுப்பினான். 11 அவர்கள் யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து அதை அவளிடம் கொடுத்தனர். பின்னர், அப்பெண் அத்தலையைத் தன் தாய் ஏரோதியாளிடம் எடுத்துச் சென்றாள். 12 யோவானின் சீஷர்கள் அவனது உடலைப் பெற்று அடக்கம் செய்தனர். பின், அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.
2008 by World Bible Translation Center